இலங்கையில் போர் நிறுத்தம்: "இறுதி வேண்டுகோள் புறகணிக்கப்பட்டால்...." சட்டசபையில் கருணாநிதி எச்சரிக்கை

தமிழக சட்டசபையில் இன்று (ஜனவரி 23) இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சிறப்பு அரசினர் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்திலம் மீது கட்சித் தலைவர்கள் பேசினார்கள். இறுதியாக முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

இலங்கையில் நடைபெறுகின்ற இன வெறிப் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து இந்த அவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவிந்தசாமி, ம.தி.மு.க. சார்பில் ராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜி.கே. மணி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், அ.இ.அ.தி.மு.க.சார்பில் செங்கோட்டையன் ஆகியோர் தங்களுடைய கருத்துக்களை எடுத்துக்கூறியிருக்கிறார்கள்.

இந்தத் தீர்மானம் அவசர அவசியமாக இன்றைக்கு இந்த மாமன்றத்திலே விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டும் என்று நான் விரும்பியதற்குக் காரணமே - கடந்த காலத்தில் பல முறை சட்டப் பேரவையிலும், அனைத்துக் கட்சித்தலைவர்களின் கூட்டத்திலும் ஒவ்வொரு கட்சியினுடைய பொதுக் கூட்டங்களிலும், நிர்வாகக் குழு கூட்டங்களிலும் - எடுத்துரைத்த மிக முக்கியமான தீர்மானமாக இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்கின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை கடைசியாக ஒரு முறை இன்றைக்கு மத்திய அரசுக்கு வலியுறுத்திச் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான்.

இதை ஏன் கடைசியாக ஒரு முறை என்று நான் குறிப்பிட்டேன் என்றால் - பல முறை இந்த அவையில் இது போன்ற தீர்மானங்கள் கட்சி மாச்சரியங்களுக்கு இடம் இல்லாமல் இந்தத் தீர்மானத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு இதுதான் நேரம் என்று ஒருவரையொருவர் மறை முகமாகவோ, ஜாடையாகவோ, நேரடியாகவோ தாக்குவதற்கான வாய்ப்பு இருந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல், வாய்மையோடு வாதத்திலே ஈடுபட்டு, நம்முடைய கோரிக்கையை மத்திய அரசுக்கு எடுத்து வைத்திருக்கிறோம்.

இலங்கையில் நடைபெறுகின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கையினுடைய முக்கியமான குறிக்கோள். அதை விட்டு எள் முனை அளவும் பிறழாமல், பேச வேண்டுமென்று நான் காலையிலே நம்முடைய நண்பர்களையெல்லாம் கூட வேண்டிக் கொண்டேன். சற்று அங்கு இங்கு அந்தத் தடம் மாறினாலுங்கூட - தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும், தமிழர்களை இலங்கைத் தீவிலே பாதுகாக்க வேண்டும், அவர்களைக் காத்திட வேண்டும் என்ற அந்த உணர்வு ஒரு மைய இழையாக ஓடிக் கொண்டிருந்த காரணத்தால் - நான் எதிர்பார்த்தவாறு அல்லது வேறு சிலர் எதிர்பார்த்தவாறு எந்த விதமான சங்கடங்களும் இல்லாமல் நாம் நம்முடைய கருத்தை இந்தத் தீர்மானத்தின் மூலமாக வலியுறுத்துகின்ற கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.

ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1939ஆம் ஆண்டு - ஆசியாவின் ஜோதி பண்டித ஜவகர்லால் நேரு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். “இண்டியன் இன் சவுத் ஏசியா” என்ற நூலில் - அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலே இந்தியாவுக்கு வெளியே வாழுகின்ற இந்தியர்களைப் பற்றி - அப்போது நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு நேரு அனுப்பிய செய்தி.

“இந்தியா இன்று பலவீனமாக உள்ளது. அது வெளிநாட்டில் வாழும் தனது மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. ஆனால் இந்தியா அவர்களையும் அவர்களுக்கு ஏற்படும் துயரத்தையும் இழிவையும் மறப்பதில்லை. ஒரு நாள் வரும் - அன்றைக்கு இந்தியாவின் பாதுகாப்பு கரம் நீளும் - அதன் வலிமையினால் அவர்களுக்கு நீதி கிடைக்கும்” என்று நேரு அவர்கள் 1939ஆம் ஆண்டு சொன்னதைத்தான் இப்போது நான் வலியுறுத்துகிறேன். நீதி கிடைப்பதற்கு ஜவகர்லால் நேரு எந்த இந்தியாவிலே முதல் பிரதமராக பொறுப்பேற்றாரோ - அந்த இந்தியத் திருநாடு இப்போது முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்வதற்காகத்தான் நேருவின் அந்த வாசகத்தை நினைவுபடுத்தி - நான் என்னுடைய தீர்மானத்தை முன்மொழிய விரும்புகிறேன்.

“இலங்கையில் தமிழ் இனமே அழிந்து கொண்டிருக்கிறது. ஐ.நா. மன்றம் கண்டனம் தெரிவிக்கிற அளவுக்கு; அந்த நாடு அப்பாவித் தமிழ் மக்களின் இடுகாடாக - சுடுகாடாக - ஆகிக் கொண்டிருக்கிறது.

குழந்தை குட்டிகளோடு, குடும்பம் குடும்பமாக குய்யோ முறையோ என்ற கூச்சலும் - ஒப்பாரியும் புலம்பலும் - பின்னணியாக, பிணங்கள் குவிக்கப்படுகின்றன. அத்தனையும் தமிழ் மக்களின் பிணங்கள்.

அய்யோ! அந்தச் சிங்கள இராணுவ குண்டு வீச்சுக்கிடையே - சிதறியோடும் - சிறுவர் சிறுமியர் - சிலராவது செத்துப் பிழைத்தார்கள் என்ற செய்தியும் கூட அறவே அற்றுப் போய் - இன்று கூண்டோடு சாகின்றனரே -பூண்டோடு அழிகின்றனரே

மனித நேயமற்ற மாபாவிகளின் சேட்டையால்; இத்தனை ஆண்டுகள்; இழித்தும் - பழித்தும் - இறுதியாக அழித்தும் ஒழிக்கப்படுகிறதே உலகை ஆண்ட ஓர் இனம் - அந்த இனத்தை இறுதியாக இலங்கையில் விடப்பட்டுள்ள இந்த அறைகூவலில் இருந்து எப்படி மீட்கப் போகிறோம்?

இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்தில் நாம் வாழுகிறோம் என்பதால் நம்மை அரவணைத்துக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும் - ஆம், பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமையோடு எதிர்பார்க்கிறோம். நமக்கு பாதுகாப்பு தருவதாயினும் - பாதிப்பைக் களைவதாயினும் இரண்டையும் சீர்தூக்கி செயல்படுத்தி, இந்த மாநில மக்களுக்கும் - இந்த மாநில மக்களாம் தமிழ்க்குடி மக்களின் நலத்திற்கும் நமது தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழ் மக்களின் நலத்திற்கும் உத்திரவாதமளிக்கக் கூடிய பொறுப்பு; - உலகில் எங்கு இனப் படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும் உரிமையும் கொண்ட இந்தப் பெரிய ஜனநாயக நாடாம் இந்தியத் திருநாட்டில் மக்களாட்சியை நடத்துகிற மத்திய ஆட்சியின் கரங்களில் இருக்கும்போது; நாம் அந்தக் கரங்களைப் பிடித்துக் கொண்டு தானே; இலங்கையில் சீரழியும் - செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக என்று கண்ணீர் மல்கக் கேட்கிறோம்.

கேட்டுக் கேட்டுப் பயன் விளையாமற் போனதால் - இறுதி வேண்டுகோளாக முறையிடுகிறோம்; உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து; அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட - ஆவன செய்திடுக என்று!

இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக்கப்படாமல் - இன்றே போர் நிறுத்தம் இலங்கையில் - அடுத்து அரசியல் தீர்வு - தொடர்ந்து அமைதி.

எனவே அந்த நல்ல விளைவை எதிர்பார்த்து; இந்த மாமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இறுதித் தீர்மானமாக இதனை நான் முன்மொழிகிறேன்.

இந்தத் தீர்மானத்திற்கும் பயன் ஏதும் ஏற்படாவிட்டால் ஆளுங்கட்சியான தி.மு.க. பொதுக்குழு அல்லது செயற்குழு கூட்டத்திலே விவாதித்து அடுத்து என்ன என்று முடிவு எடுக்கப்படும் என்பதை இந்த மன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே பேசிய நண்பர்கள் சில பேர் ஆட்சி எதற்காக என்றார்கள். ஆட்சி என்று ஒன்று இருக்கின்ற காரணத்தால்தான் நாம் இந்த அளவிற்காவது கேட்க முடிகிறது - இங்கே ஒரு தீர்மானத்தையாவது போட முடிகிறது என்பதையும் சில பேர் நமக்குச் சொல்கின்ற காரணத்தால் - அதையும் நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம். தேவையில்லை, நாளைக்கே ஆட்சியை இழந்து விட்டால், இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்ற உறுதி கிடைக்குமேயானால், அதற்கும் நாம் தயாராக இருப்போம் என்பதையும் எடுத்துக் கூறி - மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் - “அய்யகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது - இந்தியப் பேரரசுக்கு இறுதி வேண்டு கோள்” என்பதை டெல்லியிலே உள்ளவர்களுடைய செவிகளிலே விழ ஓங்கி ஒலித்து இந்த தீர்மானத்தை இந்த மாபெரும் அவையிலே முன்மொழிந்து இந்த அளவில் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக