ஜெயலலிதா இன்று (டிசம்பர் 30) வெளியிட்ட அறிக்கை:
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தி.மு.க-வினரின் அராஜகம் தலைவிரித்தாடுவது குறித்து நான் கண்டன அறிக்கைகள் வெளியிட்டும் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணநிதி வாய்மூடி மவுனியாக இருக்கிறார். இதிலிருந்து அங்கு தி.மு.க-வினரால் நடத்தப்படும் அராஜகங்கள் அனைத்தும் கருணாநிதியின் தூண்டுதலின் பேரிலியே நடைபெறுகின்றன என்பது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கும், கூட்டுறவு சங்கங்களுக்கும் வன்முறையாளர்களைக் கொண்டு எப்படி தேர்தலை நடத்தினாரோ, அதே முறையை பின்பற்றுவதில் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி ஈடுபட்டிருக்கிறார். மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியின் அடியாட்களான மிசா பாண்டியன், அட்டாக் பாண்டி, எஸ்ஸார் கோபி உள்ளிட்டோர் தலைமையில் ரவுடி கும்பல்கள் திருமங்கலம் தொகுதியில் தங்கியிருந்து, அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னணி நிர்வாகிகளையும், உடன்பிறப்புகளையும், தோழமைக் கட்சிகளின் முன்னணித் தலைவர்களையும், தொண்டர்களையும் தாக்கிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
வன்முறை கும்பலுக்கு உதவும் வகையில் மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எம். மனோகர், காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரசேகர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஷாஜகான் ஆகியோர், தேர்தல் பொறுப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், மற்றும் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் எம். ஜெயராமன், தேனி மாவட்ட செயலாளர் தங்க. தமிழ்செல்வன், ஆர். சாமி, எம்.எல்.ஏ., உட்பட 52 பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும்; ஆர். சாமி, எம்.எல்.ஏ., மற்றும் அவருடன் இருந்த கழக உடன்பிறப்புகள் மீது பொய் வழக்கு போட்டதோடு மட்டும் அல்லாமல், அவர்களை, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எம். மனோகர் என்பவர் கடுமையாகத் தாக்கியதாகவும், இதன் காரணமாக அவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.
மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மனோகரன் என்பவர் மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளரைப் போலவும், துணைக் கண்காணிப்பாளர் ஷாஜகான் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரைப் போலவும் செயல்படுகின்றனர். நேற்று தி.மு.க. ரவுடிகளால் அரங்கேற்றப்பட்ட வன்முறைச் சம்பவத்தில், காவல் துறையினர் தாக்கப்பட்டு உயிருக்கு பயந்து ஓடும் சமயத்தில், அவர்களைக் அ.தி.மு.க. தொண்டர்கள் காப்பாற்றி உள்ளனர். காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தற்போது நிலவுகிறது. ஆனால் காப்பாற்றிய கழகத்தினர் மீதே காவல் துறையினர் பொய் வழக்குகளைப் போடுவது கடும் கண்டனத்திற்கு உரியது.
காவல் துறையின் நடவடிக்கைகளை பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். தங்களது கடமையைச் செய்யாமல் தி.மு.க-வினரின் அராஜக, மக்கள் விரோதச் செயல்களுக்குத் துணையாக இருந்து வரும் காவல் துறை அதிகாரிகள் அதற்கான தண்டனையை அனுபவிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை அவர்களுக்கு எச்சரிக்கையாத் தெரிவிக்க விரும்புகிறேன்.
காவல் துறையின் கட்டுப்பாட்டில் திருமங்கலம் தொகுதி தற்போது இல்லை. வன்முறையாளர்களின் கட்டுப்பாட்டில்தான் திருமங்கலம் தொகுதி இருக்கிறது. வன்முறையாளர்களுக்குக் கட்டுப்பட்டு, அவர்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றும் தலையாட்டி பொம்மைகளாக காவல் துறையினர் செயல்படுகின்றனர். பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு அசாதாரண சூழ்நிலை தற்போது திருமங்கலம் தொகுதியில் நிலவுகிறது. இந்த அளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், காவல் துறை தலைமை இயக்குனரோ வாய் திறக்காமல் மவுனம் சாதித்து வருகிறார். இதே நிலைமை நீடித்தால் வன்முறையாளர்களுக்குத் துணை போகும் காவல் துறை, வன்முறைத் துறையாகவே மாறிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை விட மிக மோசமான சூழ்நிலை தற்போது திருமங்கலம் தொகுதியில் நிலவுகிறது. கருணாநிதி வன்முறையை மையமாக வைத்து கட்சியையும், ஆட்சியையும் நடத்திக் கொண்டிருக்கிறார். ‘திருமங்கலம் தேர்தலும் - திடீர் அறிவிப்பும்’ என்ற தலைப்பில் கருணாநிதி ஒப்பாரி வைக்கும்போதே, தோல்வி பயத்தில் இந்தத் தேர்தலை நடத்துவதில் கருணாநிதிக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிவிட்டது. தற்போது வன்முறை ஒன்றே வழி என்று அதில் இறங்கிவிட்டார். ஜனநாயக ரீதியில் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டிய கடமை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.
வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் தேர்தல் ஆணையத்திற்கு பிரேத்யேக அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மதுரை மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் எம். மனோகர், காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் மற்றும் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஷாஜகான் ஆகியோரை அவரவர் வகித்து வரும் பதவிகளில் இருந்து நீக்க இந்தியத் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருமங்கலம் தொகுதியை துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் நேரடிக் கட்டுப்பாட்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
Download Eating the Alphabet
-
Buy Eating the Alphabet.
[image: Eating the Alphabet]
Eating the Alphabetby Lois Ehlert
Category: Book
Binding: Board book
Author:
Number of Pages:
Downl...
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக