வன்முறையாளர்களின் கட்டுப்பாட்டில் திருமங்கலம்: ஜெயலலிதா அறிக்கை

ஜெய‌ல‌லிதா இன்று (டிசம்பர் 30) வெளியிட்ட‌ அறிக்கை:

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தி.மு.க-வினரின் அராஜகம் தலைவிரித்தாடுவது குறித்து நான் கண்டன அறிக்கைகள் வெளியிட்டும் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணநிதி வாய்மூடி மவுனியாக இருக்கிறார். இதிலிருந்து அங்கு தி.மு.க-வினரால் நடத்தப்படும் அராஜகங்கள் அனைத்தும் கருணாநிதியின் தூண்டுதலின் பேரிலியே நடைபெறுகின்றன என்பது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கும், கூட்டுறவு சங்கங்களுக்கும் வன்முறையாளர்களைக் கொண்டு எப்படி தேர்தலை நடத்தினாரோ, அதே முறையை பின்பற்றுவதில் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி ஈடுபட்டிருக்கிறார். மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியின் அடியாட்களான மிசா பாண்டியன், அட்டாக் பாண்டி, எஸ்ஸார் கோபி உள்ளிட்டோர் தலைமையில் ரவுடி கும்பல்கள் திருமங்கலம் தொகுதியில் தங்கியிருந்து, அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னணி நிர்வாகிகளையும், உடன்பிறப்புகளையும், தோழமைக் கட்சிகளின் முன்னணித் தலைவர்களையும், தொண்டர்களையும் தாக்கிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

வன்முறை கும்பலுக்கு உதவும் வகையில் மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எம். மனோகர், காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரசேகர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஷாஜகான் ஆகியோர், தேர்தல் பொறுப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், மற்றும் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் எம். ஜெயராமன், தேனி மாவட்ட செயலாளர் தங்க. தமிழ்செல்வன், ஆர். சாமி, எம்.எல்.ஏ., உட்பட 52 பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும்; ஆர். சாமி, எம்.எல்.ஏ., மற்றும் அவருடன் இருந்த கழக உடன்பிறப்புகள் மீது பொய் வழக்கு போட்டதோடு மட்டும் அல்லாமல், அவர்களை, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எம். மனோகர் என்பவர் கடுமையாகத் தாக்கியதாகவும், இதன் காரணமாக அவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.

மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மனோகரன் என்பவர் மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளரைப் போலவும், துணைக் கண்காணிப்பாளர் ஷாஜகான் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரைப் போலவும் செயல்படுகின்றனர். நேற்று தி.மு.க. ரவுடிகளால் அரங்கேற்றப்பட்ட வன்முறைச் சம்பவத்தில், காவல் துறையினர் தாக்கப்பட்டு உயிருக்கு பயந்து ஓடும் சமயத்தில், அவர்களைக் அ.தி.மு.க. தொண்டர்கள் காப்பாற்றி உள்ளனர். காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தற்போது நிலவுகிறது. ஆனால் காப்பாற்றிய கழகத்தினர் மீதே காவல் துறையினர் பொய் வழக்குகளைப் போடுவது கடும் கண்டனத்திற்கு உரியது.

காவல் துறையின் நடவடிக்கைகளை பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். தங்களது கடமையைச் செய்யாமல் தி.மு.க-வினரின் அராஜக, மக்கள் விரோதச் செயல்களுக்குத் துணையாக இருந்து வரும் காவல் துறை அதிகாரிகள் அதற்கான தண்டனையை அனுபவிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை அவர்களுக்கு எச்சரிக்கையாத் தெரிவிக்க விரும்புகிறேன்.

காவல் துறையின் கட்டுப்பாட்டில் திருமங்கலம் தொகுதி தற்போது இல்லை. வன்முறையாளர்களின் கட்டுப்பாட்டில்தான் திருமங்கலம் தொகுதி இருக்கிறது. வன்முறையாளர்களுக்குக் கட்டுப்பட்டு, அவர்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றும் தலையாட்டி பொம்மைகளாக காவல் துறையினர் செயல்படுகின்றனர். பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு அசாதாரண சூழ்நிலை தற்போது திருமங்கலம் தொகுதியில் நிலவுகிறது. இந்த அளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், காவல் துறை தலைமை இயக்குன‌ரோ வாய் திறக்காமல் மவுனம் சாதித்து வருகிறார். இதே நிலைமை நீடித்தால் வன்முறையாளர்களுக்குத் துணை போகும் காவல் துறை, வன்முறைத் துறையாகவே மாறிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை விட மிக மோசமான சூழ்நிலை தற்போது திருமங்கலம் தொகுதியில் நிலவுகிறது. கருணாநிதி வன்முறையை மையமாக வைத்து கட்சியையும், ஆட்சியையும் நடத்திக் கொண்டிருக்கிறார். ‘திருமங்கலம் தேர்தலும் - திடீர் அறிவிப்பும்’ என்ற தலைப்பில் கருணாநிதி ஒப்பாரி வைக்கும்போதே, தோல்வி பயத்தில் இந்தத் தேர்தலை நடத்துவதில் கருணாநிதிக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிவிட்டது. தற்போது வன்முறை ஒன்றே வழி என்று அதில் இறங்கிவிட்டார். ஜனநாயக ரீதியில் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டிய கடமை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் தேர்தல் ஆணையத்திற்கு பிரேத்யேக அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மதுரை மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் எம். மனோகர், காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் மற்றும் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஷாஜகான் ஆகியோரை அவரவர் வகித்து வரும் பதவிகளில் இருந்து நீக்க இந்தியத் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருமங்கலம் தொகுதியை துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் நேரடிக் கட்டுப்பாட்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

திருமங்கலத்தில் ஜெயலலிதா நான்கு நாட்க‌ள் பிர‌ச்சாரம்

திருமங்கலம் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தல் ஜனவரி 9ம் தேதி நடைபெறுகிறது. 3ம் தேதி (சனிகிழமை) முதல் 6ம் (செவ்வாய்க் கிழமை) வரை நான்கு நாட்கள் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். ஜனவரி 3, ஜனவரி 4 மற்றும் ஜனவரி 5 ஆகிய நாட்களில் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஊர் ஊராகச் சென்று அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து, 6ம் தேதி செவ்வாய்க் கிழமை திருமங்கலம் நகரத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் தோழமைக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.

தேர்தல் சுற்றுப் பயண விவரம்
3.1.2009 - சனிக் கிழமை
1. பெருங்குடி பேசும் இடம்
2. கைத்தறி நகர் பேசும் இடம்
3. நிலையூர் பேசும் இடம் சம்பகுளம்
4. வளையங்குளம் பேசும் இடம்
5. எலியார்பத்தி பேசும் இடம்
6. பாரபத்தி பேசும் இடம்
7. கூடக்கோவில் பேசும் இடம்
8. சின்ன உலகாணி பேசும் இடம்
9. பெரிய உலகாணி பேசும் இடம்
10. மைக்குடி பேசும் இடம்
11. கீழக்கோட்டை பேசும் இடம்
12. நடுக்கோட்டை பேசும் இடம்
13. மேலக்கோட்டை பேசும் இடம் சிவரக்கோட்டை
14. கரிசல்காலாம்பட்டி பேசும் இடம் சுவாமி மல்லம்பட்டி
15. செங்கப்படை பேசும் இடம்
16. கட்ராம்பட்டி பேசும் இடம்
17. ஆலம்பட்டி பேசும் இடம்

4.1.2009 - ஞாயிற்றுக் கிழமை
1. புளியங்குளம் பேசும் இடம்
2. செக்காணூரணி பேசும் இடம் சிக்கம்பட்டி அனுப்பப்பட்டி காலனி
3. கரடிக்கல் பேசும் இடம்
4. கீழஉரப்பனூர் பேசும் இடம் பள்ளக்காபட்டி
5. மேல உரப்பனூர் பேசும் இடம்
6. சித்தாலை பேசும் இடம்
7. புங்கங்குளம் பேசும் இடம் அழகுச்சிறை
8. வாகைக்குளம் பேசும் இடம்
9. சின்ன வாகைக்குளம் பேசும் இடம்
10. காண்டை பேசும் இடம் உசிலம்பட்டி மெயின் ரோடு
11. பண்ணிக்குண்டு பேசும் இடம்
12. சாத்தங்குடி பேசும் இடம் கண்டுகுளம்

5.1.2009 - திங்கட் கிழமை
1. கூத்தியார்குண்டு பேசும் இடம்
2. சிவரக்கோட்டை பேசும் இடம்
3. அகத்தாப்பட்டி பேசும் இடம் லாலாபுரம்
4. வில்லூர் பேசும் இடம்
5. கள்ளிக்குடி பேசும் இடம்
6. கே. வெள்ளாகுளம் பேசும் இடம் விருதுநகர் மெயின் ரோடு
7. மேலப்பட்டி பேசும் இடம்
8. சென்னம்பட்டி பேசும் இடம்
9. குராயூர் பேசும் இடம்
10. குராயூர் பேசும் இடம்
11. நொச்சிக்குளம் பேசும் இடம்
12. மருதக்குடி பேசும் இடம்
13. வேப்பங்குளம் பேசும் இடம் இலுப்பங்குளம்

6.1.2009 - செவ்வாய்க் கிழமை
தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் (திருமங்கலம் நகரத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகில்)

ஜெயலலிதா கொண்டாடிய கிறிஸ்துமஸ்





போயஸ் கார்ட‌னில் இன்று (டிசம்பர் 25) மாலை, ஜெய‌ல‌லிதா கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினார்கள்.
விழாவின் முதல் நிகழ்ச்சியாக, ராஜா பிரபாகரன் ஜெபித்து கிறிஸ்துமஸ் விழாவைத் துவக்கி வைத்தார். சர்ச்சில் ஜோசப் வேதப் பகுதியை வாசித்தார். அதைத் தொடர்ந்து, "ஒவ்வொரு ஆத்மாவிற்கும் ஏசு" என்ற பாடகர் குழுவினர் கிறிஸ்துமஸ் சிறப்புப் பாடல்களைப் பாடினார்கள். ஆயர் டாக்டர் சாமுவேல் சுதாகர் முடிவு ஜெபம் நிகழ்த்தினார். தொடர்ந்து, புகழ்மிக்க ஜிங்கிள் பெல்ஸ் பாடல், பாடகர் குழுவினரால் இசைக்கப்பட்டது. இதனை ஜெயலலிதா ரசித்ததோடு, பாடகர் குழுவினருக்கு தமது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொண்டார்.

அடுத்தபடியாக, கிறிஸ்துமஸ் தாத்தா ஜெயலலிதாவுக்கு கிறிஸ்துமஸ் பரிசை வழங்கினார். அதே போல், நிகழ்ச்சிக்கு வந்திருந்த பேராயர்களும், ஆயர்களும், கிறிஸ்தவ சபை பெருமக்களும், பிரமுகர்களும், ஜெயலலிதாவுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கி தங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்ந்து, ஜெயலலிதா, பேராயர் மா. பிரகாஷ் இந்திய கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் என். கிறிஸ்துதாஸ் மற்றும் இந்திய தேசிய குடியரசுக் கட்சியின் நிறுவனத் தலைவர் பேராசிரியர் டாக்டர் சி. அம்பேத்கர்பிரியன் ஆகியோரது ஏற்பாட்டின்பேரில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் கேக்குகளை வெட்டினார். நிறைவாக, ஜெய‌ல‌லிதா , விழாவிற்கு வந்திருந்த பாடகர் குழுவினர் மற்றும் விருந்தினர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக்குகளை வழங்கி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து தமது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில், பேராயர் ஞானப்பிரகாசம் பேராயர் ஓனேஷிமஸ் , பேராயர் அருள்தாஸ் ஆகியோரும், இந்திய கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி மற்றும் இந்திய தேசிய குடியரசுக் கட்சி ஆகியவற்றின் மாநில, மாவட்ட நிர்வாகிகளும், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பி.எச். பாண்டியன், வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பி.எச். மனோஜ் பாண்டியன், சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர் ஏ. ஜஸ்டின் செல்வராஜ், மீனவர் பிரிவு இணைச் செயலாளர் ஜெனிபர் சந்திரன், ஜெ.சி.டி. பிரபாகரன் மற்றும் பத்திரிகையாளர் ரபிபெர்னார்ட் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

க‌லைஞ‌ர் டி.வி‍க்கு போனவ‌‌ர்க‌ளின் க‌தி என்ன‌? ஜெய‌ல‌லிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (டிசம்பர் 24) வெளியிட்ட அறிக்கை:

“பணத்தால் இயங்க வேண்டிய நிலையிலுள்ள அரசியல் இயக்கம் பணக்காரர்களின் இயக்கமாகிவிடும். அங்கே, தியாகமும், தொண்டுள்ளமும் பின்னுக்குத் தள்ளப்படும். சுழல் சொல்லர்களும், தன்னலங்களும் தலைமையேற்று விடுவர்” என்றார் பேரறிஞர் அண்ணா.

கருணாநிதி போன்ற சுயநலவாதிகளை மனதில் வைத்து பேரறிஞர் பெருந்தகை அண்ணா அன்று சொன்னதுதான் இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. காஞ்சிப் பாசறையில் வளர்ந்தவன் என்று தன்னை தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதியின் லட்சணம் இது தான்!

1.12.2008 அன்று கருணாநிதியின் இல்லத்தில் நடந்த கோமாளிக் கூத்து குறித்து நான் வெளியிட்ட அறிக்கையில், "அரசு கேபிள் நிறுவனம் இனி செயல் அற்றதாக இருக்குமா? அல்லது மாறன் சகோதரர்களின் சுமங்கலி கேபிள் விஷன், கேபிள் வியாபாரத்தில் மீண்டும் தங்களது ஏகபோக உரிமையை நிலைநாட்டும் வகையில், பார்க்கத் தகுதியற்ற, பார்க்க சகிக்காத, யாரும் பார்க்காத, பயனற்ற கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதோடு தன் பணியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு கேபிள் நிறுவனத்திற்கு கட்டளை இடப்படுமா?" என்று நான் வினவியிருந்தேன். இதுநாள் வரை கருணாநிதியிடமிருந்து அதற்கு பதில் ஏதுமில்லை. இருப்பினும், சில நடவடிக்கைகளின் மூலம் அது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

மு.க. அழகிரி குடும்பத்திற்குச் சொந்தமான ராயல் கேபிள் விஷன் நிறுவனத்தினரால் தாங்க முடியாத இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள், 1.12.2008 அன்று கருணாநிதி இல்லத்தில் நடைபெற்ற பணப் பரிமாற்ற ஒப்பந்தத்திற்குப் பிறகு சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தினரால் மிரட்டப்படுவதாகவும், இது குறித்து முதலமைச்சரிடம் புகார் கொடுக்க 23.12.2008 அன்று அவர்கள் சென்னை வந்துகொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும், அவர்களுக்கு உணவு கூட கொடுக்கப்படவில்லை என்றும் கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆக கருணாநிதியை நம்பி அரசு கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் இன்று பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

1.12.2008 அன்று நடைபெற்ற பணப்பரிமாற்ற ஒப்பந்தத்தின் போது, மாறன் சகோதரர்களிடம் மு.க. அழகிரி 800 கோடி ரூபாய் கேட்டதாகவும், இதன் அடிப்படையில் 300 கோடி ரூபாய் முன்பணம் மாறன் சகோதரர்களால் அழகிரியிடம் கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், காசுக்காக எதையும் செய்யக் கூடிய கருணாநிதியை சந்திப்பதன் மூலம் அரசு கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்களுக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.

இதே நிலைமைதான் கருணாநிதியை நம்பி கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த சரத் ரெட்டிக்கும் ஏற்பட்டிருக்கிறது. மாறன் சகோதரர்களுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவரான சரத் ரெட்டி சன் குழுமத்தின் தலைமைப் பதவியை வகித்து வந்தார். மாறன் குடும்பத்திற்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக, கருணாநிதியால் கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட போது, சன் தொலைக்காட்சியில் பணிபுரிந்த சரத் ரெட்டி உட்பட 250 நபர்கள் கலைஞர் தொலைக்காட்சிக்குச் சென்றது குறித்து பத்திரிகைகளில் வெளி வந்த செய்திகளை அனைவரும் அறிவர். கலைஞர் தொலைக்காட்சியின் 40 விழுக்காடு பங்குகள் கருணாநிதியின் மகன் அழகிரியிடமும், 40 விழுக்காடு பங்குகள் கருணாநிதியின் துணைவியின் மகள் கனிமொழியிடமும், மீதமுள்ள 20 விழுக்காடு பங்குகள் சரத் ரெட்டியிடமும் உள்ளதாகவும், 1.12.2008 அன்று கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் ஏற்பட்ட இணைப்பை அடுத்து, மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்களை தங்கள் கையில் எடுத்துக்கொண்ட மாறன் சகோதரர்கள், சரத் ரெட்டியின் மீதுள்ள ஆத்திரத்தில், கோபத்தில், 20.12.2008 அன்று இரவு 12 மணிக்கு அவருடைய இல்லத்திற்குச் சென்று அவரை மிரட்டியதாகவும், அவர் இல்லத்தில் விடியற்காலை 2.30 வரை இருந்ததாகவும், அன்று இரவு அவர் இல்லத்திலிருந்து பலத்த கூக்குரல் கேட்டதாகவும், இது குறித்து காவல் துறையினரிடம் கேட்ட போது, சரத் ரெட்டியிடம் இருந்து காவல் துறையினருக்கு புகார் எதுவும் வரவில்லை என்று கூறப்பட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

தற்போது சரத் ரெட்டி எலும்பு முறிவு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. காவல் துறையினரிடம் புகார் எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும், இதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் சரத் ரெட்டியின் வக்கீலிடம் கருணாநிதி தெரிவித்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன. கருணாநிதியை நம்பிப் போனவர்களின் கதி என்னவாகும் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. இதனையடுத்து, சன் குழுமத்திலிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்குச் சென்ற மீதமுள்ள 250 நபர்கள் தங்களுக்கு என்ன கதி ஏற்படுமோ என்ற அச்சத்தில் உறைந்து போயிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஒரு மாணவனின் பிணத்தின் மீது டாக்டர் பட்டம் பெற்ற கருணாநிதிக்கு மக்களின் உயிர் பற்றி கவலையில்லை. கருணாநிதி ஒரு நம்பிக்கைத் துரோகி என்பதை சரத் ரெட்டி இப்போது புரிந்து கொண்டிருப்பார்.

கருணாநிதியைப் பொறுத்தவரையில், குடும்ப நலன், உறவினர்களின் நலன், பணம் ஆகியவைதான் அவருக்கு முக்கியம். கருணாநிதி ‘ரவுண்டாக’ கேட்ட பணம் அவருக்குக் கிடைத்துவிட்டது. எனவே வேறு எதைப் பற்றியும் அவர் கவலைப்பட மாட்டார். அரசாங்கம், சட்டம் என்பதெல்லாம் மக்களுக்காக இருக்கிறதா அல்லது கருணாநிதியின் குடும்பத்திற்காக இருக்கிறதா என்று புரியாத சூழ்நிலை தற்போது தமிழகத்தில் நிலவுகிறது. கருணாநிதி தன்னுடைய குடும்பத்திற்காக ஆட்சி நடத்துகிறார், மக்களுக்காக ஆட்சி நடத்தவில்லை என்பதை இனிமேலாவது தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

குடும்பங்களின் ஆட்சி உருவானால் சுயநலத்திற்கே முன்னுரிமை தரப்படும் என்பதை மக்கள் புரிந்து கொண்டு, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, அ.தி.மு.க.ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, எனது தலைமையிலான அ.தி.மு.க.ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தவுடன், கருணாநிதியின் குடும்பத்தினரின் அராஜகச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு, கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் நிம்மதியாக தங்களது தொழிலை நடத்தவும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை கண்டு களிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

கருணாநிதி, ஜெயலலிதா கிருஸ்துமஸ் வாழ்த்து

கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

அன்பு, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, மனித நேயம் ஆகியவற்றை உலகுக்கு வலியுறுத்திய மாமனிதர் இயேசு அவர்களின் பிறந்த நாள், “கிருஸ்துமஸ் திருநாளாக” உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கிருஸ்துமஸ் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடிடும் கிருத்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் என் இதயம் கனிந்த கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள் உரித்தாகுக.

கிருத்தவ சமயம் ஏழை எளிய, நலிந்த மக்களுக்குத் தொண்டுகள் செய்வதை வலியுறுத்துகிறது. திருவிவிலியம் என்ற நூல், “ஏழைகள் வயிற்றில் அடிக்காதே; கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே; பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே; வறுமையில் உழல்வோரை எரிச்சலூட்டாதே; உள்ளம் உடைந்தோர்க்குத் துயரங்களைக் கூட்டாதே; வறுமையில் உழல்வோர்க்குக் காலம் தாழ்த்தாமல் உதவி செய்; துன்புறுவோரின் வேண்டுதலைத் தள்ளிவிடாதே; ஏழையரிடமிருந்து உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே; உன்னிடம் உதவி வேண்டுவோரிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக் கொள்ளாதே; உன்னைச் சபித்திட யாருக்கும் வாய்ப்பு அளிக்காதே; பூசலைத் தவிர்த்திடு!” என அறிவுரைகளை வழங்குகிறது.

மனிதநேயம் கசியும் இந்த அறிவுரைகளை இதயத்தில் தாங்கி, சமுதாயத்தில் ஏழை, எளியோர்க்கு இயன்ற உதவிகளை நல்கிடுவோம்! இன்னல்கள் அகற்றிடுவோம்! கருத்து வேறுபாடுகளால் எழும் பூசல்களைக் களைந்திடுவோம்! எங்கும் நல்லிணக்க உணர்வுகளை வளர்த்திடுவோம் என இந்த இனிய கிருஸ்துமஸ் திருநாளில் உறுதியேற்போம் என்று கூறி கிருத்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்.

ஜெய‌ல‌லிதா வெளியிட்டுள்ள‌ வாழ்த்து செய்தி:
"தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்" என்னும் பொன்மொழியைக் கூறி உலகத்தை ஆட்கொள்ள வந்த ஏசுபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடலின் ஓயாத அலை போல மனமானது இன்னும் மகிழ்ச்சி கிடைக்குமா என்று அலைந்து கொண்டே இருக்கிறது. எவன் ஒருவன் பிறருக்கு உதவ முன்வருகிறானோ அவனே நிறைவு உள்ளவனாக கருதப்படுவான் என்கிறார் ஏசுபிரான். மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தினால் அன்பு, சந்தோஷம், சமாதானம், அமைதி ஆகியவை பெருகி உண்மையான மகிழ்ச்சி அனைவரது வாழ்விலும் ஏற்படும். ஏசுநாதரின் போதனைகளுக்கு முற்றிலும் எதிரான சுயநலவாத, வன்முறைப் போக்கிற்கு முற்றுப் புள்ளி வைக்க இந்த நன்னாளில் சபதம் ஏற்போம்!

உலகத்தைக் காக்க தன்னையே தந்த தியாகத்தின் திருவுருவமான ஏசு பிரானின் இந்த இனிய பிறந்த நாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கட்டும்! அன்பு பெருகட்டும்! ஆனந்தம் தவழட்டும்! என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, மீண்டும் ஒரு முறை எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெய‌ல‌லிதாவை ச‌ந்தித்தார் வ‌ர‌த‌ராஜன்


ஜெயலலிதாவை இன்று (டிசம்பர் 24)காலை,போயஸ் கார்டனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ரங்கராஜன் எம்.பி.யும் உடன் இருந்தார்.

புதுமையான முறையில் சுற்றுலா பொருட்காட்சி

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சுற்றுலா பொருட்காட்சி ந‌ட‌ப்ப‌து வழ‌க்க‌ம். பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. “இக்கால சூழல் மாற்றத்தின் சவால்களை சமாளிப்பது சுற்றுலா” என்பது இந்த பொருட்காட்சியின் கருப்பொருள் ஆகும்.

இந்த பொருட்காட்சியில் 26 மாநில அரசுத்துறை நிறுவனங்களும், 12 அரசுத் துறை நிறுவனங்களும், 3 மத்திய அரசு நிறுவனங்களும் பிற மாநில அரசுத் துறை என மொத்தம் 42 அரசு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 115 கடைகளும், 26 விற்பனை அரங்குகளும் தனியார் மூலம் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை திருமலை நாயக்கர் மஉறால் வடிவமைப்பு பொருட்காட்சியின் முகப்பாக இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சுற்றுலாப் பொருட்காட்சி மூலம் 1.51 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு தனியார் நிறுவனத்துடன் இணைந்துள்ளதன் மூலம் ரூ. 2.20 கோடி லாபம் முன்பாகவே பெறப்பட்டுவிட்டது. நகர்ப்புற மக்கள் கிராமச் சூழ்நிலையை உணர்ந்து அனுபவிக்கும் வகையில் சிற்றூர் சுற்றுலா எனப்படும் சிறப்பு அரங்கு 25 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மக்களை மகிழ்விக்க கலை நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் மாமல்லபுரத்தின் கண்கவர் இடமான கடற்கரை கோயில் அமைப்பும் அண்ணா திறந்தவெளி கலையரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரிசா, குஜராத், சிக்கிம், மிஜோரம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், மணிப்பூர், அருணாசல பிரதேசம், புதுச்சேரி மற்றும் நாகலாந்து மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் அம்மாநில மக்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் இந்தாண்டு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நடன, நாட்டிய கலை நிகழ்ச்சிகள், பட்டி மன்றம், பாட்டு மன்றம் மற்றும் திரைப்படப் புகழ் கலைஞர்களின் பல்சுவை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மேலும் மலையேற்றம் சறுக்கு விளையாட்டு, மதில் ஏற்றம் பஞ்ச் ரிங் போன்ற வீர சாகச விளையாட்டுகளும் இந்தியாவிலேயே முதன் முறையாக ஹாட் ஏர் பலூன், பஞ்ச் ஜம்பிங் விளையாட்டுகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அமர்நாத் பனி லிங்கம் போன்ற அமைப்பு காணவரும் ஆன்மீக மக்களை பரவசப்படுத்தும்.

இதுமட்டுமல்லாமல் மீன்காட்சி, 40 வகையான கேளிக்கை விளையாட்டுகள் மற்றும் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பம்பர் ஜீப்,ஹனிபீ, கேப்ஸுல் போன்ற புதுமையான விளையாட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தரமான முறையில் தயாரிக்கப்பட்ட அறுசுவை உணவு வகைகள், செட்டி நாடு உணவு வகைகள் தமிழ்நாடு உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு சலுகை கட்ட ணமாக ரூ. 5ம் சிறுவர்களுக்கு ரூ 5ம் பெரியவர்களுக்கு ரூ. 10 ம் நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சி அலுவலக நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையும் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையும் செயல்படும். நுழைவு சீட்டிற்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும்.

இப்பொருட்காட்சியின் மூலம் சுமார் 5000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு 10.91 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்ததன் மூலம் ரூ. 57.55 லட்சம் வருமானம் கிடைத்தது. தொடர்ந்து வருமானத்தில் வளர்ச்சி கண்டு கடந்த முறை 14.45 லட்சம் பார்வையாளர்கள் மூலம் ரூ. 1.51 கோடி வருமானம் பெற்றுள்ளது.

இப்பொழுது நடைபெறும் சுற்றுலா நுhற்றாண்டு நிறைவு 35வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் 20 லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டுப் பயணிகள் வருகையில் 2006 ஆம் ஆண்டு 4வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2007ல் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது என்பது தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. உடனே சுற்றுலா பொருட்காட்சிக்கு கிள‌ம்பிவிட‌ வேண்டாம். ப‌ணிக‌ள் இன்னும் கொஞ்ச‌ம் பாக்கி இருப்ப‌தால் ப‌த்து ப‌தினைந்து நாட்க‌ள் க‌ழித்து சென்றால் முழுமையாக‌ அனுப‌விக்க‌லாம்.

நீதிப‌தி ம‌க‌ள் திரும‌ண‌த்தில் ஜெய‌ல‌லிதா




சென்னையில் இன்று (டிசம்பர் 20) நடந்த கர்நாடக மாநில நீதிபதி பி.டி.தினகரன் மகள் திருமண வரவேற்பில் ஜெயலலிதாவும் சசிகலாவும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மணமக்களுக்கு ஜெயலலிதா நினைவு பரிசு வழங்கினார்.
ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநிலச் செயலாளர் தாவூத் மியாகான், ஆகியோர் சந்தித்தார்கள்.


"கருணாநிதி அருகதையை இழந்துவிட்டார்" ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (டிசம்பர் 20)வெளியிட்ட அறிக்கை:

மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவித்ததில் இருந்து, தோல்வி பயத்தில் அ.தி.மு.க.வையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் குறை சொல்லும் வகையில், தினம் ஒரு தலைப்பில் புலம்பல் புராணங்களை பாடிக் கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் அறிவர். கருணாநிதியின் புலம்பல் புராணங்களைக் கண்டித்து நான் விரிவான அறிக்கையை வெளியிட்டிருந்தேன்.

தற்போது “எளிதாகப் புரிந்து கொள்வாய்” என்ற தலைப்பில் மீண்டும் ஒரு முகாரி ராகத்தைப் பாடியிருக்கிறார் கருணாநிதி. அதில், தன்னுடைய தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்ட ஒரு நாடகத்தை அறப்போர் என வருணித்து, சிறுதாவூர் பிரச்சினை என்று வந்தால் நான் மவுனம் சாதிப்பதாகக் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, மக்களை திசை திருப்பும் செயலாகும். சிறுதாவூர் பிரச்சினை குறித்து 2006 ஆம் ஆண்டே நான் விரிவான அறிக்கை வெளியிட்டு, இது குறித்த உண்மை நிலையை அறிய அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை வரவேற்பதாகவும் அறிவித்தேன். சிறுதாவூரில் நான் எந்த நிலத்தையும் வாங்கவில்லை. வாடகைக்கு எடுத்த வீட்டில் அங்கே செல்லும் போது தங்குகிறேன் என்று அப்போதே விளக்கிவிட்டேன்.

தற்போது, விசாரணை ஆணையத்தின் முன் இருக்கும் இந்தப் பிரச்சினை குறித்து கருணாநிதி ஒரு சிலரைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தச் செய்வது, அது குறித்து கருத்து தெரிவிப்பது விசாரணை ஆணையத்தின் நடவடிக்கைகளை கேலிக் கூத்தாக்குவதற்குச் சமம். இவ்வளவு வாய் கிழியப் பேசும் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கில், அனைத்து சாட்சிகளையும் கலைத்து தன் மகன் மு.க. அழகிரிக்கு விடுதலை வாங்கித் தந்தது குறித்தோ, மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பில் மூன்று அப்பாவிகளின் உயிர் பறிக்கப்பட்டது குறித்தோ, தமிழக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா அப்பகுதி மக்களின் நிலங்களை அபகரித்தது குறித்தோ, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலம் அங்கம்மாள் காலனி பகுதியில் வசித்து வந்த மக்களை வெளியேற்றி 20,000 சதுர அடி நிலத்தை அபகரித்தது குறித்தோ, அமைச்சர் நேரு வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான 20,000 சதுர அடி நிலத்தை அபகரித்து திருச்சியில் உள்ள அறிவாலயம் கட்டடத்தை கட்டியது குறித்தோ, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஒரு சில வருடங்களில் 755 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்து கொண்டிருக்கின்ற மத்திய அமைச்சர் ராசாவின் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனம் குறித்தோ, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கொள்ளையடித்த மத்திய அமைச்சர் ராசா குறித்தோ, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள கருணாநிதிக்கு மிகவும் நெருங்கியவரான தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்தோ, அதிகார துஷ்பிரயோகம் செய்து தன்னுடைய சொந்த நிறுவனத்திற்கு எரிவாயுவை பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு குறித்தோ, தி.மு.க-வினரால் அன்றாடம் கடத்தப்படும் மணல் கொள்ளை மற்றும் அரிசிக் கடத்தல் குறித்தோ, தென் மாவட்ட மக்கள் கண்ணீர் விடக் காரணமாயிருக்கும் தன் மகன் அழகிரி குறித்தோ, அண்மையில் நடைபெற்ற பணப் பரிமாற்ற நாடகம் குறித்தோ, இன்னும் எத்தனையோ தி.மு.க. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது உறவினர்களும் தமிழ் நாடு முழுவதும் நிலங்களை அபகரித்து கொண்டிருப்பது குறித்தோ, தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் வருமானம் குறித்தோ கருணாநிதி வாய் திறக்கத் தயாரா? இது குறித்தெல்லாம் விசாரணை ஆணையம் அமைக்கத் தயாரா?

எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகளைப் புனையும் கருணாநிதிக்கு இதைப் பற்றியெல்லாம் கேட்க தைரியம் இருக்கிறதா? வன்முறையாளர்களையும், கொள்ளையடிப்போரையும், அடுத்தவர்களின் சொத்துக்களை அபகரிப்போரையும் அமைச்சரவையிலும், தனது அருகிலும் வைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, மற்றவர்களைப் பற்றிப் பேசும் உரிமையை, அருகதையை என்றைக்கோ இழந்துவிட்டார்.

எவ்வளவுதான் ஒப்பாரி வைத்தாலும், மூழ்கும் நிலையில் உள்ள தி.மு.க-வுடன் யாரும் சேரத் தயாராக இல்லை. இருக்கின்ற ஒரே ஒரு கட்சியும் எப்படி விடுபடலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறது என்பதைக் கருணாநிதிக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். தன்னுடைய சுய லாபத்திற்காகவும், தனது குடும்ப முன்னேற்றத்திற்காகவும் தமிழர்களின் உரிமைகளைத் தாரை வார்த்தும், ஏழை, எளிய மக்களின் நிலங்களை தனது கட்சிக்காரர்கள் மூலம் அபகரித்துக் கொண்டும், நாளும் பொழுதும் மக்கள் விரோதச் செயல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியை தமிழக மக்கள் எளிதாக புரிந்து கொண்டுவிட்டார்கள். இதை கருணாநிதிக்கு மக்கள் தெரியப்படுத்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஜெய‌ல‌லிதாவை ச‌ந்தித்தார் பார்வ‌ர்டு பிளாக் க‌ட்சித் த‌லைவ‌ர்






ஜெயலலிதாவை இன்று (டிசம்பர் 20)போயஸ் கார்டனில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் பிஸ்வாஸ், திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் மதுரை புறநகர் அ.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளருமான முத்துராமலிங்கம், அம்பேத்கர் மக்கள் கட்சி தலைவர் வை.பாலசுந்தரம் ஆகியோர் சந்தித்தார்கள்.சி.பி.ஐ.சார்பில் பரதன், சி.பி.எம்.சார்பில் பிரகாஷ் கரத் ஆகியோர் சில நாட்களுக்கு முன்புதான் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தனர்.நாடாளுமன்ற தேர்தலுக்கு ஜெயலலிதா தயாராகி வருவதால் சின்ன கட்சித் தலைவர்கள் எல்லாம் போயஸ் கார்டனுக்கு படையெடுத்துகொண்டிருக்கிறார்கள்.

கருணாநிதியை சந்தித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்



திரைப்பட இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் முதல்வர் கருணாநிதியை இன்று (டிசம்பர் 18) திடிரென்று சந்தித்தார்.மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும் சொந்த விஷயங்கள் தொடர்பாகதான் அவர் முதல்வரை சந்தித்தாக தகவல்

திருமங்கலம்: அ.தி.மு.க‌ வேட்பாள‌ர் ம‌னு தாக்க‌ல்



திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முத்துராமலிங்கம் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை இன்று (டிசம்பர் 18) தாக்கல் செய்தார். முத்துராமலிங்கம் வேட்பாளர் என்று ஜெயலலிதா அறிவித்ததுமே அவர் காலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.


1996 2001 தி.மு.க. ஆட்சியில் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.வாக இருந்தார். தி.மு.க.வின் ஆட்சி முடியும் போது அவர் அதிரடியாக ஜெயலலிதா முன்பு அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அவரை அ.தி.மு.க.வுக்கு கொண்டு வந்ததில் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து பெரும் பங்கெடுத்துக் கொண்டார். தா.கிருட்டிணன் கொலை வழக்கு ஆந்திரா சித்தூரில் நடந்த போது அந்த வழக்கில் முத்துராமலிங்கம் அழகிரிக்கு எதிராக சாட்சி சொன்னார். அந்த வழக்கு ஆந்திராவுக்கு மாற்றுவதிலும் முத்துராமலிங்கம் சட்டப் போராட்டம் நடத்தினார். அந்த விசுவாசத்துக்குதான் இப்போது அவருக்கு ஸீட் கிடைத்திருக்கிறது.


தேர்தல் பணிகளை செய்வதற்காக ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் குழு ஒன்றையும் ஜெயலலிதா நியமித்திருக்கிறார்.

"எஸ்.வி.சேகர் தன்மானமிக்கவர்" ஸ்டாலின் பேச்சு


தமிழ்நாடு அரசின் உதவியுடன் இந்தியத் திரைப்பட திறனாய்வுக் கழகத்தினால் நடத்தப்படும் 6-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவினை’ இன்று (டிசம்பர் 17) துவக்கி வைத்து அமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரை:



இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் சார்பில் 6வது சர்வதேச திரைப்பட விழாவில், நானும் பங்கேற்கும் ஒரு சிறப்பான வாய்ப்பை பெற்றமைக்காக மகிழ்ச்சியடைகின்றேன், பெருமையடைகின்றேன். இந்த வாய்ப்பினை உருவாக்கித் தந்த இந்திய திரைப்பட திறனாய்வுக் கழக நிர்வாகிகளுக்கும், மற்றவர்களுக்கும் என் நன்றியையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழக அரசின் ஒத்துழைப்போடு, இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் சார்பில் விழா 10 நாட்கள் நடைபெற இருக்கின்றது. இந்த அமைப்பு முதன்முதலாக 1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 32 ஆண்டுகாலமாக இந்த அமைப்பு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு வருகிறது. பல்வேறு நாடுகளில், பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களை நம்முடைய தமிழகத்தில் உள்ள திரைப்படக் கலைஞர்கள் பார்வையிடுவதோடு அல்லாமல், அதன்மூலம், அதில் உள்ள தொழில்நுட்பங்களை அறிந்து, நம்முடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அந்தத் தொழில்நுட்பங்களை தமிழக திரைப்படங்களிலும் புகுத்திடவும், இந்த அமைப்பு சிறப்பான முறையில் மேற்கொண்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

இந்த அமைப்பின் மூலம் 2003ம் ஆண்டு தொடங்கி, முதல் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டுள்ளது. இந்த விழாவில், 17 நாடுகளைச் சேர்ந்த 63 திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டுள்ளதாக அறிகிறேன். இதனுடைய தொடர்ச்சியாக 2004, 2005, 2006, 2007 ஆண்டுகளில் முறையே 2வது, 3வது, 4வது மற்றும் 5வது சர்வதேச திரைப்பட விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளது. அதனுடைய தொடர்ச்சியாக 6வது சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கப்பட்டிருக்கிறது.

இங்கே வரவேற்புரையிலும் குறிப்பிட்டு சொல்லப்பட்டது, சட்டப்பேரவை உறுப்பனரும், இந்த அமைப்பின் துணைத் தலைவருமான எஸ்.வி.சேகர் பேசுகிறபோது பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார்கள். ஏற்கனவே நடைபெற்ற 5 சர்வதேச திரைப்பட விழாவிற்கு எந்த அளவிற்கு நாங்களெல்லாம் சிரமப்படவேண்டிய ஒரு சூழ்நிலை இருந்தது, ஆனால், இன்றைக்கு அந்த நிலைமை இல்லை என்பதற்கு என்ன காரணம் என்பதை அவர்கள் பெருமையோடு இன்றைக்கு இங்கே சுட்டிக்காட்டினார்கள். ஏற்கனவே நடைபெற்ற 5 சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும், இன்று நடைபெறும் இந்த விழாவிற்கும் உள்ள வேறுபோடு என்னவென்றால், ஏற்கனவே நடைபெற்ற 5 சர்வதேச திரைப்பட விழாக்களும், இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தினர் தாங்களாகவே நிதி திரட்டி விழாக்களை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த விழாவினைப் பொறுத்தவரையில், தமிழக முதல்வர் கலைஞர் வழங்கியிருக்கின்ற ரூபாய் 25 லட்சம் நிதியினைப் பெற்று இன்றைக்கு இந்த விழா சிறப்போடு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த திரைப்பட விழாவிலே திரையிடப்படக்கூடிய திரைப்படங்கள் அனைத்தும் சிறப்பான திரைப்படங்களாக அமைந்திருக்கிறது. அதனை குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், ‘துல்பான்’ என்ற திரைப்படம். இது கஜகஸ்தான் நாட்டின் திரைப்படமாகும். மேலும், இந்த திரைப்படம் கோவா மாநிலத்தில் சமீபத்திலே நடந்து முடிந்த சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான முதல் பரிசை பெற்றதோடு மட்டுமில்லாமல், ரூபாய் 45 லட்சம் பரிசுத்தொகையினை பெற்றுள்ளதாக தெரிவிக்கும் அந்தச் செய்தியினை பத்திரிகைகள் மூலமாக அறிந்திருக்கிறேன்.

தமிழ் மொழியைப் பொறுத்தவரையில், நம்முடைய சேகர் குறிப்பிட்டுச் சொன்னார், அதாவது, இந்த திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படங்களும் வெளியிட இருப்பதாக கூறினார். அந்த தமிழ்த் திரைப்படங்களில் முதல் திரைப்படம் அஞ்சாதே, இது சேகருக்கு மிகப் பொருத்தமான ஒன்று. அதனால், இந்த அமைப்பு இதனை முதல் படமாக தேர்ந்தெடுத்துள்ளது. சேகர் தன்மானம்மிக்கவர், சுயமரியாதை கொண்டவர். இந்த அமைப்பு, தமிழ் மொழியினைப் பொருத்தவரையில், தமிழ் திரைப்படமாக, அஞ்சாதே, சுப்பிரமணியபுரம், பூ, காஞ்சிவரம் போன்ற திரைப்படங்களை இந்த நிகழ்ச்சியின் மூலமாக தொடர்ந்து திரையிடப்பட இருக்கிறது.

இந்த சர்வதேச திரைப்பட விழாவானது, இதுவரை கோவா, கல்கத்தா, மும்பை, புனே, திருவனந்தபுரம், பெங்களூரு ஆகிய இடங்களில் , கோவா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடக மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் அவர்கள் சர்வதேச திரைப்பட விழாக்களை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்கள். அந்த வரிசையிலே, தமிழகமும், இந்த ஆண்டு முதல் தமிழக அரசின் ஒத்துழைப்பு பெற்று இடம்பெற்றுள்ள பெருமையினை இந்த விழா இன்றைக்கு பெற்றுள்ளது.

திரைப்படம் என்பது மக்களுடைய பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், அந்த நாட்டினுடைய மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு நெறிகளை பலப்படுத்தும் வகையிலே ஒரு ஆற்றல் வாய்ந்த கருவியாக இன்றைக்கு திரைப்படங்கள் விளங்கிக் கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டுதான், கலைஞர் , சமுதாயத்தில் நடுத்தர குடும்பத்திலே, அடித்தட்டு மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற அந்த கிராமப்புற மக்களும் திரைப்படங்களை பார்க்கவேண்டுமென்பதற்காகத்தான் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாகவே வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கெல்லாம் மிகவும் நன்றாகத் தெரியும். தமிழகத்தில் திரைப்பட வளர்ச்சிக்காக, தலைவர் கலைஞர் அரசு பல்வேறு சாதனைகளையும், பல்வேறு சலுகைகளை தொடர்ந்து வழங்கிவருகிறது.

கட்டபொம்மன், சேதுபதி, மருதுபாண்டியர் வாரிசுகளுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு

நமது நாட்டு விடுதலைப் போரில் பங்குகொண்டு வரலாற்றில் போற்றப்படும் வீரப்பெருமக்களின் தியாகத்தைப் பாராட்டி, அவர்களுடைய வழித்தோன்றல்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

அந்தவகையில், வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டிய சகோதரர்கள், இராமநாதபுரம் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி ஆகியோரின் வழித்தோன்றல்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் சிறப்பு ஓய்வூதியம் மாதம் 500 ரூபாய் என்பதை, அவர்களுடைய கோரிக்கையை ஏற்று மாதம் 1000 ரூபாய் என உயர்த்தி முதல்வர் கருணாநிதி இன்று (டிசம்பர் 16) ஆணையிட்டிருக்கிறார். இந்த ஆணையின்படி, வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித்தோன்றல்கள் 7 பேரும், மருதுபாண்டிய சகோதரர்களின் வழித்தோன்றல்கள் 132 பேரும், முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள் 80 பேரும் இனி மாதம் 1000 ரூபாய் வீதம் சிறப்பு ஓய்வூதியம் பெறுவார்கள்.

"கருணாநிதியைப் போல ஒப்பாரி வைக்கமாட்டேன்" ஜெயலலிதா அறிக்கை

ஜெய‌ல‌லிதா இன்று (டிச‌ம்ப‌ர் 16) வெளியிட்ட அறிக்கை:

கருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. அரசின் வன்முறை, அராஜகப் போக்கு மற்றும் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவுடன் கலந்து பேசி, அவரது பரிபூரண ஒப்புதலுடன் 9.1.2009 அன்று நடைபெற இருக்கும் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று அறிவித்தேன்.

என்னுடைய அறிவிப்பைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல், தோல்வி பயத்தில், தொடர் வண்டியில் உள்ள அனைத்து பெட்டிகளும் கழன்று, ஒரே ஒரு பெட்டி மட்டும் எப்பொழுது கழன்று கொள்ளலாம் என்ற ஊசலாட்டத்தில் இருக்கின்ற சூழ்நிலையில், 14.12.2008 அன்று ‘யார்தான் குறுக்கே நிற்க முடியும்?’ என்ற தலைப்பில் யசோதர காவியக் கதையைச் சொல்லி புலம்ப ஆரம்பித்துவிட்டார், விரக்தியின் விளிம்பில் இருக்கும் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி.

ம‌.தி.மு.க.விற்கும், அதன் பொதுச் செயலாளருக்கும் தெரியாமல், அக்கட்சியின் நான்கு மக்களவை உறுப்பினர்களைக் காட்டி, சுய லாபத்திற்காக இரண்டு மத்திய அமைச்சர் பதவிகளை தி.மு.க-விற்கு பெற்றுக் கொண்டது; இரண்டு துரோகிகளுக்கு பணத்தாசை காட்டி அந்தக் கட்சியை உடைக்க நினைத்து தோல்வி அடைந்தது; உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களையும், கூட்டுறவு சங்கத் தேர்தல்களையும் வன்முறையாளர்களைக் கொண்டு நடத்தி, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையே தாக்கி ரத்தக் களறியை ஏற்படுத்தியது; உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையே தோற்கடிக்க சதித் திட்டம் தீட்டியது; ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தது ஆகியவற்றை எல்லாம் அதிகார போதையில் பண்பாடற்ற கருணாநிதி மறந்துவிட்டார் போலும்!

கருணாநிதியால் குறிப்பிடப்படும் யசோதர காவியத்தில் வரும் யானைப் பாகனின் குணங்கள் அனைத்தும் கருணாநிதிக்கு உள்ளன என்பதை அனைவரும் நன்கு அறிவர். கருணாநிதியிடம் சென்றால் யானைப் பாகனிடம் மாட்டிக் கொண்டதற்குச் சமம் என்பதை அனைவரும் அறிவர். எனவே, யானைப் பாகனின் வஞ்சக வலையில் யாரும் விழத் தயாராயில்லை என்பதைக் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கருணாநிதியின் கூட்டணியில் இருக்கும் ஒரே ஒரு கட்சியும், கருணாநிதியின் குணங்களை அறிந்து கழன்று கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தனக்கு பொருந்தக்கூடிய யானைப்பாகனின் குணங்களை சுட்டிக்காட்டியது போதாது என்று, 15.12.2008 திங்கட் கிழமை அன்று, ‘திருமங்கலம் தேர்தலும் - திடீர் அறிவிப்பும்’ என்ற தலைப்பில் மீண்டும் ஒரு புலம்பல் புராணத்தைப் பாடியிருக்கிறார் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி. கருணாநிதியின் இந்த அறிக்கை என்னை குற்றம் சாட்டுவதாக, என்னை குறை கூறுவதாக உள்ளது.

