ஸ்பெக்ட்ரம்: முடிந்த விவகாரம் டில்லியில் கருணாநிதி பேட்டி

இலங்கை பிரச்னை தொடர்பாக டில்லியில் பிரதமரை முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் இன்று (டிசம்பர் 4) சந்தித்தார்கள். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.சந்திப்பின் போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ம‌த்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோரும் கலந்து கொண்டனர். கொண்டார்கள்.
கூட்டத்திற்கு பிறகு முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்:

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக பிரதமரிடம் மனு அளித்திருக்கிறீர்கள். என்ன முடிவெடுக்கப்பட்டுள்ளது?

பதில்: அனைத்துக் கட்சிகளின் சார்பில் மனுவினை தந்த பிறகு, அதனை வலியுறுத்தி நானும், அனைத்துக் கட்சித் தலைவர்களில் பலரும் தங்களுடைய கருத்துகளை வெளியிட்டோம். இலங்கையிலே உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை பல கட்சிகளின் தலைவர்கள் பிரதமரிடத்தில் வலியுறுத்திப் பேசினார்கள். அவற்றுக்கெல்லாம் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாபும் விளக்கமளித்தார்கள். இறுதியாக நான் அனைவர் சார்பிலும் பிரதமரிடத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். இலங்கையிலே நிலைமைகள¦ சீர்படுவதைப் பற்றி கவனிக்கவும் போரை நிறுத்துவது பற்றி வலியுறுத்துவதற்காகவும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவும் வெளியுறவுத் துறை அமைச்சர், பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு நேரில் அனுப்பி வைக்க வேண்டுமென்று பிரதமரை வலியுறுத்தி கேட்டுக் கொண்டேன். அதனையேற்று, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப்பை இலங்கைக்கு அனுப்பி வைக்க பிரதமர் ஒப்புக் கொண்டார். பிரணாப் எப்போது இலங்கைக்குச் செல்வார் என்று நான் மீண்டும் குறுக்கிட்டு கேட்ட போது, எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் அவர் இலங்கை செல்வார் என்று பிரதமர் உறுதியளித்திருக்கிறார்.

கேள்வி: தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண உதவி நிதி கேட்டுப் பிரதமரிடம் பேசினீர்களா?

பதில்: பேசினேன். தமிழகத்திலே அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. 177 பேர் இறந்திருக்கிறார்கள். 25 இலட்சம் பேர் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு அவர்களுக்கெல்லாம் 4000 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அன்றாடம் அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சுமார் 4.47 லட்சம் குடிசைகள் சேதமடைந்துள்ளன. சுமார் எட்டு இலட்சம் எக்டேர் நிலத்தில் பயிர்கள் பாழ்பட்டுள்ளன. ஏறத்தாழ 13 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் பழுதடைந்துள்ளன. அதனால் மத்திய அரசு உடனடியாக நிவாரண உதவியாக ஆயிரம் கோடி ரூபாய் என அறிவித்து, வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதைத் தவிர மதிப்புக் கூட்டு வரியினை தமிழகத்திலே அமல்படுத்திய வகையில் மத்திய அரசு இழப்பீட்டுத் தொகையாக வழங்கவேண்டியுள்ளது. அதனையும் விரைவில் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். அரசு பதவிக்கு வந்ததும் கூட்டுறவு கடன்கள் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் மத்திய அரசும் கூட்டுறவு கடன்கள் ரத்து செய்ததால், அதன்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கிட வேண்டிய தொகையைத் தரவேண்டுமென்ற எங்கள் கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதனையும் ஞாபகப் படுத்தினேன்.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் இரண்டு சென்னையைச் சுற்றி கொண்டு வரப்பட உள்ளன. ஒன்று விரைவில் முடிவடையக் கூடிய நிலையில் இருக்கிறது.இன்னொன்று மாமல்லபுரத்திற்கு செல்கின்ற வழியில் நெமிலி என்கின்ற இடத்தில் அமைக்கப்படுகிறது. இவைகளுக்குரிய செலவினங்களுக்குத் தேவையான நிதி உதவியை மத்திய அரசு செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். தமிழ்நாட்டிற்குள்ளேயே ஓடுகின்ற நதிகளை இணைக்கும் திட்டம் பற்றி ஏற்கனவே நிதி நிலையிலே அறிவித்திருக்கிறோம். தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்திலும் கடந்த முறை இந்தப் பிரச்சினை பற்றி நான் பேசி, அது எல்லா முதல்வர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போது மூன்று திட்டங்கள் தமிழகத்திலே எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்கு 708 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படவுள்ளன. மத்திய அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு இந்தத் தொகையினை ஒதுக்கிட வேண்டுமென்ற வேண்டுகோளையும் பிரதமரிடம் வைத்தேன். கடல் அரிப்பினைத் தடுப்பதற்குத் தேவையான நிதி உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். ரெயில்வே திட்டங்களுக்கெல்லாம் தமிழக அரசு பாதித் தொகையைத் தர வேண்டுமென்று வலியுறுத்தப்படுகிறது. மத்திய அரசுதான் முழுத் தொகையையும் ஏற்க வேண்டுமென்று விளக்கியிருக்கிறோம். இந்தக் கோரிக்கைகள் மீதெல்லாம் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்திருக்கிறார்.

கேள்வி:காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டும் தலைவருமான சோனியா காந்தியைச் சந்தித்தீர்களா?

பதில்: அவர்களையும் சந்தித்தேன். என்னுடன் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவும், என் மகள் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் வந்திருந்தார்கள். சோனியா காந்தியிடம் பிரதமரிடம் அளித்த இலங்கைத் தமிழர்களுக்காக பிரச்சினை குறித்த மனுவின் நகலைக் கொடுத்தேன். பிரதமரிடம் பேசிய விவரங்களை குறித்து விளக்கியதோடு, சோனியா காந்தியையும் அதிலே கவலையெடுத்து ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.

கேள்வி:தமிழக மின் தேவை பற்றி பேசப்பட்டதா?

பதில்: மத்திய எரிசக்தித் துறையின் இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், மற்றும் பவர் டிரேடிங் கார்பரேஷன் தலைவர் தாகூர், மத்திய அரசின் எரிசக்தித் துறை செயலாளர் அனிர் ராஜ்தான் ஆகியோருடன் நானும், மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியும், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவும் பேசினோம். மத்திய அரசின் சார்பில் தமிழகத்திற்கு தரவேண்டிய முழு அளவிற்கான மின்சாரமும் வழங்கப்படாமல் இருக்கிறது. ஏறத்தாழ இரண்டாயிரம் மெகாவாட் தரப்பட வேண்டும். இதனை மத்திய அமைச்சரோடும் அதிகாரிகளோடும் விவாதித்து, வரும் டிசம்பருக்குள் மத்திய அரசு தரவேண்டியதில் பாதியையோ அல்லது முழுமையையுமோ வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறார்கள்.

கேள்வி: பிரணாப் முகர்ஜி இலங்கைக்குச் செல்வதால் நிலைமை சாதகமாக இருக்கும் என்று நம்புகிறீர்களா?

பதில்: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிருபர்:- சாதகமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

பதில்: அது தான் என்னுடைய பதிலும். சாதகமாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறோம். நல்ல உள்ளங்களிலிருந்து வருகின்ற பதில் அதுவாகத்தான் இருக்கும்.

கேள்வி: இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யக் கூடாது என்று ஏற்கனவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசப்பட்டதே?

பதில்: அதைப் பற்றி அப்போதும் சொல்லியிருக்கிறேன். இப்போதும் பேசியிருக்கிறேன். அவ்வாறு ஆயுத உதவி செய்யவில்லை என்று சொல்கிறார்கள்.

கேள்வி:சென்னை விமான நிலையத்திற்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படவுள்ளதாக செய்தி வந்திருக்கிறதே?

பதில்: எப்போது மும்பை சம்பவம் நடந்ததோ, அதற்குப் பிறகு எல்லா இடங்களிலுமே எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டுமென்ற உணர்வோடு செயல்படுகிறோம்.

கேள்வி: பிரணாப் முகர்ஜி செல்லும்போது தமிழ்ப் பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்படுமா?

பதில்: அவர்கள் இலங்கைக்குச் செல்ல ஒப்புக் கொண்டுவிட்டார்கள். போகும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களைப் பற்றி பின்னர் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.

கேள்வி:பிரதமரோடு நடைபெற்ற சந்திப்பில் திருப்தி இல்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தா. பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?

பதில்: அது அவருடைய கருத்து.

கேள்வி:பிரதமரிடம் வலியுறுத்துவது இதுதான் கடைசியானது என்றும் தா.பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?

பதில்: நான் அதைப்பற்றி அபிப்பிராயம் சொல்ல விரும்பவில்லை. இலங்கைப் பிரச்சினையில் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று எண்ணுகிறவன் நான். அதனால் நான் இதற்கெல்லாம் பதில் சொல்லி ஒற்றுமையைச் சிதைக்க விரும்பவில்லை.

கேள்வி: அ.தி.மு.க.,ம.தி.மு.க.,தே.மு.தி.க.,பா.ஜ.க., போன்ற கட்சிகள் இந்தக் கூட்டத்திற்கு வரவில்லையே?

பதில்: அது அவர்களுடைய உணர்வைக் காட்டுகின்றது.

கேள்வி: இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்த போது, போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி: தீவிரவாதச் செயல்களை ஒடுக்குவதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

பதில்:பிரதமர் இந்தியாவிலே நான்கு இடங்களிலே தீவிரவாதிகளின் செயல்களை அடக்குவதற்காக பாதுகாப்பு முகாம்களை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். அந்த நான்கு முகாம்களிலே ஒன்றை தமிழகத்தில் சென்னையிலே அமைக்க வேண்டுமென்று நான் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இன்று காலையில் பிரதமரிடமும் அதைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.

கேள்வி: கச்சத் தீவை மீட்பதைப் பற்றி பேசினீர்களா?

பதில்: கச்சத் தீவை மீட்டே தீருவோம் என்று அம்மையார் கோட்டையிலே கொடியேற்றி விட்டு முழங்கிய முழக்கம் எல்லாம் தமிழக மக்கள் அறிந்த ஒன்று. இது போன்ற பிரச்சினைகளில் ஒரு ஒப்பந்தம் போட்டு முடிந்த பிறகு, அந்த ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது பற்றியும், அதை மாற்றுவது என்பது பற்றியும் முடிவெடுப்பது என்பது அகில உலக சட்டப்பிரச்சினைக்கு உட்பட்டது.

கேள்வி: இலங்கைப் பிரச்சினையில் சில அதிகாரிகள்தான் தவறு செய்கிறார்கள் என்றும், குறிப்பாக அந்தத் துறையின் செயலாளர் சிவசங்கர மேனன், எம்.கே. நாராயணன் போன்றவர்கள் தான் முக்கிய காரணம் என்று வெளிப்படையாகச் சொல்லப்படுகிறதே?

பதில்: அவ்வாறு பேசப்பட்டால், அதற்கு பிரதமர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோமாக.

கேள்வி: தயாநிதி மாறனை மத்திய அமைச்சரவையில் சேர்க்க வேண்டுமென்று பேசுவீர்களா?

பதில்: நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகுதான் அதைப் பற்றி யோசிப்போம்.

கேள்வி:ஒக்னேக்கல் திட்டம் பற்றி இன்று பேசினீர்களா?

பதில்: ஒக்னேக்கல் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே எங்களுக்கும் கர்நாடக மாநிலத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி உருவான‌தாகும். அதில் மீண்டும் உரிமை கோரி, ஒக்னேக்கல் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று தடுப்பது முறையல்ல. சட்டப்படியும் முறையல்ல, தார்மீக நெறிப்படியும் முறையல்ல.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென்று வலியுறுத்துவீர்களா?

பதில்: அதெல்லாம் முடிந்த விவகாரம் - எல்லாமே முடிந்த விவகாரம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக