குடும்பப் பிரச்சினையில் மூழ்கி இருக்கிறார் க‌ருணாநிதி: ஜெய‌ல‌லிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (ஜனவரி 9) வெளியிட்ட அறிக்கை

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் அளவிற்கும், டீசலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் அளவிற்கும் மத்திய அரசு குறைத்து அறிவித்த போது, இந்த விலைக் குறைப்பு அறிவிப்பு ஒரு மிகப் பெரிய ஏமாற்று வேலை என்றும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைப்பிற்கு ஏற்றாற் போல் இல்லை என்றும் தெரிவித்து, 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற போது, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாவு ஆகியவை என்ன விலைக்கு விற்கப்பட்டதோ, அந்த அளவுக்குக் குறைக்க வேண்டும் என்று நான் 6.12.2008 அன்று அறிக்கை வெளியிட்டேன்.

தற்போது அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் அளவுக்குக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடைய கோரிக்கையில் உள்ள நியாயத்தை மத்திய அரசு உணர்ந்து, அதை நிறைவேற்றி இருந்தால், இன்று இந்தியாவே ஸ்தம்பிக்கும் அளவுக்குப் போராட்டமும் வெடித்து இருக்காது; அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்காது.

செவிடன் காதில் ஊதிய சங்கு போல், தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு மவுனம் சாதித்ததன் விளைவாக, லாரி உரிமையாளர்கள் இரண்டு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களோடு டேங்கர் லாரி உரிமையாளர்களும், எண்ணெய் நிறுவன அதிகாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், தமிழ் நாட்டில் வாகனப் போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட முடியுமா? என்ற கேள்விக்குறியும் தற்போது மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டும் இது குறித்து மத்திய அரசு கவலைப்படாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. தான் சொன்னால் கேட்கக் கூடிய மத்திய அரசு தான் தற்போது ஆட்சி செய்கிறது என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழகத்தில் நிலவும் பிரச்சினை தெரியுமா? தெரியாதா? என்கிற அளவிற்கு குடும்பப் பிரச்சினையில் மூழ்கி இருக்கிறார்.

தற்போதே தமிழ் நாட்டில் பெரும்பாலான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. இந்த நிலைமை நீடித்தால், இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டு பேருந்துப் போக்குவரத்து உட்பட அனைத்து வாகனப் போக்குவரத்தும் முடங்கிப் போய், பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும். இவற்றோடு மட்டுமல்லாது, பொதுமக்கள், மாணவ-மாணவியர், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டோர் என அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளாhர்கள். ஏற்கெனவே அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ள நிலையில், தற்போது நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாட்டால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் மேலும் பன்மடங்கு உயர்வதோடு மட்டுமல்லாமல் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. இந்தியா முழுவதும் இதே சூழ்நிலைதான் நிலவுகிறது.

தற்போது நிலவும் அசாதாரணமான நெருக்கடி நிலையை உடனடியாகப் போக்கும் வகையில், லாரி உரிமையாளர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றி, பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில் இயல்பு நிலை மீண்டும் திரும்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

குடும்பம் என்றாலே பிரச்சினை தான்.
குடும்பம் இருக்கிறது பிரச்சினை இருக்கிறது.
குடும்பமே இல்லாமல் தானே பெரும் பிரச்சினையாக
இருப்பதுதான் வெட்கமும்,வேதனையும்.

கருத்துரையிடுக