சேதுச‌மூத்திர‌ திட்ட‌த்தை நிறைவேற்ற‌ வேண்டும்: க‌ருணாநிதி பேச்சு

சென்னை போர் நினைவு சின்னத்தில் இருந்து மதுரவாயல் வரை ரூ.1655 கோடி செலவில் அமைக்கப்பட இருக்கும் விரைவு சாலைக்கு பிரதமர் மன்மோகன் சிங் இன்று (ஜனவரி 8) அடிக்கல் நாட்டினார். விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் இன்றைக்கு சென்னை துறைமுகத்தையும் - மதுரவாயல் சந்திப்பையும் இணைக்கின்ற உயர்மட்ட மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி, எழுச்சியோடும் சிறப்போடும் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2006ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடிக்குப் பெரிதும் உள்ளாகியுள்ள பகுதிகளில் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்துவதென தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. பொதுவாக தேர்தல் நேரத்து வாக்குறுதிகளெல்லாம் பறந்து போய்விடும். இது பறக்கும் சாலையாக இருந்தும் கூட, பறந்து போகாமல் இன்றையதினம் நீங்கள் எல்லாம் பரவசமடைகிற அளவுக்கு இன்றைக்கு உருவாக்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

தேர்தல் வாக்குறுதியை நினைவூட்டி, நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங்க்கு 13-5-2006இல் தி.மு.க. அரசு அமைந்த பிறகு, ஒரு மாதக் காலத்திற்குள்ளாக, அதாவது 5-6-2006 அன்று ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில் இங்கே சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை அகற்றுவதற்காக சென்னை துறை முகத்திற்கு உயர் மட்டப் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதிக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

தமிழக அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிற இது போன்ற விண்ணப்பங்களை - ஒன்றிரண்டு தவிர - மற்றவற்றையெல்லாம் ஏற்று ஒப்புதல் அளித்து, நிறைவேற்றி வைக்கின்ற மத்திய அரசின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் இந்தக் கோரிக்கையை ஏற்றதின் விளைவாக இன்றைய தினம் இந்தியாவிலேயே மிக நீளமான உயர் மட்ட மேம்பாலச் சாலை 1600 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் சென்னை மாநகரின் நெரிசலை குறைப்பதற்காக மாத்திரமல்லாமல், சென்னை துறைமுகத்தையும், மதுரவாயல் சந்திப்பையும் இணைக்கப் பயன்படுகின்ற பாலமாகவும் இது அமையும் என்பதை மறந்து விடக் கூடாது.

மத்திய மாநில அரசுகளுக்கிடையே இணைப்புப் பாலம் இருக்கின்ற காரணத்தால்தான், இங்கே ஒரு பறக்கும் பாலத்தை நம்மால் உருவாக்க முடிகின்றது.ஜி.கே. வாசன் பேசும்போது குறிப்பிட்டதைப் போல, பல திட்டங்கள் - தமிழகத்திற்கு பல்லாயிரக்கணக்கான கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பிற்கான திட்டங்கள் - மத்திய அரசால் வழங்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்திலே இவைகளையெல்லாம் விட மிகப் பெரிய பாலம் - தென்னகத்தை வளப்படுத்தக் கூடிய பாலம் - வாணிபத்தை விரிவாக்கச் செய்யக் கூடிய பாலம் - எதிர்காலத் தமிழர்களுடைய வாழ்வுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கக் கூடிய பாலம் - பேரறிஞர் அண்ணா அவர்களால் “எழுச்சி நாள்” கொண்டாடப்பட்டு, அதற்கு முன்பே பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டு - தமிழகத்திலே உள்ள ஆன்றோர், சான்றோர், புலவர் பெருமக்கள், விஞ்ஞானிகள் என்று அத்தனை பேரும் ஆதரவு தந்து கட்டப்பட வேண்டுமென்று எண்ணிய பாலம் தான், சேது சமுத்திரப் பாலம். சேது சமுத்திரத் திட்டப் பாலம். அந்தப் பாலத்தைக் கட்டி முடிக்க வேண்டு மென்கின்ற எண்ணத்தோடு தான் கடந்த காலத்திலே - நம்முடைய மத்திய அரசிலே பெரு வெற்றி பெற்று, ஆட்சி அமைத்த நேரத்தில் - அவர்களுக்கு உதவிகரமாக இருந்த தி.மு.க.சார்பில் நானும், அங்கே சென்று என்னாலான உதவிகளை செய்த போது, நான் நம்முடைய பிரதமர் மன் மோகன் சிங்கிடமும் சோனியா காந்தியிடமும் வைத்த கோரிக்கை - சேது சமுத்திரத் திட்டம் - அதுவும் ஒரு பாலம் திட்டம் தான். அந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் ஒரு வேளை இலங்கையிலே உள்ள அரசுக்கு அது சங்கடமாக இருக்கலாம், ஆனால் நமது எதிர்கால வாழ்வுக்கு ஒரு இன்பப் புதையலாக அந்தத் திட்டம் நிறைவேறக் கூடிய திட்டம். அந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று இலங்கை அரசுக்கு சாதகமாக இருக்கின்ற சில கட்சிகள் கூட தமிழ்நாட்டிலே கொடி தூக்கி சேது சமுத்திரத் திட்டம் வேண்டாம் என்று முழங்குவதை காணுகின்றோம்.

கொடி தூக்கி வேண்டாமென்று சொல்வது மாத்திரமல்ல, உச்ச நீதி மன்றத்திற்கே சென்று சேது சமுத்திரத் திட்டத்தை கை விட வேண்டுமென்று வாதாடுகின்ற நல்லவர்கள் எல்லாம் கூட இன்றைக்கு தமிழ்நாட்டிலே கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாவால்ல், பெருந்தலைவர் காமராஜரால் மற்ற பெரும் தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட –- நிறைவேற்றப்பட வேண்டுமென்று அழுத்தந்திருத்தமாகக் கூறப்பட்ட - ஒரு திட்டத்திற்கு இன்றைக்கு இவ்வளவு எதிர்ப்பு ஒரு சில கட்சிகளால் - இலங்கையிலே உள்ள அரசுக்கு ஆதரவாகச் செய்யப்படுகிறது, என்றாலுங் கூட நாம் இங்குள்ள தமிழர்களைக் காப்பாற்ற - இங்குள்ள வளத்தை மேலும் பெருக்க - நம்முடைய போக்குவரத்து –- நம்முடைய உலகத் தொடர்பு - இவைகளுக்கெல்லாம் உயர்வளிக்க - இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும். அந்தத் திட்டத்தை இன்றைக்கு எடுத்துப் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற தம்பி பாலு அவர்கள், இதிலே எவ்வளவு திடமான, உறுதியான, உத்வேகத்தோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தத் திட்டம் ஒரு அறைகூவல். அந்த அறைகூவலிலே தமிழ்நாட்டு மக்கள் வெற்றி பெறுவதற்கு பிரதமர் மன்மோகன் சிங் மனம் கனிந்து அந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு உறுதியோடு நின்று ஒத்துழைத்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் இன்று நிறைவேற்றப்படுகின்ற திட்டம் அதற்கு அச்சாரமாக இருக்கும். இன்றைக்கு அவர்கள் அடிக்கல் நாட்டியது அந்தத் திட்டத்திற்கும் சேர்த்துத்தான்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக