வசைமாரி பொழிவதில் வல்லவர் யார்? ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (மார்ச் 17) வெளியிட்ட அறிக்கை:
14.3.2009 அன்று வெளியிட்ட எனது அறிக்கையில் வினவப்பட்டுள்ள ‘மின் வெட்டு’, ‘விலைவாசி உயர்வு’, ‘வழக்கறிஞர்கள் போராட்டம்’ உள்ளிட்ட நாட்டில் உள்ள முக்கியமான பிரச்சினைகள் குறித்து பதில் அளிக்காமல், நான் ஏற்கெனவே எனது அறிக்கைகளின் மூலமாக சுட்டிக்காட்டிய உண்மைச் சம்பவங்களை பட்டியலிட்டு, தனக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை என்பதை ‘வசைமாரி பொழிவது யார்?’ என்ற தனது அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதி தனது அறிக்கையில் “மாநில நிர்வாகம் எதுவும் பின்னுக்குத் தள்ளப்படவில்லை” என்று கூறியிருக்கிறார். கடுமையான மின்வெட்டு, விஷம் போல் ஏறும் விலைவாசி, வெறிச்சோடி கிடக்கும் தொழிற்பேட்டைகள், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு, தற்காலிக வேலை நிறுத்திவைப்பு, கட்டுமானத் தொழில் பாதிப்பு, வாகனம் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையில் தேக்க நிலை, பொருளாதார மந்த நிலை, வேளாண் உற்பத்தி பாதிப்பு, ஜவுளித் தொழில் பாதிப்பு, ஏற்றுமதி பாதிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம்-ஒழுங்கு சீரழிவு, நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை என ஏராளமானவற்றை மாநில நிர்வாகம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு சான்றாகக் கூறலாம். இத்தனைக்கும் பிறகு, மாநில நிர்வாகம் பின்னுக்குத் தள்ளப்படவில்லை என்று கருணாநிதி கூறியிருப்பது, மாநில நிர்வாகம் குறித்து அவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது.

“ஆம்புலன்ஸ் வண்டியிலேயே வந்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்று மருத்துவமனையில் படுத்துக் கொண்டே கடிதம் எழுதியதாகக் கூறும் கருணாநிதி, வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும், பொது மக்களையும் கண்மூடித்தனமாக தாக்க காவல் துறையினருக்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து இதுநாள் வரையிலும் பதில் அளிக்கவில்லை. இதன் மூலம் குழந்தையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் கருணாநிதியின் கபட நாடகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

நான் ஏதோ வசைமாரி பொழிந்து அறிக்கைகள் வெளியிட்டதாக கருணாநிதி கூறி, எனது அறிக்கைகளில் உள்ள சில வார்த்தைகளை பட்டியலிட்டு இருக்கிறார். அந்தப் பட்டியலில் உள்ள வார்த்தைகளைப் பார்க்கும் போது, அவை வசைமாரி பொழியும் அறிக்கைகள் அல்ல, உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் அறிக்கைகள் என்பதை அறிவார்ந்த மக்கள் எளிதாக அறிந்து கொள்வார்கள். உதாரணமாக, ‘கருணாநிதி பேச்சு, மூச்சற்றுப் போவார், வாய் மூடிக் கிடப்பார்” என்று 4.10.2008 அன்று நான் வெளியிட்ட அறிக்கையிலே குறிப்பிட்டதாக குறிப்பிட்டிருக்கிறார் கருணாநிதி. அந்த அறிக்கையில், “தமிழர்களின் நலன், பாதுகாப்பு, நல்வாழ்வு என்பன பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் கருணாநிதி பேச்சு, மூச்சற்றுப் போவார்; வாய்மூடிக் கிடப்பார்” என்றுதான் குறிப்பிட்டிருந்தேன். அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சினை, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை என்றால் வாய்மூடிக் கிடப்பார் என்றுதான் இதற்குப் பொருள். இதுதான் உண்மை நிலை. இதில் தவறு ஒன்றும் இல்லை.

அடுத்தபடியாக, “அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதற்கான எந்த தார்மீக உரிமையும் கருணாநிதிக்கு இல்லை” என்று நான் 10.10.2008 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாக கூறியிருக்கிறார். ‘காவேரி நதிநீர் தாவா’ தொடர்பாக 19.2.2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கருணாநிதி கூட்டினார். ஆனால், இன்று வரை அந்தப் பிரச்சினையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட கூட மத்திய அரசு முன்வரவில்லை. இது குறித்து மத்திய அரசிடம் கருணாநிதி வற்புறுத்தி இருப்பாரா? அதனால் தான் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான எந்தத் தார்மீக உரிமையும் கருணாநிதிக்கு இல்லை என்று தெரிவித்திருந்தேன். இதில் எந்தத் தவறும் இல்லை என்பதை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

நான் என்னுடைய 10.10.2008 ஆம் நாளிட்ட அறிக்கையில், “உண்மையிலேயே தமிழர்கள் மீது கருணாநிதிக்கு அக்கறை இருக்குமானால், இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வரும் ஆதரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படிச் செய்தால்தான் மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட முன்வரும்.” என்று தெரிவித்திருந்தேன். என்னுடைய கோரிக்கை ஏற்கப்பட்டிருக்குமேயானால், இந்த நேரத்தில் இலங்கையில் நிச்சயமாக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும். தமிழினப் படுகொலை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். அற்ப பதவி சுகத்திற்காக தமிழினப் படுகொலைக்கு துணை போன கருணாநிதியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதை கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையிலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், ஜனநாயக ரீதியில், உண்மை நிலையை எனது அறிக்கைகள் வாயிலாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது எனது கடமை. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். நான் ஆற்றும் ஜனநாயகக் கடமைகளை எல்லாம் வசைமாரி பொழியும் அறிக்கைகள் எனக் கருணாநிதி குறிப்பிடுவது மிகுந்த வருத்தமளிக்கும் செயலாகும். எனது அறிக்கைகளை வசைமாரி பொழியும் அறிக்கைகள் என்றால், “மூக்கறுந்து போன மூளி, அலங்காரி, நாக்கறுந்து தொங்குகின்ற நரி, நாலாந்தரப் பெண், மகுடம் பறி கொடுத்த மாயராணி, செப்படி வித்தை மாமி, மலம், வேஷக்காரி, தெருப் பொறுக்கி, நாய்க் கொழுப்பு, பூதகி, நாய், திமிங்கலம்” போன்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ள கருணாநிதியின் அறிக்கைகளை என்ன என்று சொல்வது! ஒரு வேளை இவையெல்லாம் கருணாநிதியின் கண்களுக்கு பொன்மொழிகளாக தோன்றுகிறதோ! நல்லவற்றை நாராசம் என்று சொல்வதும், நாராசத்தை நல்லது என்று சொல்வதும் கருணாநிதியின் இயல்பு போலும்!

இதிலிருந்து வசைமாரி பொழிவதில் வல்லவர் யார் என்பதை அறிவார்ந்த தமிழ் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். எனவே, மரபுக்கு ஒவ்வாத, அவதூறான, கேவலமான, நாகூசும் அறிக்கைகள் வெளியிடுவதையும், என்னைக் குறை கூறுவதையும் நிறுத்திக் கொண்டு, எனது அறிக்கைகளில் உள்ள மக்கள் பிரச்சினைகளின் உண்மை நிலையை புரிந்து கொண்டு, அதற்கேற்றாற்போல் ஆட்சியில் இருக்கப் போகும் சில நாட்களாவது நாட்டு நலப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கைக்கு மீண்டும் தமிழக நிவாரண பொருட்கள்

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்காக கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு நிதி திரட்டியது. 50.53 கோடி ரூபாய் நிதி திரண்டது. அந்த நிதியில் இருந்து பத்து கோடியே 7 லட்சம் நிதி மத்திய அரசின் உதவியோடு நிவாரண பொருட்கள் வாங்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது இலங்கையில் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் 40 ஆயிரம் குடும்பங்களுக்கு உடனடியாக சமையல் பாத்திரங்கள் தேவைப்படுவதாக தகவல் வந்ததை அடுத்து அந்த பார்த்திரங்களை அனுப்பி வைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்ட்டிருந்தார்.

அரிசி, பருப்பு டீ.தூள், சர்க்கரை போன்ற உணவு பொருட்களுடன் சோப்பு, பற்பசை,சமையல் செய்ய எவர்சில்வர் பாத்திரங்கல் நாற்பதாயிரம் குடும்பங்களுக்கு அனுப்பபட இருக்கின்றன.இந்த பாத்திரங்களை கருணாநிதி பார்வையிட்டார்.

"கருணாநிதியின் மருத்துவமனை டைரிகுறிப்புகள் நெஞ்சைப் பிளக்கின்றன" ஜெய‌ல‌லிதா

ஜெய‌ல‌லிதா இன்று (மார்ச் 14) வெளியிட்ட அறிக்கை:

‘நலிவும் நானும்’ என்ற தலைப்பில், தான் மருத்துவமனையில் இருந்தது, தனக்கு நடந்த அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவை குறித்து கருணாநிதி வெளியிட்டு வரும் அறிக்கைகள் உண்மையிலேயே நெஞ்சைப் பிளக்கின்றன! கல் நெஞ்சங்கள் கூட உருகும் அளவுக்குதான் சகித்துக் கொண்ட வலியை தன்னுடைய அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் கருணாநிதி!

கருணாநிதி ஆரோக்கியமடைந்து வரும் சமயம், அவருடைய பல மனைவிமார்கள், எண்ணிலடங்கா குழந்தைகள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள் ஆகியோர் அவர் மீது அதிக அக்கறை எடுத்துக்கொண்டு அவரை கவனித்தது கருணாநிதிக்கு மட்டுமல்ல, நமக்கும் ஆறுதலாக இருந்தது.

கருணாநிதியின் குடும்பத்தில் மிகவும் நன்றிகெட்டவர்களாக யாராவது இருந்தால்தான் அவரை உதவாத குடும்பத் தலைவர் என்று குற்றம் சாட்ட முடியும். தன்னுடைய கழகத்தையும், அரசாங்கத்தையும் குடும்பத்தினருக்கு பரிசாக கொடுத்திருக்கிறார் கருணாநிதி. ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு கணக்குகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் மற்றும் டாலர்கள் இருப்பதை உறுதி செய்திருக்கிறார் கருணாநிதி. இந்த அளவுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு உதவிய கருணாநிதிக்கு, குறைந்தபட்சம் அவர்களால் செய்ய முடிந்தது அவர் உடல் நலம் குன்றி இருக்கும் சமயத்தில் அவர்மேல் அக்கறை காட்டுவதுதான்.

அவருடைய பற்பல உறவினர்கள், அறிக்கைகள் என்ற போர்வையில் என் மீது விஷம் கக்கி குற்றம் சுமத்துவதற்கும், என்னை வசைமாரி திட்டுவதற்கும் ஏதுவான வசதியையும், சுற்றுப்புறச் சூழ்நிலையையும் கருணாநிதிக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.ஒரு நாள் கூட கருணாநிதி என் மீது வசைமாரி பொழிவதை நிறுத்தவில்லை. அது குறித்து எனக்கு எந்தவித மனத்தாங்கலும் இல்லை. இது போன்ற கருணாநிதியின் செயல் அவர் மனரீதியாக சுறுசுறுப்புடன் இருப்பதைத்தான் காட்டுகிறது. தற்போது இருக்கும் தகவல் தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி பாலங்களையும், சாலைகளையும் திறந்து வைத்து மக்களுடன் தொடர்பும் வைத்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. இதையும் புரிந்துகொள்ள முடிகிறது. அவ்வாறு திறந்துவைக்காவிட்டால், அந்தப் பாலங்களையும், சாலைகளையும் மக்களே திறந்துவிட்டிருப்பார்கள். அப்போது கருங்கல் மற்றும் சலவைக் கல்லால் ஆன கல்வெட்டுக்களில் தன் பெயரை விளம்பரத்திற்காக செதுக்குவது கருணாநிதிக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தி இருக்கும்.

ஆனால், இது போன்ற உணர்ச்சி வெள்ளத்தில், ஒரு முக்கியமான பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அதுதான், மாநில நிர்வாகம். அதற்காகத்தானே மக்களால் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார்!

சென்னை சட்டக் கல்லூரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூடப்பட்டது. நான்கு மாதங்கள் உருண்டோடிவிட்டன. எந்தப் பிரச்சினைக்காக சென்னை சட்டக் கல்லூரி மூடப்பட்டதோ, அந்தப் பிரச்சினை தீருவதற்கான எந்தவித நடவடிக்கையையும் கருணாநிதி எடுக்கவில்லை. மிகப் பெரிய தேசியத் தலைவர்களுள் ஒருவரான அம்பேத்கரின் பெயரைக் கொண்ட சென்னை சட்டக் கல்லூரியை திறக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் கல்வி ஆண்டு முடிவுக்கு வரும் தருவாயில் உள்ள சூழ்நிலையில் கூட, சட்ட அமைச்சரோ அல்லது கல்வி அமைச்சரோ இது குறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நிர்வாகத் திறமையற்ற, கையாலாகாத அரசாங்கம் தமிழ் நாட்டில் இருப்பதால், சில தவறான வழிகாட்டுதல்களால் சில மாணவர்களின் காட்டுமிராண்டித்தனமான செயலால் ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலையை சரியாக கையாள முடியாததால், அதன் விளைவாக, நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

பிரசித்திபெற்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் நடைபெற்ற மோதல் காட்சிகளை இந்த உலகமே தொலைக்காட்சியில் பார்த்தது. காவல் துறையினர் கட்டுப்பாடுள்ள சீருடைப் பணியாளர்களைப் போல் நடந்து கொள்ளாமல் வன்முறையாளர்களைப் போல் நடந்து கொண்டார்கள். ஊடகங்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் வர்ணணையாளர்கள், பொதுமக்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பிரசித்தி பெற்ற சட்ட மற்றும் அரசமைப்புச் சட்ட வல்லுநர்கள் ஆகியோர் இந்த வெறுப்பூட்டும் நிகழ்வு குறித்து தங்கள் கருத்துகளை வெளியிட்டு கவலை தெரிவித்தார்கள். இருப்பினும், இது குறித்து தி.மு.க. அரசின் சார்பில் எந்த ஒரு வார்த்தையும் வரவில்லை. தவறு செய்த காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல வாரங்களாக நீதிமன்றங்கள் செயல்படாமல் உள்ளன. வழக்குகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. பொது மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இருப்பினும், தி.மு.க. அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உள் துறை பொறுப்பை வகிக்கும் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அவருடைய அமைச்சர்களைப் பொறுத்த வரையில், இதை ஒரு பிரச்சினையாகவே அவர்கள் கருதவில்லை!

வெளிச் சந்தையில் ஒரு கிலோ அரிசியின் விலை 40 ரூபாயை தாண்டிவிட்டது. மயக்கமடையும் அளவுக்கு பணவீக்கம் உயர்ந்த போது இருந்த சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளின் விலைகள் இன்னும் இறங்கவில்லை. சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக தடுமாறிக் கொண்டிருக்கின்ற நடுத்தர மக்களால் காசு கொடுத்து வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி ஏறிக் கொண்டிருக்கிற போதிலும், இந்த விலைவாசி உயர்வு விவசாயிகளுக்கும் எந்தப் பயனையும் தரவில்லை. இதற்குக் காரணம் மனசாட்சியற்ற இடைத்தரகர்கள் அதிக அளவில் பொருட்களை பதுக்கி வைப்பதுதான். பதுக்கி வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை வெளிக் கொணரவோ அல்லது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்கவோ மைனாரிட்டி தி.மு.க. அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்நாடு மின்சார வாரியம் 6,000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. கருணாநிதி குடும்பத்தைப் பொறுத்தவரை 6,000 கோடி ரூபாய் என்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் மாநில அரசுக்கு 6,000 கோடி ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. தேவைக்கும், உற்பத்திக்கும் உள்ள பற்றாக்குறையைப் போக்க இத்தொகையின் பெரும்பகுதி மின்சாரம் வாங்குவதற்காக செலவிடப்படுகிறது. இருப்பினும் மின்வெட்டு எனும் கொடிய நோய் தொடர்ந்து தமிழ்நாட்டை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மின்சார உற்பத்தியை பெருக்குவதில் இந்த மைனாரிட்டி தி.மு.க. அரசு தோல்வியையே தழுவியுள்ளது. மின்சார உற்பத்தியை பெருக்க இந்த அரசு எதுவும் செய்யவில்லை. மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, முதலமைச்சருக்கு எடுபிடி வேலைகளை செய்துகொண்டு அவர் கூடவே இருந்து கவனித்துக் கொள்வதில் மும்முரமாக இருக்கிறார். தன்னுடைய அரசமைப்பு கடமைகளை கவனிப்பதற்கு ஆற்காடு வீராசாமிக்கு நேரமே இல்லை. நாகரீகமற்ற விஷம் கக்கும் வார்த்தைகளால் என்னை வசைபாடுவதிலும், அல்லது தன் மீது தானே இரக்கம் கொண்டு அழுது வடியும் அறிக்கைகளை வெளியிடுவதிலும் நேரத்தை வீணடிக்கும் கருணாநிதிக்கு, உரிய முறையில் நிர்வாகம் செய்யும் வகையில் தங்கள் கடமைகளை செய்யுமாறு தனது அமைச்சர்களுக்கு அறிவுரை கூற நேரம் இல்லாதது மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமே.