ராமதாஸ் எங்கே போகிறார்?: ஆற்காடு வீராசாமி அறிக்கை
பொதுவாக அரசியல் தலைவர்களுக்கு ஒரு “ஸ்டடி மைன்ட்’’ வேண்டும். ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால் என்பதைப் போல அங்கே போனால் அதிக இடம் கிடைக்குமா, இங்கேயே நீடித்தால் அதிக இடம் கிடைக்குமா? என்று நினைத்துக் கொண்டு செயல்படக் கூடாது. அது மாத்திரமல்ல, அன்றாடம் தன் பேரில் ஏதாவது ஒரு அறிக்கை வந்தால்தான் தன்னை தமிழ்நாட்டு மக்கள் மறக்காமல் இருப்பார்கள் என்று மனதிலே எண்ணுவதையெல்லாம் பேசுவதும் கூடாது. எதற்காக இதையெல்லாம் சொல்லுகிறேன் என்றால் ராமதாஸ் முதல் நாள் கலைஞர்தான் எல்லாம், அவர்தான் வழி நடத்த வேண்டும் என்கிறார். அடுத்த நாள் இந்த ஆட்சிக்கு தைரியமில்லை, ஆட்சிக் கலைப்புக்கு அஞ்சுகிறார்கள் என்கிறார்.
நேற்றையதினம் கூட்டாக அளித்த பேட்டியின் போது டாக்டர் ராமதாஸ் தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு இல்லை என்று சொல்லியிருக்கிறார். இவருக்கு அந்த எண்ணம் இருப்பதாக நாங்கள் யாரும் கூறவில்லையே! கலைஞர் அப்படிப்பட்ட எந்த கருத்தையும் இவர்கள் மீது சொல்லவில்லையே? மேலும் டாக்டர் தாங்கள் யாரும் சதிகாரர்கள் அல்ல என்று பேட்டியிலே சொல்லியிருக்கிறார்கள். அவரைப் பற்றிச் சொல்லாததையெல்லாம் யாரோ சொல்லிவிட்டதாக அவரே கூறிக் கொண்டு எதற்காக பதில் சொல்லிக் கொள்கிறார்.
சிறு சிறு சம்பவங்களுக்கெல்லாம் - சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது, ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று யார் யார் சொல்கிறார்களோ அவர்களைப் பற்றித்தான் “ஆட்சிக் கலைக்க முயற்சிக்கிறார்கள்’’ என்று சொல்கிறோம். உடனே “எங்கப்பன் குதிருக்குள் இல்லை’’ என்பதைப் போல டாக்டர் பதில் சொல்ல முற்படுவானேன். மேலும் டாக்டர் தனது பேட்டியில் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போதுதான் இலங்கைத் தமிழர்களுக்காகப் போராட்டம் நடத்தியதாகவும், ஆளுங்கட்சியாக இருந்த போது எந்தப் போராட்டமும் நடத்தவில்லை என்று சொல்லியிருக்கிறார். இதே கருத்தை அவர் சில நாட்களுக்கு முன்பு பேசி, தி.மு.க. ஆளுங் கட்சியாக இருந்த போது என்னென்ன போராட்டங்களை எந்தெந்த தேதிகளில் நடத்தியது என்ற பட்டியலையே முதல்வர் கலைஞர் பட்டியலாகக் கொடுத்திருந்தாரே, அதை டாக்டர் ராமதாஸ் படிக்கவில்லையா?
தி.மு.க. ஆட்சியிலே இருந்த போதுதானே, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக என்று காரணம் கூறி கலைக்கப்பட்டது. அதைக் கூட இல்லை என்று மறுக்கிறாரா? முதல்வர் உண்ணாவிரத அறிவிப்பையே நாடகம் என்று டாக்டர் ராமதாஸ் கூறுகிறார்கள் என்றால், இதுவரை எதற்கெடுத்தாலும் நாடகம் என்று ஜெயலலிதாவும், வைகோவும்தான் கூறிக் கொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் டாக்டர் ராமதாசும் சேர முயற்சிக்கிறாரா? பழி போடுவதும், பழி வாங்குவதும் கலைஞர் பாணி என்று சொல்லியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் உங்களை கைது செய்து சிறையிலே அடைத்தார்களே, அதைப் போல கலைஞர் ஏதாவது செய்து விட்டாரா? உங்களைக் கைது செய்த போது - அதைப்பற்றி அறிக்கை விட்ட ஜெயலலிதா ஏ.சி. அறையிலே இருந்தவர்களுக்கு சிறையிலே இருக்க முடியாமல் மனைவியை தூதாக அனுப்பி வைத்தார்கள் என்று குற்றஞ்சாட்டினாரே, அப்படி ஏதாவது கலைஞர் தற்போது உங்கள் மீது பழி போட்டு விட்டாரா? நேர் காணலுக்காக நீங்கள் ஜெயலலிதாவின் அலுவலகத்திற்குச் சென்ற போது மணிக்கணக்கிலே காத்திட வைத்தார் என்று நீங்களே ஏடுகளில் சொன்னீர்களே, அது போல் ஒரு முறை உங்களிடம் கலைஞர் நடந்து கொண்டது உண்டா?
“பிடிக்காத மனைவி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்’’ என்பதைப் போல எதற்கெடுத்தாலும் கலைஞர், கலைஞர் என்று காய்ந்து விழுகிறீர்களே என்ன காரணம்? மருத்துவ மனையிலே முதுகுத் தண்டிலே அறுவை சிகிச்சை செய்த நிலையிலே கூட 24 மணி நேரமும் மக்கள் பிரச்சினைக்காகவே உழைத்துக் கொண்டிருப்பவரைப் பார்த்து நாக் கூசாமல் நாடகம் என்று சொல்கிறீர்களே, உங்களுக்கே அது சரியாகப்படுகிறதா? கலைஞர்தான் அடிக்கடி சொல்வார், அரசியலிலே நாளை என்றோ ஒரு நாள் நேரில் சந்திக்க நேரிடும், அப்போது ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசிட நேரிடும், அதற்கு ஒரு இழுக்கு வராத அளவிற்கு மனிதாபிமானத்தோடு, பேசிட முன் வர வேண்டும். நாளைக்கே கூட்டணி வரலாம், வராமல் போகலாம், அப்போது உங்களைச் சந்திக்கும் போது, கலைஞர் உண்ணா விரதம் இருப்பதாக அறிவித்திருப்பதை நாடகம் என்று சொன்ன சொல் போகுமா? ஒவ்வொரு தொண்டன் உள்ளத்திலும் அந்த வார்த்தை புண்படுத்தாதா? உறவு இருக்கட்டும், இல்லாமல் போகட்டும், ஆனால் வார்த்தைகளைக் கொட்டிவிட்டால் அள்ள முடியாது. ஆனால் நீங்கள் அதை அடிக்கடி மறந்து விடுகிறீர்கள். கலைஞரைப் பொறுத்த வரை அவர் பழி வாங்கவும் மாட்டார், பழி போடவும் மாட்டார். அதற்கு தமிழ்நாட்டில் வேறொருவர் இருக்கிறார். அவர் கடைக்கண் பார்க்க மாட்டாரா என்று நீங்கள் தவிப்பது எங்களுக்கு நன்றாக தெரியவே தெரிகிறது.
கருணாநிதி உண்ணாவிரதம்: ஜெயலலிதா கிண்டல்
தன்னுடைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே ஒரு சுய நோக்கத்தின் அடிப்படையில் “உண்ணா விரதம்” கபட நாடகத்தை மருத்துவமனையில் துவக்கப் போவதாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல், சட்டத்தை நிலை நாட்ட வேண்டிய ஒரு முதலமைச்சர் காவல் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டிருப்பது வெட்கக்கேடானது. இது போன்ற ஒரு கையாலாகாத முதலமைச்சரை இந்திய நாடு இதுவரை கண்டதில்லை.
மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், இலங்கையில் ராஜபக்சே நடத்துகின்ற தமிழினப் படுகொலையைக் கண்டித்து இங்குள்ள தமிழர்களை அணிவகுத்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அந்த ராஜபக்சே அரசுக்கு நவீன சாதனங்களையும், ஆயுதங்களையும் அனுப்பி மத்திய அரசு உதவி செய்த போது அதுகுறித்து வாய் திறக்காமல் மவுனம் சாதித்ததை கருணாநிதி மறந்துவிட்டார் போலும்! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, அந்தக் கூட்டத்தை பற்றி கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் எந்தவொரு காரியத்திற்காக அமைதியாக யார் கிளர்ச்சி நடத்தினாலும், அவர்களை வன்முறையாளர்களாக மாற்றி, சட்டம்-ஒழுங்கு கெடுவதற்கு வழி வகுத்து, தி.மு.க. ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று கனவு காண்பதாக தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் கருணாநிதி. வன்முறையின் மறு உருவம் கருணாநிதி என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். உள்ளாட்சித் தேர்தலில் ரத்தக் களறி ஏற்படுத்தியது, மதுரையில் ஒரு பத்திரிகை அலுவலகத்தை எரித்து அதன் விளைவாக மூன்று அப்பாவி உயிர்களைப் பறித்தது, வன்முறை மூலம் அனைத்து இடைத் தேர்தல்களையும் நடத்திக் காட்டியது, கூட்டுறவு சங்கத் தேர்தலில் வன்முறையை புகுத்தியது ஆகியவற்றிற்கு எல்லாம் யார் காரணம்? மேற்படி சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தது உண்டா? இதையெல்லாம் மறந்துவிட்டு கருணாநிதி இவ்வாறு பேசுவது முறையல்ல.
கடந்த 33 மாத கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் உட்பட பல வன்முறை நிகழ்ச்சிகளை கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள் தமிழகக் காவல் துறையினர் என்பதை இந்த நாடு நன்கு அறியும். இவ்வாறு பல நிகழ்ச்சிகளை பார்த்துதான் அவர்களே வன்முறையாளர்களாக மாறிவிட்டனர். காவல் துறையினரையே வன்முறையாளர்களாக மாற்றிய பெருமை, காவல் துறைக்கு பொறுப்பேற்றுள்ள மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியைத்தான் சாரும். இதுதான் அவருடைய 33 மாத கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் ஒப்பற்ற சாதனை!
“இந்த ஆட்சிக்கு எதிராக தூண்டிவிடப்படும் சதிச் செயலில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறை நண்பர்களும் அறியாமல் பலியாகி விடக் கூடாது” என்று தன்னுடைய அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி. கருணாநிதி முதலமைச்சர் மட்டுமல்ல; காவல் துறையை உள்ளடக்கிய உள் துறைக்கும் அவர்தான் அமைச்சர். இதிலிருந்து காவல் துறை தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதை கருணாநிதியே ஒப்புக்கொண்டுள்ளார். அப்படி என்றால், காவல் துறையினர் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறை தன்னுடையக் கட்டுப்பாட்டில் இல்லை என்றால், முதலமைச்சர் பதவியில் தொடர அவருக்கு எந்தவிதமான அருகதையும் இல்லை. இவ்வாறு வேண்டுகோள் விடுப்பதை விட பதவியை விட்டு விலகுவது மக்களுக்கு நன்மை பயக்கும். மேலும் அவர் குறிப்பிடுகையில், அடித்தட்டிலே உள்ள ஏழை எளிய மக்களுக்கு எல்லா வகையான சாதனைகளையும் செய்ய வேண்டும் என்பதுதான் தனது எண்ணம் என்று குறிப்பிட்டிருக்கிறார். கடுமையான மின் தட்டுப்பாடு, விஷம் போல் ஏறும் விலைவாசி, சட்டம்-ஒழுங்கு சீரழிவு, தொழில் வளர்ச்சியின்மை, விவசாயி உற்பத்தியின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, என கருணாநிதி ஆட்சியின் சாதனைகளை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். கருணாநிதிக்கு வேண்டுமானால் இவைகள் சாதனைகளாக தெரியலாம். ஆனால் தமிழக மக்களுக்கு வேதனைதான்.
“தூண்டிவிடுகின்ற கும்பலைப் பற்றி கவலைப்படாமல் ஒன்று படுங்கள், ஒத்துழையுங்கள்” என்று தன்னுடைய அறிக்கையின் மூலம் உபதேசம் செய்திருக்கிறார் கருணாநிதி. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வன்முறை வெறியாட்டம் நடத்துவதற்கான அறிவுரையை உள் துறைச் செயலாளர் மூலம் காவல் துறையினருக்கு தெரிவித்ததே முதலமைச்சர் கருணாநிதிதான் என்று எஸ். துரைசாமி என்ற ஒரு வழக்கறிஞர் சென்னை, எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறாரே? இது குறித்து மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி எதையும் தெரிவிக்கவில்லையே? “மவுனம் சம்மதம்” என்று எடுத்துக் கொள்ளலாமா? இல்லை என்றால், இது போன்ற தாக்குதலுக்கு யார் மூல காரணம்? காவல் துறையினரால் நடத்தப்பட்ட தாக்குதலின் காரணமாக பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இந்த அரசு இழப்பீடு வழங்குமா? சென்னை உயர் நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் காவல் துறையினரால் சூறையாடப்பட்டதற்கு இந்த அரசு இழப்பீடு வழங்குமா? தவறு செய்த காவல் துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதற்கெல்லாம் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியிடமிருந்து மக்கள் தக்க பதிலை எதிர்பார்க்கிறார்கள்.
காவல் துறையினரும், வழக்கறிஞர்களும் ஒன்றுபட முடியாவிட்டால், ஒன்றுபடுகிறோம் என்று இணக்கம் தெரிவிக்கின்ற வரையில், மருத்துவமனையிலேயே உண்ணாநோன்பு இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் கருணாநிதி. தனது கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தும் தன்னுடைய அறிக்கையின் மூலம், தான் முதலமைச்சர் பதவி வகிப்பதற்கு அடியோடு லாயக்கற்றவர் என்பதை கருணாநிதி நிரூபித்து இருக்கிறார்.
கருணாநிதியின் அறிக்கையிலிருந்து தவறு செய்த காவல் துறையினர் மீது நடவடிக்கை இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. ஆக, தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. காவல் துறை கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். காவல் துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதும் அவருக்குத் தெரியவில்லை. இதிலிருந்து கருணாநிதி தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெரிய வருகிறது. ஒரு செயலிழந்த முதலமைச்சராக கருணாநிதி இருக்கிறார். தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையை கலைத்து விடுவது தான் அவருக்கும் நல்லது, தமிழக மக்களுக்கும் நல்லது என்பதை மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரசுக்கு ஜெயலலிதா அழைப்பு
திருமணம் என்பதும் ஒரு கூட்டணிதான். அந்தக் கூட்டணி வெற்றிகரமாகத் திகழ வேண்டும் என்றால், அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இருவரும் அதற்காகப் பாடுபட வேண்டும், முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கு பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை மிகவும் தேவை. இப்போது திருமண சீசன். ஆகவே, இப்போது கூட்டணி சீசன் என்றும் கூறலாம். தேர்தல் நெருங்கி வருகிறது. ஆகவே, அரசியல் கட்சிகளுக்குள்ளே கூட்டணி ஏற்படுவது பற்றி எங்கே பார்த்தாலும் பேச்சாக இருக்கிறது. கூட்டணியைப் பற்றி பேசுகின்ற போது, இப்போது நான் திருமணக் கூட்டணியைப் பற்றிப் பேசவில்லை. அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியைப் பற்றிப் பேசுகிறேன். அரசியல் ரீதியான கூட்டணியைப் பற்றிப் பேசும் போது, தி.மு.க-வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சில உண்மைகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தி.மு.க-வுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இதுதான். சிலரை பல நாட்களுக்கு ஏமாற்றலாம். பலரை சில காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எப்பொழுதும் ஏமாற்ற முடியாது. இதை தி.மு.க-வினர் நன்கு உணர வேண்டும். கடந்த 33 மாத காலமாக, தி.மு.க. தமிழ் நாட்டில் மைனாரிட்டி ஆட்சியை அமைத்த பிறகு வரலாறு காணாத வன்முறை, ஊழல், சட்ட விரோத நடவடிக்கைகள், அக்கிரமங்கள், அராஜகங்கள், அநியாயங்கள், அட்டூழியங்கள் என்று ஒரு எல்லையே இல்லாத அளவிற்கு என்னென்ன தீய செயல்கள் இருக்க முடியுமோ, என்னென்ன முறைகேடான சட்ட விரோதமான காரியங்கள் இருக்க முடியுமோ அத்தனையும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தனை குற்றங்களைப் புரிந்தும், இத்தனை முறைகேடான செயல்களைப் புரிந்தும், இத்தனை சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டும் கூட எந்தத் தண்டனையும் பெறாமல் தி.மு.க-வினர் சுதந்திரமாக உலா வந்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கு என்ன காரணம்? காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள மத்திய அரசு தி.மு.க-விற்குக் கொடுத்து வரும் ஆதரவுதான் காரணம். தொடர்ந்து கடந்த 33 மாத காலமாக நடைபெற்ற அனைத்து சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களிலும், இடைத் தேர்தல்களிலும் தொடர்ந்து தி.மு.க. வெற்றி பெற்று வருகிறது. தி.மு.க. இந்த தேர்தல்களில், இடைத் தேர்தல்களில் அடைந்த வெற்றி உண்மையான வெற்றி அல்ல. பண பலம், படைபலம், ரவுடிகள் பலம், அராஜகம், வன்முறை, அதிகார துஷ்பிரயோகம் இவற்றின் காரணமாகத்தான் தி.மு.க. வெற்றி பெற முடிந்தது. இதையெல்லாம் தி.மு.க-வால் எப்படி சாதிக்க முடிந்தது? காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தி.மு.க-விற்கு தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவுதான் இதற்கெல்லாம் காரணம். அதனால் இப்போது தி.மு.க-விற்கு ஒரு அசட்டு தைரியம் வந்துவிட்டது. தி.மு.க-விற்கு இப்போது ஒரு நம்பிக்கை வந்துவிட்டது. இப்படியே தொடர்ந்து எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்றுவிடலாம்; இப்படியே ரவுடிகளை வைத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டு, பண பலம், படை பலம், அதிகார துஷ்பிரயோகம் இவற்றை வைத்தே தொடர்ந்து வெற்றி பெற்றுவிடலாம்; நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட இவற்றின் மூலமாகவே வெற்றி பெற்றுவிடலாம் என்று தி.மு.க. நம்புகிறது.
மக்களைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்று தி.மு.க. கருதுகிறது. இன்று நமக்குத் தெரிந்த அளவில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. உடனான கூட்டணியை தொடர விரும்புவதாகவே தகவல்கள் வருகின்றன. காங்கிரஸ் கட்சியும் தி.மு.க-வும் அவர்களுடைய கூட்டணி நீடித்திருந்தாலே போதும். அதை வைத்தே வாக்குகளைப் பெற்றுவிடலாம், தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று நம்புகின்றன. காங்கிரஸ் கட்சியும் சரி, தி.மு.க-வும் சரி, மிகப் பெரிய தவறு செய்து கொண்டிருக்கிறார்கள். மிகப் பெரிய தப்பு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என்ன அந்த தவறு? என்ன அந்த தப்பு? காங்கிரசும் சரி, தி.மு.க-வும் சரி, மக்களைப் பற்றியே மறந்துவிட்டார்கள். வாக்காளப் பெருமக்களைப் பற்றியே மறந்துவிட்டார்கள். தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி இருந்தாலே போதும். தாமாகவே வாக்குகள் வந்து குவிந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய நிதர்சனமான உண்மை என்னவென்றால், தமிழ் நாட்டு மக்கள் தி.மு.க-வின் மீது எல்லையில்லா கோபம் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வின் மீது மக்களுக்கு பயங்கர கோபம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. என்றாலே இன்றைய தினம் தமிழக மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். கடந்த 33 மாத காலமாக இதுவரை வரலாற்றில் கண்டிராத அளவிற்கு தி.மு.க-வினர் செய்து கொண்டிருக்கும் அத்தனை அக்கிரமங்களையும், அட்டூழியங்களையும் மக்கள் பார்த்து கொதித்துப் போயிருக்கிறார்கள். மத்திய அரசில் இருந்து கொண்டு தி.மு.க. செய்துள்ள இமாலய ஊழல்களைப் பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஒரே ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், ஸ்பெக்ட்ரம் ஊழல். ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் புரிந்திருக்கிறார்கள் இந்த ஒரே ஒரு ஸ்பெக்ட்ரம் ஊழலில். இன்னும் எத்தனையோ ஊழல்களைக் குறிப்பிடலாம். மத்திய அரசில் தி.மு.க. மந்திரிகள் எந்தெந்த இலாக்காவிற்கு பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார்களோ அத்தனை இலாக்காக்களிலும் இமாலய ஊழல் புரிந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிலோ இங்கே தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஊழலைப் பற்றி சொல்லத் தேவையில்லை. எல்லோருக்கும் தெரியும். அது வெளிப்படையாகவே, பகிரங்கமாகவே நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ் நாட்டு மக்கள் மனதில் இன்று ஒரு மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது. எல்லோருக்கும் தெரிகின்ற வண்ணம் ஒளிவு மறைவு இன்றி தி.மு.க. இவ்வளவு பெரிய ஊழல்களைச் செய்து கொண்டிருக்கும்போது, மத்திய அரசு, குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தி.மு.க. மந்திரிகள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி. அதனால், தி.மு.க. மீது தமிழக மக்களுக்கு இருக்கின்ற கோபம் இன்றைய தினம் காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும். தி.மு.க. மீது தமிழக மக்கள் எந்த அளவிற்கு தாங்க முடியாத ஆத்திரத்தில், கோபத்தில் இருக்கிறார்களோ அந்த அளவிற்குத் தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சி மீதும் கோபம் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அளவிற்கு ஊழல் புரிந்து கொண்டிருக்கும் இந்த பாசிச தி.மு.க. ஆட்சிக்கு, இந்த சர்வதிகார தி.மு.க. ஆட்சிக்கு, ஊழல் மலிந்த தி.மு.க. ஆட்சிக்கு, காங்கிரஸ் கட்சி ஏன் இன்னும் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று தமிழக மக்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரசைப் பொறுத்தவரை தமிழக மக்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லை என்று காங்கிரஸ் நினைக்கக் கூடாது. ஏதோ கடந்த காலத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களித்தார்கள் என்பதற்காக இப்போது நடந்து கொண்டிருக்கும் தவறுகளையெல்லாம், ஊழல்களையெல்லாம், குற்றங்களையெல்லாம், அராஜகங்களையெல்லாம், அநியாயங்களையெல்லாம் மறந்துவிட்டு அப்படியே மக்கள் இந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் நினைக்கக் கூடாது.
இனி நடைபெறப் போகும் தேர்தலில், குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழக மக்களிடம் ஓட்டு கேட்டு வாக்குகளைப் பெற வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினால், இதுவரை தமிழ்நாட்டில் தி.மு.க-வின் அராஜக அரசுக்கு ஆதரவு கொடுத்த பாவத்திற்கு காங்கிரஸ் கட்சி பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிலும், மத்தியிலும் காங்கிரஸ் கட்சி தி.மு.க-விற்கு கொடுத்துக் கொண்டிருக்கும் ஆதரவு ஒரு பாவம் என்றே தமிழக மக்கள் கருதுகிறார்கள். மாநிலத்திலும், மத்தியிலும் தி.மு.க-விற்கு காங்கிரஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் ஆதரவு, அவர்கள் செய்கின்ற அந்தப் பாவத்திற்கு அவர்கள் பரிகாரம் தேடியே ஆக வேண்டும். இன்று கோபத்தில் கொதித்துப் போயிருக்கும் தமிழக வாக்காளர்களை சந்தித்து, அவர்களை சமாதானப்படுத்தி, அவர்களை ஆறுதல் அடையச்செய்து, அவர்களுடைய வாக்குகளைப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி உண்மையிலேயே விரும்புமேயானால், முதலில் காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் உள்ள தி.மு.க. மைனாரிட்டி ஆட்சிக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும்; தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மேலும் மத்திய அமைச்சரவையில் உள்ள தி.மு.க. மந்திரிகளை மத்திய அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் நீக்க வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற மிகப் பெரிய ஊழல்களை புரிந்துள்ள தி.மு.க. மந்திரிகள் மீது காங்கிரஸ் கட்சி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் மீண்டும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளப் பெருமக்களை வந்து சந்திக்க முடியும். அவர்களிடம் வாக்குகள் கேட்க முடியும். கடந்த காலத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கின்றன. அதனால், அந்தப் பழைய நட்புறவை நினைவு கூர்ந்து, பழைய நட்புறவை பாராட்டி, நண்பர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன். தி.மு.க. தற்போது புதை மணலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. புதை குழியில் இப்போது தி.மு.க. சிக்கிக் கொண்டு மூழ்கிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆகவே, இனிமேல் தி.மு.க-வை யாராலும் காப்பாற்ற முடியாது. தி.மு.க-வின் கதை முடிந்துவிட்டது. எப்படியாவது அந்தப் புதை குழியில் இருந்து தி.மு.க-வை காப்பாற்ற வேண்டும், அதை வெளியே தூக்கி விட வேண்டும் என்று காங்கிரஸ் உதவிக்கரம் நீட்டினால், நேசக்கரம் நீட்டினால் காங்கிரஸ் கட்சியும் அதே புதை மணலில் விழுந்து சிக்கிக் கொண்டு அழிந்து போய்விடும்.
ஆகவே காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஒரு எதிர்காலம் வேண்டும் என்று கருதினால் தி.மு.க.வுடனான உறவை உடனடியாகத் துண்டித்துக் கொள்ள வேண்டும். ஒன்றை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தெரியாதவர்களுக்காக இந்த விளக்கத்தைக் கூறுகிறேன். புதை மணல் என்பது என்ன? ஒரு முறை ஒருவர் அந்தப் புதை மணலில் விழுந்துவிட்டால் பின்னர் மீளவே முடியாது, வெளியே வரவே முடியாது. அப்படியே மூழ்கிப் போய்விட வேண்டியதுதான். கதை முடிந்துவிடும். அதோடு சரி. யாராவது ஒருவர் அய்யோ பாவம் நம்முடைய நண்பர் அந்தப் புதை மணலில் விழுந்திருக்கிறாரே அவருக்கு உதவி புரிவோம் என்று கரம் நீட்டி அவர் கையைப் பிடித்து இழுத்து அவரை வெளியே கொண்டுவந்துவிடலாம், காப்பாற்றிவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. கையை யாராவது கொடுத்தால் அவர்களும் அந்தப் புதை மணலில் மாட்டிக் கொண்டவர்களோடு சேர்ந்து மூழ்கிப் போய்விடுவார்கள். ஆகவே கையை பின்னால் இழுத்துக் கொள்வதுதான் நல்லது.
கடந்த காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்தது. அன்னை இந்திராகாந்தி அவர்கள் இருந்த காலத்தில், பின்னர் அவரது மகன் ராஜீவ்காந்தி இருந்த காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையே நல்ல உறவு இருந்தது. அன்னை இந்திராகாந்தி அவர்களை எனது அன்னையாகவே நான் பாவித்தேன். அவரும் என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். அன்பைப் பொழிந்தார். அதைப் போலவே ராஜீவ்காந்தி காங்கிரஸ் தலைவராகவும், பிரதமராகவும் இருந்த காலத்தில், ராஜீவ்காந்தி அவர்களும் நானும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதை கொண்டிருந்தோம். நல்ல நட்புறவு கொண்டிருந்தோம். ஆகவே அந்த பழைய நட்புறவை மனதில் வைத்துத்தான், அந்தப் பழைய நட்புணர்வை பாராட்டித்தான் இன்றைய தினம் ஒரு நண்பர் என்ற முறையில் காங்கிரசுக்கு இந்த ஆலோசனையை கூறி இருக்கிறேன். அதை அவர்கள் ஆர அமர உட்கார்ந்துகொண்டு தீர்க்கமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஒன்றை மட்டும் இந்த நேரத்தில் உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-விற்கும் சரி, தி.மு.க-விற்கு ஆதரவு கொடுக்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, மக்கள் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள். அது காங்கிரசாக இருந்தாலும் சரி, வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி வரப்போகும் தேர்தலில் மக்கள் தி.மு.க-வை விரட்டியடிக்கப் போகிறார்கள். அதே கதிதான் தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுக்கும் கட்சிக்கும் ஏற்படும். ஆகவே அந்த ஒரு கதியை சந்திக்க வேண்டாம் என நினைத்தால் தி.மு.க-வுடனான உறவை உடனடியாக துண்டித்துக் கொள்வது நல்லது. தி.மு.க-வும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி, தமிழ் நாட்டு மக்களின் கோபத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. காங்கிரஸ் கட்சியும் தி.மு.க-வினரும் இதுவரை மக்களைப் பற்றியே மறந்துவிட்டார்கள். மக்கள்தான் இறுதி எஜமானர்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. மக்கள்தான் இறுதி எஜமானர்கள் என்பதை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபித்துக் காட்டுவார்கள். ஆகவே, தவறு செய்வது என்பது மனித இயல்பு. தவறு செய்யாதவர்கள் யாருமே இந்த உலகில் இருக்க முடியாது. ஆனால், தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து, அந்தத் தவறை எப்படி திருத்திக் கொள்வது என்று சிந்தித்து அதற்குப் பரிகாரம் தேடிக் கொண்டால் அவர்கள்தான் மனிதர்கள். அது அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை அடையப் போகிறது என்பது நிதர்சனமான உண்மை.
நமக்கு அந்த வெற்றியைக் கொடுக்க, நல்ல தீர்ப்பைக் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆகவே, எந்தக் கட்சி நம்முடன் கூட்டணி சேர்கிறதோ அந்தக் கட்சிக்குத்தான் லாபம். எந்தக் கட்சி நம்முடன் கூட்டணி சேரவில்லையோ அந்தக் கட்சிக்குத்தான் நஷ்டம். நமக்கு லாபம், லாபம், வெற்றி வெற்றி தான் என்பதைத் தெரிவித்து, நீங்கள் அனைவரும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்லும் வகையில் உங்கள் ஒத்துழைப்பைத் தர வேண்டும்.
"சலித்துப் போய்விட்டேன்" காந்தி கண்ணதாசனுக்கு கருணாநிதி கடிதம்
கண்ணதாசனின் நூல்களை நாட்டுடமை ஆக்கப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதுமே கொதித்துப்போய் அறிக்கைவிட்டார் காந்தி கண்ணதாசன். இதனால் அந்த அறிவிப்பை வாபஸ் வாங்கியது தமிழக அரசு. இந்த நிலையில் காந்தி கண்ணதாசனுக்கு மருத்துவமனையில் இருந்து கடிதம் எழுதியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.
அன்புள்ள தம்பி காந்தி கண்ணதாசனுக்கு,
காந்தியின் பெயரையும் வைத்துக்கொண்டு என்னுடைய அருமை நண்பர் கண்ணதாசன் பெயரையும் வைத்துக் கொண்டு ஏடுகளில் இப்படியொரு அறிக்கை விடுவாய் என்று நான் கருதவில்லை. கண்ணதாசன் நூல்களை நாட்டுடமை ஆக்குவது என்று அரசாங்கம் அறிவித்தது. அந்த கவிஞனை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் என் நண்பன் பால் கொண்ட அன்பின் காரணமாக செய்யப்பட்டது. நேற்று அரசு அறிக்கையில் குறிப்பிட்டதுப் போல ஏற்றுக் கொள்வது, ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லாவிட்டால் அதை அரசுக்கு தெரிவிப்பதும் பல முறை நடந்த நிகழ்ச்சிகள். கண்ணதாசனை மதிக்கும் பலர் அறிவிப்பை கேள்விபட்டு தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்தார்கள். வைரமுத்துவும் என் உதவியாளரிடம் தொலைப்பேசி மூலம் நன்றி தெரிவித்தார்.
கண்ணதாசன் என்ற கவிஞனை மதிப்பதற்காக அரசின் சார்பில் செய்யப்பட்ட செயல் அது. அதற்காக இப்படியொரு அறிக்கை அந்த குடும்பத்தின் சார்பில் வெளிவரும் என்று எதிர்பார்க்கவில்லை. உன்னுடைய அறிக்கைக்கு முரசொலியில் சின்னக்குத்தூசி விரிவாக பதில் எழுதியுள்ளார். எழுத்தாளர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் என் சொந்தப் பொறுப்பில் ஒரு கோடி ரூபாய் அளித்த போது அந்த சங்கத்திற்கு நீ தலைவராய் இருக்கிறாய், அந்தச் செயல் முறையாக நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இப்போதும் உண்டு. ஆனால் கண்ணதாசன் நூலினை நாட்டுடைமையாக்கியது குறித்து இப்படி நீ நடந்து கொண்ட முறையைக் கண்டு சலித்துப் போய் விட்டேன்.
அன்புள்ள மு.கருணாநிதி
கருணாநிதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் பேட்டி
முதல்வர் கலைஞர் கடந்த இரண்டாண்டு காலமாக முதுகு வலி காரணமாக சிரமப்பட்டுக் கொண்டிருந்தாலும், கடந்த இரண்டு வார காலமாக கீழ் முதுகில் வலி மிகவும் அதிகமான நிலையில் மருத்துவ மனையிலே அனுமதிக்கப்பட்டார். அதன் காரணமாக அவரால் தூங்க முடியவில்லை. பகல் நேரத்திலே கூட அவரால் ஓய்வெடுக்க முடியவில்லை. எந்த வகையிலே சிகிச்சை அளிப்பது என்பதைப் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்ட போது, முதுகெலும்பில் (எல்.2, எல்.3 பகுதியில்) தசைப்பிடிப்பு ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்காக பல மருத்துவர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்தக் குழுவினர் கூடி அறுவை சிகிச்சை மேற்கொள்வதென்ற முடிவிற்கு வந்தோம். தொடர்ந்து பிசியோதரபி, மாத்திரைகள், ஊசி போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. இருந்தாலும் வலி குறையவில்லை. அதன் பின்னர்தான் எபிட்யூரல் இஞ்செக்ஷன் கொடுக்க முடிவு செய்து, அதுவும் அவரது வலியைக் குறைக்க உதவிடவில்லை. எனவேதான் அறுவை சிகிச்சை முடிவுக்கு வந்தோம்.
இந்த முடிவிற்கு வந்த பிறகு டெல்லியிலே உள்ள ஆல் இண்டியா இன்ஸ்டிட்யூட்டில் பணியாற்றும் மருத்துவ நிபுணர் அரவிந்த் ஜேஸ்வாலலை தொடர்பு கொண்டோம். அவர் முதுகெலும்பில் அறுவை சிகிச்சையில் உலகப் புகழ் பெற்றவர். அவரும் சென்னைக்கு உடனடியாக வந்து முதலமைச்சரை சோதனை செய்தார்.
டாக்டர் ஜேஸ்வால் பேட்டி:
முதல்வருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்தோம். முறையான அறுவை சிகிச்சை நடைபெற்று, முதுகெலும்பிலே இருந்த தசை பிடிப்பு அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை நன்றாக நிறைவுற்று அவர் தற்போது நன்றாக தேறி வருகிறார். அறுவை சிகிச்சை அறைக்கு 6.45 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு முன்பான தொடக்கப் பணிகள் ஒரு மணி நேரம் நடைபெற்றது. மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்று 10 மணிக்கு முடிந்தது. மயக்க மருந்து நிலையிலிருந்து திரும்பி அவர் தற்போது பூரண நலம் பெற்று வருகிறார். தற்போது ஐ.சி.யு. அறையிலே இருக்கிறார். அங்கே 48 மணி நேரம் இருக்க வேண்டும். அதற்குப் பிறகு ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் இல்லம் திரும்புவார். ஒருசில நாட்களில் அலுவலகப் பணிகளை மேற்கொள்வார்.
அமைச்சர் அன்பழகன் பேட்டி:
கலைஞர் மிகச் சிறப்பான முறையில் நுணுக்கமான அறுவை சிகிச்சை செய்திருக்கிற மருத்துவக் குழுவினர் டாக்டர் மார்த்தாண்டம் தலைமையில் டெல்லியிலிருந்து வந்திருக்கின்ற டாக்டர் ஜேய்ஸ்வால் மற்ற நிபுணர்களுமாக வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை நிறைவேற்றியிருக் கிறார்கள். முதலில் அந்த மருத்துவக் குழுவினருக்கு நான் என்னுடைய உளமார்ந்த நன்றியையும், பாராட்டையும் தி.மு.க.வின் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் சார்பாகவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மிகச் சிறப்பான சிகிச்சை வழங்கி அவர் குறைந்தது பத்து நாட்கள் வரையில் எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் - பார்வையாளர்கள் இல்லாமல் முழு அளவில் - எந்தத் தொத்துக்கும் இடமில்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அந்தப் பத்து நாட்கள் வரையில் கலைஞரிடத்தில் மிக நெருக்கமாக பழகிய நண்பர்களானாலும் - அமைச்சர்களாக இருந்தாலும் - மற்றவர்களாக இருந்தாலும் இந்தப் பத்து நாட்கள் கலைஞருடைய உடல் நலத்திற்கு சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக யாரும் சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அவர்கள் இதை ஏற்றுக் கொண்டு கலைஞரைப் பார்க்க முயற்சிக்காமல் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ் நாட்டு மக்கள் அனைவரும், கலைஞருக்குப் பாதுகாப்பான ஒரு சிகிச்சை கிடைக்க வேண்டுமே என்று மிகுந்த கவலையோடு இருந்தார்கள். பல்வேறு இடங்களிலிருந்து தொலைபேசிகள் மூலமாக, திரும்பத் திரும்ப கலைஞரின் உடல் நலத்தை விசாரித்துக் கொண்டிருந்தார்கள். மத்தியிலிருந்து பல அமைச்சர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் நான் தெரிவிக்க விரும்புவது கலைஞர் நலமோடு இருக்கிறார், நலமுடன் திரும்பி வந்து விரைவில் அவருடைய பணிகளை ஏற்பார்.