வேனில் இருந்தபடியே அவர் ஆற்றி உரை:
தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, அடித்தளம் அமைக்கவிருக்கும், எனது அன்புக்குரிய, திருமங்கலம் தொகுதி வாக்காளப் பெருமக்களே!
மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர், கருணாநிதியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாகவும், சுயநலத்தின் காரணமாகவும், குடும்பத்தினர் தலையீட்டின் காரணமாகவும், நீங்கள் பல்வேறு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும், துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், இன்னல்களுக்கும், இடர்பாடுகளுக்கும், ஆட்படுத்தப்பட்டு இருக்கிறீர்கள், என்பதை நான் அறிவேன்.
குறிப்பாக, மதுரை மாவட்ட மக்களாகிய நீங்கள், கருணாநிதியின் மகன், மு.க. அழகிரியின் அட்டகாசம் காரணமாக, கூடுதல் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும், உங்கள் அன்புச் சகோதரியாகிய நான், நன்கு அறிவேன். கடந்த 31 மாத கால, மக்கள் விரோத, மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், கருணாநிதி நிகழ்த்திய சாதனைகள்தான் என்ன? சாட்சிகளைக் கலைத்து, தனது மகன் அழகிரியை, முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன், கொலை வழக்கிலிருந்து விடுவித்தது சாதனை!
தன்னுடைய குடும்பத் தகராறில், மூன்று அப்பாவி பத்திரிகை ஊழியர்களின், உயிர்களைப் பறித்தது சாதனை! அது சம்பந்தப்பட்ட வழக்கை, கிடப்பில் போட வைத்தது சாதனை! மகன், பேரன் என மாறி மாறி, கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை, மிரட்டுவது சாதனை! தி.மு.க-வினரும், மைனாரிட்டி தி.மு.க. அரசின் அமைச்சர்கள் உள்ளிட்டோரும், ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஏழை, எளிய, அப்பாவி பொதுமக்களின் நிலங்களை, மிரட்டி அபகரிப்பது சாதனை! மணல் கொள்ளை; அரிசிக் கடத்தல்; கட்டப் பஞ்சாயத்து; வன்முறையாளர்களை வளர்த்துவிடுவது; ஆயுள் தண்டனைக் கைதிகளை, விடுதலை செய்தது உள்ளிட்டவைகள்தான், மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர், கருணாநிதியின் தன்னலச் சாதனைகள்! தமிழக மக்களின் வேதனைகள்!
மைனாரிட்டி தி.மு.க. அரசின், நிர்வாகத் திறமை இன்மையாலும், கையாலாகாத் தனத்தாலும், வரலாறு காணாத மின்வெட்டை, நீங்கள் எல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதன் விளைவாக, விவசாய உற்பத்தியும், தொழில் உற்பத்தியும், கடுமையாக பாதிக்கப்பட்டு, நெசவுத் தொழில் உட்பட, அனைத்துத் துறைகளும், பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. மின்வெட்டு காரணமாக, கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள, தொழில் நிறுவனங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு, பல தொழிலாளர்கள், வேலை இழந்து தவிக்கின்றனர். இது போதாது என்று, மறவன்குளத்தில் உள்ள, மெட்டல் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையில், தி.மு.க. தொழிற்சங்கத்தினரால், அங்குள்ள தொழிலாளர்கள், வேலை இழந்து தவிக்கின்றனர். விஷம் போல் ஏறும் விலைவாசி ஒரு புறம்; வேலை இழப்பு, ஊதிய இழப்பு மறு புறம், என நீங்கள் அனைவரும், சொல்லி மாளாத துன்பத்திற்கு, ஆளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்.
சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கிடப்பதோடு மட்டுமல்லாமல், காவல் துறை, கருணாநிதி குடும்பத்தினரின், ஏவல் துறையாக மாறி இருக்கிறது. பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத, ஓர் அசாதாரண சூழ்நிலை, தமிழ் நாட்டில், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நிலவுகிறது. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை, ஆயுதக் காடாக மாற்றிவிட்டார் கருணாநிதி. தமிழ் நாட்டை ஒரு வன்முறைக் கும்பல், வேட்டைக் காடாக்கி, கொடுங்கோல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழகத்தை, அழிவுப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார், மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி.
மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர், கருணாநிதியின் மக்கள் விரோதக் கொள்கைகளாலும், செயல்பாடுகளாலும், நடவடிக்கைகளாலும், நிர்வாகத் திறமை இன்மையாலும், சுயநலப் போக்கினாலும், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள், நோயாளிகள், முதியவர்கள், தாய்மார்கள், மாணவ-மாணவியர், குழந்தைகள் என, அனைத்துத் தரப்பு மக்களும், சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். தனது குடும்ப வருமானத்தைப் பெருக்குவதிலும், தீவிரவாதிகளை ஊக்குவிப்பதிலும், குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான பதவிகளை, கட்சியிலும், அரசாங்கத்திலும், பெற்றுத் தருவதிலும், தன்னுடைய மற்றும் தன் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட விழாக்களிலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு, உல்லாசமாக பொழுது போக்குவதிலும்தான், கருணாநிதியின் கவனம், நாளும் பொழுதும், சென்று கொண்டிருக்கின்றதே தவிர, தமிழ் நாட்டின் மீதோ, தமிழக மக்களாகிய உங்களின் மீதோ, துளி கூட கருணாநிதிக்கு அக்கறை கிடையாது.
2006-ஆம் ஆண்டு நடைபெற்ற, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திருமங்கலம் தொகுதி வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியான, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், போட்டியிட்ட வேட்பாளரை, வெற்றி பெற வைத்தீர்கள் என்பதற்காக, உங்களை எல்லாம், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன், மைனாரிட்டி தி.மு.க. அரசு நடத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல், தாழ்தளப் பேருந்து, மிதவைப் பேருந்து என்ற போர்வையில், பேருந்துக் கட்டணத்தை இரு மடங்காகவும், சொத்து வரியைப் பல மடங்காகவும் உயர்த்தி, உங்கள் மீது, கூடுதல் சுமையைத் திணித்து இருக்கிறது.
தி.மு.க. ஆட்சியாளர்களின் ஆணவத்திற்கும், மமதைக்கும், வன்முறைக்கும், அராஜகத்திற்கும், மக்கள் விரோதப் போக்கிற்கும், தக்க பதிலடி கொடுப்பதற்கு, இந்த இடைத் தேர்தல், உங்களுக்கு எல்லாம், ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு, வளமான எதிர்காலம் பிறக்கவும்; அனைத்துத் துறைகளிலும், தமிழகத்தை முதல் மாநிலமாக ஆக்கவும்; மு.க. அழகிரியின் அட்டகாசத்திற்கு, முற்றுப் புள்ளி வைக்கவும்; கருணாநிதியின் குடும்ப ஆட்சியை ஒழித்துக் கட்டவும்; திருமங்கலம் இடைத் தேர்தல் முடிவு, ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டும் என்று, வாக்காளப் பெருமக்களாகிய உங்களை எல்லாம், நான் அன்போடு, வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
எனவே, திருமங்கலம் தொகுதி வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், இந்த இடைத் தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர், முத்துராமலிங்கத்திற்கு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கண்டெடுத்த வெற்றிச் சின்னமாம், “இரட்டை இலை” சின்னத்தில் வாக்களித்து, தம்பி முத்துராமலிங்கத்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று, உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
காட்டாட்சியை தூக்கி எறிய, குடும்ப ஆட்சியை ஒழித்துக் கட்ட, அழகிரியின் அட்டகாசத்தை வேரறுக்க,வன்முறைக் கலாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க, தமிழ்நாடு மீண்டும் அமைதிப் பூங்காவாக மலர, வேளாண் வளம், தொழில் வளம் சிறக்க, வேலைவாய்ப்புகள் பெருக, ஒளிமயமான தமிழகத்தை உருவாக்க, வாக்களிப்பீர் வெற்றிச் சின்னமான இரட்டை இலைக்கே!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக