டில்லி தமிழ்ச் சங்க வளாகத்தில் இன்று (டிசம்பர் 4) நடைபெற்ற முப்பெரும் விழாவில், முதல்வர் கருணாநிதி திருவள்ளுவர் சிலையினை நாட்டி,முத்தமிழ்த் தோரண வாயிலுக்கு அடிக்கல் நாட்டி, டில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட செம்மொழிச் செம்மல் விருதினை பெற்றுக் கொண்டு ஆற்றிய உரை:
நீண்ட காலமாக நான் டெல்லிக்கு வரும் போதெல்லாம் அல்லது டெல்லி தமிழ்ச் சங்கத்து நண்பர்கள் சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒரு கவலையை பரிமாறிக் கொள்வதுண்டு. திருவள்ளுவருடைய சிலை அமைந்திருக்கின்ற இடம் - அமைந்த இடம் - மிக மிக வருந்தத்தக்க கவலைபடத்தக்க இடமாக கண்ணீர்விடத்தக்க இடமாக மாறிவிட்டது. எனவே வள்ளுவருடைய சிலையை இடம் மாற்றி அமைக்க வேண்டும். நாங்கள் டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்திடம் இதைப் பற்றி சொல்லி அவருடைய ஒப்புதலைப் பெற்றிருக்கிறோம், இதை திறந்து வைக்க நீங்கள் வர வேண்டுமென்று அவர்கள் கேட்பதும், நானும் நான் டெல்லிக்கு வருகிற நேரத்தில் நிச்சயமாக இந்த விழாவில் கலந்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளிப்பதும் மாறி மாறி நடைபெற்று இன்றைக்கு அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்து நாம் மகிழத் தக்க வண்ணம் நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியிலே “செம்மொழி செம்மல்’’ என்ற ஒரு விருதினையும் இந்த டெல்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நீங்கள் வழங்கியிருக்கிறீர்கள். செம்மொழி தகுதியை வழங்கியவர்கள் யார் என்ற ஆய்விலே ஈடுபட்டால் நம்முடைய உள் துறை அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட மத்திய அரசிலே உள்ளவர்கள்தான் தமிழுக்கு செம்மொழி என்ற தகுதி இருக்க வேண்டுமென்று தமிழ் அறிஞர்கள் பலரும் கேட்டபோது, தட்டாமல் அதனைத் தந்து நம்மை மகிழ்வித்திருக்கிறார்கள். எனவே இதைப் பெறுவதற்காக வாதிட்ட என்னை நீங்கள் பாராட்டுவதற்குப் பதிலாக இதை வழங்கிய மத்திய அரசுக்கு உங்களுடைய பாராட்டுதலை, வாழ்த்துக்களை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் இந்தச் செம்மொழி என்ற தகுதி தமிழுக்கு வர வேண்டுமென்று நூறாண்டுகளுக்கு முன்பு குரல் கொடுத்தவர் சூரிய நாராயண சாஸ்திரி என்கிற பரிதிமாற்கலைஞர். பரிதிமாற்கலைஞர் தொடங்கியதை இந்தக் கலைஞன் வந்து நிறைவேற்ற வேண்டும் என்று இருந்திருக்கிறது போலும். ஆனால் அந்தப் பரிதிமாற் கலைஞருடைய வாழ்க்கையை, அவருடைய குடும்பத்தை,அவர் வாழ்ந்த விளாச்சேரி என்ற ஊரை இவைகளையெல்லாம் நினைவு கொள்ள வேண்டுமென்று கடந்த ஆண்டு மதுரைக்கு அருகிலே உள்ள விளாச்சேரி கிராமத்திற்கே சென்று அவருடைய வீட்டையும் அரசுடைமையாக ஆக்கி அவர் எழுதிய நூல்களையெல்லாம் அரசுடைமையாக ஆக்கி அவருக்கு மேலும் புகழ் சேர்க்கின்ற பணியிலே நான் ஈடுபட்டேன் என்றாலும்கூட - இவற்றையெல்லாம் விட என்றென்றும் வைத்து பாதுகாக்கத்தக்க ஒரு பதக்கமாக ஒரு கடிதம் டெல்லியிலேயிருந்து எனக்கு அனுப்பப்பட்டது.
அந்தக் கடிதத்தில் செம்மொழி தமிழுக்காக அந்தத் தகுதியைப் பெற பல பேர் பாடுபட்டார்கள் என்றாலுங்கூட, அதற்காக போராடி வெற்றி பெற்றவர் யாரென்றால், அதற்கு வரலாற்றில் உன்னுடைய பெயர்தான் இடம் பெறும் என்று எனக்கு கடிதம் எழுதினார் ஒருவர். அவர் வேறு யாரும் அல்ல. சோனியா காந்தி அம்மையார். அந்தக் கடிதத்தை எனக்கு எழுதியிருந்தார்கள். அதை நான் இப்போது நீங்கள் அளித்த செம்மொழி செம்மல் என்ற பட்டயத்தைப் போல, அப்படிப்பட்ட ஒரு கடிதம் அது.
வள்ளுவருடைய சிலை திறப்பு விழா என்று இங்கே அச்சியற்றி அறிவிப்பு தராமல் - சிலை நாட்டு விழா என்று அச்சியற்றப்பட்டிருக்கிறது. காரணம் என்னவென்றால் சிலை அமைப்பு விழா வேறு - சிலை நாட்டு விழா வேறு - இந்தப் பெயரை இந்தச் சொல்லைப் பயன்படுத்தியது நம்முடைய தம்பி வைரமுத்துதான். வேறு ஒரு இடத்தில் இருந்த சிலையை உரிய இடத்திலே கொண்டு வந்து வைப்பதில் இதை சிலை திறப்பு விழா என்று சொல்வதற்குப் பதிலாக - சிலை நாட்டு விழா என்று சொல்வதே பொருத்தம் என்று அவர் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தச் சொல்லி,டெல்லி தமிழ்ச் சங்கத்தினரும் அதை நிறைவேற்றியிருக்கின்றார்கள். இந்த நேரத்தில் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.வைரமுத்து பேசும்போது சொன்னார். நாங்கள் காளிதாசனைப் பாராட்டுகிறோம், நீங்கள் கம்பரை மறந்து விட்டீர்களே என்று இந்தியாவிலே தெற்கு - வடக்கு என்பதைச் சுட்டிக்காட்டி தெற்கே திருவள்ளுவர் பாராட்டப்படுகிறார், ஆனால் வடக்கே திருவள்ளுவர் பாராட்டப்படவில்லை என்பதை ஆதங்கத்தோடு இங்கே குறிப்பிட்டார்.
நம்முடைய உள்துறை அமைச்சர் இங்கே இருக்கிற நேரத்தில் அவருக்கும் தெரியும், இருந்தாலும் நினைவுபடுத்த வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன். டெல்லியில் உள்ள தமிழர்கள் - தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வள்ளுவருடைய சிலையை இங்கே நாட்டியிருக்கிறீர்கள். நன்றி. ஆயிரம் வணக்கம், பாராட்டுக்கள். அதே நேரத்தில் பெங்களூரிலே ஒரு திருவள்ளுவருடைய சிலை. கிட்டத்தட்ட இருபதாண்டு காலமாகிறது,அந்தச் சிலை அமைக்கப்பட்டு, இந்தச் சிலை எங்கேயோ குப்பையிலே இருந்தது என்று சொன்னார்களே, அது குப்பையிலே கூடக் கிடக்கவில்லை. அது பீடத்திலே அமர்த்தப்பட்டு அது யாருடைய சிலை என்று தெரியாமலே - துணி சுற்றப்பட்டு இருபதாண்டு காலமாக - பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் வாயிற்புறத்திலே அய்யன் திருவள்ளுவருடைய சிலை நின்று கொண்டிருக்கின்றது. இந்த அய்யன் திருவள்ளுவர் என்கின்ற அந்தச் சொற்றொடர் கூட, அவருடைய சிலையை குமரி முனையிலே திறக்கின்ற - 133 அடி உயரமுள்ள சிலையை திறந்து அந்த விழாவிலேதான் நான் சொன்னேன். இனிமேல் நான் வள்ளுவர் சிலை, திருவள்ளுவர் என்றெல்லாம் அழைக்க மாட்டேன். என்னோடு சேர்ந்து நீங்களும் நான் அழைப்பதைப் போல அழைக்க வேண்டும். நம்முடைய அய்யன் இவர்தான். எனவே அய்யன் திருவள்ளுவர் என்று நான் அன்றைக்குத்தான் சொன்னேன். அந்த அய்யன் கன்னியாகுமரியோடு நிற்காமல்,டெல்லி வரையில் வந்திருப்பதை இங்கே பேசிய நம்முடைய நண்பர்கள் எல்லாம், அய்யன் திருவள்ளுவர், அய்யன் திருவள்ளுவர் என்று சொன்னதிலிருந்து நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
அந்தச் சிலை பெங்களூரிலே தமிழ்ச் சங்கத்தின் வாசலில் வைக்கப்பட்டு, இருபதாண்டு காலத்திற்கு மேல் ஆகிறது. அந்தச் சிலையைத் திறந்தால், கலவரம் வரும்,திறக்க முடியாது என்று ஒரு சாரார் இன்னமும் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் கலவரத்திலே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அங்கே ஷீலா தீட்சித் போன்ற ஒருவர் பொறுப்புக்கு வராத காரணத்தாலோ என்னவோ அங்கே திருவள்ளுவருடைய சிலை மூடப்பட்டே கிடக்கிறது. பார்த்தால் வயிறு எரிகிறது. மனம் கூசும். நாம் எல்லாம் அவருக்கு வழித் தோன்றல்கள். நம்மை வழி நடத்திய வள்ளுவர் பெருந்தகை உலகம் முழுவதும் உள்ள பெரும் புலவர்களால் பலமொழி வல்லுநர்களால், மொழி பெயர்க்கப்பட்ட நூலுக்குச் சொந்தக்காரர். அறிவுலக மேதை, ஒப்பற்ற ஞானி. அவருடைய சிலை பெங்களூரில் தமிழ் சங்கத்தின் வாயிற் புறத்தில் மூடப்பட்ட நிலையில் துணி சுற்றப்பட்ட நிலையில் அனாதையாக நின்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. நான் உங்களுக்குச் சொல்கிறேன். இருபதாண்டு காலமாக பெங்களூரிலே எந்த விழாவிற்கு என்னுடைய கட்சி சார்பிலே உள்ளவர்களே அழைத்தாலும் கூட, நான் அங்கே சூளுரைத்திருக்கிறேன். இந்தச் சிலை இங்கே திறந்து வைக்கப்படுகிற வரையில் நான் பெங்களூருக்கு வந்து எந்த விழாவிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று சூளுரைத்திருக்கிறேன். இது பெங்களூரிலே இருக்கின்ற அரசுகளுக்கும் தெரியும். மத்திய அரசுக்கும் தெரியும். நண்பர் சிதம்பரம் இந்த உணர்வைப் புரிந்து கொள்ளாதவர் அல்ல. எனவே உள் துறை அமைச்சருடைய முதல் பணியாக வேறு எந்தப் பணி இருந்தாலும் அவைகளையும் பார்க்கட்டும். முதல் பணியிலே முதலாவதுப் பணி பெங்களூர் தமிழ்ச் சங்கத்து வாயிலிலே நிற்கின்ற திருவள்ளுவருடைய சிலையை திறந்து வைப்பதுதான். திறந்து வைக்கவிட்டாலும் பரவாயில்லை. அந்த அழுக்குத் துணியை அகற்றினால் போதும் .
என் அய்யன் வள்ளுவருடைய சிறப்பை அவருடைய சிரிப்பை உலகம் உணர்ந்து கொள்ள அந்தப் பெருமையை உருவாக்க வேண்டும். இதை நான் தமிழ் நெஞ்சங்களின்பால் வைத்திருக்கிற பாசத்தின் அடிபடையில் மக்களைப் பாதுகாக்கும் அமைச்சரான சிதம்பரம் தமிழர்களுடைய நாகரிகத்தை பாதுகாத்திடுங்கள் என்று கோரிக்கையை வைக்கிறேன். வள்ளுவரை வாழ விடுங்கள்.
Die Ewigkeit ist jetzt Frieden finden durch die Lehre des Buddha
9783931274405 Books Herunterladen MCB
-
Die Ewigkeit ist jetzt Frieden finden durch die Lehre des Buddha
9783931274405 Books PDF YVF
Die Ewigkeit ist jetzt Frieden finden durch die Lehre des Bud...
5 ஆண்டுகள் முன்பு
1 கருத்துகள்:
வள்ளுவரின் சிலை பெங்களூரில் திறக்க முடியாமலிருக்கும் நிலை கண்டிக்கப் படவேண்டியது தான்.ஆனால் வள்ளுவர் வாழ்வது சிலைகளின் மூலமாகவா? அல்லது அவர் தந்த குறல்பாக்களை பொருள் உணராது பாடமாக்கி ஒப்பிப்பதன் மூலமாகவா?
திருக்குறள் கூறும் அறிவுரைகளை தத்தமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினால் அன்றி,
அவரை வாழவைப்பது கடினம்.
"வாழ்கின்ற வள்ளுவரே"என்ற
கோஷத்தை தொண்டர்களிடமிருந்து
ஏற்றுக்கொள்ளும் கருணாநிதி, தன் வாழ்க்கையில் வள்ளுவரை எவ்வளவு நாள் வாழவைத்திருக்கின்றேன் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.
கருத்துரையிடுக