"கருணாநிதியைப் போல ஒப்பாரி வைக்கமாட்டேன்" ஜெயலலிதா அறிக்கை

ஜெய‌ல‌லிதா இன்று (டிச‌ம்ப‌ர் 16) வெளியிட்ட அறிக்கை:

கருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. அரசின் வன்முறை, அராஜகப் போக்கு மற்றும் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவுடன் கலந்து பேசி, அவரது பரிபூரண ஒப்புதலுடன் 9.1.2009 அன்று நடைபெற இருக்கும் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று அறிவித்தேன்.

என்னுடைய அறிவிப்பைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல், தோல்வி பயத்தில், தொடர் வண்டியில் உள்ள அனைத்து பெட்டிகளும் கழன்று, ஒரே ஒரு பெட்டி மட்டும் எப்பொழுது கழன்று கொள்ளலாம் என்ற ஊசலாட்டத்தில் இருக்கின்ற சூழ்நிலையில், 14.12.2008 அன்று ‘யார்தான் குறுக்கே நிற்க முடியும்?’ என்ற தலைப்பில் யசோதர காவியக் கதையைச் சொல்லி புலம்ப ஆரம்பித்துவிட்டார், விரக்தியின் விளிம்பில் இருக்கும் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி.

ம‌.தி.மு.க.விற்கும், அதன் பொதுச் செயலாளருக்கும் தெரியாமல், அக்கட்சியின் நான்கு மக்களவை உறுப்பினர்களைக் காட்டி, சுய லாபத்திற்காக இரண்டு மத்திய அமைச்சர் பதவிகளை தி.மு.க-விற்கு பெற்றுக் கொண்டது; இரண்டு துரோகிகளுக்கு பணத்தாசை காட்டி அந்தக் கட்சியை உடைக்க நினைத்து தோல்வி அடைந்தது; உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களையும், கூட்டுறவு சங்கத் தேர்தல்களையும் வன்முறையாளர்களைக் கொண்டு நடத்தி, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையே தாக்கி ரத்தக் களறியை ஏற்படுத்தியது; உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையே தோற்கடிக்க சதித் திட்டம் தீட்டியது; ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தது ஆகியவற்றை எல்லாம் அதிகார போதையில் பண்பாடற்ற கருணாநிதி மறந்துவிட்டார் போலும்!

கருணாநிதியால் குறிப்பிடப்படும் யசோதர காவியத்தில் வரும் யானைப் பாகனின் குணங்கள் அனைத்தும் கருணாநிதிக்கு உள்ளன என்பதை அனைவரும் நன்கு அறிவர். கருணாநிதியிடம் சென்றால் யானைப் பாகனிடம் மாட்டிக் கொண்டதற்குச் சமம் என்பதை அனைவரும் அறிவர். எனவே, யானைப் பாகனின் வஞ்சக வலையில் யாரும் விழத் தயாராயில்லை என்பதைக் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கருணாநிதியின் கூட்டணியில் இருக்கும் ஒரே ஒரு கட்சியும், கருணாநிதியின் குணங்களை அறிந்து கழன்று கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தனக்கு பொருந்தக்கூடிய யானைப்பாகனின் குணங்களை சுட்டிக்காட்டியது போதாது என்று, 15.12.2008 திங்கட் கிழமை அன்று, ‘திருமங்கலம் தேர்தலும் - திடீர் அறிவிப்பும்’ என்ற தலைப்பில் மீண்டும் ஒரு புலம்பல் புராணத்தைப் பாடியிருக்கிறார் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி. கருணாநிதியின் இந்த அறிக்கை என்னை குற்றம் சாட்டுவதாக, என்னை குறை கூறுவதாக உள்ளது.

திருமங்கலம் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவிப்பு திடீரென்று வெளியிடப்பட்டதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் உள்ளவர் கருணாநிதி. அப்படி இருக்கும் போது, என்னை கேட்டுக் கொண்டா இந்திய தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவிக்கும்? கருணாநிதி மத்தியில் உள்ள தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த இடைத் தேர்தலை ஒத்திவைக்க முயற்சி செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு என்னை ஏன் குறை சொல்கிறார் என்று புரியவில்லை.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், அ.தி.மு.க.விற்கும் இந்த இடைத் தேர்தல் அசௌகரியமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதற்காக நான் கருணாநிதியைப் போல் புலம்பத் தயாராக இல்லை. இடைத் தேர்தல் என்ற அறிவிப்பு வந்ததும், உடனே அதைச் சந்திக்க நான் தயாராகி விட்டேன். இதுதான் என்னுடைய இயல்பு. புலம்புவது, அங்கலாய்ப்பது, மற்றவர்களை கரித்துக் கொட்டுவது ஆகியவை கருணாநிதியின் இயல்பு.

“இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. எப்படி போட்டியிடலாம்? இந்தத் தேர்தலில் ம‌.தி.மு.க.தானே போட்டியிட வேண்டும்?” என்று கருணாநிதி வினவி இருக்கிறார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம்.தி.மு.க. திருமங்கலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. எங்கள் கூட்டணியில் உள்ள வைகோவும் நானும் பேசியதன் விளைவாக, தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு எங்களுக்கு விட்டுக் கொடுக்க வைகோ மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டதுடன், அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் அறிவித்து இருக்கிறார். இதில் கருணாநிதிக்கு என்ன வருத்தம்? இதில் அவர் என்ன குறை கண்டார்? என்று புரியவில்லை. அடுத்தவர் கூட்டணி குறித்து கருணாநிதிக்கு என்ன கவலை? இவரது கூட்டணி குறித்து நான் எந்த விமர்சனமும் செய்ததில்லை. எதிர்க்கட்சி கூட்டணி விஷயத்தில், தொகுதி பங்கீடு விஷயத்தில் தேவையில்லாமல் கருணாநிதி மூக்கை நுழைப்பது கண்டிக்கத்தக்கது.

அடுத்தபடியாக, நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வருவதற்கு முன்பு இந்தத் திருமங்கலம் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் அந்த உற்சாகம், நம்பிக்கை நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் வெற்றி முகட்டில் உட்கார வைக்கும் என்று நான் கணக்குப் போடுவதாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார். தேர்தல் என்று அறிவித்துவிட்டால், அதில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்றுதான் அனைத்துக் கட்சிகளும் நினைக்கும். அந்த வகையில், அ.தி.மு.க.வும் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கிறது. இதில் என்ன குற்றத்தை கருணாநிதி கண்டார் என்று எனக்கு புரியவில்லை.

ஒரு வேளை மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு முன், தி.மு.க-வின் மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காக, காங்கிரசார் தீட்டிய சதித் திட்டமாக இருக்கும் என்று கருணாநிதி சந்தேகப்படுகிறாரா? என்று தெரியவில்லை! கடந்த 31 மாத காலமாக பணபலம், அதிகாரபலம் ஆகியவற்றின் துணையோடு, தன் மகன் மு.க. அழகிரியின் அடியாட்களையும், ரவுடிகளையும் வைத்து, தேர்தல் அதிகாரிகளை பயமுறுத்தி அவர்களை பணிய வைத்து தேர்தல் வெற்றிகளை வன்முறை மூலம் சாதித்ததன் விளைவாக, ஜனநாயகம் என்பதே கருணாநிதிக்கு மறந்துவிட்டது போலும்!

இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பதிலோ, மக்களவைப் பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பதிலோ என்ன தவறு இருக்கிறது? என்னைப் பொறுத்த வரையில் தேர்தல் என்று அறிவித்துவிட்டால், ஜனநாயக ரீதியில் அதை துணிவுடன் எதிர்கொள்வதற்கு தயாராகிவிடுவேன். கருணாநிதி போல் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பது என் வழக்கம் கிடையாது.

கருணாநிதியின் பேச்சிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அவர் தேர்தலைக் கண்டு பயப்படுகிறார், அச்சப்படுகிறார் என்பது தெளிவாகிறது. அச்சத்தின் வெளிப்பாடுதான் இந்தப் புலம்பல் பேச்சு. வெள்ள நிவாரணப் பணி மேற்கொள்ளாமை, விலைவாசி உயர்வு, கடுமையான மின்வெட்டு, அரிசி கடத்தல், மணல் கொள்ளை, சாலைகள் பராமரிப்பின்மை என மக்கள் விரக்தியில் இருக்கும் அசாதாரண சூழ்நிலையில், நாள் முழுவதும் ஒலிபெருக்கி முன் புலம்பிக் கொண்டும், அங்கலாய்த்துக் கொண்டும், பிதற்றிக் கொண்டும், திண்ணைப் பேச்சுக்கள் பேசிக் கொண்டும், தன்னுடைய உளறல்களை கிறுக்கிக் கொண்டும் நேரத்தை வீணாக்கி விரயம் செய்து கொண்டிருக்கிறார் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி.

வரவிருக்கும் திருமங்கலம் தொகுதிக்கான இடைத் தேர்தலையும், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, கருணாநிதிக்கு தக்கப் பதிலடியை மக்கள் கொடுப்பார்கள்; தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

3 கருத்துகள்:

தமிழ் உதயன் சொன்னது…

அன்பரே.

வரும் இடை தேர்தல் கண்டிப்பாக ஆளும் கட்சிக்கு ஒரு மெகா பெரிய சாவல்தான். இந்த நிலையில் இந்த தேர்தல் முடிவு எனபது வரக்கூடிய மக்களவை தேர்தலுக்கு முன்னோடிதான். இந்த முறையும் மதுரை மேற்கு தொகுதி இடைதேர்தல் போல 24 அமைச்சர்கள், 32 எம் எல் ஏக்கள் மற்றும் திமுகவின் அனைத்து அமைச்சர்களும் தங்களுடைய துறை வேலையை விட்டுவிட்டு இங்கு முகாம் இடுவார்கள்...

இன்னும் காட்சி ஆரம்பிக்கவில்லை. அம்மாவின் அறிக்கை படத்தின் முதலில் வரும் ஆரம்ப காட்சிதான். எது எப்படியோ திருமங்கலம் தொகுதி வாக்காளர்கள் குடுத்து வைத்தவர்கள் தினமும் இனிமேல் செய்திதாள்களுக்குள் தெரியாமல் 1000, 2000 ருபாய் பணமும் வந்து சேரும்..

பாத்துகுங்க அப்பு அது கள்ள நோட்ட கூட இருக்கலாம்...

நன்றி

தமிழ் உதயன்.

Unknown சொன்னது…

சுத்தமாக மதி இழந்துவிட்ட தமிழக முதல்வருக்கு சரியான பதிலடி

பெயரில்லா சொன்னது…

well said by Jaya

கருத்துரையிடுக