"வாக்குபதிவு எந்திரத்தில் தி.மு.க.தில்லு முல்லு" ஜெயலலிதா பேச்சு

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து இரண்டாம் நாளாக நேற்று (ஜனவரி 4) ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். பிரச்சாத்தில் அவர் ஆற்றிய உரை:
மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி, திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் பொறுப்பாளராக தனது மகன் அழகிரியை நியமித்த போதே, மக்களை வாக்களிக்க விடாமல் வன்முறை மூலம் தேர்தலில் சாதிக்க நினைத்துவிட்டார் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். பண பலம், படை பலம், அதிகார பலம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு, நீங்கள், உங்கள் விருப்பப்படி செலுத்த வேண்டிய வாக்குகளை, தி.மு.க. ரவுடிகள் மற்றும் குண்டர்களை வைத்து அவரே செலுத்த நினைக்கிறார்.

தன் குடும்ப நலனுக்காக, தமிழ் நாட்டின் ஜீவாதார உரிமைகளான கச்சத் தீவு, காவேரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, பொன்னையாறு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை தாரை வார்த்த கருணாநிதி, தமிழர்களிடம் தற்போது இருக்கும் ஒரே உரிமையான வாக்கு உரிமையையும் பறிக்க நினைக்கிறார்.

மக்களாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்க நினைக்கும் கருணாநிதிக்கு, கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு, இந்த இடைத் தேர்தல் மூலம் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று வாக்களாப் பெருமக்களாகிய உங்களை எல்லாம் அன்போடு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.க. தோல்வி அடைவது உறுதி என்று அனைத்து கருத்துக் கணிப்புகளும் எடுத்துக் கூறுகின்றன. அதனால் கருணாநிதிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எப்படியாவது இந்தத் தேர்தலை தள்ளிப் போட வேண்டும் என்று பகீரத முயற்சி செய்தார். அது நடக்கவில்லை. இதற்காக டெல்லியில் மூத்த மத்திய அமைச்சர்களுடன் பேசி எப்படியாவது இந்த திருமங்கலம் இடைத் தேர்தலை தள்ளிப் போடுங்கள் என்று கெஞ்சினார் கருணாநிதி. ஆனால், மத்திய அரசு அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதன் பிறகு எப்படியாவது யாரையாவது நமக்குக் கிடைக்க வேண்டிய வெற்றியை தட்டிப் பறித்துவிட வேண்டும் என்று கருணாநிதி சதித் திட்டம் தீட்டுகிறார்.

இன்றைய தினம் எனக்குக் கிடைத்த ஒரு செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கருணாநிதியின் தூண்டுதலின் பேரில், ஒரு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும், ஒரு காவல் துறை ஐ.பி.எஸ். அதிகாரியும் இணைந்து சதித் திட்டத்தைத் தீட்டி இருக்கிறார்கள். திருமங்கலம் தொகுதியில் உள்ள 190 வாக்குச் சாவடிகளில், 130 வாக்குச் சாவடிகளில் வைக்கப்படவுள்ள மின்னணு வாக்குப் பெட்டிகளை அவர்கள் தயார் செய்து, அவர்களுக்கு வேண்டியபடி அந்த எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின்களை புரோகிராம் செய்து தி.மு.க-விற்கு ஒரு போலியான பெரும்பான்மை வரும்படி ஏற்பாடு செய்திருப்பதாக எனக்கு நம்பகமான வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளது. வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் போது ஒரு பெட்டி பழுதடைந்துவிட்டால் அதற்கு பதிலாக வைப்பதற்கு 4 அல்லது 5 பெட்டிகளை எடுத்துச் செல்வார்கள். அந்தப் பெட்டிகளில் 130 பெட்டிகளைத் கலந்துவிட்டு அவர்கள் ஏற்கெனவே வாக்குச் சாவடியில் வைக்கப்பட்டுள்ள பெட்டி பழுதடைந்துவிட்டதாக பொய்யாகத் தெரிவித்து, இவர்கள் தயாரித்து வைத்துள்ள இந்த 130 மின்னணு வாக்குப் பெட்டிகளை வாக்குச் சாவடிகளில் வைத்து அதன் மூலம் தி.மு.க-விற்கு ஒரு போலியான வெற்றியை பெற்றுத் தர வேண்டும் என்று இந்த இரண்டு அதிகாரிகளும் திட்டமிட்டிருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ஆகவே, கருணாநிதியின் இந்த சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அ.தி.மு.க. சார்பில் நாங்கள் புகார் கொடுக்கப் போகிறோம். சித்தாலை கிராமத்தில் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியின் நெருங்கிய நண்பரும், ராயல் கேபிள் விஷன் இயக்குநர்களில் ஒருவருமான நாகேஷ் என்பவரது வீட்டில் அவரது உறவினரை கவனித்து வந்த கற்பகவள்ளி என்ற இளம் செவிலியர் மர்மமான முறையில் இறந்ததையும், இறந்த செய்தியை அவருடைய தாய்-தந்தையருக்குக் கூட தெரிவிக்காமல் விடுமுறை நாளில், 500-க்கும் மேற்பட்ட காவலர்களைக் குவித்து மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தியதையும், நீங்கள் அறிவீர்கள். காதல் தோல்வி காரணமாக கற்பகவள்ளி தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக சி.பி.சி.ஐ.டி. தெரிவித்து, வழக்கை முடித்தது. இதில் நீதி வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் கற்பகவள்ளியின் தாய் தந்தையரை பல வழிகளில் பணிய வைக்க முயற்சி செய்தும் பணியாததால், அவர்கள் தற்போது கருணாநிதியின் மகன் அழகிரியால் பல்வேறு மிரட்டல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வருகின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக