வசைமாரி பொழிவதில் வல்லவர் யார்? ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (மார்ச் 17) வெளியிட்ட அறிக்கை:
14.3.2009 அன்று வெளியிட்ட எனது அறிக்கையில் வினவப்பட்டுள்ள ‘மின் வெட்டு’, ‘விலைவாசி உயர்வு’, ‘வழக்கறிஞர்கள் போராட்டம்’ உள்ளிட்ட நாட்டில் உள்ள முக்கியமான பிரச்சினைகள் குறித்து பதில் அளிக்காமல், நான் ஏற்கெனவே எனது அறிக்கைகளின் மூலமாக சுட்டிக்காட்டிய உண்மைச் சம்பவங்களை பட்டியலிட்டு, தனக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை என்பதை ‘வசைமாரி பொழிவது யார்?’ என்ற தனது அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதி தனது அறிக்கையில் “மாநில நிர்வாகம் எதுவும் பின்னுக்குத் தள்ளப்படவில்லை” என்று கூறியிருக்கிறார். கடுமையான மின்வெட்டு, விஷம் போல் ஏறும் விலைவாசி, வெறிச்சோடி கிடக்கும் தொழிற்பேட்டைகள், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு, தற்காலிக வேலை நிறுத்திவைப்பு, கட்டுமானத் தொழில் பாதிப்பு, வாகனம் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையில் தேக்க நிலை, பொருளாதார மந்த நிலை, வேளாண் உற்பத்தி பாதிப்பு, ஜவுளித் தொழில் பாதிப்பு, ஏற்றுமதி பாதிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம்-ஒழுங்கு சீரழிவு, நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை என ஏராளமானவற்றை மாநில நிர்வாகம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு சான்றாகக் கூறலாம். இத்தனைக்கும் பிறகு, மாநில நிர்வாகம் பின்னுக்குத் தள்ளப்படவில்லை என்று கருணாநிதி கூறியிருப்பது, மாநில நிர்வாகம் குறித்து அவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது.

“ஆம்புலன்ஸ் வண்டியிலேயே வந்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்று மருத்துவமனையில் படுத்துக் கொண்டே கடிதம் எழுதியதாகக் கூறும் கருணாநிதி, வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும், பொது மக்களையும் கண்மூடித்தனமாக தாக்க காவல் துறையினருக்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து இதுநாள் வரையிலும் பதில் அளிக்கவில்லை. இதன் மூலம் குழந்தையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் கருணாநிதியின் கபட நாடகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

நான் ஏதோ வசைமாரி பொழிந்து அறிக்கைகள் வெளியிட்டதாக கருணாநிதி கூறி, எனது அறிக்கைகளில் உள்ள சில வார்த்தைகளை பட்டியலிட்டு இருக்கிறார். அந்தப் பட்டியலில் உள்ள வார்த்தைகளைப் பார்க்கும் போது, அவை வசைமாரி பொழியும் அறிக்கைகள் அல்ல, உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் அறிக்கைகள் என்பதை அறிவார்ந்த மக்கள் எளிதாக அறிந்து கொள்வார்கள். உதாரணமாக, ‘கருணாநிதி பேச்சு, மூச்சற்றுப் போவார், வாய் மூடிக் கிடப்பார்” என்று 4.10.2008 அன்று நான் வெளியிட்ட அறிக்கையிலே குறிப்பிட்டதாக குறிப்பிட்டிருக்கிறார் கருணாநிதி. அந்த அறிக்கையில், “தமிழர்களின் நலன், பாதுகாப்பு, நல்வாழ்வு என்பன பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் கருணாநிதி பேச்சு, மூச்சற்றுப் போவார்; வாய்மூடிக் கிடப்பார்” என்றுதான் குறிப்பிட்டிருந்தேன். அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சினை, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை என்றால் வாய்மூடிக் கிடப்பார் என்றுதான் இதற்குப் பொருள். இதுதான் உண்மை நிலை. இதில் தவறு ஒன்றும் இல்லை.

அடுத்தபடியாக, “அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதற்கான எந்த தார்மீக உரிமையும் கருணாநிதிக்கு இல்லை” என்று நான் 10.10.2008 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாக கூறியிருக்கிறார். ‘காவேரி நதிநீர் தாவா’ தொடர்பாக 19.2.2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கருணாநிதி கூட்டினார். ஆனால், இன்று வரை அந்தப் பிரச்சினையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட கூட மத்திய அரசு முன்வரவில்லை. இது குறித்து மத்திய அரசிடம் கருணாநிதி வற்புறுத்தி இருப்பாரா? அதனால் தான் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான எந்தத் தார்மீக உரிமையும் கருணாநிதிக்கு இல்லை என்று தெரிவித்திருந்தேன். இதில் எந்தத் தவறும் இல்லை என்பதை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

நான் என்னுடைய 10.10.2008 ஆம் நாளிட்ட அறிக்கையில், “உண்மையிலேயே தமிழர்கள் மீது கருணாநிதிக்கு அக்கறை இருக்குமானால், இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வரும் ஆதரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படிச் செய்தால்தான் மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட முன்வரும்.” என்று தெரிவித்திருந்தேன். என்னுடைய கோரிக்கை ஏற்கப்பட்டிருக்குமேயானால், இந்த நேரத்தில் இலங்கையில் நிச்சயமாக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும். தமிழினப் படுகொலை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். அற்ப பதவி சுகத்திற்காக தமிழினப் படுகொலைக்கு துணை போன கருணாநிதியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதை கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையிலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், ஜனநாயக ரீதியில், உண்மை நிலையை எனது அறிக்கைகள் வாயிலாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது எனது கடமை. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். நான் ஆற்றும் ஜனநாயகக் கடமைகளை எல்லாம் வசைமாரி பொழியும் அறிக்கைகள் எனக் கருணாநிதி குறிப்பிடுவது மிகுந்த வருத்தமளிக்கும் செயலாகும். எனது அறிக்கைகளை வசைமாரி பொழியும் அறிக்கைகள் என்றால், “மூக்கறுந்து போன மூளி, அலங்காரி, நாக்கறுந்து தொங்குகின்ற நரி, நாலாந்தரப் பெண், மகுடம் பறி கொடுத்த மாயராணி, செப்படி வித்தை மாமி, மலம், வேஷக்காரி, தெருப் பொறுக்கி, நாய்க் கொழுப்பு, பூதகி, நாய், திமிங்கலம்” போன்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ள கருணாநிதியின் அறிக்கைகளை என்ன என்று சொல்வது! ஒரு வேளை இவையெல்லாம் கருணாநிதியின் கண்களுக்கு பொன்மொழிகளாக தோன்றுகிறதோ! நல்லவற்றை நாராசம் என்று சொல்வதும், நாராசத்தை நல்லது என்று சொல்வதும் கருணாநிதியின் இயல்பு போலும்!

இதிலிருந்து வசைமாரி பொழிவதில் வல்லவர் யார் என்பதை அறிவார்ந்த தமிழ் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். எனவே, மரபுக்கு ஒவ்வாத, அவதூறான, கேவலமான, நாகூசும் அறிக்கைகள் வெளியிடுவதையும், என்னைக் குறை கூறுவதையும் நிறுத்திக் கொண்டு, எனது அறிக்கைகளில் உள்ள மக்கள் பிரச்சினைகளின் உண்மை நிலையை புரிந்து கொண்டு, அதற்கேற்றாற்போல் ஆட்சியில் இருக்கப் போகும் சில நாட்களாவது நாட்டு நலப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கைக்கு மீண்டும் தமிழக நிவாரண பொருட்கள்

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்காக கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு நிதி திரட்டியது. 50.53 கோடி ரூபாய் நிதி திரண்டது. அந்த நிதியில் இருந்து பத்து கோடியே 7 லட்சம் நிதி மத்திய அரசின் உதவியோடு நிவாரண பொருட்கள் வாங்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது இலங்கையில் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் 40 ஆயிரம் குடும்பங்களுக்கு உடனடியாக சமையல் பாத்திரங்கள் தேவைப்படுவதாக தகவல் வந்ததை அடுத்து அந்த பார்த்திரங்களை அனுப்பி வைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்ட்டிருந்தார்.

அரிசி, பருப்பு டீ.தூள், சர்க்கரை போன்ற உணவு பொருட்களுடன் சோப்பு, பற்பசை,சமையல் செய்ய எவர்சில்வர் பாத்திரங்கல் நாற்பதாயிரம் குடும்பங்களுக்கு அனுப்பபட இருக்கின்றன.இந்த பாத்திரங்களை கருணாநிதி பார்வையிட்டார்.

"கருணாநிதியின் மருத்துவமனை டைரிகுறிப்புகள் நெஞ்சைப் பிளக்கின்றன" ஜெய‌ல‌லிதா

ஜெய‌ல‌லிதா இன்று (மார்ச் 14) வெளியிட்ட அறிக்கை:

‘நலிவும் நானும்’ என்ற தலைப்பில், தான் மருத்துவமனையில் இருந்தது, தனக்கு நடந்த அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவை குறித்து கருணாநிதி வெளியிட்டு வரும் அறிக்கைகள் உண்மையிலேயே நெஞ்சைப் பிளக்கின்றன! கல் நெஞ்சங்கள் கூட உருகும் அளவுக்குதான் சகித்துக் கொண்ட வலியை தன்னுடைய அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் கருணாநிதி!

கருணாநிதி ஆரோக்கியமடைந்து வரும் சமயம், அவருடைய பல மனைவிமார்கள், எண்ணிலடங்கா குழந்தைகள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள் ஆகியோர் அவர் மீது அதிக அக்கறை எடுத்துக்கொண்டு அவரை கவனித்தது கருணாநிதிக்கு மட்டுமல்ல, நமக்கும் ஆறுதலாக இருந்தது.

கருணாநிதியின் குடும்பத்தில் மிகவும் நன்றிகெட்டவர்களாக யாராவது இருந்தால்தான் அவரை உதவாத குடும்பத் தலைவர் என்று குற்றம் சாட்ட முடியும். தன்னுடைய கழகத்தையும், அரசாங்கத்தையும் குடும்பத்தினருக்கு பரிசாக கொடுத்திருக்கிறார் கருணாநிதி. ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு கணக்குகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் மற்றும் டாலர்கள் இருப்பதை உறுதி செய்திருக்கிறார் கருணாநிதி. இந்த அளவுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு உதவிய கருணாநிதிக்கு, குறைந்தபட்சம் அவர்களால் செய்ய முடிந்தது அவர் உடல் நலம் குன்றி இருக்கும் சமயத்தில் அவர்மேல் அக்கறை காட்டுவதுதான்.

அவருடைய பற்பல உறவினர்கள், அறிக்கைகள் என்ற போர்வையில் என் மீது விஷம் கக்கி குற்றம் சுமத்துவதற்கும், என்னை வசைமாரி திட்டுவதற்கும் ஏதுவான வசதியையும், சுற்றுப்புறச் சூழ்நிலையையும் கருணாநிதிக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.ஒரு நாள் கூட கருணாநிதி என் மீது வசைமாரி பொழிவதை நிறுத்தவில்லை. அது குறித்து எனக்கு எந்தவித மனத்தாங்கலும் இல்லை. இது போன்ற கருணாநிதியின் செயல் அவர் மனரீதியாக சுறுசுறுப்புடன் இருப்பதைத்தான் காட்டுகிறது. தற்போது இருக்கும் தகவல் தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி பாலங்களையும், சாலைகளையும் திறந்து வைத்து மக்களுடன் தொடர்பும் வைத்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. இதையும் புரிந்துகொள்ள முடிகிறது. அவ்வாறு திறந்துவைக்காவிட்டால், அந்தப் பாலங்களையும், சாலைகளையும் மக்களே திறந்துவிட்டிருப்பார்கள். அப்போது கருங்கல் மற்றும் சலவைக் கல்லால் ஆன கல்வெட்டுக்களில் தன் பெயரை விளம்பரத்திற்காக செதுக்குவது கருணாநிதிக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தி இருக்கும்.

ஆனால், இது போன்ற உணர்ச்சி வெள்ளத்தில், ஒரு முக்கியமான பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அதுதான், மாநில நிர்வாகம். அதற்காகத்தானே மக்களால் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார்!

சென்னை சட்டக் கல்லூரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூடப்பட்டது. நான்கு மாதங்கள் உருண்டோடிவிட்டன. எந்தப் பிரச்சினைக்காக சென்னை சட்டக் கல்லூரி மூடப்பட்டதோ, அந்தப் பிரச்சினை தீருவதற்கான எந்தவித நடவடிக்கையையும் கருணாநிதி எடுக்கவில்லை. மிகப் பெரிய தேசியத் தலைவர்களுள் ஒருவரான அம்பேத்கரின் பெயரைக் கொண்ட சென்னை சட்டக் கல்லூரியை திறக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் கல்வி ஆண்டு முடிவுக்கு வரும் தருவாயில் உள்ள சூழ்நிலையில் கூட, சட்ட அமைச்சரோ அல்லது கல்வி அமைச்சரோ இது குறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நிர்வாகத் திறமையற்ற, கையாலாகாத அரசாங்கம் தமிழ் நாட்டில் இருப்பதால், சில தவறான வழிகாட்டுதல்களால் சில மாணவர்களின் காட்டுமிராண்டித்தனமான செயலால் ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலையை சரியாக கையாள முடியாததால், அதன் விளைவாக, நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

பிரசித்திபெற்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் நடைபெற்ற மோதல் காட்சிகளை இந்த உலகமே தொலைக்காட்சியில் பார்த்தது. காவல் துறையினர் கட்டுப்பாடுள்ள சீருடைப் பணியாளர்களைப் போல் நடந்து கொள்ளாமல் வன்முறையாளர்களைப் போல் நடந்து கொண்டார்கள். ஊடகங்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் வர்ணணையாளர்கள், பொதுமக்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பிரசித்தி பெற்ற சட்ட மற்றும் அரசமைப்புச் சட்ட வல்லுநர்கள் ஆகியோர் இந்த வெறுப்பூட்டும் நிகழ்வு குறித்து தங்கள் கருத்துகளை வெளியிட்டு கவலை தெரிவித்தார்கள். இருப்பினும், இது குறித்து தி.மு.க. அரசின் சார்பில் எந்த ஒரு வார்த்தையும் வரவில்லை. தவறு செய்த காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல வாரங்களாக நீதிமன்றங்கள் செயல்படாமல் உள்ளன. வழக்குகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. பொது மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இருப்பினும், தி.மு.க. அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உள் துறை பொறுப்பை வகிக்கும் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அவருடைய அமைச்சர்களைப் பொறுத்த வரையில், இதை ஒரு பிரச்சினையாகவே அவர்கள் கருதவில்லை!

வெளிச் சந்தையில் ஒரு கிலோ அரிசியின் விலை 40 ரூபாயை தாண்டிவிட்டது. மயக்கமடையும் அளவுக்கு பணவீக்கம் உயர்ந்த போது இருந்த சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளின் விலைகள் இன்னும் இறங்கவில்லை. சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக தடுமாறிக் கொண்டிருக்கின்ற நடுத்தர மக்களால் காசு கொடுத்து வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி ஏறிக் கொண்டிருக்கிற போதிலும், இந்த விலைவாசி உயர்வு விவசாயிகளுக்கும் எந்தப் பயனையும் தரவில்லை. இதற்குக் காரணம் மனசாட்சியற்ற இடைத்தரகர்கள் அதிக அளவில் பொருட்களை பதுக்கி வைப்பதுதான். பதுக்கி வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை வெளிக் கொணரவோ அல்லது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்கவோ மைனாரிட்டி தி.மு.க. அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்நாடு மின்சார வாரியம் 6,000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. கருணாநிதி குடும்பத்தைப் பொறுத்தவரை 6,000 கோடி ரூபாய் என்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் மாநில அரசுக்கு 6,000 கோடி ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. தேவைக்கும், உற்பத்திக்கும் உள்ள பற்றாக்குறையைப் போக்க இத்தொகையின் பெரும்பகுதி மின்சாரம் வாங்குவதற்காக செலவிடப்படுகிறது. இருப்பினும் மின்வெட்டு எனும் கொடிய நோய் தொடர்ந்து தமிழ்நாட்டை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மின்சார உற்பத்தியை பெருக்குவதில் இந்த மைனாரிட்டி தி.மு.க. அரசு தோல்வியையே தழுவியுள்ளது. மின்சார உற்பத்தியை பெருக்க இந்த அரசு எதுவும் செய்யவில்லை. மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, முதலமைச்சருக்கு எடுபிடி வேலைகளை செய்துகொண்டு அவர் கூடவே இருந்து கவனித்துக் கொள்வதில் மும்முரமாக இருக்கிறார். தன்னுடைய அரசமைப்பு கடமைகளை கவனிப்பதற்கு ஆற்காடு வீராசாமிக்கு நேரமே இல்லை. நாகரீகமற்ற விஷம் கக்கும் வார்த்தைகளால் என்னை வசைபாடுவதிலும், அல்லது தன் மீது தானே இரக்கம் கொண்டு அழுது வடியும் அறிக்கைகளை வெளியிடுவதிலும் நேரத்தை வீணடிக்கும் கருணாநிதிக்கு, உரிய முறையில் நிர்வாகம் செய்யும் வகையில் தங்கள் கடமைகளை செய்யுமாறு தனது அமைச்சர்களுக்கு அறிவுரை கூற நேரம் இல்லாதது மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமே.

ராமதாஸ் எங்கே போகிறார்?: ஆற்காடு வீராசாமி அறிக்கை

அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று (பிப்ரவரி 23) வெளியிட்ட அறிக்கை:

பொதுவாக அரசியல் தலைவர்களுக்கு ஒரு “ஸ்டடி மைன்ட்’’ வேண்டும். ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால் என்பதைப் போல அங்கே போனால் அதிக இடம் கிடைக்குமா, இங்கேயே நீடித்தால் அதிக இடம் கிடைக்குமா? என்று நினைத்துக் கொண்டு செயல்படக் கூடாது. அது மாத்திரமல்ல, அன்றாடம் தன் பேரில் ஏதாவது ஒரு அறிக்கை வந்தால்தான் தன்னை தமிழ்நாட்டு மக்கள் மறக்காமல் இருப்பார்கள் என்று மனதிலே எண்ணுவதையெல்லாம் பேசுவதும் கூடாது. எதற்காக இதையெல்லாம் சொல்லுகிறேன் என்றால் ராமதாஸ் முதல் நாள் கலைஞர்தான் எல்லாம், அவர்தான் வழி நடத்த வேண்டும் என்கிறார். அடுத்த நாள் இந்த ஆட்சிக்கு தைரியமில்லை, ஆட்சிக் கலைப்புக்கு அஞ்சுகிறார்கள் என்கிறார்.

நேற்றையதினம் கூட்டாக அளித்த பேட்டியின் போது டாக்டர் ராமதாஸ் தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு இல்லை என்று சொல்லியிருக்கிறார். இவருக்கு அந்த எண்ணம் இருப்பதாக நாங்கள் யாரும் கூறவில்லையே! கலைஞர் அப்படிப்பட்ட எந்த கருத்தையும் இவர்கள் மீது சொல்லவில்லையே? மேலும் டாக்டர் தாங்கள் யாரும் சதிகாரர்கள் அல்ல என்று பேட்டியிலே சொல்லியிருக்கிறார்கள். அவரைப் பற்றிச் சொல்லாததையெல்லாம் யாரோ சொல்லிவிட்டதாக அவரே கூறிக் கொண்டு எதற்காக பதில் சொல்லிக் கொள்கிறார்.

சிறு சிறு சம்பவங்களுக்கெல்லாம் - சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது, ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று யார் யார் சொல்கிறார்களோ அவர்களைப் பற்றித்தான் “ஆட்சிக் கலைக்க முயற்சிக்கிறார்கள்’’ என்று சொல்கிறோம். உடனே “எங்கப்பன் குதிருக்குள் இல்லை’’ என்பதைப் போல டாக்டர் பதில் சொல்ல முற்படுவானேன். மேலும் டாக்டர் தனது பேட்டியில் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போதுதான் இலங்கைத் தமிழர்களுக்காகப் போராட்டம் நடத்தியதாகவும், ஆளுங்கட்சியாக இருந்த போது எந்தப் போராட்டமும் நடத்தவில்லை என்று சொல்லியிருக்கிறார். இதே கருத்தை அவர் சில நாட்களுக்கு முன்பு பேசி, தி.மு.க. ஆளுங் கட்சியாக இருந்த போது என்னென்ன போராட்டங்களை எந்தெந்த தேதிகளில் நடத்தியது என்ற பட்டியலையே முதல்வர் கலைஞர் பட்டியலாகக் கொடுத்திருந்தாரே, அதை டாக்டர் ராமதாஸ் படிக்கவில்லையா?

தி.மு.க. ஆட்சியிலே இருந்த போதுதானே, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக என்று காரணம் கூறி கலைக்கப்பட்டது. அதைக் கூட இல்லை என்று மறுக்கிறாரா? முதல்வர் உண்ணாவிரத அறிவிப்பையே நாடகம் என்று டாக்டர் ராமதாஸ் கூறுகிறார்கள் என்றால், இதுவரை எதற்கெடுத்தாலும் நாடகம் என்று ஜெயலலிதாவும், வைகோவும்தான் கூறிக் கொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் டாக்டர் ராமதாசும் சேர முயற்சிக்கிறாரா? பழி போடுவதும், பழி வாங்குவதும் கலைஞர் பாணி என்று சொல்லியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் உங்களை கைது செய்து சிறையிலே அடைத்தார்களே, அதைப் போல கலைஞர் ஏதாவது செய்து விட்டாரா? உங்களைக் கைது செய்த போது - அதைப்பற்றி அறிக்கை விட்ட ஜெயலலிதா ஏ.சி. அறையிலே இருந்தவர்களுக்கு சிறையிலே இருக்க முடியாமல் மனைவியை தூதாக அனுப்பி வைத்தார்கள் என்று குற்றஞ்சாட்டினாரே, அப்படி ஏதாவது கலைஞர் தற்போது உங்கள் மீது பழி போட்டு விட்டாரா? நேர் காணலுக்காக நீங்கள் ஜெயலலிதாவின் அலுவலகத்திற்குச் சென்ற போது மணிக்கணக்கிலே காத்திட வைத்தார் என்று நீங்களே ஏடுகளில் சொன்னீர்களே, அது போல் ஒரு முறை உங்களிடம் கலைஞர் நடந்து கொண்டது உண்டா?

“பிடிக்காத மனைவி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்’’ என்பதைப் போல எதற்கெடுத்தாலும் கலைஞர், கலைஞர் என்று காய்ந்து விழுகிறீர்களே என்ன காரணம்? மருத்துவ மனையிலே முதுகுத் தண்டிலே அறுவை சிகிச்சை செய்த நிலையிலே கூட 24 மணி நேரமும் மக்கள் பிரச்சினைக்காகவே உழைத்துக் கொண்டிருப்பவரைப் பார்த்து நாக் கூசாமல் நாடகம் என்று சொல்கிறீர்களே, உங்களுக்கே அது சரியாகப்படுகிறதா? கலைஞர்தான் அடிக்கடி சொல்வார், அரசியலிலே நாளை என்றோ ஒரு நாள் நேரில் சந்திக்க நேரிடும், அப்போது ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசிட நேரிடும், அதற்கு ஒரு இழுக்கு வராத அளவிற்கு மனிதாபிமானத்தோடு, பேசிட முன் வர வேண்டும். நாளைக்கே கூட்டணி வரலாம், வராமல் போகலாம், அப்போது உங்களைச் சந்திக்கும் போது, கலைஞர் உண்ணா விரதம் இருப்பதாக அறிவித்திருப்பதை நாடகம் என்று சொன்ன சொல் போகுமா? ஒவ்வொரு தொண்டன் உள்ளத்திலும் அந்த வார்த்தை புண்படுத்தாதா? உறவு இருக்கட்டும், இல்லாமல் போகட்டும், ஆனால் வார்த்தைகளைக் கொட்டிவிட்டால் அள்ள முடியாது. ஆனால் நீங்கள் அதை அடிக்கடி மறந்து விடுகிறீர்கள். கலைஞரைப் பொறுத்த வரை அவர் பழி வாங்கவும் மாட்டார், பழி போடவும் மாட்டார். அதற்கு தமிழ்நாட்டில் வேறொருவர் இருக்கிறார். அவர் கடைக்கண் பார்க்க மாட்டாரா என்று நீங்கள் தவிப்பது எங்களுக்கு நன்றாக தெரியவே தெரிகிறது.

க‌ருணாநிதி உண்ணாவிர‌த‌ம்: ஜெயல‌லிதா கிண்ட‌ல்

ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 23)வெளியிட்ட அறிக்கை:

தன்னுடைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே ஒரு சுய நோக்கத்தின் அடிப்படையில் “உண்ணா விரதம்” கபட நாடகத்தை மருத்துவமனையில் துவக்கப் போவதாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல், சட்டத்தை நிலை நாட்ட வேண்டிய ஒரு முதலமைச்சர் காவல் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டிருப்பது வெட்கக்கேடானது. இது போன்ற ஒரு கையாலாகாத முதலமைச்சரை இந்திய நாடு இதுவரை கண்டதில்லை.

மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், இலங்கையில் ராஜபக்சே நடத்துகின்ற தமிழினப் படுகொலையைக் கண்டித்து இங்குள்ள தமிழர்களை அணிவகுத்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அந்த ராஜபக்சே அரசுக்கு நவீன சாதனங்களையும், ஆயுதங்களையும் அனுப்பி மத்திய அரசு உதவி செய்த போது அதுகுறித்து வாய் திறக்காமல் மவுனம் சாதித்ததை கருணாநிதி மறந்துவிட்டார் போலும்! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, அந்தக் கூட்டத்தை பற்றி கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் எந்தவொரு காரியத்திற்காக அமைதியாக யார் கிளர்ச்சி நடத்தினாலும், அவர்களை வன்முறையாளர்களாக மாற்றி, சட்டம்-ஒழுங்கு கெடுவதற்கு வழி வகுத்து, தி.மு.க. ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று கனவு காண்பதாக தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் கருணாநிதி. வன்முறையின் மறு உருவம் கருணாநிதி என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். உள்ளாட்சித் தேர்தலில் ரத்தக் களறி ஏற்படுத்தியது, மதுரையில் ஒரு பத்திரிகை அலுவலகத்தை எரித்து அதன் விளைவாக மூன்று அப்பாவி உயிர்களைப் பறித்தது, வன்முறை மூலம் அனைத்து இடைத் தேர்தல்களையும் நடத்திக் காட்டியது, கூட்டுறவு சங்கத் தேர்தலில் வன்முறையை புகுத்தியது ஆகியவற்றிற்கு எல்லாம் யார் காரணம்? மேற்படி சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தது உண்டா? இதையெல்லாம் மறந்துவிட்டு கருணாநிதி இவ்வாறு பேசுவது முறையல்ல.

கடந்த 33 மாத கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் உட்பட பல வன்முறை நிகழ்ச்சிகளை கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள் தமிழகக் காவல் துறையினர் என்பதை இந்த நாடு நன்கு அறியும். இவ்வாறு பல நிகழ்ச்சிகளை பார்த்துதான் அவர்களே வன்முறையாளர்களாக மாறிவிட்டனர். காவல் துறையினரையே வன்முறையாளர்களாக மாற்றிய பெருமை, காவல் துறைக்கு பொறுப்பேற்றுள்ள மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியைத்தான் சாரும். இதுதான் அவருடைய 33 மாத கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் ஒப்பற்ற சாதனை!

“இந்த ஆட்சிக்கு எதிராக தூண்டிவிடப்படும் சதிச் செயலில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறை நண்பர்களும் அறியாமல் பலியாகி விடக் கூடாது” என்று தன்னுடைய அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி. கருணாநிதி முதலமைச்சர் மட்டுமல்ல; காவல் துறையை உள்ளடக்கிய உள் துறைக்கும் அவர்தான் அமைச்சர். இதிலிருந்து காவல் துறை தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதை கருணாநிதியே ஒப்புக்கொண்டுள்ளார். அப்படி என்றால், காவல் துறையினர் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறை தன்னுடையக் கட்டுப்பாட்டில் இல்லை என்றால், முதலமைச்சர் பதவியில் தொடர அவருக்கு எந்தவிதமான அருகதையும் இல்லை. இவ்வாறு வேண்டுகோள் விடுப்பதை விட பதவியை விட்டு விலகுவது மக்களுக்கு நன்மை பயக்கும். மேலும் அவர் குறிப்பிடுகையில், அடித்தட்டிலே உள்ள ஏழை எளிய மக்களுக்கு எல்லா வகையான சாதனைகளையும் செய்ய வேண்டும் என்பதுதான் தனது எண்ணம் என்று குறிப்பிட்டிருக்கிறார். கடுமையான மின் தட்டுப்பாடு, விஷம் போல் ஏறும் விலைவாசி, சட்டம்-ஒழுங்கு சீரழிவு, தொழில் வளர்ச்சியின்மை, விவசாயி உற்பத்தியின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, என கருணாநிதி ஆட்சியின் சாதனைகளை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். கருணாநிதிக்கு வேண்டுமானால் இவைகள் சாதனைகளாக தெரியலாம். ஆனால் தமிழக மக்களுக்கு வேதனைதான்.

“தூண்டிவிடுகின்ற கும்பலைப் பற்றி கவலைப்படாமல் ஒன்று படுங்கள், ஒத்துழையுங்கள்” என்று தன்னுடைய அறிக்கையின் மூலம் உபதேசம் செய்திருக்கிறார் கருணாநிதி. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வன்முறை வெறியாட்டம் நடத்துவதற்கான அறிவுரையை உள் துறைச் செயலாளர் மூலம் காவல் துறையினருக்கு தெரிவித்ததே முதலமைச்சர் கருணாநிதிதான் என்று எஸ். துரைசாமி என்ற ஒரு வழக்கறிஞர் சென்னை, எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறாரே? இது குறித்து மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி எதையும் தெரிவிக்கவில்லையே? “மவுனம் சம்மதம்” என்று எடுத்துக் கொள்ளலாமா? இல்லை என்றால், இது போன்ற தாக்குதலுக்கு யார் மூல காரணம்? காவல் துறையினரால் நடத்தப்பட்ட தாக்குதலின் காரணமாக பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இந்த அரசு இழப்பீடு வழங்குமா? சென்னை உயர் நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் காவல் துறையினரால் சூறையாடப்பட்டதற்கு இந்த அரசு இழப்பீடு வழங்குமா? தவறு செய்த காவல் துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதற்கெல்லாம் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியிடமிருந்து மக்கள் தக்க பதிலை எதிர்பார்க்கிறார்கள்.

காவல் துறையினரும், வழக்கறிஞர்களும் ஒன்றுபட முடியாவிட்டால், ஒன்றுபடுகிறோம் என்று இணக்கம் தெரிவிக்கின்ற வரையில், மருத்துவமனையிலேயே உண்ணாநோன்பு இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் கருணாநிதி. தனது கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தும் தன்னுடைய அறிக்கையின் மூலம், தான் முதலமைச்சர் பதவி வகிப்பதற்கு அடியோடு லாயக்கற்றவர் என்பதை கருணாநிதி நிரூபித்து இருக்கிறார்.

கருணாநிதியின் அறிக்கையிலிருந்து தவறு செய்த காவல் துறையினர் மீது நடவடிக்கை இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. ஆக, தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. காவல் துறை கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். காவல் துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதும் அவருக்குத் தெரியவில்லை. இதிலிருந்து கருணாநிதி தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெரிய வருகிறது. ஒரு செயலிழந்த முதலமைச்சராக கருணாநிதி இருக்கிறார். தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையை கலைத்து விடுவது தான் அவருக்கும் நல்லது, தமிழக மக்களுக்கும் நல்லது என்பதை மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிர‌சுக்கு ஜெய‌ல‌லிதா அழைப்பு

ஜெய‌ல‌லிதா இன்று (பிப்ரவரி 19) 61 ஜோடிகளுக்கு சென்னையில் திருமணம் நடத்தி வைத்தார். அந்த விழாவில் அவர் பேசியதாவது:

திருமணம் என்பதும் ஒரு கூட்டணிதான். அந்தக் கூட்டணி வெற்றிகரமாகத் திகழ வேண்டும் என்றால், அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இருவரும் அதற்காகப் பாடுபட வேண்டும், முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கு பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை மிகவும் தேவை. இப்போது திருமண சீசன். ஆகவே, இப்போது கூட்டணி சீசன் என்றும் கூறலாம். தேர்தல் நெருங்கி வருகிறது. ஆகவே, அரசியல் கட்சிகளுக்குள்ளே கூட்டணி ஏற்படுவது பற்றி எங்கே பார்த்தாலும் பேச்சாக இருக்கிறது. கூட்டணியைப் பற்றி பேசுகின்ற போது, இப்போது நான் திருமணக் கூட்டணியைப் பற்றிப் பேசவில்லை. அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியைப் பற்றிப் பேசுகிறேன். அரசியல் ரீதியான கூட்டணியைப் பற்றிப் பேசும் போது, தி.மு.க-வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சில உண்மைகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தி.மு.க-வுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இதுதான். சிலரை பல நாட்களுக்கு ஏமாற்றலாம். பலரை சில காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எப்பொழுதும் ஏமாற்ற முடியாது. இதை தி.மு.க-வினர் நன்கு உணர வேண்டும். கடந்த 33 மாத காலமாக, தி.மு.க. தமிழ் நாட்டில் மைனாரிட்டி ஆட்சியை அமைத்த பிறகு வரலாறு காணாத வன்முறை, ஊழல், சட்ட விரோத நடவடிக்கைகள், அக்கிரமங்கள், அராஜகங்கள், அநியாயங்கள், அட்டூழியங்கள் என்று ஒரு எல்லையே இல்லாத அளவிற்கு என்னென்ன தீய செயல்கள் இருக்க முடியுமோ, என்னென்ன முறைகேடான சட்ட விரோதமான காரியங்கள் இருக்க முடியுமோ அத்தனையும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தனை குற்றங்களைப் புரிந்தும், இத்தனை முறைகேடான செயல்களைப் புரிந்தும், இத்தனை சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டும் கூட எந்தத் தண்டனையும் பெறாமல் தி.மு.க-வினர் சுதந்திரமாக உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

இதற்கு என்ன காரணம்? காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள மத்திய அரசு தி.மு.க-விற்குக் கொடுத்து வரும் ஆதரவுதான் காரணம். தொடர்ந்து கடந்த 33 மாத காலமாக நடைபெற்ற அனைத்து சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களிலும், இடைத் தேர்தல்களிலும் தொடர்ந்து தி.மு.க. வெற்றி பெற்று வருகிறது. தி.மு.க. இந்த தேர்தல்களில், இடைத் தேர்தல்களில் அடைந்த வெற்றி உண்மையான வெற்றி அல்ல. பண பலம், படைபலம், ரவுடிகள் பலம், அராஜகம், வன்முறை, அதிகார துஷ்பிரயோகம் இவற்றின் காரணமாகத்தான் தி.மு.க. வெற்றி பெற முடிந்தது. இதையெல்லாம் தி.மு.க-வால் எப்படி சாதிக்க முடிந்தது? காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தி.மு.க-விற்கு தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவுதான் இதற்கெல்லாம் காரணம். அதனால் இப்போது தி.மு.க-விற்கு ஒரு அசட்டு தைரியம் வந்துவிட்டது. தி.மு.க-விற்கு இப்போது ஒரு நம்பிக்கை வந்துவிட்டது. இப்படியே தொடர்ந்து எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்றுவிடலாம்; இப்படியே ரவுடிகளை வைத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டு, பண பலம், படை பலம், அதிகார துஷ்பிரயோகம் இவற்றை வைத்தே தொடர்ந்து வெற்றி பெற்றுவிடலாம்; நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட இவற்றின் மூலமாகவே வெற்றி பெற்றுவிடலாம் என்று தி.மு.க. நம்புகிறது.

மக்களைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்று தி.மு.க. கருதுகிறது. இன்று நமக்குத் தெரிந்த அளவில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. உடனான கூட்டணியை தொடர விரும்புவதாகவே தகவல்கள் வருகின்றன. காங்கிரஸ் கட்சியும் தி.மு.க-வும் அவர்களுடைய கூட்டணி நீடித்திருந்தாலே போதும். அதை வைத்தே வாக்குகளைப் பெற்றுவிடலாம், தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று நம்புகின்றன. காங்கிரஸ் கட்சியும் சரி, தி.மு.க-வும் சரி, மிகப் பெரிய தவறு செய்து கொண்டிருக்கிறார்கள். மிகப் பெரிய தப்பு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என்ன அந்த தவறு? என்ன அந்த தப்பு? காங்கிரசும் சரி, தி.மு.க-வும் சரி, மக்களைப் பற்றியே மறந்துவிட்டார்கள். வாக்காளப் பெருமக்களைப் பற்றியே மறந்துவிட்டார்கள். தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி இருந்தாலே போதும். தாமாகவே வாக்குகள் வந்து குவிந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய நிதர்சனமான உண்மை என்னவென்றால், தமிழ் நாட்டு மக்கள் தி.மு.க-வின் மீது எல்லையில்லா கோபம் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வின் மீது மக்களுக்கு பயங்கர கோபம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. என்றாலே இன்றைய தினம் தமிழக மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். கடந்த 33 மாத காலமாக இதுவரை வரலாற்றில் கண்டிராத அளவிற்கு தி.மு.க-வினர் செய்து கொண்டிருக்கும் அத்தனை அக்கிரமங்களையும், அட்டூழியங்களையும் மக்கள் பார்த்து கொதித்துப் போயிருக்கிறார்கள். மத்திய அரசில் இருந்து கொண்டு தி.மு.க. செய்துள்ள இமாலய ஊழல்களைப் பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஒரே ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், ஸ்பெக்ட்ரம் ஊழல். ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் புரிந்திருக்கிறார்கள் இந்த ஒரே ஒரு ஸ்பெக்ட்ரம் ஊழலில். இன்னும் எத்தனையோ ஊழல்களைக் குறிப்பிடலாம். மத்திய அரசில் தி.மு.க. மந்திரிகள் எந்தெந்த இலாக்காவிற்கு பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார்களோ அத்தனை இலாக்காக்களிலும் இமாலய ஊழல் புரிந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிலோ இங்கே தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஊழலைப் பற்றி சொல்லத் தேவையில்லை. எல்லோருக்கும் தெரியும். அது வெளிப்படையாகவே, பகிரங்கமாகவே நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் நாட்டு மக்கள் மனதில் இன்று ஒரு மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது. எல்லோருக்கும் தெரிகின்ற வண்ணம் ஒளிவு மறைவு இன்றி தி.மு.க. இவ்வளவு பெரிய ஊழல்களைச் செய்து கொண்டிருக்கும்போது, மத்திய அரசு, குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தி.மு.க. மந்திரிகள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி. அதனால், தி.மு.க. மீது தமிழக மக்களுக்கு இருக்கின்ற கோபம் இன்றைய தினம் காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும். தி.மு.க. மீது தமிழக மக்கள் எந்த அளவிற்கு தாங்க முடியாத ஆத்திரத்தில், கோபத்தில் இருக்கிறார்களோ அந்த அளவிற்குத் தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சி மீதும் கோபம் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அளவிற்கு ஊழல் புரிந்து கொண்டிருக்கும் இந்த பாசிச தி.மு.க. ஆட்சிக்கு, இந்த சர்வதிகார தி.மு.க. ஆட்சிக்கு, ஊழல் மலிந்த தி.மு.க. ஆட்சிக்கு, காங்கிரஸ் கட்சி ஏன் இன்னும் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று தமிழக மக்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரசைப் பொறுத்தவரை தமிழக மக்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லை என்று காங்கிரஸ் நினைக்கக் கூடாது. ஏதோ கடந்த காலத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களித்தார்கள் என்பதற்காக இப்போது நடந்து கொண்டிருக்கும் தவறுகளையெல்லாம், ஊழல்களையெல்லாம், குற்றங்களையெல்லாம், அராஜகங்களையெல்லாம், அநியாயங்களையெல்லாம் மறந்துவிட்டு அப்படியே மக்கள் இந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் நினைக்கக் கூடாது.

இனி நடைபெறப் போகும் தேர்தலில், குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழக மக்களிடம் ஓட்டு கேட்டு வாக்குகளைப் பெற வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினால், இதுவரை தமிழ்நாட்டில் தி.மு.க-வின் அராஜக அரசுக்கு ஆதரவு கொடுத்த பாவத்திற்கு காங்கிரஸ் கட்சி பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிலும், மத்தியிலும் காங்கிரஸ் கட்சி தி.மு.க-விற்கு கொடுத்துக் கொண்டிருக்கும் ஆதரவு ஒரு பாவம் என்றே தமிழக மக்கள் கருதுகிறார்கள். மாநிலத்திலும், மத்தியிலும் தி.மு.க-விற்கு காங்கிரஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் ஆதரவு, அவர்கள் செய்கின்ற அந்தப் பாவத்திற்கு அவர்கள் பரிகாரம் தேடியே ஆக வேண்டும். இன்று கோபத்தில் கொதித்துப் போயிருக்கும் தமிழக வாக்காளர்களை சந்தித்து, அவர்களை சமாதானப்படுத்தி, அவர்களை ஆறுதல் அடையச்செய்து, அவர்களுடைய வாக்குகளைப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி உண்மையிலேயே விரும்புமேயானால், முதலில் காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் உள்ள தி.மு.க. மைனாரிட்டி ஆட்சிக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும்; தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மேலும் மத்திய அமைச்சரவையில் உள்ள தி.மு.க. மந்திரிகளை மத்திய அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் நீக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற மிகப் பெரிய ஊழல்களை புரிந்துள்ள தி.மு.க. மந்திரிகள் மீது காங்கிரஸ் கட்சி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் மீண்டும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளப் பெருமக்களை வந்து சந்திக்க முடியும். அவர்களிடம் வாக்குகள் கேட்க முடியும். கடந்த காலத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கின்றன. அதனால், அந்தப் பழைய நட்புறவை நினைவு கூர்ந்து, பழைய நட்புறவை பாராட்டி, நண்பர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன். தி.மு.க. தற்போது புதை மணலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. புதை குழியில் இப்போது தி.மு.க. சிக்கிக் கொண்டு மூழ்கிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆகவே, இனிமேல் தி.மு.க-வை யாராலும் காப்பாற்ற முடியாது. தி.மு.க-வின் கதை முடிந்துவிட்டது. எப்படியாவது அந்தப் புதை குழியில் இருந்து தி.மு.க-வை காப்பாற்ற வேண்டும், அதை வெளியே தூக்கி விட வேண்டும் என்று காங்கிரஸ் உதவிக்கரம் நீட்டினால், நேசக்கரம் நீட்டினால் காங்கிரஸ் கட்சியும் அதே புதை மணலில் விழுந்து சிக்கிக் கொண்டு அழிந்து போய்விடும்.

ஆகவே காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஒரு எதிர்காலம் வேண்டும் என்று கருதினால் தி.மு.க.வுடனான உறவை உடனடியாகத் துண்டித்துக் கொள்ள வேண்டும். ஒன்றை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தெரியாதவர்களுக்காக இந்த விளக்கத்தைக் கூறுகிறேன். புதை மணல் என்பது என்ன? ஒரு முறை ஒருவர் அந்தப் புதை மணலில் விழுந்துவிட்டால் பின்னர் மீளவே முடியாது, வெளியே வரவே முடியாது. அப்படியே மூழ்கிப் போய்விட வேண்டியதுதான். கதை முடிந்துவிடும். அதோடு சரி. யாராவது ஒருவர் அய்யோ பாவம் நம்முடைய நண்பர் அந்தப் புதை மணலில் விழுந்திருக்கிறாரே அவருக்கு உதவி புரிவோம் என்று கரம் நீட்டி அவர் கையைப் பிடித்து இழுத்து அவரை வெளியே கொண்டுவந்துவிடலாம், காப்பாற்றிவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. கையை யாராவது கொடுத்தால் அவர்களும் அந்தப் புதை மணலில் மாட்டிக் கொண்டவர்களோடு சேர்ந்து மூழ்கிப் போய்விடுவார்கள். ஆகவே கையை பின்னால் இழுத்துக் கொள்வதுதான் நல்லது.

கடந்த காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்தது. அன்னை இந்திராகாந்தி அவர்கள் இருந்த காலத்தில், பின்னர் அவரது மகன் ராஜீவ்காந்தி இருந்த காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையே நல்ல உறவு இருந்தது. அன்னை இந்திராகாந்தி அவர்களை எனது அன்னையாகவே நான் பாவித்தேன். அவரும் என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். அன்பைப் பொழிந்தார். அதைப் போலவே ராஜீவ்காந்தி காங்கிரஸ் தலைவராகவும், பிரதமராகவும் இருந்த காலத்தில், ராஜீவ்காந்தி அவர்களும் நானும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதை கொண்டிருந்தோம். நல்ல நட்புறவு கொண்டிருந்தோம். ஆகவே அந்த பழைய நட்புறவை மனதில் வைத்துத்தான், அந்தப் பழைய நட்புணர்வை பாராட்டித்தான் இன்றைய தினம் ஒரு நண்பர் என்ற முறையில் காங்கிரசுக்கு இந்த ஆலோசனையை கூறி இருக்கிறேன். அதை அவர்கள் ஆர அமர உட்கார்ந்துகொண்டு தீர்க்கமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒன்றை மட்டும் இந்த நேரத்தில் உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-விற்கும் சரி, தி.மு.க-விற்கு ஆதரவு கொடுக்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, மக்கள் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள். அது காங்கிரசாக இருந்தாலும் சரி, வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி வரப்போகும் தேர்தலில் மக்கள் தி.மு.க-வை விரட்டியடிக்கப் போகிறார்கள். அதே கதிதான் தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுக்கும் கட்சிக்கும் ஏற்படும். ஆகவே அந்த ஒரு கதியை சந்திக்க வேண்டாம் என நினைத்தால் தி.மு.க-வுடனான உறவை உடனடியாக துண்டித்துக் கொள்வது நல்லது. தி.மு.க-வும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி, தமிழ் நாட்டு மக்களின் கோபத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. காங்கிரஸ் கட்சியும் தி.மு.க-வினரும் இதுவரை மக்களைப் பற்றியே மறந்துவிட்டார்கள். மக்கள்தான் இறுதி எஜமானர்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. மக்கள்தான் இறுதி எஜமானர்கள் என்பதை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபித்துக் காட்டுவார்கள். ஆகவே, தவறு செய்வது என்பது மனித இயல்பு. தவறு செய்யாதவர்கள் யாருமே இந்த உலகில் இருக்க முடியாது. ஆனால், தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து, அந்தத் தவறை எப்படி திருத்திக் கொள்வது என்று சிந்தித்து அதற்குப் பரிகாரம் தேடிக் கொண்டால் அவர்கள்தான் மனிதர்கள். அது அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை அடையப் போகிறது என்பது நிதர்சனமான உண்மை.

நமக்கு அந்த வெற்றியைக் கொடுக்க, நல்ல தீர்ப்பைக் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆகவே, எந்தக் கட்சி நம்முடன் கூட்டணி சேர்கிறதோ அந்தக் கட்சிக்குத்தான் லாபம். எந்தக் கட்சி நம்முடன் கூட்டணி சேரவில்லையோ அந்தக் கட்சிக்குத்தான் நஷ்டம். நமக்கு லாபம், லாபம், வெற்றி வெற்றி தான் என்பதைத் தெரிவித்து, நீங்கள் அனைவரும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்லும் வகையில் உங்கள் ஒத்துழைப்பைத் தர வேண்டும்.

"சலித்துப் போய்விட்டேன்" காந்தி கண்ணதாசனுக்கு கருணாநிதி கடிதம்

கண்ணதாசனின் நூல்களை நாட்டுடமை ஆக்கப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதுமே கொதித்துப்போய் அறிக்கைவிட்டார் காந்தி கண்ணதாசன். இதனால் அந்த அறிவிப்பை வாபஸ் வாங்கியது தமிழக அரசு. இந்த நிலையில் காந்தி கண்ணதாசனுக்கு மருத்துவமனையில் இருந்து கடிதம் எழுதியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

அன்புள்ள தம்பி காந்தி கண்ணதாசனுக்கு,

காந்தியின் பெயரையும் வைத்துக்கொண்டு என்னுடைய அருமை நண்பர் கண்ணதாசன் பெயரையும் வைத்துக் கொண்டு ஏடுகளில் இப்படியொரு அறிக்கை விடுவாய் என்று நான் கருதவில்லை. கண்ணதாசன் நூல்களை நாட்டுடமை ஆக்குவது என்று அரசாங்கம் அறிவித்தது. அந்த கவிஞனை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் என் நண்பன் பால் கொண்ட அன்பின் காரணமாக செய்யப்பட்டது. நேற்று அரசு அறிக்கையில் குறிப்பிட்டதுப் போல ஏற்றுக் கொள்வது, ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லாவிட்டால் அதை அரசுக்கு தெரிவிப்பதும் பல முறை நடந்த நிகழ்ச்சிகள். கண்ணதாசனை மதிக்கும் பலர் அறிவிப்பை கேள்விபட்டு தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்தார்கள். வைரமுத்துவும் என் உதவியாளரிடம் தொலைப்பேசி மூலம் நன்றி தெரிவித்தார்.

கண்ணதாசன் என்ற கவிஞனை மதிப்பதற்காக அரசின் சார்பில் செய்யப்பட்ட செயல் அது. அதற்காக இப்படியொரு அறிக்கை அந்த குடும்பத்தின் சார்பில் வெளிவரும் என்று எதிர்பார்க்கவில்லை. உன்னுடைய அறிக்கைக்கு முரசொலியில் சின்னக்குத்தூசி விரிவாக பதில் எழுதியுள்ளார். எழுத்தாளர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் என் சொந்தப் பொறுப்பில் ஒரு கோடி ரூபாய் அளித்த போது அந்த சங்கத்திற்கு நீ தலைவராய் இருக்கிறாய், அந்தச் செயல் முறையாக நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இப்போதும் உண்டு. ஆனால் கண்ணதாசன் நூலினை நாட்டுடைமையாக்கியது குறித்து இப்படி நீ நடந்து கொண்ட முறையைக் கண்டு சலித்துப் போய் விட்டேன்.
அன்புள்ள மு.கருணாநிதி

கருணாநிதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் பேட்டி

கருணாநிதிக்கு இன்று (பிப்ரவரி 11)அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சையை டெல்லி டாக்டர் ஜெய்ஸ்வால்,ராமச்சந்திரா மருத்துவமனையின் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மார்த்தாண்டம் ஆகியோர் செய்தனர். மார்த்தாண்ட‌ம் நிருப‌ர்க‌ளுக்கு அளித்த‌ பேட்டி:

முதல்வர் கலைஞர் கடந்த இரண்டாண்டு காலமாக முதுகு வலி காரணமாக சிரமப்பட்டுக் கொண்டிருந்தாலும், கடந்த இரண்டு வார காலமாக கீழ் முதுகில் வலி மிகவும் அதிகமான நிலையில் மருத்துவ மனையிலே அனுமதிக்கப்பட்டார். அதன் காரணமாக அவரால் தூங்க முடியவில்லை. பகல் நேரத்திலே கூட அவரால் ஓய்வெடுக்க முடியவில்லை. எந்த வகையிலே சிகிச்சை அளிப்பது என்பதைப் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்ட போது, முதுகெலும்பில் (எல்.2, எல்.3 பகுதியில்) தசைப்பிடிப்பு ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்காக பல மருத்துவர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்தக் குழுவினர் கூடி அறுவை சிகிச்சை மேற்கொள்வதென்ற முடிவிற்கு வந்தோம். தொடர்ந்து பிசியோதரபி, மாத்திரைகள், ஊசி போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. இருந்தாலும் வலி குறையவில்லை. அதன் பின்னர்தான் எபிட்யூரல் இஞ்செக்ஷன் கொடுக்க முடிவு செய்து, அதுவும் அவரது வலியைக் குறைக்க உதவிடவில்லை. எனவேதான் அறுவை சிகிச்சை முடிவுக்கு வந்தோம்.

இந்த முடிவிற்கு வந்த பிறகு டெல்லியிலே உள்ள ஆல் இண்டியா இன்ஸ்டிட்யூட்டில் பணியாற்றும் மருத்துவ நிபுணர் அரவிந்த் ஜேஸ்வாலலை தொடர்பு கொண்டோம். அவர் முதுகெலும்பில் அறுவை சிகிச்சையில் உலகப் புகழ் பெற்றவர். அவரும் சென்னைக்கு உடனடியாக வந்து முதலமைச்சரை சோதனை செய்தார்.

டாக்டர் ஜேஸ்வால் பேட்டி:
முதல்வருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்தோம். முறையான அறுவை சிகிச்சை நடைபெற்று, முதுகெலும்பிலே இருந்த தசை பிடிப்பு அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை நன்றாக நிறைவுற்று அவர் தற்போது நன்றாக தேறி வருகிறார். அறுவை சிகிச்சை அறைக்கு 6.45 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு முன்பான தொடக்கப் பணிகள் ஒரு மணி நேரம் நடைபெற்றது. மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்று 10 மணிக்கு முடிந்தது. மயக்க மருந்து நிலையிலிருந்து திரும்பி அவர் தற்போது பூரண நலம் பெற்று வருகிறார். தற்போது ஐ.சி.யு. அறையிலே இருக்கிறார். அங்கே 48 மணி நேரம் இருக்க வேண்டும். அதற்குப் பிறகு ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் இல்லம் திரும்புவார். ஒருசில நாட்களில் அலுவலகப் பணிகளை மேற்கொள்வார்.

அமைச்ச‌ர் அன்பழ‌க‌ன் பேட்டி:
கலைஞர் மிகச் சிறப்பான முறையில் நுணுக்கமான அறுவை சிகிச்சை செய்திருக்கிற மருத்துவக் குழுவினர் டாக்டர் மார்த்தாண்டம் தலைமையில் டெல்லியிலிருந்து வந்திருக்கின்ற டாக்டர் ஜேய்ஸ்வால் மற்ற நிபுணர்களுமாக வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை நிறைவேற்றியிருக் கிறார்கள். முதலில் அந்த மருத்துவக் குழுவினருக்கு நான் என்னுடைய உளமார்ந்த நன்றியையும், பாராட்டையும் தி.மு.க.வின் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் சார்பாகவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மிகச் சிறப்பான சிகிச்சை வழங்கி அவர் குறைந்தது பத்து நாட்கள் வரையில் எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் - பார்வையாளர்கள் இல்லாமல் முழு அளவில் - எந்தத் தொத்துக்கும் இடமில்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அந்தப் பத்து நாட்கள் வரையில் கலைஞரிடத்தில் மிக நெருக்கமாக பழகிய நண்பர்களானாலும் - அமைச்சர்களாக இருந்தாலும் - மற்றவர்களாக இருந்தாலும் இந்தப் பத்து நாட்கள் கலைஞருடைய உடல் நலத்திற்கு சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக யாரும் சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அவர்கள் இதை ஏற்றுக் கொண்டு கலைஞரைப் பார்க்க முயற்சிக்காமல் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ் நாட்டு மக்கள் அனைவரும், கலைஞருக்குப் பாதுகாப்பான ஒரு சிகிச்சை கிடைக்க வேண்டுமே என்று மிகுந்த கவலையோடு இருந்தார்கள். பல்வேறு இடங்களிலிருந்து தொலைபேசிகள் மூலமாக, திரும்பத் திரும்ப கலைஞரின் உடல் நலத்தை விசாரித்துக் கொண்டிருந்தார்கள். மத்தியிலிருந்து பல அமைச்சர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் நான் தெரிவிக்க விரும்புவது கலைஞர் நலமோடு இருக்கிறார், நலமுடன் திரும்பி வந்து விரைவில் அவருடைய பணிகளை ஏற்பார்.

க‌ருணாநிதிக்கு ஜெய‌ல‌லிதா நான்கு கேள்விக‌ள்

ஜெயலலிதா இன்று (ஜனவரி 29) வெளியிட்ட அறிக்கை:

இலங்கைத் தமிழர்கள் குறித்த எனது கருத்தை திரித்துக் கூறி, ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்கு நான் எதிராக இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க கருணாநிதி மெத்த சிரமப்பட்டு முயற்சிப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. எனவே, இது குறித்த எனது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபட சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் , தமிழ் மக்கள் விடுதலை இயக்கம் , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி , ஈழம் புரட்சிகர அமைப்பு போன்ற அமைப்புகளை இலங்கைத் தமிழர்களின் காவலர்கள் என்று ஒரு காலத்தில் அ.தி.மு.க. கருதியதை நான் மறுக்கவில்லை. ஆனால், அடிப்படையில் தமிழ்ச் சகோதரர்கள் என்பதை மறந்து, மிதவாத அரசியல் அமைப்புகளான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் இதர அமைப்புகளின் மதிப்புக்குரிய தலைவர்களை, விடுதலைப் புலிகள் ஒழித்துக் கட்ட ஆரம்பித்ததிலிருந்து, தமிழர்களின் பிரதிநிதி, தமிழர்களின் நலனுக்காக போராடும் அமைப்பு என்று ஏற்கப்படும் உரிமையை விடுதலைப் புலிகள் இழந்துவிட்டார்கள்.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்த குற்றத்தின் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பு நம்பத் தகுதியற்ற, முதிர்ச்சியில்லாத, ஆபத்தான அமைப்பு என்பது நிரூபணமானது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட அந்த துரதிருஷ்டவசமான நாளிலிருந்து, அ.தி.மு.க.வின் கொள்கை சீராகவும், தெளிவாகவும் இருந்து வருகிறது. இலங்கையில் வாழும் இலங்கைத் தமிழர்களை அந்த நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாக நடத்த இலங்கை அரசு எந்த முயற்சி எடுத்தாலும் அதனை அ.தி.மு.க. முழுமையாக எதிர்க்கும்.

சுய நிர்ணயத்திற்காகவும், சம உரிமைக்காகவும் போராடும் இலங்கைத் தமிழர்களுக்கு அ.தி.மு.க.வின் முழு ஆதரவு உண்டு. அதே சமயத்தில் இந்த இலக்கை எய்துவதற்காக ஆயுதம் ஏந்தி போராடுவதையும், கட்டுக்கடங்காத, கண்மூடித்தனமான வன்முறையில் ஈடுபடுவதையும் அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது. பேச்சு வார்த்தை மூலம் அமைதியான வழியில் அரசியல் தீர்வு காணப்படுவதே இந்தப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க உதவும் என அ.தி.மு.க. நம்புகிறது.

இலங்கையில் தமிழர்களுக்காக தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக போராடுவது சாத்தியமில்லாத ஒன்று என்றும், தமிழர்கள் வாழும் பகுதிகளை உள்ளடக்கிய கூட்டுப் பேராட்சிக்குட்பட்ட சுயாட்சி கோருவதே நியாயமானது என்றும் அ.தி.மு.க. கருதுகிறது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் போது, அது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு மட்டும் என்றில்லாமல், தோட்டத் தொழிலாளர்களாகவுள்ள தமிழர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இதர சிறுபான்மை அமைப்பினர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. கருதுகிறது. முதிர்ந்த பேச்சுவார்த்தை மூலம் அரசியல் ரீதியாக தீர்வு காணக்கூடிய முயற்சியில் அனைத்து தமிழ் மிதவாதிகளும், தமிழ் அரசியல் அமைப்புகளும் இடம் பெற வேண்டும்.

இந்தப் பொறுப்பை தீவிரவாதிகளிடம் ஒப்படைப்பது தற்போதுள்ள சூழ்நிலையை மேலும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், நீண்ட நாட்களாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மக்களின் மத்தியில் ஒற்றுமையின்மையை வளர்த்து, அவர்களது துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும். சர்வாதிகாரத்தை அடைய வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தங்களது தலைவனின் வழியில் குறுக்கிடுபவர்கள் என யாரை நினைத்தாலும், அவர்களை கொல்வது, பிற அரசியல் மற்றும் தீவிரவாத குழுக்களைச் சேர்ந்த மிதவாத தமிழ்ச் சகோதரர்களையும், தலைவர்களையும் அழிப்பது போன்ற தீய செயல்களில் ஈடுபடுவதன் மூலம், தமிழர்களின் பிரதிநிதியாக செயல்படும் தார்மீக உரிமையை இழந்துவிட்ட எதேச்சாதிகார விடுதலைப் புலிகள் அமைப்பு இந்த அரசியல் தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட முடியாது, ஈடுபடக்கூடாது என அ.தி.மு.க. கருதுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது தங்களையும், தங்கள் தலைவனையும் பாதுகாப்பதற்காக, வெட்கமில்லாமல் இளம் சிறுவர்களை தங்கள் படையில் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டு, அப்பாவி இலங்கைத் தமிழர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தி வரும் ஓரு தீவிரவாத அமைப்பு ஆகும்.

என்னுடைய நிலைபாட்டை நான் தெளிவாக விளக்கிவிட்டதால், தன்னுடைய நிலையற்ற மற்றும் சஞ்சலமான நடவடிக்கைகளின் மூலம் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் குறித்து கபட நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் கருணாநிதியிடமிருந்து கீழ்காணும் கேள்விகளுக்கு விளக்கம் கோருகிறேன்.

1. தமிழ் மண்ணில் ராஜிவ் காந்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை கருணாநிதி ஆதரிக்கிறாரா? அப்படியானால், ராஜிவ் காந்தியின் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, மைனாரிட்டி அரசின் முதலமைச்சராக பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது கருணாநிதிக்கு வெட்கமாக இல்லையா? மனவுறுத்தலாக இல்லையா?

2. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இன்றளவிலும் இலங்கை ராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஆயுதங்களையும், நவீன சாதனங்களையும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு கொடுத்த போது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்? தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மத்திய அமைச்சரவையில் பங்கு வகிக்கின்றன. தி.மு.க. கூட்டணியில் உள்ள எந்த மத்திய அமைச்சருக்கும் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாதா? ஏன் அவர்கள் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை? தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தங்களுடைய பதவியை ஏன் அவர்கள் ராஜினாமா செய்யவில்லை?

3. இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்திய அரசு சிறப்புப் பயிற்சி அளித்த போது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்? இலங்கை ராணுவ வீரர்கள் வருகை புரிந்ததையும், பயிற்சி பெற்று திரும்பியதையும் ஊடகங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டின. இருந்த போதிலும், இலங்கைத் தமிழர்கள் குறித்து மிகுந்த வருத்தப்படுவதாக நாடகமாடும் கருணாநிதியும், அவருடைய கட்சியின் முக்கியஸ்தர்களும், கூட்டணிக் கட்சியினரும் மவுனம் காத்தனர்.

4. காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் நிலவும் பிரிவினை கோரிக்கை குறித்து, அதாவது, தனி நாடு கோரிக்கை குறித்து, கருணாநிதி மற்றும் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? இலங்கையில் உள்ள தனித் தமிழ் ஈழம் குறித்து கருணாநிதி என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளாரோ, அதே நிலையை இந்தியாவின் பிரச்சினைக்குரிய மாநிலங்களுக்கும் அறிவுறுத்த விரும்புகிறாரா?தமிழக மக்கள் மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் இந்தக் கேள்விகளுக்கு கருணாநிதியின் பதில் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். ஏனெனில், கருணாநிதியின் பதிலிலிருந்து அவர் ஓர் உண்மையான இந்தியரா, உண்மையான தமிழரா, அல்லது மனைவிகள், குழந்தைகள், பேரக் குழந்தைகள், ஆகியோர் மீது அசாதாரணமான பற்றுள்ள வெறும் குடும்பத் தலைவரா என்ற உண்மை வெளிப்படுத்தப்பட்டு விடும்.

கருணாநிதியின் உடல்நலம் நேரில் விசாரித்தார் ராமதாஸ்

உடல்நலக் குறைவால் ம‌ருத்துவ‌னையில் சிகிச்சை பெற்று வ‌ரும் முத‌ல்வ‌ர் க‌ருணாநிதியை இன்று (ஜ‌ன‌வ‌ரி 29) டாக்ட‌ர் ராம‌தாஸ் ச‌ந்தித்து உட‌ல்ந‌ல‌ம் விசாரித்தார்.

ப‌த்திரிகையாள‌ர்க‌ள் போராட்ட‌ ப‌ட‌ங்க‌ள்

இலங்கை அர‌சுக்கு எதிராக‌ சென்னையில் ப‌த்திரிகையாள‌ர்க‌ள் ந‌ட‌த்திய‌ போராட்ட‌ம் தொட‌ர்பான‌ ப‌ட‌ங்க‌ள் இங்கே...










இலங்கை போருக்கு எதிராக‌ ப‌த்திரிகையாள‌ர்க‌ள் ஆர்ப்பாட்ட‌ம்

இலங்கையில் நடக்கும் போரில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் மனித உரிமைகள் மீறப்படுவதையும் கண்டித்து எழுதும் பத்திரிகையாளர்கள் தொடந்து தாக்கப்படுகிறார்கள். கடந்த 2006 ஜனவரி மாதம் தொடங்கி இதுவரையில் 16 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக முறையான நீதி விசாரணையோ குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையோ இலங்கை அரசால் இதுவரை நடத்தப்படவில்லை. மேலும் பத்திரிகையாளர்கள். பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் திடிரென கடத்தப்படுவதும் முறையான காரணம் இல்லாமல் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது.

இதனையெல்லாம் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் சங்கம், சென்னை பிரஸ் கிளப் போன்ற அமைப்புகள் எல்லாம் இணைந்து "போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள்" என்ற கூட்டமைப்பின் பெயரில் சென்னையில் இன்று (ஜனவரி 28)பத்திரிகையாளர் மன்றத்தில் ஆர்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டார்கள். நாளித‌ழ்க‌ள்,ப‌ருவ‌ இத‌ழ்க‌ள், தொலைக்காட்சி ஊடக‌ செய்தியாள‌ர்க‌ள் புகைப்பட‌க் க‌லைஞ‌ர்க‌ள் என்று பலர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

இலங்கையில் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ப‌த்திரிகையாள‌ர்க‌ள் ப‌ட்டிய‌ல் வாசிக்க‌ப்ப‌ட்ட‌து. ச‌ண்டே லீட‌ர் ப‌த்திரிகையின் ஆசிரியர் லசந்த குமாரதுங்கே கொல்ல‌ப்ப‌டுவ‌த‌ற்கு முன்பு மார‌ண‌ சாச‌ன‌மாக‌ அவ‌ர் எழுதிய‌ க‌டைசி த‌லைய‌ங்க‌ம் ஆர்பாட்ட‌த்தில் வாசிக்க‌ப்ப‌ட்ட‌து. இல‌ங்கை ப‌த்திரிகையாள‌ர் ஒருவ‌ர் அங்கே நாக்கும் அவ‌ல‌ங்க‌ளை ஆர்பாட்ட‌த்தில் விவ‌ரித்தார். இல‌ங்கை அர‌சுக்கும் எதிராக‌ கோஷ‌ங்க‌ள் எழுப்ப‌ப‌ட்ட‌ன‌. ந‌க்கீர‌ன் கோபால், சின்ன‌குத்தூசி போன்ற‌ ப‌த்திரிகையாள‌ர்க‌ள் ஆர்பாட்ட‌த்தில் ப‌ங்கெடுத்த‌ன‌ர். முன்ன‌தாக‌ இலங்கையில் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ப‌த்திரிகையாள‌ர்க‌ளுக்கு இறுதி அஞ்ச‌லி செலுத்த‌ப்ப‌ட்ட‌து.

"சுதந்திர எண்ணங்களுடன் போரை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவதை க‌ண்டிக்கிறோம். இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ ப‌த்திரிகையாள‌ர்க‌ள் கொலைக‌ள், க‌ட‌த்த‌ல்க‌ள், கைதுக‌ள் குறித்து ச‌ர்வேதேச‌ அள‌விலான‌ அமைப்பை கொண்டு வெளிப்ப‌டையான‌ விசார‌ணை ந‌ட‌த்த‌ வேண்டும்.

உள்நாட்டு போரை கார‌ண‌மாக‌ச் சொல்லி அப்பாவி பொதும‌க்க‌ள், குழ‌ந்தைக‌ள், பெண்க‌ள் மீது குண்டுக‌ள் வீசி ப‌டுகொலை செய்வ‌தை நிறுத்த‌ வேண்டும். உட‌ன‌டியாக‌ போர் நிறுத்த‌ம் செய்ய‌ வேண்டும்." என்ற இர‌ண்டு தீர்மான‌ங்க‌ள் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌.

இலங்கையில் போர் நிறுத்தம்: "இறுதி வேண்டுகோள் புறகணிக்கப்பட்டால்...." சட்டசபையில் கருணாநிதி எச்சரிக்கை

தமிழக சட்டசபையில் இன்று (ஜனவரி 23) இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சிறப்பு அரசினர் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்திலம் மீது கட்சித் தலைவர்கள் பேசினார்கள். இறுதியாக முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

இலங்கையில் நடைபெறுகின்ற இன வெறிப் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து இந்த அவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவிந்தசாமி, ம.தி.மு.க. சார்பில் ராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜி.கே. மணி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், அ.இ.அ.தி.மு.க.சார்பில் செங்கோட்டையன் ஆகியோர் தங்களுடைய கருத்துக்களை எடுத்துக்கூறியிருக்கிறார்கள்.

இந்தத் தீர்மானம் அவசர அவசியமாக இன்றைக்கு இந்த மாமன்றத்திலே விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டும் என்று நான் விரும்பியதற்குக் காரணமே - கடந்த காலத்தில் பல முறை சட்டப் பேரவையிலும், அனைத்துக் கட்சித்தலைவர்களின் கூட்டத்திலும் ஒவ்வொரு கட்சியினுடைய பொதுக் கூட்டங்களிலும், நிர்வாகக் குழு கூட்டங்களிலும் - எடுத்துரைத்த மிக முக்கியமான தீர்மானமாக இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்கின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை கடைசியாக ஒரு முறை இன்றைக்கு மத்திய அரசுக்கு வலியுறுத்திச் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான்.

இதை ஏன் கடைசியாக ஒரு முறை என்று நான் குறிப்பிட்டேன் என்றால் - பல முறை இந்த அவையில் இது போன்ற தீர்மானங்கள் கட்சி மாச்சரியங்களுக்கு இடம் இல்லாமல் இந்தத் தீர்மானத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு இதுதான் நேரம் என்று ஒருவரையொருவர் மறை முகமாகவோ, ஜாடையாகவோ, நேரடியாகவோ தாக்குவதற்கான வாய்ப்பு இருந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல், வாய்மையோடு வாதத்திலே ஈடுபட்டு, நம்முடைய கோரிக்கையை மத்திய அரசுக்கு எடுத்து வைத்திருக்கிறோம்.

இலங்கையில் நடைபெறுகின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கையினுடைய முக்கியமான குறிக்கோள். அதை விட்டு எள் முனை அளவும் பிறழாமல், பேச வேண்டுமென்று நான் காலையிலே நம்முடைய நண்பர்களையெல்லாம் கூட வேண்டிக் கொண்டேன். சற்று அங்கு இங்கு அந்தத் தடம் மாறினாலுங்கூட - தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும், தமிழர்களை இலங்கைத் தீவிலே பாதுகாக்க வேண்டும், அவர்களைக் காத்திட வேண்டும் என்ற அந்த உணர்வு ஒரு மைய இழையாக ஓடிக் கொண்டிருந்த காரணத்தால் - நான் எதிர்பார்த்தவாறு அல்லது வேறு சிலர் எதிர்பார்த்தவாறு எந்த விதமான சங்கடங்களும் இல்லாமல் நாம் நம்முடைய கருத்தை இந்தத் தீர்மானத்தின் மூலமாக வலியுறுத்துகின்ற கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.

ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1939ஆம் ஆண்டு - ஆசியாவின் ஜோதி பண்டித ஜவகர்லால் நேரு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். “இண்டியன் இன் சவுத் ஏசியா” என்ற நூலில் - அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலே இந்தியாவுக்கு வெளியே வாழுகின்ற இந்தியர்களைப் பற்றி - அப்போது நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு நேரு அனுப்பிய செய்தி.

“இந்தியா இன்று பலவீனமாக உள்ளது. அது வெளிநாட்டில் வாழும் தனது மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. ஆனால் இந்தியா அவர்களையும் அவர்களுக்கு ஏற்படும் துயரத்தையும் இழிவையும் மறப்பதில்லை. ஒரு நாள் வரும் - அன்றைக்கு இந்தியாவின் பாதுகாப்பு கரம் நீளும் - அதன் வலிமையினால் அவர்களுக்கு நீதி கிடைக்கும்” என்று நேரு அவர்கள் 1939ஆம் ஆண்டு சொன்னதைத்தான் இப்போது நான் வலியுறுத்துகிறேன். நீதி கிடைப்பதற்கு ஜவகர்லால் நேரு எந்த இந்தியாவிலே முதல் பிரதமராக பொறுப்பேற்றாரோ - அந்த இந்தியத் திருநாடு இப்போது முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்வதற்காகத்தான் நேருவின் அந்த வாசகத்தை நினைவுபடுத்தி - நான் என்னுடைய தீர்மானத்தை முன்மொழிய விரும்புகிறேன்.

“இலங்கையில் தமிழ் இனமே அழிந்து கொண்டிருக்கிறது. ஐ.நா. மன்றம் கண்டனம் தெரிவிக்கிற அளவுக்கு; அந்த நாடு அப்பாவித் தமிழ் மக்களின் இடுகாடாக - சுடுகாடாக - ஆகிக் கொண்டிருக்கிறது.

குழந்தை குட்டிகளோடு, குடும்பம் குடும்பமாக குய்யோ முறையோ என்ற கூச்சலும் - ஒப்பாரியும் புலம்பலும் - பின்னணியாக, பிணங்கள் குவிக்கப்படுகின்றன. அத்தனையும் தமிழ் மக்களின் பிணங்கள்.

அய்யோ! அந்தச் சிங்கள இராணுவ குண்டு வீச்சுக்கிடையே - சிதறியோடும் - சிறுவர் சிறுமியர் - சிலராவது செத்துப் பிழைத்தார்கள் என்ற செய்தியும் கூட அறவே அற்றுப் போய் - இன்று கூண்டோடு சாகின்றனரே -பூண்டோடு அழிகின்றனரே

மனித நேயமற்ற மாபாவிகளின் சேட்டையால்; இத்தனை ஆண்டுகள்; இழித்தும் - பழித்தும் - இறுதியாக அழித்தும் ஒழிக்கப்படுகிறதே உலகை ஆண்ட ஓர் இனம் - அந்த இனத்தை இறுதியாக இலங்கையில் விடப்பட்டுள்ள இந்த அறைகூவலில் இருந்து எப்படி மீட்கப் போகிறோம்?

இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்தில் நாம் வாழுகிறோம் என்பதால் நம்மை அரவணைத்துக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும் - ஆம், பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமையோடு எதிர்பார்க்கிறோம். நமக்கு பாதுகாப்பு தருவதாயினும் - பாதிப்பைக் களைவதாயினும் இரண்டையும் சீர்தூக்கி செயல்படுத்தி, இந்த மாநில மக்களுக்கும் - இந்த மாநில மக்களாம் தமிழ்க்குடி மக்களின் நலத்திற்கும் நமது தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழ் மக்களின் நலத்திற்கும் உத்திரவாதமளிக்கக் கூடிய பொறுப்பு; - உலகில் எங்கு இனப் படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும் உரிமையும் கொண்ட இந்தப் பெரிய ஜனநாயக நாடாம் இந்தியத் திருநாட்டில் மக்களாட்சியை நடத்துகிற மத்திய ஆட்சியின் கரங்களில் இருக்கும்போது; நாம் அந்தக் கரங்களைப் பிடித்துக் கொண்டு தானே; இலங்கையில் சீரழியும் - செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக என்று கண்ணீர் மல்கக் கேட்கிறோம்.

கேட்டுக் கேட்டுப் பயன் விளையாமற் போனதால் - இறுதி வேண்டுகோளாக முறையிடுகிறோம்; உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து; அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட - ஆவன செய்திடுக என்று!

இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக்கப்படாமல் - இன்றே போர் நிறுத்தம் இலங்கையில் - அடுத்து அரசியல் தீர்வு - தொடர்ந்து அமைதி.

எனவே அந்த நல்ல விளைவை எதிர்பார்த்து; இந்த மாமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இறுதித் தீர்மானமாக இதனை நான் முன்மொழிகிறேன்.

இந்தத் தீர்மானத்திற்கும் பயன் ஏதும் ஏற்படாவிட்டால் ஆளுங்கட்சியான தி.மு.க. பொதுக்குழு அல்லது செயற்குழு கூட்டத்திலே விவாதித்து அடுத்து என்ன என்று முடிவு எடுக்கப்படும் என்பதை இந்த மன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே பேசிய நண்பர்கள் சில பேர் ஆட்சி எதற்காக என்றார்கள். ஆட்சி என்று ஒன்று இருக்கின்ற காரணத்தால்தான் நாம் இந்த அளவிற்காவது கேட்க முடிகிறது - இங்கே ஒரு தீர்மானத்தையாவது போட முடிகிறது என்பதையும் சில பேர் நமக்குச் சொல்கின்ற காரணத்தால் - அதையும் நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம். தேவையில்லை, நாளைக்கே ஆட்சியை இழந்து விட்டால், இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்ற உறுதி கிடைக்குமேயானால், அதற்கும் நாம் தயாராக இருப்போம் என்பதையும் எடுத்துக் கூறி - மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் - “அய்யகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது - இந்தியப் பேரரசுக்கு இறுதி வேண்டு கோள்” என்பதை டெல்லியிலே உள்ளவர்களுடைய செவிகளிலே விழ ஓங்கி ஒலித்து இந்த தீர்மானத்தை இந்த மாபெரும் அவையிலே முன்மொழிந்து இந்த அளவில் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

க‌ருணாநிதி ஆட்சி ஒழிந்தால்தான் ம‌க்க‌ளுக்கு விடிவு: ஜெய‌ல‌லிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (ஜனவரி 19) வெளியிட்ட அறிக்கை:

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவனும் நாடகமாடுகிறார்கள் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தேன். அதனை நிரூபிக்கும் வகையில் திருமாவளவன் தன்னுடைய ‘சாகும்வரை உண்ணாவிரத நாடகத்தை’ நான்கு நாட்களிலேயே பழரசம் அருந்தி முடித்துக் கொண்டிருக்கிறார்.

15.1.2009 அன்று இந்த உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியதிலிருந்து, சில சமூக விரோதச் சக்திகள் தமிழகத்தின் பல பகுதிகளில் அரசுப் பேருந்துகளை தீயிட்டுக் கொளுத்தியும், பெட்ரோல் குண்டுகளை வீசியும், கற்களை வீசியும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த வன்முறைச் செயல்களின் மூலம் ஏராளமான அப்பாவி பொது மக்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் நான்கு அரசுப் பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. பல இடங்களில் கற்களை எரிந்து அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வன்முறையில் ஈடுபட்டோர் மீது நான்கு நாட்களாக நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல் வழக்கம் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது காவல் துறை.

இது போன்ற வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தியவர்கள் மீது மைனாரிட்டி தி.மு.க. அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைப் பார்க்கும் போது, வன்முறைக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

18.1.2009 அன்று திருமாவளவன் உண்ணாவிரப் போராட்டத்தை முடித்த பிறகு, தமிழகக் காவல் துறை தலைமை இயக்குநர், ‘பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் வன்முறையில் ஈடுபடும் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும், பஸ் எரிப்பு மற்றும் கண்ணாடி உடைப்பு சம்பவங்களில் ஈடுபடுவோரை, தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக’ இன்று பத்திரிகைகளில் செய்தி வந்திருப்பது மக்களின் சந்தேகத்தை நிரூபிக்கும் வகையில் உள்ளது.

தமிழகத்தில் தற்போது நிலவும் முக்கியப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவனும் சேர்ந்து நடத்திய நாடகம்தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம். திருமாவளவனின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் இலங்கையில் போர் நிறுத்தமும் ஏற்படவில்லை, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதும், தமிழ்நாட்டில் உள்ள மக்களை அச்சுறுத்தியதும், காயப்படுத்தியதும்தான் மிச்சம்!

தமிழகத்தின் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தும் அளவுக்கும், பொதுமக்களை காயப்படுத்தும் அளவுக்கும், அச்சுறுத்தும் அளவுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் ஆட்கள் யாரும் இல்லை. நான்கு நாட்களாக தமிழக மக்களை காயப்படுத்தியும், அரசுப் பேருந்துகளை எரித்தும், கல் வீசியும் சேதப்படுத்தியவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை ஏதும் எடுக்காமல், உண்ணாவிரதப் போராட்டம் ஒரு வழியாக முடிந்த பிறகு “தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்” என்று காவல் துறைத் தலைமை இயக்குநர் அறிவித்ததில் இருந்தே, இந்த வன்முறைச் செயல்களை தி.மு.க-வைச் சேர்ந்த மர்மக் கும்பல்கள்தான் நிகழ்த்தி இருக்கின்றன என்பது தெளிவாகி உள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை திருமாவளவன் முன் நின்று நடத்தினாலும், இதை பின்னால் இருந்து இயக்கியவர் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதிதான் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதன் மூலம் மக்களின் பணம் விரயமாக்கப்பட்டிருக்கிறது. அரசுக்கு ஏற்பட்ட இழப்பை கருணாநிதி தன் சொந்த பணத்திலிருந்து ஈடு செய்வாரா? அல்லது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிடம் இருந்து வசூல் செய்வாரா? என்பதை நாட்டு மக்களுக்கு மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும். இது தவிர, இந்திய அரசால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும், இந்திய அரசால் தேடப்பட்டு வரும் கொலைக் குற்றவாளியுமான பிரபாகரனின் புகைப்படத்துடன் கூடிய விளம்பரங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இது போன்ற விளம்பரங்களை கொடுத்தவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இது ஒரு தேசத் துரோகச் செயல் இல்லையா? இது போன்ற தேசத் துரோகச் செயல்கள் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்காததன் மூலம் இதன் பின்னணியில் கருணாநிதி இருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

ஐந்து லட்சம் இலங்கைத் தமிழர்கள் மரணத்தின் பிடியில் சிக்கிக் தவித்துக் கொண்டிருக்கும் போது, பட்டு வேட்டி, பட்டுச் சட்டை அணிந்து கொண்டும், மகனுக்கு தங்கச் சங்கிலியை அணிவித்தும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடினார் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி. இது தான் கருணாநிதியின் தமிழ்ப் பற்று!

தமிழ்நாட்டிற்கு, தமிழக மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை, உருப்படியான திட்டங்களை நிறைவேற்றாமல், கபட நாடகங்களை நடத்திக் கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி. கருணாநிதியின் இது போன்ற கண்துடைப்பு நாடகங்களைக் கண்டு தமிழக மக்கள் இனியும் ஏமாறக் கூடாது. மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் தலைமையிலான அராஜக ஆட்சி ஒழிந்தால் தான் தமிழக மக்களுக்கு விடிவுகாலம் ஏற்படும். இதை நிறைவேற்ற தமிழக மக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

நாளை நமதே நாற்பதும் நமதே: ஜெயலலிதா சூளுரை

எம்.ஜி.ஆரின் பிற‌ந்த‌நாளையொட்டி தொண்ட‌ர்க‌ளுக்கு ஜெய‌ல‌லிதா இன்று (ஜனவரி 16) எழுதிய‌ க‌டித‌ம்:

நாளை நமதே. நாற்பதும் நமதே என்னும் குறிக்கோளை அடைவோம்!எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனதருமைக் உடன்பிறப்புகளே!

அ.தி.மு.க. நிறுவனர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 92ஆவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும் இத்தருணத்தில், அவரது பண்புகளை, மனித நேயத்தை, வள்ளல் தன்மையை எனதருமைக் உடன்பிறப்புகளாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பேருவகை அடைகிறேன்.

எம்.ஜி.ஆரை பார்த்தாலே, பார்த்தவுடனே ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு வரும். அத்தகைய ஈர்ப்பு வருவதற்குக் காரணம் அவரது ஈடற்ற அன்பும், ஈகை குணமும், கருணை கொண்ட மனிதாபிமானமும், இன்னும் எத்தனையோ நல்ல குணங்களும்தான். புரட்சித் தலைவரின் பெயரை உச்சரித்தாலே நமக்குள் ஏதோ ஒரு உத்வேகம் பிறக்கும். அத்தகைய மகா சக்தியாக, மந்திர சக்தியாக, ஆளுமைத் திறமை கொண்ட அன்பு மிகுந்த மாமனிதராக அவர் திகழ்ந்தார்.

வானத்தைப் பார்க்கின்ற போது நம்முடைய உயரம் இவ்வளவுதான் என்று வானம் பறைசாற்றுவதைப் போல, மேகம் எவ்வித பாகுபாடும் பாராமல் மழை பொழிந்து ஏற்றத் தாழ்வை அகற்றுகின்ற உணர்வைப் போல, கண்ணுக்குத் தெரியாது, ஆனால் சுவாசத்தைத் தந்து கொண்டிருக்கும் காற்றைப் போல, புரட்சித் தலைவரும் திகழ்ந்தார். இவ்வாறு புரட்சித் தலைவர் திகழ்ந்ததற்குக் காரணம் அவரது வாரிக் கொடுக்கும் வள்ளல் தன்மை, பிறர் துன்பம் கண்டு சகிக்காத மனிதாபிமானம், பிறரைப் பார்த்தவுடன் பாசம் செலுத்தும் அன்பு, உழைப்பு போன்ற அரிய குணங்களே ஆகும்.

பேரறிஞர் அண்ணா புரட்சித் தலைவரைப் பற்றி சொல்லுவார்:- "தன்னை தேடி வருகிறவரின் கண்ணீரைத் துடைக்கிறவன் வள்ளல். தன்னைத் தேடி வருகிறவரின் துன்பத்தைப் போக்குகிறவன் வள்ளல். ஆனால், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அப்படியல்ல. சமுதாயத்தில் துன்பப்படுகிறவன் எங்கே இருக்கிறான் என்று தேடிப் போய் அவன் கண்ணீரைத் துடைத்து கை கொடுக்கிற எம்.ஜி.ஆர். வள்ளலுக்கெல்லாம் வள்ளல்" என்பார். அத்தகைய பெருமைக்குரிய தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நமக்குச் சொந்தமானவர். நம் இயக்கத்தைத் தோற்றுவித்தவர். நமக்கெல்லாம் ஆசானாய், வழிகாட்டியாய் விளங்குகிறார் என்று எண்ணுகின்ற போது நமக்கெல்லாம் பெருமிதம் ஏற்படுகிறது.

"உழைப்பவரே உயர்ந்தவர்" என்று புரட்சித் தலைவர் அடிக்கடி சொல்லுவார். உழைப்பு என்பது உயர்ந்தது. அத்தகைய உழைப்பின் மூலமே, உன்னதமான லட்சியத்தை அடையலாம் என்பதற்கு புரட்சித் தலைவரே எடுத்துக்காட்டாவார். கடும் உழைப்பிற்குச் சொந்தக்காரர் புரட்சித் தலைவர். ஏழையாக இருந்து, ஏழு வயதில் நாடகக் கம்பெனியில் சேர்ந்து, பசியோடும், பட்டினியோடும் வாழ்க்கையைக் கடந்து, திரைத் துறையில் சிறு சிறு வேடங்களில் நடித்து, புகழின் உச்சத்தைத் தொடும் கதாநாயகனாய் வலம் வந்து, அரசியல் வானில் யாரும் தொட முடியாத அளவிற்கு துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்ததற்கு எது காரணம்? புரட்சித் தலைவரின் உழைப்பு தான். ஒரு மனிதனின் வெற்றிக்குக் காரணமாக அமைவது அவரது உழைப்பு. அதனோடு ஒட்டிய திறமை, அதனோடு இணைந்த அணுகுமுறை, அதனோடு இணைந்த சாமர்த்தியம் என்று பல கிளைகள் பிரியலாம். ஆனால் மூலதனம் என்பது உழைப்பு மட்டும்தான். அந்த உழைப்புதான் ஒருவரை உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது திண்ணம். அதனால்தான் வள்ளுவப் பெருந்தகை கூட சொல்லுவார்,

"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்"
என்று. கடவுள் நமக்குச் செய்ய முடியாத காரியத்தையும், நாம் உடலை வருத்தி முயற்சி செய்யும் போது செய்துவிட முடியும். எனவே உழைப்புதான் உயர்ந்தது.

அண்ணா தன் எழுத்தாலும், பேச்சாலும் தமிழ் நாட்டின் அரசியல் தட்ப வெட்ப நிலையை மாற்றிக் காட்டியவர். அத்தகைய பெருமை மிக்க பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக அரசியல் வானில் வளர்ந்து, ஒளி வீசி, கொண்ட கொள்கைக்கும், தலைமைக்கும் உண்மை ஊழியனாக பணியாற்றி, தான் நடித்த படங்களில் எல்லாம் அண்ணாவின் படத்தையும், அவர் சொன்ன கருத்துகள் அடங்கிய பாடத்தையும் துணிந்து சொன்னவர்தான் நம் புரட்சித் தலைவர். அவரின் அத்தகைய தூய உள்ளத்திற்குக் கிடைத்த மகத்தான பரிசுதான், அரசியலில் அவர் அடைந்த உயர்ந்த இடம். புரட்சித் தலைவருக்குக் கிடைத்த வெற்றி என்பது இயற்கையானது, இமயம் போன்றது. அப்படிப்பட்ட வெற்றியை எட்டிப்பிடிக்க முயன்றவர்கள் சறுக்கி விழுந்துவிட்டனர். இத்தகைய இயற்கைத் தன்மையின் மீது மோதிக் காணாமல் போனவர்கள் எத்தனையோ பேர். புரட்சித் தலைவரின் வெற்றிக்கு எது காரணம் என்று கருணாநிதி ஆராய்ந்தார். அத்தகைய அவரின் ஆராய்ச்சி பச்சைக் கிளிக்கு வர்ணம் பூசும் செயல் போலத்தான் அமைந்தது.

ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் நயவஞ்சக அரசியலுக்குச் சொந்தக்காரர் கருணாநிதி. புரட்சித் தலைவர் இல்லையென்றால் கருணாநிதி அரசியல் வானில் வளர்ந்திருக்க முடியாது. கருணாநிதியை முன்னிலைப்படுத்தி முதலமைச்சராக்கிய புரட்சித் தலைவரை முதுகில் குத்திய, மக்கள் விரோத தீய சக்தியான கருணாநிதியை வீழ்த்த, கழகம் கண்டு, மக்கள் சக்தியைப் பெற்று, மூன்று முறை தொடர்ந்து முதலமைச்சராக முடிசூடி, தமிழகத்திற்கு பொற்கால ஆட்சியைத் தந்தவர்தான் புரட்சித் தலைவர்.

புரட்சித் தலைவர் மறைவிற்குப் பிறகு, இரண்டாகப் பிளவுபட்ட அவர் கண்ட இயக்கத்தை ஒன்றிணைத்து, முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு, வெற்றிச் சரித்திரத்தைப் படைக்க நான் பட்ட துயரங்கள், சுமந்த காயங்கள், தாங்கிக் கொண்ட வேதனைகள் எத்தனை எத்தனை என்பதை எல்லாம் எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்.

புரட்சித் தலைவரின் ஆட்சியை மீண்டும் அமைக்க நான் பட்ட துன்பங்கள், துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. புரட்சித் தலைவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்தேன். இரண்டு முறை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கழகத்தின் வெற்றிப் பதாகை பட்டொளி வீசிப் பறக்க எனது உழைப்பை காணிக்கையாக்கினேன். தமிழ் நாட்டின் தற்போதைய பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மைனாரிட்டி தி.மு.க. அரசின் மக்கள் விரோதச் செயல்களைச் சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் ஆகியவற்றை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல், மக்களுக்குச் சேவை செய்வதிலும் முனைப்பு காட்டி வருகிறது. ஆளுங் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்கள் பணி என்பதே கழகத்தின் குறிக்கோள்.

எனக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கையே இல்லாமல், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், கழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும், கழக உடன்பிறப்புகளாகிய உங்களின் உயர்வுக்காகவும் தான் ஒவ்வொரு நொடியும் உழைத்து வருகிறேன். நாளும், பொழுதும் நஞ்சைக் கக்குகின்ற நய வஞ்சக அரசியல்வாதி கருணாநிதியின் பித்தலாட்டத்தை மக்கள் மன்றத்தின் முன் எடுத்து வைத்து, தமிழ் நாட்டு மக்களைப் பாதுகாக்கும் பணியில் என் வாழ்வை அர்ப்பணித்து வருகிறேன்.

எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் தொய்வின்றி மக்கள் பணியாற்றி, துணிச்சலாக செயலாற்ற வேண்டும். துணிந்து செயல்படுகிறவர்களுக்குத்தான் வெற்றி கிட்டும். நாளைய வெற்றி நமக்காகக் காத்திருக்கிறது.

வானத்தையே வசப்படுத்தும் வலிமை மிக்க மக்கள் தலைவராம் புரட்சித் தலைவர் அவர்களின் பிறந்த நாளில், பேரறிஞர் அண்ணா அவர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற நெறிமுறையை பின்பற்றி, ‘உழைப்பே உயர்வுக்கு துணை’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில், விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், கருணாநிதியின் அராஜகங்களை, வன்முறை வெறியாட்டங்களை, நிர்வாகத் திறமையின்மையை மக்கள் முன் எடுத்து வைத்து, துணிச்சலுடன் தேர்தல் பணியாற்றி, வெற்றிக் கனியை பறிப்போம்! கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்! மக்களாட்சியாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை விரைவில் மலரச் செய்வோம்! என சூளுரைப்போம்.

மறைந்த பின்னரும் மறக்க முடியாத மாமனிதராய் தமிழக மக்கள் நினைவில் என்றென்றும் நிற்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளில், மக்களுக்குச் சேவை செய்வோம்! நாளை நமதே, நாற்பதும் நமதே என்னும் குறிக்கோளை அடைவோம்! என உளமாற உறுதி ஏற்போம்!
உங்கள் அன்புச் சகோதரி,
ஜெயலலிதா

திருமங்கலம் தேர்தல் தி.மு.க.வின் பணபலம் வென்றுவிட்டது: ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (ஜனவரி 12) வெளியிட்ட அறிக்கை:

தி.மு.க-வின் பணபலம், குண்டர் படைபலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை வென்றுவிட்டன; ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பதைத்தான் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் முடிவு தெளிவாகக் காட்டுகிறது.

7.1.2009 அன்று மாலை 5 மணிக்கு மேல் வாக்காளர் அல்லாதவர்கள் தொகுதியில் இருக்கக் கூடாது; தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்பது விதி. ஆனால் தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் அழகிரியின் குண்டர்கள் உட்பட தி.மு.க-வினர் அனைவரும் அதன் பின்னரும் தொகுதிக்கு உள்ளேயே வலம் வந்து கொண்டிருந்தனர். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறை, கட்டுப்பாடு என்பதெல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டும்தான் போலும்! தி.மு.க-வினருக்கு எந்தச் சட்டமும் பொருந்தாது என்ற அளவிற்கு தி.மு.க. அமைச்சர்கள் திருமங்கலம் தொகுதிக்குள் 7.1.2009 அன்று மாலை 5 மணிக்குப் பிறகும் பணம், தங்க நாணயம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வீடுவீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

அழகிரியின் அடியாட்களால் வாக்காளர்கள் அனைவரும் மிரட்டப்பட்டு இருக்கின்றனர். இது குறித்து அ.தி.மு.க. சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதில் இருந்தே காவல் துறை கருணாநிதியின் ஏவல் துறையாகத்தான் இருக்கிறது என்பது நிரூபணம் ஆகிவிட்டது.அ.தி.மு.க‌உடன்பிறப்புகள் மீது, காவல் துறையினரே வன்முறையாளர்களைப் போல் தாக்குதல் நடத்தி அவர்கள் மீது பொய் வழக்குகளைப் புனைந்தது; அதைத் தடுக்க நினைத்த தேர்தல் அதிகாரி மீது குற்றம் சுமத்தியது;

"தமிழகம்தான் தற்போது அடிமட்டத்தில் இருந்து 'டாப்'பில் இருக்கிறது" என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தது; ஒட்டுமொத்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தேர்தல் செலவை விட கூடுதலாக திருமங்கலம் தொகுதியில் பணம் செலவிடப்பட்டது என பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது; 9-ந் தேதி தேர்தல் முடிந்தவுடன் "30,000 முதல் 40,000 வாக்குகள் வித்தியாத்தில் தி.மு.க. வெற்றி பெறும்" என அழகிரி அன்றே அறிவித்தது; "திருமங்கலம் இடைத் தேர்தல் நல்ல செய்தியைத் தரும்" என கருணாநிதி சென்னை சங்கமம் விழாவில் அறிவித்தது; வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே வெற்றி பெற்றுவிட்டதாக தி.மு.க-வினர் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட்டது; வெற்றியைப் பாராட்டி விளம்பரப் பலகைகள் வைத்தது ஆகியவற்றில் இருந்தே இந்த இடைத் தேர்தல் எப்படி நடந்திருக்கும் என்பதை பொது மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

கருணாநிதி முதலமைச்சராகவும், அவரது மகன் அழகிரி நிழல் முதலமைச்சராகவும் தமிழ்நாட்டில் இருக்கின்ற வரையிலும், காவல் துறை கருணாநிதி குடும்பத்தின் ஏவல் துறையாக செயல்படும் வரையிலும், தமிழ் நாட்டில் தேர்தல் என்பது சடங்கு, சம்பிரதாயம் போலத்தான். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் எந்தவிதப் பயனும் இல்லை. இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏதாவது கட்டளையிட்டாலும் அதை செயல்படுத்த கருணாநிதியின் காவல் துறை தயாராக இல்லை. எனவே, தமிழ்நாட்டில் இந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் இனி ஒரு தேர்தலை நடத்தி மற்ற கட்சிகளை எல்லாம் வீண் சிரமத்திற்கு ஆட்படுத்துவதைவிட, தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டதாக ஒரேயடியாக, எடுத்த எடுப்பிலேயே அறிவித்துவிடலாம். இதனால் மற்ற கட்சிகளுக்கு வீண் அலைச்சலும், சிரமும் மிச்சம் ஆகும்.

எனினும், இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வோ உழைத்த, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வர்டு பிளாக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், இந்திய தேசிய லீக், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும்; அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், உடன்பிறப்புகளுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, அ.தி.மு.க‌ வேட்பாளருக்கு வாக்களித்த திருமங்கலம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமங்கலம் வெற்றி: கருணாநிதி பேட்டி

திரும‌ங்க‌ல‌ம் இடைத் தேர்த‌லில் தி.மு.க‌. வெற்றி பெற்ற‌தை தொட‌ர்ந்து முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி இன்று (ஜனவரி 12) நிருப‌ர்க‌ளுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி:- திருமங்கலம் வெற்றியைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த இடத்தில் இப்போது தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றிருப்பது; இந்த ஆட்சியின் சாதனைகளுக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் என்று நான் கருதுகிறேன். வெற்றிக் கனி வழங்கிய திருமங்கலம் தொகுதி வாக்காளப் பெருமக்க ளுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த கழகத்தினருக்கும், கழக தோழமைக் கட்சிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி:- இந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளும், பா.ம.க. வும் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில் பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது பற்றி?

பதில்:- அது உங்களுக்கே தெரியும். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவிக்காதது மட்டுமல்ல, மிகவும் கடுமையாக எங்களைத் தாக்கிப் பேசினார்கள்.

கேள்வி:- அவர்கள் உங்களை ஆதரிக்காததால், அதனை பெரிய இழப்பு இல்லை என்று கருதுகிறீர்களா?

பதில்:- நான் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

கேள்வி:- இந்த வெற்றி வரவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டமாக இருக்குமா?

பதில்:- நாங்கள் வெற்றி பெறாவிட்டால், “முன்னோட்டம்” என்று வெற்றி பெற்ற கட்சிக்காரர்கள் சொல்லியிருப்பார்கள். பத்திரிகையாளர்கள் சிலரும் சொல்லியிருப்பீர்கள்.

கேள்வி:- இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து டாக்டர் ராமதாஸ், வீரமணி, திருமாவளவன் ஆகியோர் உங்களை இன்று சந்தித்தார்களே?

பதில் :- இலங்கையில் நடைபெறுகின்ற இனப் படுகொலை, ராணுவத் தாக்குதல், தமிழ் இன இழிவு இவைகள் என்னுடைய உள்ளத்தையும் தமிழ் உணர்வுள்ள அனைவருடைய உள்ளங்களையும் உலுக்கிக் கொண்டிருக்கின்றது. அது பற்றித்தான் டாக்டர் ராமதாஸும் வீரமணியும் திருமாவளவனும் இன்று பேசுகிற நிலைமை ஏற்பட்டது. அவர்கள் என்னை இன்று காலையில் சந்தித்து இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வழி வகை காண வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். நான் மீண்டும் அது பற்றிய முயற்சிகளை மேற்கொண்டு சோனியா காந்தியுடனும் பிரதமர் மன்மோகன் சிங்குடனும் தொடர்பு கொண்டு பேசுவதாக உறுதியளித்திருக்கிறேன். அப்படி பேசுகின்ற வாய்ப்பு ஏற்படும்போது இலங்கையில் ஏற்படுகின்ற போர் நிறுத்தத்தால் இலங்கை தமிழர்களுக்கு நன்மை என்பதோடு இந்தியாவிற்கும் பெருமை என்பதை எடுத்துச் சொல்வேன்.

குடும்பப் பிரச்சினையில் மூழ்கி இருக்கிறார் க‌ருணாநிதி: ஜெய‌ல‌லிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (ஜனவரி 9) வெளியிட்ட அறிக்கை

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் அளவிற்கும், டீசலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் அளவிற்கும் மத்திய அரசு குறைத்து அறிவித்த போது, இந்த விலைக் குறைப்பு அறிவிப்பு ஒரு மிகப் பெரிய ஏமாற்று வேலை என்றும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைப்பிற்கு ஏற்றாற் போல் இல்லை என்றும் தெரிவித்து, 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற போது, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாவு ஆகியவை என்ன விலைக்கு விற்கப்பட்டதோ, அந்த அளவுக்குக் குறைக்க வேண்டும் என்று நான் 6.12.2008 அன்று அறிக்கை வெளியிட்டேன்.

தற்போது அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் அளவுக்குக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடைய கோரிக்கையில் உள்ள நியாயத்தை மத்திய அரசு உணர்ந்து, அதை நிறைவேற்றி இருந்தால், இன்று இந்தியாவே ஸ்தம்பிக்கும் அளவுக்குப் போராட்டமும் வெடித்து இருக்காது; அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்காது.

செவிடன் காதில் ஊதிய சங்கு போல், தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு மவுனம் சாதித்ததன் விளைவாக, லாரி உரிமையாளர்கள் இரண்டு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களோடு டேங்கர் லாரி உரிமையாளர்களும், எண்ணெய் நிறுவன அதிகாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், தமிழ் நாட்டில் வாகனப் போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட முடியுமா? என்ற கேள்விக்குறியும் தற்போது மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டும் இது குறித்து மத்திய அரசு கவலைப்படாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. தான் சொன்னால் கேட்கக் கூடிய மத்திய அரசு தான் தற்போது ஆட்சி செய்கிறது என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழகத்தில் நிலவும் பிரச்சினை தெரியுமா? தெரியாதா? என்கிற அளவிற்கு குடும்பப் பிரச்சினையில் மூழ்கி இருக்கிறார்.

தற்போதே தமிழ் நாட்டில் பெரும்பாலான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. இந்த நிலைமை நீடித்தால், இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டு பேருந்துப் போக்குவரத்து உட்பட அனைத்து வாகனப் போக்குவரத்தும் முடங்கிப் போய், பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும். இவற்றோடு மட்டுமல்லாது, பொதுமக்கள், மாணவ-மாணவியர், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டோர் என அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளாhர்கள். ஏற்கெனவே அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ள நிலையில், தற்போது நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாட்டால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் மேலும் பன்மடங்கு உயர்வதோடு மட்டுமல்லாமல் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. இந்தியா முழுவதும் இதே சூழ்நிலைதான் நிலவுகிறது.

தற்போது நிலவும் அசாதாரணமான நெருக்கடி நிலையை உடனடியாகப் போக்கும் வகையில், லாரி உரிமையாளர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றி, பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில் இயல்பு நிலை மீண்டும் திரும்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

சேதுச‌மூத்திர‌ திட்ட‌த்தை நிறைவேற்ற‌ வேண்டும்: க‌ருணாநிதி பேச்சு

சென்னை போர் நினைவு சின்னத்தில் இருந்து மதுரவாயல் வரை ரூ.1655 கோடி செலவில் அமைக்கப்பட இருக்கும் விரைவு சாலைக்கு பிரதமர் மன்மோகன் சிங் இன்று (ஜனவரி 8) அடிக்கல் நாட்டினார். விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் இன்றைக்கு சென்னை துறைமுகத்தையும் - மதுரவாயல் சந்திப்பையும் இணைக்கின்ற உயர்மட்ட மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி, எழுச்சியோடும் சிறப்போடும் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2006ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடிக்குப் பெரிதும் உள்ளாகியுள்ள பகுதிகளில் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்துவதென தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. பொதுவாக தேர்தல் நேரத்து வாக்குறுதிகளெல்லாம் பறந்து போய்விடும். இது பறக்கும் சாலையாக இருந்தும் கூட, பறந்து போகாமல் இன்றையதினம் நீங்கள் எல்லாம் பரவசமடைகிற அளவுக்கு இன்றைக்கு உருவாக்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

தேர்தல் வாக்குறுதியை நினைவூட்டி, நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங்க்கு 13-5-2006இல் தி.மு.க. அரசு அமைந்த பிறகு, ஒரு மாதக் காலத்திற்குள்ளாக, அதாவது 5-6-2006 அன்று ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில் இங்கே சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை அகற்றுவதற்காக சென்னை துறை முகத்திற்கு உயர் மட்டப் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதிக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

தமிழக அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிற இது போன்ற விண்ணப்பங்களை - ஒன்றிரண்டு தவிர - மற்றவற்றையெல்லாம் ஏற்று ஒப்புதல் அளித்து, நிறைவேற்றி வைக்கின்ற மத்திய அரசின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் இந்தக் கோரிக்கையை ஏற்றதின் விளைவாக இன்றைய தினம் இந்தியாவிலேயே மிக நீளமான உயர் மட்ட மேம்பாலச் சாலை 1600 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் சென்னை மாநகரின் நெரிசலை குறைப்பதற்காக மாத்திரமல்லாமல், சென்னை துறைமுகத்தையும், மதுரவாயல் சந்திப்பையும் இணைக்கப் பயன்படுகின்ற பாலமாகவும் இது அமையும் என்பதை மறந்து விடக் கூடாது.

மத்திய மாநில அரசுகளுக்கிடையே இணைப்புப் பாலம் இருக்கின்ற காரணத்தால்தான், இங்கே ஒரு பறக்கும் பாலத்தை நம்மால் உருவாக்க முடிகின்றது.ஜி.கே. வாசன் பேசும்போது குறிப்பிட்டதைப் போல, பல திட்டங்கள் - தமிழகத்திற்கு பல்லாயிரக்கணக்கான கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பிற்கான திட்டங்கள் - மத்திய அரசால் வழங்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்திலே இவைகளையெல்லாம் விட மிகப் பெரிய பாலம் - தென்னகத்தை வளப்படுத்தக் கூடிய பாலம் - வாணிபத்தை விரிவாக்கச் செய்யக் கூடிய பாலம் - எதிர்காலத் தமிழர்களுடைய வாழ்வுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கக் கூடிய பாலம் - பேரறிஞர் அண்ணா அவர்களால் “எழுச்சி நாள்” கொண்டாடப்பட்டு, அதற்கு முன்பே பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டு - தமிழகத்திலே உள்ள ஆன்றோர், சான்றோர், புலவர் பெருமக்கள், விஞ்ஞானிகள் என்று அத்தனை பேரும் ஆதரவு தந்து கட்டப்பட வேண்டுமென்று எண்ணிய பாலம் தான், சேது சமுத்திரப் பாலம். சேது சமுத்திரத் திட்டப் பாலம். அந்தப் பாலத்தைக் கட்டி முடிக்க வேண்டு மென்கின்ற எண்ணத்தோடு தான் கடந்த காலத்திலே - நம்முடைய மத்திய அரசிலே பெரு வெற்றி பெற்று, ஆட்சி அமைத்த நேரத்தில் - அவர்களுக்கு உதவிகரமாக இருந்த தி.மு.க.சார்பில் நானும், அங்கே சென்று என்னாலான உதவிகளை செய்த போது, நான் நம்முடைய பிரதமர் மன் மோகன் சிங்கிடமும் சோனியா காந்தியிடமும் வைத்த கோரிக்கை - சேது சமுத்திரத் திட்டம் - அதுவும் ஒரு பாலம் திட்டம் தான். அந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் ஒரு வேளை இலங்கையிலே உள்ள அரசுக்கு அது சங்கடமாக இருக்கலாம், ஆனால் நமது எதிர்கால வாழ்வுக்கு ஒரு இன்பப் புதையலாக அந்தத் திட்டம் நிறைவேறக் கூடிய திட்டம். அந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று இலங்கை அரசுக்கு சாதகமாக இருக்கின்ற சில கட்சிகள் கூட தமிழ்நாட்டிலே கொடி தூக்கி சேது சமுத்திரத் திட்டம் வேண்டாம் என்று முழங்குவதை காணுகின்றோம்.

கொடி தூக்கி வேண்டாமென்று சொல்வது மாத்திரமல்ல, உச்ச நீதி மன்றத்திற்கே சென்று சேது சமுத்திரத் திட்டத்தை கை விட வேண்டுமென்று வாதாடுகின்ற நல்லவர்கள் எல்லாம் கூட இன்றைக்கு தமிழ்நாட்டிலே கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாவால்ல், பெருந்தலைவர் காமராஜரால் மற்ற பெரும் தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட –- நிறைவேற்றப்பட வேண்டுமென்று அழுத்தந்திருத்தமாகக் கூறப்பட்ட - ஒரு திட்டத்திற்கு இன்றைக்கு இவ்வளவு எதிர்ப்பு ஒரு சில கட்சிகளால் - இலங்கையிலே உள்ள அரசுக்கு ஆதரவாகச் செய்யப்படுகிறது, என்றாலுங் கூட நாம் இங்குள்ள தமிழர்களைக் காப்பாற்ற - இங்குள்ள வளத்தை மேலும் பெருக்க - நம்முடைய போக்குவரத்து –- நம்முடைய உலகத் தொடர்பு - இவைகளுக்கெல்லாம் உயர்வளிக்க - இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும். அந்தத் திட்டத்தை இன்றைக்கு எடுத்துப் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற தம்பி பாலு அவர்கள், இதிலே எவ்வளவு திடமான, உறுதியான, உத்வேகத்தோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தத் திட்டம் ஒரு அறைகூவல். அந்த அறைகூவலிலே தமிழ்நாட்டு மக்கள் வெற்றி பெறுவதற்கு பிரதமர் மன்மோகன் சிங் மனம் கனிந்து அந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு உறுதியோடு நின்று ஒத்துழைத்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் இன்று நிறைவேற்றப்படுகின்ற திட்டம் அதற்கு அச்சாரமாக இருக்கும். இன்றைக்கு அவர்கள் அடிக்கல் நாட்டியது அந்தத் திட்டத்திற்கும் சேர்த்துத்தான்.

விரைவு சாலை: மதுரவாயலில் மன்மோகன் சிங் அடிக்கல்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு, அதிவிரைவு சாலை அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் நேற்று (ஜனவரி 7) இரவு சென்னை வந்தார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 2 நாள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (ஜனவரி 8) தொடங்கியது. பிரதமர் மன்மோகன்சிங் விழாவில் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் மதுரவாயல் சென்றார்.

சென்னை போர் நினைவு சின்னத்தில் இருந்து மதுரவாயல் வரை ரூ.1655 கோடி செலவில் அமைக்கப்பட இருக்கும் விரைவு சாலைக்கு பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். விழாவில் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஜி.கே.வாசன், கே.எச்.முனியப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு ம‌ன்மோக‌ன்சிங் தொட‌ங்கி வைத்தார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 2 நாள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (ஜனவரி 8) தொடங்கியது. பிரதமர் மன்மோகன்சிங் விழாவில் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.



கருணாநிதியை சந்தித்தார் பாக்யராஜ்

முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் இன்று (ஜனவரி 7)நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் தனது பிறந்தநாளையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவர் மனைவி பூர்னிமாவும் உடன் இருந்தார்.

"வாக்குபதிவு எந்திரத்தில் தி.மு.க.தில்லு முல்லு" ஜெயலலிதா பேச்சு

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து இரண்டாம் நாளாக நேற்று (ஜனவரி 4) ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். பிரச்சாத்தில் அவர் ஆற்றிய உரை:
மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி, திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் பொறுப்பாளராக தனது மகன் அழகிரியை நியமித்த போதே, மக்களை வாக்களிக்க விடாமல் வன்முறை மூலம் தேர்தலில் சாதிக்க நினைத்துவிட்டார் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். பண பலம், படை பலம், அதிகார பலம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு, நீங்கள், உங்கள் விருப்பப்படி செலுத்த வேண்டிய வாக்குகளை, தி.மு.க. ரவுடிகள் மற்றும் குண்டர்களை வைத்து அவரே செலுத்த நினைக்கிறார்.

தன் குடும்ப நலனுக்காக, தமிழ் நாட்டின் ஜீவாதார உரிமைகளான கச்சத் தீவு, காவேரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, பொன்னையாறு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை தாரை வார்த்த கருணாநிதி, தமிழர்களிடம் தற்போது இருக்கும் ஒரே உரிமையான வாக்கு உரிமையையும் பறிக்க நினைக்கிறார்.

மக்களாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்க நினைக்கும் கருணாநிதிக்கு, கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு, இந்த இடைத் தேர்தல் மூலம் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று வாக்களாப் பெருமக்களாகிய உங்களை எல்லாம் அன்போடு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.க. தோல்வி அடைவது உறுதி என்று அனைத்து கருத்துக் கணிப்புகளும் எடுத்துக் கூறுகின்றன. அதனால் கருணாநிதிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எப்படியாவது இந்தத் தேர்தலை தள்ளிப் போட வேண்டும் என்று பகீரத முயற்சி செய்தார். அது நடக்கவில்லை. இதற்காக டெல்லியில் மூத்த மத்திய அமைச்சர்களுடன் பேசி எப்படியாவது இந்த திருமங்கலம் இடைத் தேர்தலை தள்ளிப் போடுங்கள் என்று கெஞ்சினார் கருணாநிதி. ஆனால், மத்திய அரசு அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதன் பிறகு எப்படியாவது யாரையாவது நமக்குக் கிடைக்க வேண்டிய வெற்றியை தட்டிப் பறித்துவிட வேண்டும் என்று கருணாநிதி சதித் திட்டம் தீட்டுகிறார்.

இன்றைய தினம் எனக்குக் கிடைத்த ஒரு செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கருணாநிதியின் தூண்டுதலின் பேரில், ஒரு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும், ஒரு காவல் துறை ஐ.பி.எஸ். அதிகாரியும் இணைந்து சதித் திட்டத்தைத் தீட்டி இருக்கிறார்கள். திருமங்கலம் தொகுதியில் உள்ள 190 வாக்குச் சாவடிகளில், 130 வாக்குச் சாவடிகளில் வைக்கப்படவுள்ள மின்னணு வாக்குப் பெட்டிகளை அவர்கள் தயார் செய்து, அவர்களுக்கு வேண்டியபடி அந்த எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின்களை புரோகிராம் செய்து தி.மு.க-விற்கு ஒரு போலியான பெரும்பான்மை வரும்படி ஏற்பாடு செய்திருப்பதாக எனக்கு நம்பகமான வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளது. வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் போது ஒரு பெட்டி பழுதடைந்துவிட்டால் அதற்கு பதிலாக வைப்பதற்கு 4 அல்லது 5 பெட்டிகளை எடுத்துச் செல்வார்கள். அந்தப் பெட்டிகளில் 130 பெட்டிகளைத் கலந்துவிட்டு அவர்கள் ஏற்கெனவே வாக்குச் சாவடியில் வைக்கப்பட்டுள்ள பெட்டி பழுதடைந்துவிட்டதாக பொய்யாகத் தெரிவித்து, இவர்கள் தயாரித்து வைத்துள்ள இந்த 130 மின்னணு வாக்குப் பெட்டிகளை வாக்குச் சாவடிகளில் வைத்து அதன் மூலம் தி.மு.க-விற்கு ஒரு போலியான வெற்றியை பெற்றுத் தர வேண்டும் என்று இந்த இரண்டு அதிகாரிகளும் திட்டமிட்டிருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ஆகவே, கருணாநிதியின் இந்த சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அ.தி.மு.க. சார்பில் நாங்கள் புகார் கொடுக்கப் போகிறோம். சித்தாலை கிராமத்தில் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியின் நெருங்கிய நண்பரும், ராயல் கேபிள் விஷன் இயக்குநர்களில் ஒருவருமான நாகேஷ் என்பவரது வீட்டில் அவரது உறவினரை கவனித்து வந்த கற்பகவள்ளி என்ற இளம் செவிலியர் மர்மமான முறையில் இறந்ததையும், இறந்த செய்தியை அவருடைய தாய்-தந்தையருக்குக் கூட தெரிவிக்காமல் விடுமுறை நாளில், 500-க்கும் மேற்பட்ட காவலர்களைக் குவித்து மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தியதையும், நீங்கள் அறிவீர்கள். காதல் தோல்வி காரணமாக கற்பகவள்ளி தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக சி.பி.சி.ஐ.டி. தெரிவித்து, வழக்கை முடித்தது. இதில் நீதி வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் கற்பகவள்ளியின் தாய் தந்தையரை பல வழிகளில் பணிய வைக்க முயற்சி செய்தும் பணியாததால், அவர்கள் தற்போது கருணாநிதியின் மகன் அழகிரியால் பல்வேறு மிரட்டல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வருகின்றன.

ஜெயலலிதா வைகோ சந்திப்பு

திருமங்கலம் இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரை சென்றிருக்கும் ஜெயலலிதாவை இன்று (டிசம்பர் 4) பிற்பகல்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், மதுரை மாவட்டச் செயலாளர் காளிதாஸ், சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி. ராமசாமி ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் சுந்தரம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மோகன், மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன், இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இனாயத்துல்லா, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளர் தாவூது மியாகான், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, தமிழ் நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன், தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது, தமிழ் நாடு அகமுடையார் பேரவையின் தலைவர் சந்திரசேகரன், தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூத், தமிழக கட்டடத் தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் நெல்லை மகாலிங்கம், கிறிஸ்தவ மக்கள் கட்சியின் தலைவர் ஐசக், அகில இந்திய தெலுங்கர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் கட்டபொம்மன் கந்தசாமி ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.

அப்போது, ஜெயலலிதா அவர்களிடம் “நீங்கள் அனைவரும் பல்வேறு வேலை பளுவுக்கு இடையில் இங்கேயே தங்கி கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக அயராது தேர்தல் பணியாற்றிக் கொண்டிருப்பதை நான் நன்கு அறிவேன். உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் நாம் அனைவரும் தேர்தல் வெற்றிப் பொதுக்கூட்டத்தில் சந்திப்போம்” என்றார்.

"தமிழகத்தை ஆயுதக் காடாக மாற்றிவிட்டார் கருணாநிதி" திருமங்கலத்தில் ஜெயலலிதா பிரச்சாரம்

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலையொட்டி அ.தி.மு.க வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து திருமங்கலத்தில் ஜெயலலிதா இன்று (டிசம்பர் 4) இரண்டாவது நாளாக பிரச்சாரம் செய்தார். இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார் ஜெயலலிதா.
வேனில் இருந்தபடியே அவர் ஆற்றி உரை:

தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, அடித்தளம் அமைக்கவிருக்கும், எனது அன்புக்குரிய, திருமங்கலம் தொகுதி வாக்காளப் பெருமக்களே!

மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர், கருணாநிதியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாகவும், சுயநலத்தின் காரணமாகவும், குடும்பத்தினர் தலையீட்டின் காரணமாகவும், நீங்கள் பல்வேறு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும், துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், இன்னல்களுக்கும், இடர்பாடுகளுக்கும், ஆட்படுத்தப்பட்டு இருக்கிறீர்கள், என்பதை நான் அறிவேன்.

குறிப்பாக, மதுரை மாவட்ட மக்களாகிய நீங்கள், கருணாநிதியின் மகன், மு.க. அழகிரியின் அட்டகாசம் காரணமாக, கூடுதல் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும், உங்கள் அன்புச் சகோதரியாகிய நான், நன்கு அறிவேன். கடந்த 31 மாத கால, மக்கள் விரோத, மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், கருணாநிதி நிகழ்த்திய சாதனைகள்தான் என்ன? சாட்சிகளைக் கலைத்து, தனது மகன் அழகிரியை, முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன், கொலை வழக்கிலிருந்து விடுவித்தது சாதனை!

தன்னுடைய குடும்பத் தகராறில், மூன்று அப்பாவி பத்திரிகை ஊழியர்களின், உயிர்களைப் பறித்தது சாதனை! அது சம்பந்தப்பட்ட வழக்கை, கிடப்பில் போட வைத்தது சாதனை! மகன், பேரன் என மாறி மாறி, கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை, மிரட்டுவது சாதனை! தி.மு.க-வினரும், மைனாரிட்டி தி.மு.க. அரசின் அமைச்சர்கள் உள்ளிட்டோரும், ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஏழை, எளிய, அப்பாவி பொதுமக்களின் நிலங்களை, மிரட்டி அபகரிப்பது சாதனை! மணல் கொள்ளை; அரிசிக் கடத்தல்; கட்டப் பஞ்சாயத்து; வன்முறையாளர்களை வளர்த்துவிடுவது; ஆயுள் தண்டனைக் கைதிகளை, விடுதலை செய்தது உள்ளிட்டவைகள்தான், மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர், கருணாநிதியின் தன்னலச் சாதனைகள்! தமிழக மக்களின் வேதனைகள்!

மைனாரிட்டி தி.மு.க. அரசின், நிர்வாகத் திறமை இன்மையாலும், கையாலாகாத் தனத்தாலும், வரலாறு காணாத மின்வெட்டை, நீங்கள் எல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதன் விளைவாக, விவசாய உற்பத்தியும், தொழில் உற்பத்தியும், கடுமையாக பாதிக்கப்பட்டு, நெசவுத் தொழில் உட்பட, அனைத்துத் துறைகளும், பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. மின்வெட்டு காரணமாக, கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள, தொழில் நிறுவனங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு, பல தொழிலாளர்கள், வேலை இழந்து தவிக்கின்றனர். இது போதாது என்று, மறவன்குளத்தில் உள்ள, மெட்டல் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையில், தி.மு.க. தொழிற்சங்கத்தினரால், அங்குள்ள தொழிலாளர்கள், வேலை இழந்து தவிக்கின்றனர். விஷம் போல் ஏறும் விலைவாசி ஒரு புறம்; வேலை இழப்பு, ஊதிய இழப்பு மறு புறம், என நீங்கள் அனைவரும், சொல்லி மாளாத துன்பத்திற்கு, ஆளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்.

சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கிடப்பதோடு மட்டுமல்லாமல், காவல் துறை, கருணாநிதி குடும்பத்தினரின், ஏவல் துறையாக மாறி இருக்கிறது. பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத, ஓர் அசாதாரண சூழ்நிலை, தமிழ் நாட்டில், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நிலவுகிறது. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை, ஆயுதக் காடாக மாற்றிவிட்டார் கருணாநிதி. தமிழ் நாட்டை ஒரு வன்முறைக் கும்பல், வேட்டைக் காடாக்கி, கொடுங்கோல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழகத்தை, அழிவுப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார், மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி.

மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர், கருணாநிதியின் மக்கள் விரோதக் கொள்கைகளாலும், செயல்பாடுகளாலும், நடவடிக்கைகளாலும், நிர்வாகத் திறமை இன்மையாலும், சுயநலப் போக்கினாலும், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள், நோயாளிகள், முதியவர்கள், தாய்மார்கள், மாணவ-மாணவியர், குழந்தைகள் என, அனைத்துத் தரப்பு மக்களும், சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். தனது குடும்ப வருமானத்தைப் பெருக்குவதிலும், தீவிரவாதிகளை ஊக்குவிப்பதிலும், குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான பதவிகளை, கட்சியிலும், அரசாங்கத்திலும், பெற்றுத் தருவதிலும், தன்னுடைய மற்றும் தன் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட விழாக்களிலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு, உல்லாசமாக பொழுது போக்குவதிலும்தான், கருணாநிதியின் கவனம், நாளும் பொழுதும், சென்று கொண்டிருக்கின்றதே தவிர, தமிழ் நாட்டின் மீதோ, தமிழக மக்களாகிய உங்களின் மீதோ, துளி கூட கருணாநிதிக்கு அக்கறை கிடையாது.

2006-ஆம் ஆண்டு நடைபெற்ற, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திருமங்கலம் தொகுதி வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியான, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், போட்டியிட்ட வேட்பாளரை, வெற்றி பெற வைத்தீர்கள் என்பதற்காக, உங்களை எல்லாம், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன், மைனாரிட்டி தி.மு.க. அரசு நடத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல், தாழ்தளப் பேருந்து, மிதவைப் பேருந்து என்ற போர்வையில், பேருந்துக் கட்டணத்தை இரு மடங்காகவும், சொத்து வரியைப் பல மடங்காகவும் உயர்த்தி, உங்கள் மீது, கூடுதல் சுமையைத் திணித்து இருக்கிறது.

தி.மு.க. ஆட்சியாளர்களின் ஆணவத்திற்கும், மமதைக்கும், வன்முறைக்கும், அராஜகத்திற்கும், மக்கள் விரோதப் போக்கிற்கும், தக்க பதிலடி கொடுப்பதற்கு, இந்த இடைத் தேர்தல், உங்களுக்கு எல்லாம், ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு, வளமான எதிர்காலம் பிறக்கவும்; அனைத்துத் துறைகளிலும், தமிழகத்தை முதல் மாநிலமாக ஆக்கவும்; மு.க. அழகிரியின் அட்டகாசத்திற்கு, முற்றுப் புள்ளி வைக்கவும்; கருணாநிதியின் குடும்ப ஆட்சியை ஒழித்துக் கட்டவும்; திருமங்கலம் இடைத் தேர்தல் முடிவு, ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டும் என்று, வாக்காளப் பெருமக்களாகிய உங்களை எல்லாம், நான் அன்போடு, வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, திருமங்கலம் தொகுதி வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், இந்த இடைத் தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர், முத்துராமலிங்கத்திற்கு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கண்டெடுத்த வெற்றிச் சின்னமாம், “இரட்டை இலை” சின்னத்தில் வாக்களித்து, தம்பி முத்துராமலிங்கத்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று, உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

காட்டாட்சியை தூக்கி எறிய, குடும்ப ஆட்சியை ஒழித்துக் கட்ட, அழகிரியின் அட்டகாசத்தை வேரறுக்க,வன்முறைக் கலாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க, தமிழ்நாடு மீண்டும் அமைதிப் பூங்காவாக மலர, வேளாண் வளம், தொழில் வளம் சிறக்க, வேலைவாய்ப்புகள் பெருக, ஒளிமயமான தமிழகத்தை உருவாக்க, வாக்களிப்பீர் வெற்றிச் சின்னமான இரட்டை இலைக்கே!