திருமங்கலம் வெற்றி: கருணாநிதி பேட்டி

திரும‌ங்க‌ல‌ம் இடைத் தேர்த‌லில் தி.மு.க‌. வெற்றி பெற்ற‌தை தொட‌ர்ந்து முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி இன்று (ஜனவரி 12) நிருப‌ர்க‌ளுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி:- திருமங்கலம் வெற்றியைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த இடத்தில் இப்போது தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றிருப்பது; இந்த ஆட்சியின் சாதனைகளுக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் என்று நான் கருதுகிறேன். வெற்றிக் கனி வழங்கிய திருமங்கலம் தொகுதி வாக்காளப் பெருமக்க ளுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த கழகத்தினருக்கும், கழக தோழமைக் கட்சிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி:- இந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளும், பா.ம.க. வும் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில் பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது பற்றி?

பதில்:- அது உங்களுக்கே தெரியும். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவிக்காதது மட்டுமல்ல, மிகவும் கடுமையாக எங்களைத் தாக்கிப் பேசினார்கள்.

கேள்வி:- அவர்கள் உங்களை ஆதரிக்காததால், அதனை பெரிய இழப்பு இல்லை என்று கருதுகிறீர்களா?

பதில்:- நான் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

கேள்வி:- இந்த வெற்றி வரவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டமாக இருக்குமா?

பதில்:- நாங்கள் வெற்றி பெறாவிட்டால், “முன்னோட்டம்” என்று வெற்றி பெற்ற கட்சிக்காரர்கள் சொல்லியிருப்பார்கள். பத்திரிகையாளர்கள் சிலரும் சொல்லியிருப்பீர்கள்.

கேள்வி:- இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து டாக்டர் ராமதாஸ், வீரமணி, திருமாவளவன் ஆகியோர் உங்களை இன்று சந்தித்தார்களே?

பதில் :- இலங்கையில் நடைபெறுகின்ற இனப் படுகொலை, ராணுவத் தாக்குதல், தமிழ் இன இழிவு இவைகள் என்னுடைய உள்ளத்தையும் தமிழ் உணர்வுள்ள அனைவருடைய உள்ளங்களையும் உலுக்கிக் கொண்டிருக்கின்றது. அது பற்றித்தான் டாக்டர் ராமதாஸும் வீரமணியும் திருமாவளவனும் இன்று பேசுகிற நிலைமை ஏற்பட்டது. அவர்கள் என்னை இன்று காலையில் சந்தித்து இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வழி வகை காண வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். நான் மீண்டும் அது பற்றிய முயற்சிகளை மேற்கொண்டு சோனியா காந்தியுடனும் பிரதமர் மன்மோகன் சிங்குடனும் தொடர்பு கொண்டு பேசுவதாக உறுதியளித்திருக்கிறேன். அப்படி பேசுகின்ற வாய்ப்பு ஏற்படும்போது இலங்கையில் ஏற்படுகின்ற போர் நிறுத்தத்தால் இலங்கை தமிழர்களுக்கு நன்மை என்பதோடு இந்தியாவிற்கும் பெருமை என்பதை எடுத்துச் சொல்வேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக