திருமங்கலம் தேர்தல் தி.மு.க.வின் பணபலம் வென்றுவிட்டது: ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (ஜனவரி 12) வெளியிட்ட அறிக்கை:

தி.மு.க-வின் பணபலம், குண்டர் படைபலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை வென்றுவிட்டன; ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பதைத்தான் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் முடிவு தெளிவாகக் காட்டுகிறது.

7.1.2009 அன்று மாலை 5 மணிக்கு மேல் வாக்காளர் அல்லாதவர்கள் தொகுதியில் இருக்கக் கூடாது; தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்பது விதி. ஆனால் தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் அழகிரியின் குண்டர்கள் உட்பட தி.மு.க-வினர் அனைவரும் அதன் பின்னரும் தொகுதிக்கு உள்ளேயே வலம் வந்து கொண்டிருந்தனர். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறை, கட்டுப்பாடு என்பதெல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டும்தான் போலும்! தி.மு.க-வினருக்கு எந்தச் சட்டமும் பொருந்தாது என்ற அளவிற்கு தி.மு.க. அமைச்சர்கள் திருமங்கலம் தொகுதிக்குள் 7.1.2009 அன்று மாலை 5 மணிக்குப் பிறகும் பணம், தங்க நாணயம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வீடுவீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

அழகிரியின் அடியாட்களால் வாக்காளர்கள் அனைவரும் மிரட்டப்பட்டு இருக்கின்றனர். இது குறித்து அ.தி.மு.க. சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதில் இருந்தே காவல் துறை கருணாநிதியின் ஏவல் துறையாகத்தான் இருக்கிறது என்பது நிரூபணம் ஆகிவிட்டது.அ.தி.மு.க‌உடன்பிறப்புகள் மீது, காவல் துறையினரே வன்முறையாளர்களைப் போல் தாக்குதல் நடத்தி அவர்கள் மீது பொய் வழக்குகளைப் புனைந்தது; அதைத் தடுக்க நினைத்த தேர்தல் அதிகாரி மீது குற்றம் சுமத்தியது;

"தமிழகம்தான் தற்போது அடிமட்டத்தில் இருந்து 'டாப்'பில் இருக்கிறது" என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தது; ஒட்டுமொத்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தேர்தல் செலவை விட கூடுதலாக திருமங்கலம் தொகுதியில் பணம் செலவிடப்பட்டது என பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது; 9-ந் தேதி தேர்தல் முடிந்தவுடன் "30,000 முதல் 40,000 வாக்குகள் வித்தியாத்தில் தி.மு.க. வெற்றி பெறும்" என அழகிரி அன்றே அறிவித்தது; "திருமங்கலம் இடைத் தேர்தல் நல்ல செய்தியைத் தரும்" என கருணாநிதி சென்னை சங்கமம் விழாவில் அறிவித்தது; வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே வெற்றி பெற்றுவிட்டதாக தி.மு.க-வினர் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட்டது; வெற்றியைப் பாராட்டி விளம்பரப் பலகைகள் வைத்தது ஆகியவற்றில் இருந்தே இந்த இடைத் தேர்தல் எப்படி நடந்திருக்கும் என்பதை பொது மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

கருணாநிதி முதலமைச்சராகவும், அவரது மகன் அழகிரி நிழல் முதலமைச்சராகவும் தமிழ்நாட்டில் இருக்கின்ற வரையிலும், காவல் துறை கருணாநிதி குடும்பத்தின் ஏவல் துறையாக செயல்படும் வரையிலும், தமிழ் நாட்டில் தேர்தல் என்பது சடங்கு, சம்பிரதாயம் போலத்தான். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் எந்தவிதப் பயனும் இல்லை. இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏதாவது கட்டளையிட்டாலும் அதை செயல்படுத்த கருணாநிதியின் காவல் துறை தயாராக இல்லை. எனவே, தமிழ்நாட்டில் இந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் இனி ஒரு தேர்தலை நடத்தி மற்ற கட்சிகளை எல்லாம் வீண் சிரமத்திற்கு ஆட்படுத்துவதைவிட, தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டதாக ஒரேயடியாக, எடுத்த எடுப்பிலேயே அறிவித்துவிடலாம். இதனால் மற்ற கட்சிகளுக்கு வீண் அலைச்சலும், சிரமும் மிச்சம் ஆகும்.

எனினும், இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வோ உழைத்த, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வர்டு பிளாக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், இந்திய தேசிய லீக், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும்; அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், உடன்பிறப்புகளுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, அ.தி.மு.க‌ வேட்பாளருக்கு வாக்களித்த திருமங்கலம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1 கருத்துகள்:

ISR Selvakumar சொன்னது…

எதிர்பார்த்த மாதிரியே அறிக்கை வெளிவந்திருக்கிறது. மற்றபடி இந்த அறிக்கைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

கருத்துரையிடுக