திருமங்கலம் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவிப்பு திடீரென்று வெளியிடப்பட்டதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் உள்ளவர் கருணாநிதி. அப்படி இருக்கும் போது, என்னை கேட்டுக் கொண்டா இந்திய தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவிக்கும்? கருணாநிதி மத்தியில் உள்ள தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த இடைத் தேர்தலை ஒத்திவைக்க முயற்சி செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு என்னை ஏன் குறை சொல்கிறார் என்று புரியவில்லை.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், அ.தி.மு.க.விற்கும் இந்த இடைத் தேர்தல் அசௌகரியமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதற்காக நான் கருணாநிதியைப் போல் புலம்பத் தயாராக இல்லை. இடைத் தேர்தல் என்ற அறிவிப்பு வந்ததும், உடனே அதைச் சந்திக்க நான் தயாராகி விட்டேன். இதுதான் என்னுடைய இயல்பு. புலம்புவது, அங்கலாய்ப்பது, மற்றவர்களை கரித்துக் கொட்டுவது ஆகியவை கருணாநிதியின் இயல்பு.

“இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. எப்படி போட்டியிடலாம்? இந்தத் தேர்தலில் ம‌.தி.மு.க.தானே போட்டியிட வேண்டும்?” என்று கருணாநிதி வினவி இருக்கிறார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம்.தி.மு.க. திருமங்கலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. எங்கள் கூட்டணியில் உள்ள வைகோவும் நானும் பேசியதன் விளைவாக, தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு எங்களுக்கு விட்டுக் கொடுக்க வைகோ மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டதுடன், அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் அறிவித்து இருக்கிறார். இதில் கருணாநிதிக்கு என்ன வருத்தம்? இதில் அவர் என்ன குறை கண்டார்? என்று புரியவில்லை. அடுத்தவர் கூட்டணி குறித்து கருணாநிதிக்கு என்ன கவலை? இவரது கூட்டணி குறித்து நான் எந்த விமர்சனமும் செய்ததில்லை. எதிர்க்கட்சி கூட்டணி விஷயத்தில், தொகுதி பங்கீடு விஷயத்தில் தேவையில்லாமல் கருணாநிதி மூக்கை நுழைப்பது கண்டிக்கத்தக்கது.

அடுத்தபடியாக, நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வருவதற்கு முன்பு இந்தத் திருமங்கலம் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் அந்த உற்சாகம், நம்பிக்கை நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் வெற்றி முகட்டில் உட்கார வைக்கும் என்று நான் கணக்குப் போடுவதாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார். தேர்தல் என்று அறிவித்துவிட்டால், அதில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்றுதான் அனைத்துக் கட்சிகளும் நினைக்கும். அந்த வகையில், அ.தி.மு.க.வும் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கிறது. இதில் என்ன குற்றத்தை கருணாநிதி கண்டார் என்று எனக்கு புரியவில்லை.

ஒரு வேளை மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு முன், தி.மு.க-வின் மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காக, காங்கிரசார் தீட்டிய சதித் திட்டமாக இருக்கும் என்று கருணாநிதி சந்தேகப்படுகிறாரா? என்று தெரியவில்லை! கடந்த 31 மாத காலமாக பணபலம், அதிகாரபலம் ஆகியவற்றின் துணையோடு, தன் மகன் மு.க. அழகிரியின் அடியாட்களையும், ரவுடிகளையும் வைத்து, தேர்தல் அதிகாரிகளை பயமுறுத்தி அவர்களை பணிய வைத்து தேர்தல் வெற்றிகளை வன்முறை மூலம் சாதித்ததன் விளைவாக, ஜனநாயகம் என்பதே கருணாநிதிக்கு மறந்துவிட்டது போலும்!

இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பதிலோ, மக்களவைப் பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பதிலோ என்ன தவறு இருக்கிறது? என்னைப் பொறுத்த வரையில் தேர்தல் என்று அறிவித்துவிட்டால், ஜனநாயக ரீதியில் அதை துணிவுடன் எதிர்கொள்வதற்கு தயாராகிவிடுவேன். கருணாநிதி போல் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பது என் வழக்கம் கிடையாது.

கருணாநிதியின் பேச்சிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அவர் தேர்தலைக் கண்டு பயப்படுகிறார், அச்சப்படுகிறார் என்பது தெளிவாகிறது. அச்சத்தின் வெளிப்பாடுதான் இந்தப் புலம்பல் பேச்சு. வெள்ள நிவாரணப் பணி மேற்கொள்ளாமை, விலைவாசி உயர்வு, கடுமையான மின்வெட்டு, அரிசி கடத்தல், மணல் கொள்ளை, சாலைகள் பராமரிப்பின்மை என மக்கள் விரக்தியில் இருக்கும் அசாதாரண சூழ்நிலையில், நாள் முழுவதும் ஒலிபெருக்கி முன் புலம்பிக் கொண்டும், அங்கலாய்த்துக் கொண்டும், பிதற்றிக் கொண்டும், திண்ணைப் பேச்சுக்கள் பேசிக் கொண்டும், தன்னுடைய உளறல்களை கிறுக்கிக் கொண்டும் நேரத்தை வீணாக்கி விரயம் செய்து கொண்டிருக்கிறார் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி.

வரவிருக்கும் திருமங்கலம் தொகுதிக்கான இடைத் தேர்தலையும், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, கருணாநிதிக்கு தக்கப் பதிலடியை மக்கள் கொடுப்பார்கள்; தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

சர்கரை பொங்கல் தயாரிக்க பயன்படும் பொருட்கள் இலவசமாக வழங்க வேண்டும்

கருணாநிதி தலைமையில்,இன்று (டிசம்பர் 16),அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


தீ ர் மா ன ம். 1

நீண்டகாலமாகப் பரிசீலிக்கப்படாமல் இருந்த மண்டல் கமிஷன் பரிந்துரைகளை - திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையினை ஏற்று - நடைமுறைப்படுத்திட முன்வந்து; மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியதுடன்; காவிரி நடுவர் மன்றம் அமைத்திட உறுதுணையாக இருந்து; மாநிலங்களிடை மன்றம் அமைத்து; கலைஞரின் கோரிக்கைப்படி, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள வெளிநாட்டு விமானதளத்திற்கு அண்ணா பெயரையும், உள்நாட்டு விமான தளத்திற்கு காமராஜர் பெயரையும் சூட்டி; அரசியல் நாகரிகத்திற்கும், பண்பாட்டிற்கும், உயரிய இலட்சியங்களுக்கும் அடையாளச் சின்னமாக விளங்கியவரும், சமூகநீதிக் காவலரும், தமிழகத்தின் மீதும், தமிழ் மக்கள் மீதும் குறிப்பாகவும், சிறப்பாகவும் கலைஞரிடமும், திராவிட இயக்கத்தின் மீதும், நீங்காப் பற்றும் பாசமும் கொண்டிருந்த இந்தியத் திருநாட்டின் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மறைவு நமது நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.


தீ ர் மா ன ம். 2

மும்பை மாநகரில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் மற்றும் ஓபராய் ஓட்டல்கள், நரிமன் இல்லம் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் - பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வெளிநாட்டவர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள், காவல்துறையினர், தேசிய பாதுகாப்புப் படையினர், தீவிரவாத எதிர்ப்புப் படையினர் ஆகியோருக்கு இந்த உயர்நிலை செயல்திட்டக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன்; தீவிரவாத - பயங்கரவாத நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிவதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.


தீ ர் மா ன ம். 3

முதலமைச்சர் கலைஞர் தலைமையில், தமிழக அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் 4.12.2008 அன்று டெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து - இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம், அரசியல் ரீதியான தீர்வு காணும் முன்னோடி நடவடிக்கையாக, உடனடியாகப் போர்நிறுத்தம் செய்ய வேண்டுமென்று இலங்கை அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் - என்று எடுத்துரைத்ததன் விளைவாக; இலங்கையிலே நிலைமைகள் சீர்படுவதைப் பற்றிக் கவனிக்கவும், போரை நிறுத்துவதைப் பற்றி வலியுறுத்துவதற்காகவும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு நேரில் அனுப்பி வைக்க இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஒப்புக் கொண்டார்கள். அதற்கேற்ப, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி, உரிய பேச்சுவார்த்தைகளை நடத்தி, போர் நிறுத்ததற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென இந்தியப் பிரதமரையும், மத்திய அரசையும் இந்த உயர்நிலை செயல்திட்டக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


தீ ர் மா ன ம். 4

டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் சோனியா காந்தியின் சீரிய தலைமையிலான அகில இந்திய காங்கிரஸ் கட்சி மூன்று மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதோடு; இரண்டு மாநிலங்களில், ஏற்கெனவே இருந்த எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருப்பதற்கு உயர்நிலை செயல்திட்டக் குழு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.


தீ ர் மா ன ம். 5

தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை விழா எடுத்துச் சிறப்பாகக் கொண்டாடுவதை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு, சர்க்கரைப் பொங்கல் தயார் செய்வதற்குத் தேவையான பொருள்களை அரசின் சார்பில் இலவசமாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கலைஞரையும், தமிழக அரசையும் உயர்நிலை செயல்திட்டக் குழு அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

திருமங்கலம் தி.மு.க. வேட்பாளர் லதா அதியமான் கருணாநிதி அறிவிப்பு



தி.மு.க.உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டம் அறிவாலயத்தில் இன்று (டிசம்பர் 16) நடந்தது. கூட்டத்தில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு தி.மு.க. வேட்பாளராக ஆ.லதா அதியமானை நிறுத்துவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர்.
தேர்தல் பணிகளைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தேர்தல் பணிக்குழு மு.க.அழகிரி தலைமையில் அமைக்கப் பட்டுள்ளது.

அமைச்சரவையில் மாற்றம்: "வரும்போது வரும்" க‌ருணாநிதி பேட்டி

முதல்வர் கருணாநிதி இன்று (டிசம்பர் 16) நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி:- முக்கியப் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படுத்துவதைப் பற்றி தி.மு.க.பொதுக் குழுவில் முடிவெடுக்கப்படுமா?

பதில்:- பொதுக்குழு கூடியபிறகுதான் அது தெரியும்.

கேள்வி:- மு.க.ஸ்டாலினுக்கு எப்போது பதவி உயர்வு?

பதில்:- பொதுக்குழு கூடட்டும்.

கேள்வி:- நெல்லையில் நடைபெற்ற இளைஞர் அணி மாநாட்டில் ஸ்டாலினுக்கு புதிய பொறுப்பு வரும் என்று சொன்னீர்களே, எப்போது வரும்?

பதில்:- எந்த தேதியில் அவருக்கு புதிய பொறுப்பு வரும் என்று அப்போது சொல்லியிருக்கிறேனா?

கேள்வி:- யசோதர காவியம் பற்றி முதலில் எழுதினீர்கள். பிறகு திருமங்கலத்தில் இடைத்தேர்தலுக்கு இப்போது என்ன அவசரம் என்று கேட்டிருக்கிறீர்கள். ஏன்?

பதில்:- இப்போது என்ன அவசரம் என்று நான் கேட்கவே இல்லை. அந்த நோக்கத்தோடு அது எழுதப்படவில்லை. மாநில அரசைக்கூட கலந்து கொள்ளாமல், புயல், வெள்ளம் இவை எல்லாம் வந்து பெரிய பாதிப்பு மாநிலத்தில் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையிலே தேர்தலை வைத்துக் கொள்ளலாமா என்ற யோசனைகூட கேட்கப்படவில்லை. அதைப்பற்றி அபிப்பிராயம் சொல்லக்கூட எங்களுக்கு வாய்ப்பளிக்காமல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கேள்வி:- இடைத்தேர்தலை சந்திக்கத் தயங்குகிறீர்களா?

பதில்:- (சிரித்து விட்டு) இதுதான் பதில்.

கேள்வி:- தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக திருமங்கலத்திற்கான இடைத்தேர்தலை அறிவித்திருக்கும் சூழ்நிலையில்; மங்களூருக்கான இடைத்தேர்தலை தடுத்து நிறுத்திவிட்டு திருமங்கலத்திற்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவது ஏன் என்று வைகோ உங்களைக் கேட்டிருக்கிறாரே?

பதில்:- இதைப்பற்றி நான் விரிவாக விளக்கம் கொடுத்து, அது ஏடுகளில் வெளிவந்திருக்கிறது. அதைக்கூட அறிந்து கொள்ளாத அரசியல் அப்பாவிகளுக்கு நான் எப்படி புதிதாக விளக்க முடியும்? அதாவது ஒரு ராஜினாமா கடிதம் கொடுத்தால் அதை எப்படி கொடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைப் பிரச்சினைக்காக நானும், பேராசிரியரும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தோம். அப்படிச் செய்தபோது, அன்றைய எம்.ஜி.ஆர். ஆட்சியில் பேரவைத் தலைவராக இருந்த ராஜாராமுக்கு நாங்கள் அனுப்பிய ராஜினாமா கடிதங்களை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
அதற்குக் காரணம் - நானும் பேராசிரியரும் எங்களது கடிதங்களில் ராஜினாமாவுக்கான காரணத்தைச் சுட்டிக் காட்டியிருந்ததால், அதை ஏற்கத்தக்கதல்ல என்றும்; பதவி விலகல் கடிதம் என்பது ஒன்றிரண்டு வரிகளில் நான் இந்த பொறுப்பிலிருந்து இந்த தேதியில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றுதான் இருக்க வேண்டுமேயல்லாமல் - அதற்கு காரணங்களை எழுதக்கூடாது - நீங்கள் காரணங்களை எழுதியிருக்கிறீர்கள் - எனவே உங்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொள்வதற்கு இல்லை என்று அன்றைய பேரவைத் தலைவர் மறுத்துவிட்டார். அதனால், நானும் பேராசிரியரும் - பேரவைத் தலைவர் சுட்டிக்காட்டி அறிவுறுத்திய அதே முறையில், அதே வடிவத்தில் ராஜினாமா கடிதங்களை எழுதி அனுப்பி, அதன்பிறகுதான் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன; நாங்கள் பதவி விலகினோம்.
இப்போது செல்வம் விதிகளின்படி அந்த முறையைப் பின்பற்றாமல், அவரது ராஜினாமா கடிதத்திலே வேறு விஷயங்களை எழுதிய காரணத்தால் அதை ஏற்றுக் கொள்ள இயலாது என்று செல்வத்திற்கு சட்டப்பேரவை அலுவலகத்திலிருந்து தாக்கீது அனுப்பப்பட்டுவிட்டது. பதவி விலகி விட்டார் என்பது இன்னமும் உறுதி செய்யப்படாத நிலையில், எப்படி ஓர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்க முடியுமென்று கோபால்சாமியையே கேளுங்கள். நான் சொல்வது தேர்தல் ஆணையத்தின் கமிஷனர்.

கேள்வி:- திருமங்கலம் இடைத்தேர்தல் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோடித் தேர்தலா?

பதில்:- பத்திரிகைகள் அவரவர்களுடைய நோக்கத்திற்கு தகுந்தவாறு, விருப்பத்திற்கு தக்கவாறு எதையும் எழுதலாம். முன்னோட்டமாகக் கருதித்தான் தி.மு.க.மற்றும் தோழமைக் கட்சிகளின் செயல்வீரர்கள் பாடுபட வேண்டுமென்று உங்கள் மூலமாக அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி:- இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, பா.ம.க.வும் உறுதியாக இல்லாத நிலையில் உங்களது வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது.

பதில்:- தேர்தல் முடிவுகள் வந்ததற்குப்பிறகு தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி:- பா.ம.க. நிலைப்பாடு எப்படி உள்ளது.?

பதில்:- நான் ஆதரவு கேட்டு அவர்களிடத்திலே பேசியிருக்கிறேன்.

கேள்வி:- திருமங்கலம் இடைத்தேர்தல் திருப்புமுனையை ஏற்படுத்துமென்று விஜயகாந்த் சொல்லியிருக்கின்றாரே?

பதில்:- ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் அவர்களது கட்சியைப் பற்றி நம்பிக்கையோடு பேசுவதை நான் மறுக்கவும் இல்லை; குறுக்கிடவும் விரும்பவில்லை.

கேள்வி:- அமைச்சரவையில் எப்போது மாற்றம் வரும்?

பதில்:- வரும்போது வரும்.

கேள்வி:- இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்று உங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டதே! அது இன்னும் நிறைவேற்றப் படவில்லையே! அதுகுறித்து நீங்கள் மீண்டும் வலியுறுத்துவீர்களா?

பதில்:- அதைப்பற்றி இன்றைக்குக்கூட ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மத்திய அமைச்சரை இன்று இரவு சந்தித்து அது சம்பந்தமாக வலியுறுத்தி பிறகு அறிவிப்பார்.

கேள்வி:- அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் பொங்கல் அன்று திட்டமிட்டபடி தொடங்கப்படுமா?

பதில்:- அதுதொடர்பான வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன் தொடங்கப்படும்.

கேள்வி:- திருமங்கலம் தொகுதியை ம.தி.மு.க.விடம் இருந்து அ.தி.மு.க. பறித்துக் கொண்டதே! அதைப்பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பெருந்துறை இடைத் தேர்தல் உதாரணத்தைக் காட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே...?

பதில்:- தி.மு.க. இடைத் தேர்தலில் மட்டுமல்ல; பொதுத் தேர்தலிலேயே எவ்வளவு பெருந்தன்மையோடு நடந்து கொண்டு வருகிறது என்பது வரலாறு. உ.ரா.வரதராஜன் “ஜனசக்தி”யிலும், “தீக்கதிரிலும்” அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நான் வரலாற்றை மாற்றுவதாகச் சொல்லிவிட்டு அவரே வரலாற்றை மாற்ற முயற்சி செய்திருக்கிறார். உண்மை என்னவென்றால், பெருந்துறையில் இடைத்தேர்தல் வந்ததற்கு காரணம் சோஷலிஸ்ட் கட்சியினுடைய உறுப்பினர் அங்கு போட்டியிட்டார். தி.மு.க. ஆதரவோடு அவர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவர் சில மாதங்களுக்குப் பிறகு இறந்துவிட்டார். அதற்கு ஓர் இடைத்தேர்தல் வந்தது. அந்த இடைத்தேர்தலில் தி.மு.க. அதே கட்சியைத்தான் ஆதரித்தது. இப்பொழுது திருமங்கலத்தில் அவர்கள் மாற்றிக் கொண்டதைப் போல அப்போது நாங்கள் மாற்றிக் கொள்ளவில்லை. அது மாத்திரமல்ல; இறந்து போனவருடைய இடத்தில் அதே கட்சியைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிற்பதற்கும் தி.மு.க. ஆதரவு அளித்து அவர் வெற்றியும் பெற்றார். அவரும் காலமாகி விட்டார். அதற்குப்பிறகு ஓர் இடைத்தேர்தல் வந்தபோது - அதற்கிடையே கூட்டணி ஒப்பந்தத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டு விட்டது. எனவே தி.மு.க. அங்கே தானே போட்டியிட்டு வெற்றி பெற்றது. இவ்வளவும் நாடறிந்த செய்திகள்.

கேள்வி:- இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மூன்றாவது அணியை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டிருப்பதாக சொல்லி வருகிறார்கள். அந்த உறுதிக்கு மாறாக - இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுக்கிறார்களே?

பதில்:- நீங்கள் சொன்ன செய்தியை நான் கேட்டுக் கொள்கிறேன். அவ்வளவுதான்.

கேள்வி:- உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு சம்மந்தமான வழக்கில் உயர்த்தப்பட்ட வருமான உச்சவரம்பின் காரணமாக இடஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்காது என்று சொல்லப்படுகிறதே?

பதில்:- இடஒதுக்கீட்டில் வருமான வரம்பைப் புகுத்துவதை நாங்கள் என்றைக்குமே ஏற்றுக் கொண்டதில்லை.

கேள்வி:- நான்கரை இலட்சம் என வருமான வரம்பை உயர்த்தியது அதிகம் என்று உச்சநீதிமன்ற வழக்கில் நாயர் சர்வீஸ் சொசைட்டி தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. அதிகப்படுத்தப்பட்ட வருமான வரம்பின் காரணமாக பணக்காரர்களே பயன் அடைவார்கள். ஏழைகளுக்கு இடஒதுக்கீட்டுப் பயன் கிடைக்காது என்று சொல்லப்படுகிறதே? தி.மு.க. அந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமா?

பதில்:- நான் பொதுவாகச் சொல்ல விரும்புவது - எந்த நீதிமன்றத்திலே, யார் வந்து எத்தகைய சட்ட நுணுக்கங்களையோ அல்லது பொருளாதார தத்துவங்களையோ காட்டி வாதிட்டாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் - இன்னும் சொல்லப்போனால் திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரையில் - நான் திராவிட இயக்கம் என்று சொல்வது பெரியார், அண்ணா ஆகிய இரண்டு தலைவர்களுடைய கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ள இயக்கங்களைப் பொறுத்தவரையில் - வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், சமூகநீதி இவைகளெல்லாம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அல்லாமல் உயர்ந்த மக்கள் என்பவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான ஆதாயங்கள் எல்லாம் போய்ச் சேராமல், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், மிகப் பிற்படுத்தபட்டவர்களுக்கு மட்டுமே முழுமையாக போய்ச் சேர வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் பாடுபடுவோம்; இப்போதும் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம்; தொடர்ந்து நாங்கள் பாடுபடுவோம்.

பாராளுமன்றத்தில் வி.பி.சிங் சிலை வைப்போம்: கருணாநிதி பேச்சு

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மறைவிற்காக வீரவணக்க நிகழ்ச்சி சென்னையில் இன்று (டிசம்பர் 12)நடைபெற்றது. இந்த வீரவணக்க நிகழ்ச்சியில், வி.பி.சிங்கின் திருவுருவ படத்தைத் திறந்து வைத்து, முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை:

இப்படியொரு நாள் உருவாகும், அதில் நாம் கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று அந்த நிலையை எண்ணி எண்ணி நெஞ்சு விம்மிய மாதங்கள் கடந்து, நாட்கள் ஓடி, அது நடந்தே விட்டது என்ற முறையில், சமூகநீதிக் காவலர் இந்திய திருநாட்டினுடைய முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கை நாம் இழந்தே விட்டோம். அவரைப் படமாக இங்கே அலங்கரித்து வைத்திருக்கின்றோம். வீரமணி குறிப்பிட்டதைப் போல் அவர் படமாக மாத்திரமல்ல, ஒரு பாடமாகவும் விளங்குகிற காரணத்தால், அவரை குறித்துப் பேசுகிற நேரத்திலே நாம் கற்க வேண்டிய பாடங்கள் எவை எவை என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டிய இன்றியமையாமை நமக்கு ஏற்பட்டிருக்கின்றது. வீரமணி உரையாற்றும்போது, வி.பி.சிங்குக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள், உறவுகள், நட்பின் ஆழம் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து, இவரை அழைத்து படத்தைத் திறந்து வைப்பதுதான் பொருத்தம் என்பதற்காக, அழைத்தோம் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் முடிவாக அவர்கள் உரையை நிறைவு செய்தபோது வி.பி.சிங் ஒரு நினைவு சின்னம் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களுடைய நெஞ்சிலே நிலைக்கக்கூடிய சின்னம் அமைத்திட வேண்டும், அது எப்படி, எவ்வாறு, என்றைக்கு என்பதையெல்லாம் கலந்துதான் தீர்மானித்து அறிவிக்க வேண்டும் என்று அதை வேண்டுகோளாக அல்ல ஒரு கட்டளையாக, அவருக்கு என்பால் உள்ள உரிமையின் காரணமாக, அந்த உரிமை இன்று நேற்று ஏற்பட்டதா என்றால் இல்லை, தந்தை பெரியார் வழிநின்று உழைக்கின்ற ஒரு அருமை தொண்டர், அவருடைய மாணவர், என்னுடைய நண்பர் என்பதால் மாத்திரம் அல்ல, தந்தை பெரியாருக்குப் பிறகு அவருடைய கொள்கைகளை, எண்ணங்களை இன்றைக்கு காப்பாற்றி வருகின்ற அவருடைய உண்மையான வழித்தோன்றல் என்ற முறையில் இந்த ஆணையை எனக்குப் பிறப்பித்திருக்கின்றார்.

இதை நான் இங்கேயே அறிவிப்பது,என்னைப் பொறுத்தவரையில் ஒரு விளம்பரமாகத்தான் ஆகும் என்பதால், நான் வீரமணியுடன் கலந்துபேசி, அந்த நினைவுச் சின்னம் எப்படி அமையவேண்டும், எங்கே அமைய வேண்டும், எந்த வகையிலே அமையவேண்டும், எத்தகைய நினைவுச் சின்னமாக அது இருத்தல் வேண்டும் என்பது பற்றி விரைவில் அறிவிப்போம். சமூகநீதிக் காவலர் என்ற அந்த சொற்றொடர் இந்தியாவிலே இன்றைக்கு ஒருவருக்குப் பொருந்தும் என்றால்,அவர் வி.பி.சிங்தான். நான் இதைச் சொல்வதற்குக் காரணம் அவர் ஒரு சாதாரண மனிதராக இருந்து, பதவி பொறுப்புக்களிலே இல்லாதவராக இருந்து, தன்னுடைய தியாகத்தால், உழைப்பால், ஆற்றலால் சமூகநீதிக்குப் பாடுபட்டிருப்பாரேயானால் அது ஆச்சரியப்படத் தக்க ஒன்றல்ல; போற்றப்படத் தக்க ஒன்றாக இருக்கலாம். ஆனால், இது ஆச்சரியப்படத்தக்கதும், போற்றப்படத்தக்கதுமுமான இரண்டு காரணங்களுக்காக இந்த சமூநீதிக் காவலர் என்பது அவருக்கு மிகமிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. வீரமணி பேசும்போது சொன்னார்கள் புத்தரைப் போல் அரண்மனையிலே பிறந்திருந்தாலும், சாதாரண ஏழை எளிய மக்களுக்காக, உயர்சாதியிலே பிறக்காத மக்களுக்காக, நடுத்தர மக்களுக்காக, பின்தங்கியவர்களுக்காக, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர்களுடைய சமூகநீதி கோரி அதற்காக போரிட்டு, அந்தப் போரிலே பல இழப்புக்களை சந்தித்து, ஏன் இந்தியாவை ஆளுகின்ற சிறப்பான பெருமைமிகுந்த அந்த நிலையைத் துறந்து இந்த காரியத்தை அவர்கள் சாதித்தார்கள். மண்டல் கமிஷன் பல ஆண்டுகளாக, ஏன் இந்தியாவில், தமிழ்நாட்டில் எல்லோருடைய வாயிலும் விளையாடிய ஒரு சொல் - உச்சரிக்கப்பட்ட ஒரு சொல் மண்டல் கமிஷன். இதை பல ஆண்டுகளுக்கு முன்பே மத்தியிலே காங்கிரஸ் அரசு உருவாக்கியது என்றாலுங்கூட, அந்த மண்டல் குழு செய்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துகின்ற காரியத்திலே இறங்காமல், அதைக் கிடப்பிலே போட்டதும் காங்கிரஸ்தான்.

அந்த ஆட்சியிலேகூட மத்தியிலே சிலகாலம் ஒரு அமைச்சர் பதவியை வகித்து, மிகப்பொறுப்பான அமைச்சர் பதவிகளை எல்லாம் வகித்து, பின்னர் அந்த பொறுப்பிலே இருந்து விலகி வெளிவந்து, ஒரு கட்சியை உருவாக்கி, அந்த கட்சியின் சார்பிலும் தேர்தலில் போட்டியிட்டு, அதன்பிறகு நம்மைப் போன்றவர்களுடைய தொடர்பெல்லாம் அவருக்கு ஏற்பட்டு, அதன் காரணமாக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏறெடுத்துப் பார்த்து, அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்கின்ற உயர்ந்த உள்ளத்தோடு அவர் பணியாற்றத் தொடங்கினார். அப்படி பணியாற்றியதற்கு அவருக்குக் கிடைத்த பரிசு என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். 1990ஆம் ஆண்டில் வி.பி.சிங் பதவியில் இருந்து விலக நேரிட்டது. அதற்கான காரணத்தைத்தான் நான் இப்போது உங்களிடத்திலே சொன்னேன். மண்டல் கமிஷனை ஏன் நிறைவேற்ற வேண்டும், அந்த பரிந்துரைகளை ஏன் நிறைவேற்ற வேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம் என்றால், அதற்கு ஈடாக ஒரு குழுவினுடைய அறிக்கை, பரிந்துரைகள், சிபாரிசுகள் இவைகளை நிறைவேற்றி வருகின்ற இந்திய நாட்டினுடைய மாநிலங்களிலே ஒன்று நம்முடைய தமிழகம். இந்த தமிழகத்திலேதான் இன்றைக்கு எந்த பெயரால் இந்த மண்டபம் திகழ்கிறதோ, அந்தப் பெயருக்குரிய தியாகராயருடைய தலைமையில் நீதிக்கட்சி காலத்தில் முத்தையா போன்றவர்களால், டாக்டர் நாயர் போன்றவர்களால், நடேசனார் போன்றவர்களால் புரட்சிகரமாக அறிமுகப்படுத்தப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடிகட்டி பறந்து, ஏழை எளிய மக்களை நாலாந்தர சாதி மக்கள் என்றெல்லாம் தூற்றப்பட்டவர்களை, தொலைதூரத்திலே நிற்க வைக்கப்பட்டவர்களை, ஆதிதிராவிடர்கள், சூத்திரர்கள் என்று சொல்லப் பட்டவர்களையெல்லாம் கைதூக்கிவிட நீதிக்கட்சி என்ற பெயரால் அமைந்திருந்த இயக்கம் இந்த புரட்சியை வி.பி.சிங் நினைப்பதற்கு முன்பே, இன்னும் சொல்லப் போனால், அவர் பிறப்பதற்கு முன்பே அல்லது பிறந்து பள்ளிக்கூடத்திலே படித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே தமிழகத்தில் அந்தப் புரட்சியை ஏற்படுத்திய பெருமை இந்த மண்டபத்தினுடைய பெயருக்கு உரியவர் யாரோ அவருக்கு ஆதரவாக இருந்து அவரை மேலும்மேலும் ஊக்கப்படுத்தி, அவரைப் போன்றவர்களையெல்லாம் முன்னிறுத்தி, சூத்திரப் பட்டத்திற்கு உரியவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்களுக்கு உயர் பதவிகளையும், உயர் நிலையையும் ஏற்படுத்திய அந்தப் பெருமை, அவர்கள் சொன்னார்களே பாராளுமன்றத்தில் ஒரு பெயரை வி.பி.சிங் சொன்னார் என்று - அந்தப் பெயருக்குரிய நம்முடைய தந்தை பெரியார் அவர்களால்தான் இன்றைக்கு அந்த மகிழ்ச்சிக் கடலிலே ஆழ்ந்திருக்கின்றோம்.

நமக்குக் கிடைத்திருப்பது காந்தியடிகளால் அல்லது அவருடைய தளபதிகளால், அவருடைய தொண்டர்களால் இந்த மண்ணுக்குச் சுதந்திரம் கிடைத்தது என்றாலுங்கூட, மண்ணுக்குக் கிடைத்தச் சுதந்திரத்தைவிட மேலான சுதந்திரமாக, நம்முடைய உரிமைகளுக்கு, மரியாதைக்கு, நம்முடைய இனத்திற்கு கிடைத்த சுதந்திரம் அதுதான். சுயமரியாதையாக நாம் நடத்தப்பட்ட சுதந்திரம் இருக்கிறதே,அந்த சுதந்திரத்திற்கு காரணகர்த்தா தந்தை பெரியார். அந்த பெரியாருடைய மாணவர்களெல்லாம் நாங்கள் - அவருடைய தளபதிகள்தான் நாங்கள் என்பதை அறிந்துகொண்ட வி.பி.சிங் இவர்களுடைய துணையோடு நாம் நம்முடைய இலட்சியத்தை, குறிக்கோளை இந்த பிரதமர் பதவி காலத்திலேயே நிறைவேற்றலாம் என்ற நம்பிக்கை கொண்டார்கள். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. 1990ஆம் ஆண்டு வாக்கில் அவர்கள் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வெளியிட்டு, ஆணை பிறப்பித்து, இதை நாடு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறியபோது, எத்தகைய புரட்சிகளெல்லாம் நடைபெற்றன - எத்தனைபேர் தீக்குளித்தார்கள் - மன்னிக்க வேண்டும் - தீக்குளிக்க வைக்கப்பட்டார்கள் - எத்தனை மாணவர்களை அந்த போராட்டத்தில் ஈடுபடுத்தினார்கள். யார் அந்த மாணவர்கள்? உயர் குலத்திலே பிறந்த மாணவர்கள் - அக்ரகாரத்துப் பிள்ளைகள் - நடுத்தர மக்களால், ஏழை எளிய மக்களால், சூத்திரர்கள் என்று சொல்லப்பட்டவர்களால் இந்த மண்டல் கமிஷனுக்கு ஒரு சிறப்பு வந்துவிடக் கூடாது. மண்டல் கமிஷன் அவர்களுக்கு ஒரு ஆறுதலாக, அவர்களைத் தூக்கிவிடுகின்ற கருவியாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக வி.பி.சிங் கொண்டுவந்த அந்த ஆணையை எதிர்த்து பெரும்புரட்சியே வடபுலத்திலே நடைபெற்றது.

அந்த புரட்சி நடைபெற்றதன் காரணமாக வி.பி.சிங் தன்னுடைய பதவியை துச்சமாகக் கருதி தூக்கி எறிந்து விட்டு வெளிப்பட்டார்கள். அப்படி வெளிப்பட்டபோது இந்தியாவிலேயே முதன்முதலாக அவரை வரவேற்று - மன்னிக்க வேண்டும் - சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து அவரை வரவேற்றது திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கம் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. அதில் அவர் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே அது சாதாரணமானது அல்ல. அவர்கள் சென்னைக்கு விமானத்திலே வந்து இறங்கியபோதும் சரி, பிறகு தமிழ்நாடு முழுதும் அவரோடு நாங்கள் இணைந்து தூத்துக்குடி வரையில், கன்னியாகுமரி வரையில் அந்த வரவேற்பு நிகழ்ச்சிகள், பாராட்டு நிகழ்ச்சிகள் எதற்கு பாராட்டு - அவர் பிரதமராக ஆகிவிட்டார் என்பதற்காகவா பாராட்டு - அல்ல - பிரதமர் பதவியையே தூக்கி எறிந்து விட்டார் கொள்கைக்காக என்பதற்காக அவரைப் பாராட்டி அவரை வாழ்த்தி வழியனுப்புகிற நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் மூலைமுடுக்கெல்லாம், பட்டிதொட்டியெல்லாம், பட்டிணக் கரைகளெல்லாம் நாங்கள் நடத்திய போது மதுரை மாநகர விழாவிலே சொன்னார்கள் - இரவு மூன்று மணி நாங்கள் மதுரைக்கு போய்ச் சேரும்பொழுது - மூன்று மணிக்கு அந்த மாபெரும் பொதுக்கூட்டத்திலே வி.பி.சிங் பேசும்பொழுது சொன்னார் - மண்டல் கமிஷன் ஆணை பிறப்பிக்கப்பட்டு, அதனுடைய விளைவாக நான் பதவியை இழந்தபிறகு என்னோடு இருந்தவர்களையெல்லாம் திரும்பிப் பார்க்கிறேன் - யாரையும் காணவில்லை. ஆனால் என்னோடு இருந்தால் இப்படிப்பட்ட ஆபத்து வரும், ஆட்சிக்கே ஆபத்து வரும் என்று தெரிந்தும், என்னோடு இருப்பவர் கருணாநிதி ஒருவர் தான் என்று சொன்னார். அவர் சொன்னதுபோல ஆபத்து வந்தது. வந்து முடிந்தது அதுவும் உங்களுக்குத் தெரியும்.

அப்படி அவரை ஆதரித்தாலே ஆபத்து - ஆட்சி பறிபோகும் என்று தெரிந்தும், அந்த ஆட்சியைப் பற்றி கவலைப்படாமல் வி.பி.சிங்கை அவர் பிறப்பித்த மண்டல் கமிஷன் ஆணையை ஆதரித்ததற்கு காரணம் எங்களுக்கு கோட்டையோ கொலுமண்டபமோ அல்ல -கோலோச்சுவது அல்ல பெரிது - கொள்கைதான் பெரிது என்பதற்காகத்தான் அன்றைக்கே வி.பி.சிங்குக்கு பெரும் வரவேற்பு இங்கே அளித்தோம். சிலபேர்கூட - நான் நினைவுபடுத்த விரும்பவில்லை - வி.பி.சிங் வந்தால் அவரது முகத்திலே யாரும் விழிக்காதீர்கள் - கதவை தாளிட்டு கொண்டு வீட்டுக்குள்ளே போய்விடுங்கள் - அவரைப் பார்ப்பதே பாவம் - யாரும் வெளியிலே வந்தால் ஜாக்கிரதை - என்றெல்லாம் அறிக்கை வெளியிட்ட அன்பர்களெல்லாம்கூட உண்டு. அதையும் மீறி பல்லாயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் தமிழ்நாட்டு மக்கள் அந்த மாமனிதரை - அந்த அதிசய மனிதரை - அந்த வீரமிக்க மனிதரை - அந்த சுயமரியாதைச்சுடரை - பெரியாரைப் பார்க்காமேலேயே பெரியாருடைய கொள்கைகளை பின்பற்றிய அந்த பெருந்தகையைக் காண நாடே படையெடுத்தது. சென்னையிலே இருந்து குமரிமுனைவரை இலட்சக்கணக்கான மக்கள் வரிசை வரிசையாக நின்று அவரை வரவேற்றார்கள். அந்த நேரத்தில் நம்முடைய தமிழர் தலைவர் இங்கே நினைவுபடுத்தினார் - வி.பி.சிங்க்கும் கவிதைக்கும் உள்ள தொடர்பு - அதன் காரணமாக எனக்குள்ள ஆர்வம் இவைகளையெல்லாம் இங்கே நினைவுபடுத்தினார்கள். அப்பொழுது சென்னை-கலைவாணர் அரங்கத்தில் 15.9.1990 அன்று என் தலைமையிலே ஒரு கவியரங்கம் - அந்த கவியரங்கில் வி.பி.சிங் பற்றியும், அவருடைய கொள்கை கோட்பாடு, அதன் காரணமாக ஏற்பட்ட நிலைமைகள் இவைகளைப் பற்றியும் - மண்டல் கமிஷனுக்கு தமிழ்நாட்டிலே இருந்த வரவேற்பு - வடபுலத்திலே கிளப்பப்பட்ட எதிர்ப்பு - இவைகளையெல்லாம் ஒப்பிட்டுக் காட்டி, அந்த கவியரங்கத்திலே தலைமைக் கவிதையை நான் பாடினேன். அதை நினைவு கூர்கிற நேரமாக இந்த நேரம் பொருத்தமான நேரமாக இருப்பதால் - அவருடைய படத்தைத் திறந்து வைக்கிற நேரத்தில் அதை நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

தென் கோடி மூலையிலேபொய்ப்பித்தர் மாயவாதம்;மண்டல் கமிஷனுக்கு எதிராகஎடுபடவில்லை யென்று;தெரிவித்தோம் தேசத்துக்கேஅறிவிப்போம் அகிலத்துக்கும்!
வாழை மரம்; தன்னைவெட்டிக் கட்டியதை அறியாமல்வருவோரை வரவேற்கும் மணவீட்டில்!அதுபோல வடக்கில் உள்ள பிற்பட்டோர்அவர் நிலை அறியாது கிடக்கின்றார்.அதனாலே மண்டலுக்கு அங்குள்ள மாநிலத்தில் எதிர்ப்பதிகம் - ஆனால்இங்கு, சுண்டலுக்குக் கையேந்திச்சூழ்ந்து நிற்கும் அடிமைக் கூட்டம் மிகக்குறைவு!அஃது ஏன்? என்ற கேள்விக்குஇதோ விளக்கம்!எழுபத்து ஐந்து ஆண்டின் முன்னேஎழுந்தது பார் ஓர் இயக்கம் - சர் பிட்டிதியாகராயப் பெரியோன் கண்டதிராவிடப் பேரியக்கம்!உழுது பண்படுத்திஉரிய முறை நடவு நட்டுக் காவல் செய்தால்அறுவடையின்போதுஅழுது புலம்பத் தேவையில்லை.அந்நாள் தொட்டு இந்நாள் வரைபதப்படுத்தப்பட்ட நிலம் இது!பக்குவமடைந்த பூமி! அதுதிராவிட இயக்கம் திரட்டிய செல்வம்.நெல் விதைத்தால், தவறி இங்குப்புல் விளையாது!கல்வி வேலை வாய்ப்புகளில்சமூக அடிப்படையே தேவையென்னும்நல்லதோர் இட ஒதுக்கீடேநம் இயக்க முழக்கமாகும்!அதனாலே ஆதிக்க புரிக்கூச்சல் எல்லாம்அரவமொன்று தடி கண்டால்அடங்குதல் போல் அடங்கிப் போகும். சிறு நரிகள் வால் தூக்கிப் பொருதிடுவோம் வருக எனில்சிங்க ஏறுகள் பாய்ந்தோடிக்குகை இடுக்கில் பதுங்கிடுமோ?எலிகள் நடனம் ஆடுமிங்கே - அதற்குப்புலிகள் தாளம் போட்டிடுமோ?
சங்கத் தருதங்கத் தமிழ்வங்கக் கடல்பொங்கும் - இளம்சிங்கக் குரல்எங்கும் எழஒன்றே குலம்என்றே சொல்லிவாழ்ந்த இனம்;பண்டு தொட்டுக்கொண்டு கொடுத்த இனம்;உண்டு கொழுக்கவந்த கூட்டம்சிண்டு முடிந்துசீர்குலையவேஒரு சாதிதமிழ்ச் சாதிபல சாதியானதே! அதனால்பலவீனமானதே!!
சூழ்ச்சி வென்றதுசூது பலித்தது - இனிவீழ்ச்சியில்லையெனவீணர்கள் பாடினர்!வெறிகொண்டு ஆடினர்!அறிவார் கல்வியில்அரசுப் பணிகளில்பதுக்கிய இடமெல்லாம்தம்மதே என்றுவதக்கியே பிறரதுவாழ்வினைப் பறித்தஒரு பிரிவு மக்களிடம்போர் புரியத் தயங்கியதால்செதுக்கிய சிலைகளாய்ச்செயலற்றுக் கிடந்தோம் அன்று!நடக்கும் இருளைநகர்த்தும் பகல் போல்நாளும் வந்ததுகோளும் தொலைந்தது!ஒதுக்கியே தீர்வதுஒடுக்கப்பட்டோருக்குஇடஒதுக்கீடு என;எதிர் நீச்சல் போட்டுஎழுந்து நின்றது;பெரியார் அண்ணா திராவிட இயக்கம்!தென்னக மயக்கம்தீர்க்க முனைந்தது!
தேடக் கிடைக்காத தெள்ளமுதாய்த்தேமதுரக் கீத இசையாய்த்தேன்பாகும் தினைமாவும் இணைந்ததொருதெவிட்டாத சுவை விருந்தாய்த்திக்கற்ற மக்களுக்குத்திசை காட்டும் நிலவொளியாய்வாய்த்திட்ட நற்பேறுவாராது வந்த மாமணி வி.பி.சிங்.வகுப்புவாரி விகிதாச்சாரம் - பிற்பட்டோர்வாழ்வுக்கு ஒரு வரப் பிரசாதம்!வந்ததைத் தொலைப்போமோ? வஞ்சகவலைதனில் வீழ்வோமோ?வெந்ததைத் தின்று - வாயில்வந்ததை உளறும் மனிதர்தகுதி, திறமை என எழுதிப் பேசி;நயமாக நஞ்சைக் கலக்கின்றார்.நாட்டு மக்கள் உள்ளத்தைக் குழப்புகின்றார்.“அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவாருண்டோ?”எனப் பாவேந்தன்கேட்டதைத் தான்;நானும் கேட்கின்றேன்!“அழகாக முடிச் சவிழ்த்தால்விடுவாருண்டோ?”
ஆண்டவன் படைப்பில்அனைவரும் சமம் எனில்அவன், உயர்சாதிக்கு மட்டும்தங்கத்தால் மூளை செய்துதலைக்குள்ளே வைத்தானா?மற்றச் சாதிக் கெல்லாம்மண்டைக்குள் இருப்பதென்ன?களிமண்ணா? சுண்ணாம்பா?
கங்கையைப் போல்வடமொழியில் கவிதை தந்தவால்மீகி, வியாசனெல்லாம்பிரமதேவன் கால் பெற்றபிள்ளைகளே!வள்ளுவன் யார்? கம்பன் யார்?இளங்கோவடிகள், ஒட்டக் கூத்தன்இவரெல்லாம் யார்? யார்?பிரமன் தலையில்பிறந்ததில்லை இவர்கள்!ஆனாலும் தமிழ் மொழியின் இமயங்கள்!
நாற்பத்து மூன்று ஆண்டுகளாய்நாம் பெற்ற சுதந்திரத்தில் (அப்போது நான் சொல்லும்போது நாம் சுதந்திரம் பெற்று 43 ஆண்டுகள்தான்)தகுதிக்கும் திறமைக்கும்தரப்பட்ட வாய்ப்புகளால்கிழித்த தென்ன?தைத்த தென்ன?கிழித்துத் தைத்தது தான் என்ன? என்ன? என்ன?எதற்காகத் திறமை;அது தேவையா என்று - நாம்என்றுமே கேட்டதில்லை!ஆனால்ஏகலைவன் வித்தை கற்கஎந்தச் சாத்திரமும் அனுமதிக்கவில்லை! அவன்வில்லில் விசயனையும் வெல்வான் என்று -கட்டைவிரலைக் காணிக்கையாகப் பெற்ற தென்ன நியாயம்?தவம் செய்தான் சம்பூகச் சூத்திரன்தகுதி அவனுக்கேது எனச் சீறி - அவன்தலை வெட்டிச் சாய்த்த கதைஇராம பிரான் வரலாறன்றோ?கட்டை விரலோ, தலையோகாணிக்கையாக - இந்நாளில் எவனும் கேட்டால்பட்டை உரியும் - சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்!
“என்ன இது; என்றைக்கு மில்லாத வெப்பம்தலைவர் கவிதையிலே?”எனக் கேட்கத் தோன்றுகிறதா?பிறகென்ன?
முதலுக்கே மோசம் வந்த பின்னர்முயலாக ஆமையாகக் கிடத்தல் நன்றோ?ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்தவனைக்கைதூக்கிக் கரையேற்றும் நேரத்தில்கனமான பாறையொன்றை அவன் தலையில்உருட்டிவிட எத்தனிக்கும்உலுத்தர்களைக் கண்டால்ஓட ஓட விரட்டத்தான் வேண்டும்!
ஆறிலும் சாவுதான் நூறிலும் சாவுதான்;ஆனது ஆகட்டுமே - இந்தஆட்சிதான் போகட்டுமே!மகுடமின்றி வாழ முடியா மனிதர்களா நாம்?சிசுவாகப் பிறக்கும்போதே -சிம்மாசனத்துடனா பிறந்தோம்;சீதை வில்லுடன் பிறந்தது போல்?கொற்றக் குடையா? கொள்கையா?எது வேண்டும் எனில்; கொள்கையைவிற்றுப் பிழைக்க வேறு நபர் பார் என்போம்!ஆட்சி; வரும்! போகும்! நிலையன்று!அய்யா அண்ணா வகுத்த கொள்கை;போகாது! வாழும் நிலையாக! எனவேஆட்சியில் இருப்பினும்இல்லாதிருப்பினும்தன்மானம் உயிரென மதிப்போம்.தமிழர் இனமானம் என்றுமே காப்போம்.கொண்ட குறிக்கோளைப் பழித்துக்கண்டபடி பேசும் பிறவிகளைப் பார்த்தால்“போடா வெங்காயம்!” என்பார்பெரியார், கோபத்தில்!“வளம் பெரிய தமிழ்நாட்டில்தமிழரல்லார் வால் நீட்டினால்உதைதான் கிடைத்திடும்”என்றுரைப்பார் பாவேந்தர்!
நாராசப் பேச்சாளர், ஆபாச எழுத்தாளர் - காணின்;நம் அண்ணா; “நடுங்கா நாக்கழகர் நரகல்நடையழகர்!” என நையாண்டி புரிந்திடுவார்!ஆத்திரம் தாங்காமல்தானே அம்பேத்கர்அரசியல் சட்டத்தையே தேவைப்படின்கொளுத்த வேண்டுமெனக் கொந்தளித்தார்!எந்தத் தலைமுறையும்இந்தத் தலைவர்கள் போல்இனியொரு முறை காண்பதில்லை!அந்தத் தலைவர்களின்எண்ணங்கள் வெற்றி பெறச்சூளுரைப்போம்!சுடர் முகம் தூக்குவோம்!இடர் பல வரினும்எதிர்த்து நிற்போம்!வெற்றி காண்போம்!

- என்று இந்த கவிதைப் பாடலைத்தான் அன்றைய தினம் வி.பி.சிங் அவர்களுடைய மண்டல் பரிந்துரை ஆணைக்காக நடைபெற்ற கவியரங்கத்திலே, தலைமைக் கவிதையிலே நான் பாடினேன். அதைத்தான் இன்றைக்கு மீண்டும் நினைவூட்டுவது இந்த புகழ் அஞ்சலி செலுத்துகிற நேரத்தில் மிகமிகப் பொருத்தம் என்று கருதி நினைவூட்டினேன். வீரமணி நினைவுச் சின்னம் பற்றிச் சொன்னார்கள் - ஒரு இடத்திலே வி.பி.சிங்க்கு சிலையோ அல்லது ஒரு மண்டபமோ எழுப்புவதால் மாத்திரம் நாம் அவருக்குப் பெருமை சேர்த்தவர்களாக ஆகமாட்டோம். அவர் மண்டல் கமிஷன் மூலமாக எந்த விடியலை நாட்டில் எதிர்பார்த்தாரோ - அந்த விடியல் ஏற்பட இடஒதுக்கீட்டில் இன்னும் எல்லா இடங்களிலும் அந்த ஒதுக்கீட்டை கொண்டுவர எல்லா கல்லூரிகளிலும், எல்லா பள்ளிகளிலும், தனியார் நிறுவனங்களிலும்கூட இடஒதுக்கீட்டை கொண்டுவர நாம் பாடுபடவேண்டும். அதுதான் வி.பி.சிங்கின் விருப்பம் - அவர்களுடைய கனவு - அந்த கனவை நாம் நிறைவேற்றுவோம். அதைச் சொல்லுகிற காரணத்தால் இவர் சொன்ன நினைவுச் சின்னத்தை தட்டிக் கழிக்கிறேன் என்று அர்த்தம் அல்ல - வி.பி.சிங்கின் சிலையை பாராளுமன்றத்துக் கட்டிடத்திலே வைப்பதற்கும் நாம் முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் - அதை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக செய்யவேண்டும். இப்போது இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் மீண்டும் தேர்தலுக்கு நின்று நீங்கள் அவர்களையெல்லாம் வெற்றி பெறச் செய்து அவர்களைக் கொண்டே நாடாளுமன்ற வளாகத்திலே வி.பி.சிங்கின் சிலையை வைப்பதற்கான அந்தப் பணியை நீங்களும் சேர்ந்து செய்யவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் இரண்டும் இணைந்து இன்றைக்கு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது என்றால் சமுதாயத் துறையிலே இன்று நேற்றல்ல என்றைக்குமே இது இரட்டைக்குழல் துப்பாக்கி என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை நான் நினைவுபடுத்தி, வி.பி.சிங்கின் புகழ் வாழ்க, என்றென்றும் வாழ்க, நிலைத்து வாழ்க, நெடுங்காலம் வாழ்க.

திருமங்கலம் தொகுதி:அ.தி.மு.க‌. போட்டி ஜெய‌ல‌லிதா அறிவிப்பு


ஜெயலலிதா இன்று (டிசம்பர் 12) வெளியிட்ட அறிக்கை:

2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அண்மையில் திருமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான வீர. இளவரசன் அகால மரணமடைந்ததால், அத்தொகுதிக்கு ஜனவரி 9 அன்று இடைத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



கருணாநிதியின் தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. அரசு தமிழ்நாட்டில் அராஜக வன்முறை வெறியாட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற தற்போதைய அரசியல் சூழ்நிலையில், நடைபெறவுள்ள இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டால்தான் பொருத்தமாக இருக்கும் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருமங்கலம் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதற்கு சம்மதம் தெரிவித்து, அ.தி.மு.க. வேட்பாளருக்கு ம.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து, இன்று (டிசம்பர் 12) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி. பரதனுடனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத்துடனும் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் திருமங்கலம் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளருக்கு முழு ஆதரவு தருவதாக உறுதி அளித்தார்கள்.

ஜனவரி 9 அன்று திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ம.தி.மு.க. ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் அ.தி.மு.க. போட்டியிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி ஆட்சி மன்றக் குழு கூடி முடிவெடுத்த பின்னர், கழக வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும்.

ரஜினி பிறந்தநாள் கருணாநிதி வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்தின் 59-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் கருணாநிதி, ரஜினிகாந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்குத் தனது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்

வள்ளலாரும் பெரியாரும்” நூல் வெளியீட்டு விழா

தனஜோதி பதிப்பகத்தின் சார்பில் மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி எழுதிய “வள்ளலாரும் பெரியாரும்” ஒப்பாய்வு நூல் வெளியீட்டு விழா இன்று (டிசம்பர் 11) சென்னை மயிலாப்பூர், இராகசுதா அரங்கில் நடைபெற்றது. அமைச்சர் பொன்முடி ஒப்பாய்வு நூலை வெளியிட பொது நூலகத்துறையின் இயக்குநர் முனைவர் வெ.இரமணி பெற்றுக் கொண்டார்கள்.

விழாவிற்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் கவிஞர் இளையபாரதி முன்னிலையுரையாற்ற, திரைப்படத் தயாரிப்பாளர் ராஜன், மருத்துவர் ஹூசைன், வாஷிங்டன் கூ.ஞ.சண்முகநாதன், தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையின் செயலாளர் முனைவர் நு.னு. சார்லஸ், சீழ்காழி சிவசிதம்பரம், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் எஸ்.எம். இதயதுல்லா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். வழுவூர் ரவி வரவேற்புரையும், நூலாசிரியர் மருத்துவர் ஜெய. ராஜமூர்த்தி நன்றியுரையாற்றினார்கள்.

விழாவில் தமிழ்நாடு தேர்வாணையக்குழுத் தலைவர் ஏ.எம். காசிவிஸ்வநாதன், சட்டமன்ற உறுப்பினர் மு.பெரியசாமி, தேர்வாணையக்குழு உறுப்பினர் முனைவர் டி.லட்சுமணன், அமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நூலாசிரியர் மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி தனஜோதி பதிப்பகத்தின் மூலம் “நேசம் விரும்பும் நெருப்புப்பூக்கள்” எனும் கவிதையினையும், “புனிதர் வள்ளலாரின் புரட்சிப்பாதை” எனும் உரைநடை நூலையும், தமிழருவி பதிப்பகத்தின் மூலம் “எனது அம்பறாத்தூணியிலிருந்து” எனும் கவிதை நூலினையும் வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவை சந்தித்தார் வைகோ


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை இன்று (டிசம்பர் 11) அவரது இல்லமான போயஸ் கார்டனில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார்.

தமிழ்ப்பல்கலைக்கழகச் சீராய்வுக்குழு அறிக்கை

தமிழக அரசின் செய்தி குறிப்பு வருமாறு:முதல்வர் கருணாநிதியின் இடைவிடாத முயற்சியால் தமிழ்மொழிக்கு மத்திய அரசின் செம்மொழி அறிந்தேற்பும்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் கிடைத்துள்ள நிலையில் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் பணிகளை முனைப்புடன் செயற்படுத்திட பேராசிரியர் முனைவர் மு.அனந்தகிருட்டிணன் தலைமையில் சிலம்பொலி சு. செல்லப்பன் மற்றும் தமிழ் வளர்ச்சி,செய்தி மற்றும் அறநிலையத்துறைச் செயலாளர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

இக்குழு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிய துறைகள் மற்றும் மையங்களை உருவாக்குதல்,மறுசீரமைப்பு செய்தல் மற்றும் மேம்படுத்துதல், கல்விநிலைப் பணியாளர்கள், அலுவல்நிலைப் பணியாளர்களின் எண்ணிக்கையை வரையறை செய்தல், அடுத்த பத்தாண்டுகளுக்கான எதிர்காலச் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்திடல், முறைப்படுத்தப்படாத பணியிடங்களை முறைப்படுத்துதல், செம்மொழித் திட்டத்தின் கீழ் நிதி ஆதாரங்களைப் பெறுதல் போன்றவை குறித்து, விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளது.

இந்த அறிக்கை இன்று (11.12.2008) முதல்வர் கருணாநிதியிடம் குழுவின் தலைவர் முனைவர் மு.அனந்தகிருட்டிணன் வழங்கினார். அப்போது குழு உறுப்பினர் முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன் மற்றும் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்

வெள்ள நிவாரணம் கருணாநிதி அறிக்கை

முதல்வர் கருணாநிதி இன்று (டிசம்பர் 11) வெளியிட்ட அறிக்கை:

அண்மையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பெருமழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்பு, உடைமை இழப்பு போன்றவற்றிற்கு உரிய நிவாரணம் அளித்து; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்து; இந்த மாதிரியான பேரழிவை தடுப்பதற்கு எதிர்காலத்திற்கும் தேவையான நிலையான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருப்பதோடு; அதற்கு தேவைப்படும் நிதியை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்த்து முதல்கட்டமாக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த நிதியைக் கொண்டு,உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய்;பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 10 கிலோ அரிசி; சென்னை மாநகரத்திலும், அதன் புறநகர் பகுதிகளிலும் மழை-வெள்ளம் புகுந்த வீடுகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய்; மாவட்டங்களில் மழை-வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், மழை-வெள்ளம் புகுந்த வீடுகளுக்கும் தலா ஆயிரம் ரூபாய்; முகாம்களில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வேட்டிகள், சேலைகள்;பாதிக்கப்பட்ட குடும்பங்களில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகள்; என்று இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு 175 கோடி ரூபாய் அளவுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. உடனடி சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து நிவாரணப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பயிர்ச் சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள நெறிமுறைகளின்படி எக்டேர் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி என்பதற்கு மாறாக, அதனை உயர்த்தி எக்டேர் ஒன்றுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் என்று வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து நமது அரசின் சார்பில் ஏற்கனவே 2006-2007ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, நடைமுறையில் இருந்துவரும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்படி பதிவு செய்து கொண்ட விவசாயிகளுக்கு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு எக்டேருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வரையில் நிதி உதவி கிடைக்க இருக்கிறது.

இவை அனைத்தையும் விளக்கி அரசின் சார்பிலேயே அறிவிப்புகள் வெளியிட்டிருந்தும்கூட; சில அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு - அனைவரும் பாராட்டும் அளவிற்கு நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளிலிருந்து மக்களது கவனத்தைத் திசைதிருப்பி - சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடச் செய்ய எடுத்துக்கொண்ட முயற்சிகளைத் தடுத்தி நிறுத்தி; மாநிலத்தில் தொடர்ந்து சட்டம், ஒழுங்கு, அமைதியைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பெரும்பொறுப்பு அரசுக்கு இருப்பதைக் கருத்தில்கொண்டு; மக்கள் பிரச்சினையில் உண்மையிலேயே கவனம் செலுத்தும் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை வேண்டுவதுடன், அரசின் கடமையை தொடர்ந்து செய்திட உறுதி எடுத்துக் கொள்கிறோம்!

இந்தியா டுடேவுக்கு எதிராக‌ போராட்ட‌ம்


இட ஒதுக்கீட்டையும், வி.பி,சிங்கையும் கொச்சைப்படுத்தியதாக சொல்லி "இந்தியா டுடே" பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் திராவிடர் கழகத்தினர். ம‌யிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள இந்தியாடுடே அலுவலகத்தின் முன்பு திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் தமிழ் சாக்ரடீசு தலைமயில் 50-க்கும் மேற்பட்ட இளைஞரணியினர் "இந்தியா டுடே" பத்திரிகைக்கு எதிராக குரல்கள் எழுப்பி அந்த‌ ப‌த்திரிகையை தீயிட்டு கொளுத்தின‌ர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்து பிற‌கு விடுவித்தது போலீஸ்.

கருணாநிதியை சந்தித்தார் விப்ரோ தலைவர்

தமிழக முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் விப்ரோ குழும நிறுவனத்தின் தலைவர் ஆசிம் ஹாசம் பிரேம்ஜி, பொது மேலாளர் ரவிசங்கர், துணைத் தலைவர் சந்திரசேகர், ஆகியோர் சந்தித்து பேசினார்.

வீர‌பாண்டிஉட‌ல்ந‌ல‌ம் விசாரித்தார் க‌ருணாநிதி

முதல்வர் கருணாநிதி இன்று (டிசம்பர் 9) சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். டாக்டர்களிடம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார் கருணாநிதி. அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், பொன்முடி, எ.வ. வேலு, இராஜேந்திரன் எம்.எல்.ஏ., அப்போலோ மருத்துவனை தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.

கம்யூனிஸ்ட்டுகள் போராட்டத்தில் அ.தி.மு.க பங்கேற்கும் ஜெயலலிதா அறிவிப்பு

ஜெயலலிதா இன்று (டிசம்பர் 9)வெளியிட்ட‌ அறிக்கை

கடும் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் தமிழக மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பெரும் எண்ணிக்கையில் நிராதரவாக நிற்கும் சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பதற்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் இணைந்து, வருகின்ற 11ஆம் தேதி வியாழக் கிழமை நடத்த உள்ள மறியல் போராட்டத்தில்,அ.தி.மு.க.பங்கேற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உன்னை நம்பித்தான் உடன்பிறப்பே! கருணாநிதி கடிதம்

உட‌ன்பிற‌ப்புக‌ளுக்கு க‌ருணாநிதி இன்று (டிசம்பர் 9) எழுதிய‌ க‌டித‌ம்.

உடன்பிறப்பே,

தில்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் கண்டு; நாம் மட்டுமல்ல; இந்த நாடே ஒரு நம்பிக்கை கலந்த மகிழ்ச்சி கொண்டுள்ளது. “அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை” என்கிற அளவுக்கு ஐந்து மாநிலங்களில்; இரண்டு மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றும், தக்க வைத்துக் கொண்டும் - மற்ற மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி வாகை சூடியும்; மக்களிடம் மதச் சார்பற்ற நிலைப்பாடும், மத நல்லிணக்கப் பண்பாடும் எத்தகைய உறுதி மிக்கதாய் விளங்கி வருகிறது என்பதை எடுத்துக்காட்டி நம்மைப் போன்ற இலட்சியவாதிகளை; இன்னும் இன்னும் எழுச்சி கொள்ள வைக்கிறது!

“மதவாதி, பிற்போக்குவாதி, புராணிகர், பழைமைவாதி - இவர்களை யெல்லாம் எமக்குப் பிடிக்காது; மூட நம்பிக்கை முடை நாற்றத்தைப் போக்கி சமுதாயத்தை முல்லை மலர்த் தோட்டமாக்குவதே எமது குறிக்கோள்” என்று குரலெழுப்பியோர்; இன்று ஆரூடம், சோதிடம், ஐதீகம் என்பனவற்றைச் சுற்றி அங்கப் பிரதட்சணம் செய்வோரின் ‘அத்யந்த தோழர்’களாகி விட்டதையெண்ணிப் பெருமூச்செறியும் போது; அவர்களுக்கும் ஓர் இனிய எச்சரிக்கையாக இந்தத் தேர்தல் முடிவு முகிழ்த்திருக்கிறது என்பதை நம்மால் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.

எத்தனை எதிர்ப்புகள் - ஏகடியங்கள் - வசைவுகள் - சாபங்கள் - சாட்டையடிச் சொல்லெடுத்துத் தொடுத்த கண்டனக் கணைகள் - கொடியேந்தியவர்கள் கொட்டிய கொடூர முழக்கங்கள் மட்டுமல்ல; உலகத்தின் முன்னேயே காட்டிக் கொடுக்கும் கயமைச் செயல்கள் - கடுகை மலையாக்கி கடும் எதிர்ப்பு காட்டி கவிழ்த்துவிடச் செய்த சூழ்ச்சிகள் - இவையனைத்தையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டு; கடமையை ஆற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருந்து; அனைத்து முனைகளிலும் அன்னைத் திருநாடாம் - இந்திய நாட்டை ஒளிமிக்கதாக விளங்கச் செய்திட; அனுபவச் சுரங்கமாம் பிரதமர் மன்மோகன் சிங்கும் - ஆற்றலின் உறைவிடமாம்; அன்பின் பிறப்பிடமாம் திருமதி சோனியா காந்தியும்;
தொய்வில்லாத் தொண்டு புரிந்து; சர விளக்குகளாக ஏற்றி வைத்த சாதனைகளுக்குக் கிடைத்த பரிசுதான் இந்த “ஐந்துக்கு மூன்று” என்ற வெற்றி!

இது போன்ற தேர்தல் நேரங்களில் - இதுவரை ஆட்சியில் இருந்த கட்சி வெற்றி பெறாது - எதிர்க்கட்சிக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் - என்ற எதிர்பார்ப்பு ஏடுகளிலே எழுதப்படும், மக்களும் அப்படியே கருதுவார்கள். கருத்துக்கணிப்புகளும் அவ்வாறே சொல்லப்படும். ஆனால் இந்தியாவின் தலைநகரிலேயே - டெல்லியில் ஆளுங்கட்சியாக இரண்டு முறை இருந்துவிட்ட காங்கிரஸ் கட்சி, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, ஆளுங்கட்சி மீண்டும் பதவிக்கு வராது என்ற ஆரூடத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. டெல்லியில் பா.ஜ.க.விற்கு 36 இடங்கள் முதல் 42 இடங்கள் வரை கிடைக்குமென்று கருத்துக் கணிப்பு வெளியிட்டார்கள். அதையும் முறியடித்து, 23 இடங்களில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. எனவே ஆட்சிக்கு எதிரான கருத்து மக்களிடம் இல்லை என்பதை இந்தியாவின் தலைநகரிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றதாலும் - விரைவில் ஒரு சில மாதங்களில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வர விருப்பதாலும் - காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களிலும் பெருமளவிற்கு இழப்பு ஏற்படும் என்ற கருத்தும் சொல்லப்பட்டு - அகில இந்திய அளவில் மூன்றாவது அணி பற்றி பெரிதாகப் பேசப்பட்டு - அந்த அணியிலே ஓட்டை உடைசல்களையெல்லாம் சேர்க்கின்ற பணியிலும் ஒரு சிலர் முற்பட்டனர். அவர்களின் எண்ணங்களிலும் மண் விழுகின்ற அளவிற்கு ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.
தேர்தல் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் - மக்களுக்கு வேண்டியவற்றை நாம் தொடர்ந்து செய்து வந்தால் - அவர்கள் நம்மைக் கை விட மாட்டார்கள் என்பதற்கு நடைபெற்று முடிந்த தேர்தல்கள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. அடுத்து ஒருசில மாநிலங்களில் நடைபெற்ற தீவிரவாதச் செயல்களும், விலைவாசி உயர்வும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான முடிவினைத்தான் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோடு இருந்தவர்களும் உண்டு. ஆனால் இவற்றுக்கு ஆளுகின்ற அரசு ம‌ட்டுமே பொறுப்பு என்று கருதாமல் மக்கள் வாக்களித்துள்ளார்கள். இந்தக் கருத்தைத்தான் “தினமணி” ஏடு; தனது தலையங்கத்தை முடிக்கும்போது, “நல்லாட்சி தந்தால் அந்த அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு தருவார்கள் என்பதை உணர்த்தி இருக்கும் தேர்தல் முடிவுகள் இவை. மக்களாட்சி இந்தியாவில் அழுத்தமாகவும், ஆக்க பூர்வமாகவும் செயல்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது!” என்று குறிப்பிட்டுள்ளது.

“இந்து” நாளிதழ் தனது தலையங்கத்திலே குறிப்பிட்டிருப்பதைப் போல ஆளும் அரசுக்கு எதிரான மக்களின் மனோபாவம் என்பது பொதுவாக ஒரு காரணி என்றாலுங்கூட, அதுவே முடிவான காரணியாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என்பதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதைத்தான் டெல்லியில் காங்கிரஸ் கட்சியும், மத்தியப் பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும் பா.ஜ.க.வும் எடுத்துக்காட்டியிருக்கின்றன. இதே கருத்தினைத்தான் “எக்ஸ்பிரஸ்” நாளேட்டில் நீரஜா சவுத்திரியின் கட்டுரையும், “தினமணி” தலையங்கமும் வெளிப்படுத்துகின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தில் இதற்கு மாறாக ஆளும் பா.ஜ.க.விற்கு எதிராக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றால், அங்கே 62 தொகுதிகளில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு எதிராக, அந்தக் கட்சியைச் சேர்ந்த போட்டி வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள் என்கிற போது தோல்விக்கான மற்றொரு காரணத்தையும் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. “இவர்களாவது இனி இந்தியாவை ஆள்வதாவது” என்று மரத்தடி ஜோசியம் - மதகடி ஜோசியம் - பார்த்துக் கொண்டிருந்தவர்கள்; அவர்கள் குடித்த மனப்பால் அத்தனையும் மண்ணில் கொட்டி விடச் செய்ய - இந்த மகத்தான ஜனநாயக ரீதியான - மத வெறி மாய்த்த - மத நல்லிணக்கம் பூத்த - மாபெரும் வெற்றியாக; காங்கிரஸ் அணிக்கு இது அமைந்துள்ளது.

இங்கே தமிழகத்திலே கூட - நாம் நாளொரு சாதனையும், பொழுதொரு திட்டமுமாக அறிவித்து - அவற்றை கிடப்பிலே போட்டு விடாமல் நடைமுறைப்படுத்தி வருவதைப் பற்றி எந்தவிதமான குற்றமும் சொல்ல முடியாத நிலையில் - ஆளுங்கட்சிக்கு எதிராகத்தான் மக்களின் வாக்குகள் விழும் என்ற குருட்டு நம்பிக்கையில் எதிர்க்கட்சியின் தயவுக்காக துடியாய்த் துடிக்கிறார்கள். கூட்டணியில் இடத்தைப் பிடிப்பதில் யார் முந்தி என்று போட்டி போடுகிறார்கள். இந்த எதிர்க் கட்சி ஆளுங்கட்சியாக இருந்த போது ஆடிய ஆட்டமென்ன? பாடிய பாட்டென்ன? என்பதை அவர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்த போதிலும் மறந்து விடுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு நல்ல பதிலைத் தரத் தக்க விதத்திலேதான் இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளி வந்துள்ளன.

இந்த வெற்றிப்படி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை தில்லிப் பட்டணத்தில் பாராளுமன்றத்தில் அமர வைத்து; தொடர்ந்து நாட்டுப் பரிபாலனத்தை நடத்திடுக என்று ஆணையிடும் அளவுக்கு அமைந்திடத்தான் போகிறது! அதைத்தான் நேற்று செய்தியாளர்கள் என்னைச் சந்தித்துக் கேட்ட போதும் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து டெல்லியில் ஆட்சி அமைக்கப் போவது காங்கிரஸ் கட்சிதான் என்ற பதிலை அளித்தேன். 2009இல் டெல்லியிலே மட்டுமல்ல - 2011இல் நடைபெறவுள்ள தமிழகப் பொதுத் தேர்தலிலும் ஆளுங்கட்சி கூட்டணிதான் வெற்றி பெறும், ஆட்சி அமைக்கும்.

உன்னை நம்பித்தான் உடன்பிறப்பே; உன் அண்ணன் இந்த உறுதி அளிக்கிறேன்!
அன்புள்ள,
மு.க.

நடிகை ராஜஸ்ரீ மகன் திருமணத்தில் ஜெயலலிதா



நடிகை ராஜஸ்ரீ மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் ஜெயலலிதா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்

வாஞ்சிநாதனின் கூட்டாளி மகளுக்கு கருணாநிதி நிதியுதவி

ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சி நாதனின் கூட்டாளி மகள் கோதையம்மாள் என்பவர் தியாகி பென்ஷனுக்கு போராடிவருவ‌தாக தினகரன் பத்திரிகையில் செய்தி வெளியானது. அவரிடம் இது தொடர்பாக கோப்புகள் எதாவது இருக்கிறதா என்று முதல்வர் கருணாநிதி விசாரிக்க சொன்னார்.ஏற்கனவே இந்த அம்மையாருக்கு அரசின் சார்பில் மாதம் 500 ரூபாய் வழங்கப்பட்டு வந்ததாகவும் இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் அது ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிந்தது.கோதையம்மாளின் கோரிக்கையை ஏற்று சிறப்பு நேர்வாக கருதி மாதம் 2 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கலாம் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவு போட்டிருக்கிறார்.

போயஸ் கார்டன் போன கம்யூனிஸ்டுகளுக்கு சிரிப்புதான் பதில் கருணாநிதி பேட்டி

முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி இன்று (டிச‌ம்ப‌ர் 8)நிருப‌ர்க‌ளுக்கு அளித்த‌ பேட்டி:

கேள்வி: வெள்ள நிவாரணப் பணிகள் எல்லாம் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. உதவித் தொகைகள் எல்லாம் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் சில எதிர்க் கட்சியினர் குறை கூறுகிறார்களே?

பதில்: அது தான் எதிர்க்கட்சி. அவர்கள் விமர்சனங்களைச் செய்யச் செய்ய - குறைகளைக் கூறக் கூற அவற்றைத் திருத்திக் கொண்டு நாங்கள் வேகமாகவும், விவேகமாகவும் செயல்படுவோம்.

கேள்வி: மத்திய அரசிடம் வெள்ள நிவாரணத்திற்காக நாம் கேட்ட தொகையில் பத்து சதவிகித அளவிற்குக் கூட அவர்கள் நிதி உதவி செய்யவில்லை. இந்த முறையாவது செய்வார்களா?

பதில்: சென்ற முறை வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட போது, தமிழக அரசு கேட்டதில் ஒரு பகுதியைக் கூடத் தரவில்லை, இந்த முறையாவது நாங்கள் கோரியுள்ள நிதியை வழங்க வேண்டுமென்று பிரதமரிடமும், காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழி காட்டும் தலைவருமான சோனியா காந்தியிடமும் கோரியிருக்கிறேன். அதனால் நாம் கோரிய அளவிற்கு நிதி வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி: இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி கணிசமான அளவிற்கு வெற்றி பெற்றுள்ளதே?

பதில்: இன்னும் முழுமையாக முடிவுகள் வரவில்லை. வந்துள்ள வரை,காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி என்றுதான் கூற வேண்டும்.

கேள்வி: விரைவில் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் இப்போது கிடைத்துள்ள வெற்றி தொடருமா?

பதில்: பாராளுமன்றத் தேர்தல் முடிந்து டெல்லியில் ஆட்சி அமைக்கப் போவது காங்கிரஸ் கட்சிதான்.

கேள்வி: இலங்கைத் தளபதி ஒருவர் நேற்று கூறும்போது தமிழ்நாட்டின் தலைவர்கள் கோமாளிகள் என்று அருவறுக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்திருக்கிறாரே?

பதில்: அந்தத் தளபதி அப்படி சொல்லியிருப்பது உண்மையானால் அது கண்டிக்கத்தக்கது. இங்குள்ள தமிழகத்தின் தலைவர்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளின் அடிப்படையில் ஒருவரைப் பற்றி மற்றொருவர் விமர்சித்துக் கொள்வது என்பது வேறு. ஆனால் இன்னொரு நாட்டவர் தமிழகத் தலைவர்களை இவ்வாறு விமர்சிப்பது எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அப்படி விமர்சித்திருந்தால், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கேள்வி: டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கைத் தளபதியின் செய்கை குறித்து தாங்கள் பிரதமரின் கவனத்திற்குச் கொண்டு செல்ல வேண்டுமென்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் அது பற்றி கூறியுள்ளதே இந்நேரம் பிரதமரின் கவனத்திற்குச் சென்றிருக்கும்.

கேள்வி: வெள்ள நிவாரணப் பணிகளை அரசாங்கம் முறையாக ஈடுபட்டு செய்து கொண்டிருக்கும்போது, சில எதிர்க்கட்சிகள் மக்களைத் தூண்டி விடும் விதமாக ஆர்ப்பாட்டம், மறியல் என்றெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்களே?

பதில்: நாங்கள் நிவாரணம் அளித்துக் கொண்டிருக்கும்போதே சில எதிர்க்கட்சிகள் நிவாரணமே அளிக்கவில்லை என்பதைப் போலவும், அதனால் ஆர்ப்பாட்டம், மறியல், சாலை மறிப்பு போன்றவற்றை நடத்தவிருப்பதாகவும் அறிவித்திருப்பது வெறும் அரசியல் ஆதாயத்திற்காகத்தான். நான் திட்டவட்டமாக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். தமிழகத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டமோ, பேரணிகளோ நடத்த விரும்பினால், பொது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல், போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படாமல் காவல் துறையினரிடம் அனுமதியைப் பெற்று எந்தக் கோரிக்கையானாலும் அவற்றை வலியுறுத்தலாம். அவ்வாறு இல்லாமல் சாலை மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும்.

கேள்வி: உங்கள் கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த முறை போயஸ் தோட்டத்திற்கு போனதைப் பற்றி உங்கள் கருத்து?

பதில்: (சிரிக்கிறார்) இதுதான் பதில்.

கேள்வி: வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போகப் போவதாகச் சொல்லப்பட்டதே, தேதி உறுதியாகி விட்டதா?

பதில்: இன்னும் தேதி குறிப்பிடவில்லை. விரைவில் செல்வார்.

கேள்வி: இலங்கை தளபதி மேலும் கூறும்போது போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை இந்திய அரசு வைக்காது என்று சொல்லியிருப்பதைப் பற்றி?

பதில்: இதைப்பற்றியெல்லாம் நானும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் டெல்லியில் பிரதமரைச் சந்தித்த போது விரிவாகப் பேசி,அதற்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவுதான் இலங்கைக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சென்று நம்முடைய கோரிக்கையை வலியுறுத்தவும், போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பது பற்றிய கோரிக்கையை வலியுறுத்தவும், அந்த அடிப்படையில் அவர்களை நடந்து கொள்ளச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். அதை பிரதமரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

கேள்வி: மத்திய அமைச்சரவையில் மேலும் சிலரை நியமிக்கப் போவதாக பிரதமர் சொல்லியிருக்கிறாரே, தமிழகத்திற்கு மேலும் வாய்ப்பு கிடைக்குமா

பதில்: வாய்ப்பு ஏற்பட்டால் மகிழ்ச்சிதான்.

கேள்வி: இது போன்ற வெள்ள நேரத்தில் எடுக்கப்படும் முயற்சிகளைப் பற்றி பேசிய போது நிரந்தரமான சில முயற்சிகளை எடுக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி பேசியிருக்கிறீர்கள். அதற்காக ஏதாவது குழு அமைக்கப் போகிறீர்களா? நடைமுறையில் அதை எப்படிச் செய்யப் போகிறீர்கள்?

பதில்: வெள்ளம் போன்ற இயற்கை இடர்களால் ஏற்படக் கூடிய விளைவுகளைத் தடுத்து நிறுத்த அரசின் அத்தனை துறைகளும் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும்.

கேள்வி: பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்திருப்பது போதாது என்று சில பேர் சொல்கிறார்களே?

பதில்: அவர்களுக்கு போதாது.

கேள்வி: மத்திய அரசின் சார்பில் நேற்றையதினம் பெருமளவிற்கு பல்வேறு சலுகைகள் எல்லாம் தொழில் துறையிலும், மற்ற துறைகளிலும் அறிவித்திருப்பதைப் பற்றி?

பதில்: இந்தியாவைப் பொறுத்தவரையில் இத்தகைய நடவடிக்கைகள் ஒரு முன்னேற்ற நிலைமைக்கு வழி வகுக்கும் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி: சமையல் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தீர்களே?

பதில்: நேற்றுதானே கடிதம் எழுதியிருக்கிறேன்.

கேள்வி: தமிழ்நாட்டில் இப்போது இருக்கக் கூடிய மின்சாரத் த‌ட்டுப்பாட்டிற்கு...?

பதில்: இப்போது இல்லையே?

கேள்வி: ஏற்பட்டிருந்த மின் தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசிட மிருந்து நமக்கு வர வேண்டிய மின்சாரம் வராததுதான் காரணமா?

பதில்: மின் தட்டுப்பாட்டிற்கு பல காரணங்கள் உண்டு. அதிலே இதுவும் ஒரு காரணம். மத்திய தொகுப்பிலிருந்து 2000 மெகாவாட் மின்சாரம் நமக்கு வந்திருக்க வேண்டும். வரவில்லை. அதைத்தான் தற்போது டெல்லி சென்றிருந்த போது அந்தத் துறையினரிடம் விரிவாகப் பேசினோம். டிசம்பரில் ஆயிரம் மெகாவாட் முதற் கட்டமாகத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அடுத்த மாதம் மேலும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

கேள்வி: மழைக்குப் பிறகு சென்னையில் சாலைகள் மோசமாக உள்ளதே?

பதில்: படிப்படியாகத்தான் சரி செய்ய முடியும்.

கேள்வி: அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு?

பதில்: விரைவில் சட்டமாக உள்ளது. எடுக்கப்பட்டுள்ள முடிவினை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை பற்றி ஆய்வு செய்து பரிந்துரை கூற அமைச்சரவை துணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் இன்றைக்கும் கூடி, அறிக்கை ஒன்றினை என்னிடம் அளித்திருக்கிறார்கள். எனவே மிக விரைவில் சட்ட மன்றத்தில் அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேறும்.