க‌ருணாநிதி ஆட்சி ஒழிந்தால்தான் ம‌க்க‌ளுக்கு விடிவு: ஜெய‌ல‌லிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (ஜனவரி 19) வெளியிட்ட அறிக்கை:

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவனும் நாடகமாடுகிறார்கள் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தேன். அதனை நிரூபிக்கும் வகையில் திருமாவளவன் தன்னுடைய ‘சாகும்வரை உண்ணாவிரத நாடகத்தை’ நான்கு நாட்களிலேயே பழரசம் அருந்தி முடித்துக் கொண்டிருக்கிறார்.

15.1.2009 அன்று இந்த உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியதிலிருந்து, சில சமூக விரோதச் சக்திகள் தமிழகத்தின் பல பகுதிகளில் அரசுப் பேருந்துகளை தீயிட்டுக் கொளுத்தியும், பெட்ரோல் குண்டுகளை வீசியும், கற்களை வீசியும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த வன்முறைச் செயல்களின் மூலம் ஏராளமான அப்பாவி பொது மக்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் நான்கு அரசுப் பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. பல இடங்களில் கற்களை எரிந்து அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வன்முறையில் ஈடுபட்டோர் மீது நான்கு நாட்களாக நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல் வழக்கம் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது காவல் துறை.

இது போன்ற வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தியவர்கள் மீது மைனாரிட்டி தி.மு.க. அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைப் பார்க்கும் போது, வன்முறைக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

18.1.2009 அன்று திருமாவளவன் உண்ணாவிரப் போராட்டத்தை முடித்த பிறகு, தமிழகக் காவல் துறை தலைமை இயக்குநர், ‘பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் வன்முறையில் ஈடுபடும் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும், பஸ் எரிப்பு மற்றும் கண்ணாடி உடைப்பு சம்பவங்களில் ஈடுபடுவோரை, தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக’ இன்று பத்திரிகைகளில் செய்தி வந்திருப்பது மக்களின் சந்தேகத்தை நிரூபிக்கும் வகையில் உள்ளது.

தமிழகத்தில் தற்போது நிலவும் முக்கியப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவனும் சேர்ந்து நடத்திய நாடகம்தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம். திருமாவளவனின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் இலங்கையில் போர் நிறுத்தமும் ஏற்படவில்லை, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதும், தமிழ்நாட்டில் உள்ள மக்களை அச்சுறுத்தியதும், காயப்படுத்தியதும்தான் மிச்சம்!

தமிழகத்தின் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தும் அளவுக்கும், பொதுமக்களை காயப்படுத்தும் அளவுக்கும், அச்சுறுத்தும் அளவுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் ஆட்கள் யாரும் இல்லை. நான்கு நாட்களாக தமிழக மக்களை காயப்படுத்தியும், அரசுப் பேருந்துகளை எரித்தும், கல் வீசியும் சேதப்படுத்தியவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை ஏதும் எடுக்காமல், உண்ணாவிரதப் போராட்டம் ஒரு வழியாக முடிந்த பிறகு “தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்” என்று காவல் துறைத் தலைமை இயக்குநர் அறிவித்ததில் இருந்தே, இந்த வன்முறைச் செயல்களை தி.மு.க-வைச் சேர்ந்த மர்மக் கும்பல்கள்தான் நிகழ்த்தி இருக்கின்றன என்பது தெளிவாகி உள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை திருமாவளவன் முன் நின்று நடத்தினாலும், இதை பின்னால் இருந்து இயக்கியவர் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதிதான் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதன் மூலம் மக்களின் பணம் விரயமாக்கப்பட்டிருக்கிறது. அரசுக்கு ஏற்பட்ட இழப்பை கருணாநிதி தன் சொந்த பணத்திலிருந்து ஈடு செய்வாரா? அல்லது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிடம் இருந்து வசூல் செய்வாரா? என்பதை நாட்டு மக்களுக்கு மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும். இது தவிர, இந்திய அரசால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும், இந்திய அரசால் தேடப்பட்டு வரும் கொலைக் குற்றவாளியுமான பிரபாகரனின் புகைப்படத்துடன் கூடிய விளம்பரங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இது போன்ற விளம்பரங்களை கொடுத்தவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இது ஒரு தேசத் துரோகச் செயல் இல்லையா? இது போன்ற தேசத் துரோகச் செயல்கள் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்காததன் மூலம் இதன் பின்னணியில் கருணாநிதி இருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

ஐந்து லட்சம் இலங்கைத் தமிழர்கள் மரணத்தின் பிடியில் சிக்கிக் தவித்துக் கொண்டிருக்கும் போது, பட்டு வேட்டி, பட்டுச் சட்டை அணிந்து கொண்டும், மகனுக்கு தங்கச் சங்கிலியை அணிவித்தும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடினார் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி. இது தான் கருணாநிதியின் தமிழ்ப் பற்று!

தமிழ்நாட்டிற்கு, தமிழக மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை, உருப்படியான திட்டங்களை நிறைவேற்றாமல், கபட நாடகங்களை நடத்திக் கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி. கருணாநிதியின் இது போன்ற கண்துடைப்பு நாடகங்களைக் கண்டு தமிழக மக்கள் இனியும் ஏமாறக் கூடாது. மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் தலைமையிலான அராஜக ஆட்சி ஒழிந்தால் தான் தமிழக மக்களுக்கு விடிவுகாலம் ஏற்படும். இதை நிறைவேற்ற தமிழக மக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஐயா,

நான் அரசியல் டாட் காம் வலைமனை திறக்க இருக்கிறேன். பிளாக் ஃபார்மேட்டில் (wordpress). அதில் எழுத உங்களுக்கு விருப்பமா?

கருத்துரையிடுக