நாளை நமதே நாற்பதும் நமதே: ஜெயலலிதா சூளுரை

எம்.ஜி.ஆரின் பிற‌ந்த‌நாளையொட்டி தொண்ட‌ர்க‌ளுக்கு ஜெய‌ல‌லிதா இன்று (ஜனவரி 16) எழுதிய‌ க‌டித‌ம்:

நாளை நமதே. நாற்பதும் நமதே என்னும் குறிக்கோளை அடைவோம்!எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனதருமைக் உடன்பிறப்புகளே!

அ.தி.மு.க. நிறுவனர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 92ஆவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும் இத்தருணத்தில், அவரது பண்புகளை, மனித நேயத்தை, வள்ளல் தன்மையை எனதருமைக் உடன்பிறப்புகளாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பேருவகை அடைகிறேன்.

எம்.ஜி.ஆரை பார்த்தாலே, பார்த்தவுடனே ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு வரும். அத்தகைய ஈர்ப்பு வருவதற்குக் காரணம் அவரது ஈடற்ற அன்பும், ஈகை குணமும், கருணை கொண்ட மனிதாபிமானமும், இன்னும் எத்தனையோ நல்ல குணங்களும்தான். புரட்சித் தலைவரின் பெயரை உச்சரித்தாலே நமக்குள் ஏதோ ஒரு உத்வேகம் பிறக்கும். அத்தகைய மகா சக்தியாக, மந்திர சக்தியாக, ஆளுமைத் திறமை கொண்ட அன்பு மிகுந்த மாமனிதராக அவர் திகழ்ந்தார்.

வானத்தைப் பார்க்கின்ற போது நம்முடைய உயரம் இவ்வளவுதான் என்று வானம் பறைசாற்றுவதைப் போல, மேகம் எவ்வித பாகுபாடும் பாராமல் மழை பொழிந்து ஏற்றத் தாழ்வை அகற்றுகின்ற உணர்வைப் போல, கண்ணுக்குத் தெரியாது, ஆனால் சுவாசத்தைத் தந்து கொண்டிருக்கும் காற்றைப் போல, புரட்சித் தலைவரும் திகழ்ந்தார். இவ்வாறு புரட்சித் தலைவர் திகழ்ந்ததற்குக் காரணம் அவரது வாரிக் கொடுக்கும் வள்ளல் தன்மை, பிறர் துன்பம் கண்டு சகிக்காத மனிதாபிமானம், பிறரைப் பார்த்தவுடன் பாசம் செலுத்தும் அன்பு, உழைப்பு போன்ற அரிய குணங்களே ஆகும்.

பேரறிஞர் அண்ணா புரட்சித் தலைவரைப் பற்றி சொல்லுவார்:- "தன்னை தேடி வருகிறவரின் கண்ணீரைத் துடைக்கிறவன் வள்ளல். தன்னைத் தேடி வருகிறவரின் துன்பத்தைப் போக்குகிறவன் வள்ளல். ஆனால், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அப்படியல்ல. சமுதாயத்தில் துன்பப்படுகிறவன் எங்கே இருக்கிறான் என்று தேடிப் போய் அவன் கண்ணீரைத் துடைத்து கை கொடுக்கிற எம்.ஜி.ஆர். வள்ளலுக்கெல்லாம் வள்ளல்" என்பார். அத்தகைய பெருமைக்குரிய தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நமக்குச் சொந்தமானவர். நம் இயக்கத்தைத் தோற்றுவித்தவர். நமக்கெல்லாம் ஆசானாய், வழிகாட்டியாய் விளங்குகிறார் என்று எண்ணுகின்ற போது நமக்கெல்லாம் பெருமிதம் ஏற்படுகிறது.

"உழைப்பவரே உயர்ந்தவர்" என்று புரட்சித் தலைவர் அடிக்கடி சொல்லுவார். உழைப்பு என்பது உயர்ந்தது. அத்தகைய உழைப்பின் மூலமே, உன்னதமான லட்சியத்தை அடையலாம் என்பதற்கு புரட்சித் தலைவரே எடுத்துக்காட்டாவார். கடும் உழைப்பிற்குச் சொந்தக்காரர் புரட்சித் தலைவர். ஏழையாக இருந்து, ஏழு வயதில் நாடகக் கம்பெனியில் சேர்ந்து, பசியோடும், பட்டினியோடும் வாழ்க்கையைக் கடந்து, திரைத் துறையில் சிறு சிறு வேடங்களில் நடித்து, புகழின் உச்சத்தைத் தொடும் கதாநாயகனாய் வலம் வந்து, அரசியல் வானில் யாரும் தொட முடியாத அளவிற்கு துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்ததற்கு எது காரணம்? புரட்சித் தலைவரின் உழைப்பு தான். ஒரு மனிதனின் வெற்றிக்குக் காரணமாக அமைவது அவரது உழைப்பு. அதனோடு ஒட்டிய திறமை, அதனோடு இணைந்த அணுகுமுறை, அதனோடு இணைந்த சாமர்த்தியம் என்று பல கிளைகள் பிரியலாம். ஆனால் மூலதனம் என்பது உழைப்பு மட்டும்தான். அந்த உழைப்புதான் ஒருவரை உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது திண்ணம். அதனால்தான் வள்ளுவப் பெருந்தகை கூட சொல்லுவார்,

"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்"
என்று. கடவுள் நமக்குச் செய்ய முடியாத காரியத்தையும், நாம் உடலை வருத்தி முயற்சி செய்யும் போது செய்துவிட முடியும். எனவே உழைப்புதான் உயர்ந்தது.

அண்ணா தன் எழுத்தாலும், பேச்சாலும் தமிழ் நாட்டின் அரசியல் தட்ப வெட்ப நிலையை மாற்றிக் காட்டியவர். அத்தகைய பெருமை மிக்க பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக அரசியல் வானில் வளர்ந்து, ஒளி வீசி, கொண்ட கொள்கைக்கும், தலைமைக்கும் உண்மை ஊழியனாக பணியாற்றி, தான் நடித்த படங்களில் எல்லாம் அண்ணாவின் படத்தையும், அவர் சொன்ன கருத்துகள் அடங்கிய பாடத்தையும் துணிந்து சொன்னவர்தான் நம் புரட்சித் தலைவர். அவரின் அத்தகைய தூய உள்ளத்திற்குக் கிடைத்த மகத்தான பரிசுதான், அரசியலில் அவர் அடைந்த உயர்ந்த இடம். புரட்சித் தலைவருக்குக் கிடைத்த வெற்றி என்பது இயற்கையானது, இமயம் போன்றது. அப்படிப்பட்ட வெற்றியை எட்டிப்பிடிக்க முயன்றவர்கள் சறுக்கி விழுந்துவிட்டனர். இத்தகைய இயற்கைத் தன்மையின் மீது மோதிக் காணாமல் போனவர்கள் எத்தனையோ பேர். புரட்சித் தலைவரின் வெற்றிக்கு எது காரணம் என்று கருணாநிதி ஆராய்ந்தார். அத்தகைய அவரின் ஆராய்ச்சி பச்சைக் கிளிக்கு வர்ணம் பூசும் செயல் போலத்தான் அமைந்தது.

ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் நயவஞ்சக அரசியலுக்குச் சொந்தக்காரர் கருணாநிதி. புரட்சித் தலைவர் இல்லையென்றால் கருணாநிதி அரசியல் வானில் வளர்ந்திருக்க முடியாது. கருணாநிதியை முன்னிலைப்படுத்தி முதலமைச்சராக்கிய புரட்சித் தலைவரை முதுகில் குத்திய, மக்கள் விரோத தீய சக்தியான கருணாநிதியை வீழ்த்த, கழகம் கண்டு, மக்கள் சக்தியைப் பெற்று, மூன்று முறை தொடர்ந்து முதலமைச்சராக முடிசூடி, தமிழகத்திற்கு பொற்கால ஆட்சியைத் தந்தவர்தான் புரட்சித் தலைவர்.

புரட்சித் தலைவர் மறைவிற்குப் பிறகு, இரண்டாகப் பிளவுபட்ட அவர் கண்ட இயக்கத்தை ஒன்றிணைத்து, முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு, வெற்றிச் சரித்திரத்தைப் படைக்க நான் பட்ட துயரங்கள், சுமந்த காயங்கள், தாங்கிக் கொண்ட வேதனைகள் எத்தனை எத்தனை என்பதை எல்லாம் எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்.

புரட்சித் தலைவரின் ஆட்சியை மீண்டும் அமைக்க நான் பட்ட துன்பங்கள், துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. புரட்சித் தலைவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்தேன். இரண்டு முறை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கழகத்தின் வெற்றிப் பதாகை பட்டொளி வீசிப் பறக்க எனது உழைப்பை காணிக்கையாக்கினேன். தமிழ் நாட்டின் தற்போதைய பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மைனாரிட்டி தி.மு.க. அரசின் மக்கள் விரோதச் செயல்களைச் சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் ஆகியவற்றை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல், மக்களுக்குச் சேவை செய்வதிலும் முனைப்பு காட்டி வருகிறது. ஆளுங் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்கள் பணி என்பதே கழகத்தின் குறிக்கோள்.

எனக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கையே இல்லாமல், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், கழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும், கழக உடன்பிறப்புகளாகிய உங்களின் உயர்வுக்காகவும் தான் ஒவ்வொரு நொடியும் உழைத்து வருகிறேன். நாளும், பொழுதும் நஞ்சைக் கக்குகின்ற நய வஞ்சக அரசியல்வாதி கருணாநிதியின் பித்தலாட்டத்தை மக்கள் மன்றத்தின் முன் எடுத்து வைத்து, தமிழ் நாட்டு மக்களைப் பாதுகாக்கும் பணியில் என் வாழ்வை அர்ப்பணித்து வருகிறேன்.

எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் தொய்வின்றி மக்கள் பணியாற்றி, துணிச்சலாக செயலாற்ற வேண்டும். துணிந்து செயல்படுகிறவர்களுக்குத்தான் வெற்றி கிட்டும். நாளைய வெற்றி நமக்காகக் காத்திருக்கிறது.

வானத்தையே வசப்படுத்தும் வலிமை மிக்க மக்கள் தலைவராம் புரட்சித் தலைவர் அவர்களின் பிறந்த நாளில், பேரறிஞர் அண்ணா அவர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற நெறிமுறையை பின்பற்றி, ‘உழைப்பே உயர்வுக்கு துணை’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில், விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், கருணாநிதியின் அராஜகங்களை, வன்முறை வெறியாட்டங்களை, நிர்வாகத் திறமையின்மையை மக்கள் முன் எடுத்து வைத்து, துணிச்சலுடன் தேர்தல் பணியாற்றி, வெற்றிக் கனியை பறிப்போம்! கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்! மக்களாட்சியாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை விரைவில் மலரச் செய்வோம்! என சூளுரைப்போம்.

மறைந்த பின்னரும் மறக்க முடியாத மாமனிதராய் தமிழக மக்கள் நினைவில் என்றென்றும் நிற்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளில், மக்களுக்குச் சேவை செய்வோம்! நாளை நமதே, நாற்பதும் நமதே என்னும் குறிக்கோளை அடைவோம்! என உளமாற உறுதி ஏற்போம்!
உங்கள் அன்புச் சகோதரி,
ஜெயலலிதா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக