க‌லைஞ‌ர் டி.வி‍க்கு போனவ‌‌ர்க‌ளின் க‌தி என்ன‌? ஜெய‌ல‌லிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (டிசம்பர் 24) வெளியிட்ட அறிக்கை:

“பணத்தால் இயங்க வேண்டிய நிலையிலுள்ள அரசியல் இயக்கம் பணக்காரர்களின் இயக்கமாகிவிடும். அங்கே, தியாகமும், தொண்டுள்ளமும் பின்னுக்குத் தள்ளப்படும். சுழல் சொல்லர்களும், தன்னலங்களும் தலைமையேற்று விடுவர்” என்றார் பேரறிஞர் அண்ணா.

கருணாநிதி போன்ற சுயநலவாதிகளை மனதில் வைத்து பேரறிஞர் பெருந்தகை அண்ணா அன்று சொன்னதுதான் இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. காஞ்சிப் பாசறையில் வளர்ந்தவன் என்று தன்னை தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதியின் லட்சணம் இது தான்!

1.12.2008 அன்று கருணாநிதியின் இல்லத்தில் நடந்த கோமாளிக் கூத்து குறித்து நான் வெளியிட்ட அறிக்கையில், "அரசு கேபிள் நிறுவனம் இனி செயல் அற்றதாக இருக்குமா? அல்லது மாறன் சகோதரர்களின் சுமங்கலி கேபிள் விஷன், கேபிள் வியாபாரத்தில் மீண்டும் தங்களது ஏகபோக உரிமையை நிலைநாட்டும் வகையில், பார்க்கத் தகுதியற்ற, பார்க்க சகிக்காத, யாரும் பார்க்காத, பயனற்ற கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதோடு தன் பணியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு கேபிள் நிறுவனத்திற்கு கட்டளை இடப்படுமா?" என்று நான் வினவியிருந்தேன். இதுநாள் வரை கருணாநிதியிடமிருந்து அதற்கு பதில் ஏதுமில்லை. இருப்பினும், சில நடவடிக்கைகளின் மூலம் அது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

மு.க. அழகிரி குடும்பத்திற்குச் சொந்தமான ராயல் கேபிள் விஷன் நிறுவனத்தினரால் தாங்க முடியாத இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள், 1.12.2008 அன்று கருணாநிதி இல்லத்தில் நடைபெற்ற பணப் பரிமாற்ற ஒப்பந்தத்திற்குப் பிறகு சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தினரால் மிரட்டப்படுவதாகவும், இது குறித்து முதலமைச்சரிடம் புகார் கொடுக்க 23.12.2008 அன்று அவர்கள் சென்னை வந்துகொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும், அவர்களுக்கு உணவு கூட கொடுக்கப்படவில்லை என்றும் கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆக கருணாநிதியை நம்பி அரசு கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் இன்று பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

1.12.2008 அன்று நடைபெற்ற பணப்பரிமாற்ற ஒப்பந்தத்தின் போது, மாறன் சகோதரர்களிடம் மு.க. அழகிரி 800 கோடி ரூபாய் கேட்டதாகவும், இதன் அடிப்படையில் 300 கோடி ரூபாய் முன்பணம் மாறன் சகோதரர்களால் அழகிரியிடம் கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், காசுக்காக எதையும் செய்யக் கூடிய கருணாநிதியை சந்திப்பதன் மூலம் அரசு கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்களுக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.

இதே நிலைமைதான் கருணாநிதியை நம்பி கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த சரத் ரெட்டிக்கும் ஏற்பட்டிருக்கிறது. மாறன் சகோதரர்களுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவரான சரத் ரெட்டி சன் குழுமத்தின் தலைமைப் பதவியை வகித்து வந்தார். மாறன் குடும்பத்திற்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக, கருணாநிதியால் கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட போது, சன் தொலைக்காட்சியில் பணிபுரிந்த சரத் ரெட்டி உட்பட 250 நபர்கள் கலைஞர் தொலைக்காட்சிக்குச் சென்றது குறித்து பத்திரிகைகளில் வெளி வந்த செய்திகளை அனைவரும் அறிவர். கலைஞர் தொலைக்காட்சியின் 40 விழுக்காடு பங்குகள் கருணாநிதியின் மகன் அழகிரியிடமும், 40 விழுக்காடு பங்குகள் கருணாநிதியின் துணைவியின் மகள் கனிமொழியிடமும், மீதமுள்ள 20 விழுக்காடு பங்குகள் சரத் ரெட்டியிடமும் உள்ளதாகவும், 1.12.2008 அன்று கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் ஏற்பட்ட இணைப்பை அடுத்து, மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்களை தங்கள் கையில் எடுத்துக்கொண்ட மாறன் சகோதரர்கள், சரத் ரெட்டியின் மீதுள்ள ஆத்திரத்தில், கோபத்தில், 20.12.2008 அன்று இரவு 12 மணிக்கு அவருடைய இல்லத்திற்குச் சென்று அவரை மிரட்டியதாகவும், அவர் இல்லத்தில் விடியற்காலை 2.30 வரை இருந்ததாகவும், அன்று இரவு அவர் இல்லத்திலிருந்து பலத்த கூக்குரல் கேட்டதாகவும், இது குறித்து காவல் துறையினரிடம் கேட்ட போது, சரத் ரெட்டியிடம் இருந்து காவல் துறையினருக்கு புகார் எதுவும் வரவில்லை என்று கூறப்பட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

தற்போது சரத் ரெட்டி எலும்பு முறிவு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. காவல் துறையினரிடம் புகார் எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும், இதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் சரத் ரெட்டியின் வக்கீலிடம் கருணாநிதி தெரிவித்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன. கருணாநிதியை நம்பிப் போனவர்களின் கதி என்னவாகும் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. இதனையடுத்து, சன் குழுமத்திலிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்குச் சென்ற மீதமுள்ள 250 நபர்கள் தங்களுக்கு என்ன கதி ஏற்படுமோ என்ற அச்சத்தில் உறைந்து போயிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஒரு மாணவனின் பிணத்தின் மீது டாக்டர் பட்டம் பெற்ற கருணாநிதிக்கு மக்களின் உயிர் பற்றி கவலையில்லை. கருணாநிதி ஒரு நம்பிக்கைத் துரோகி என்பதை சரத் ரெட்டி இப்போது புரிந்து கொண்டிருப்பார்.

கருணாநிதியைப் பொறுத்தவரையில், குடும்ப நலன், உறவினர்களின் நலன், பணம் ஆகியவைதான் அவருக்கு முக்கியம். கருணாநிதி ‘ரவுண்டாக’ கேட்ட பணம் அவருக்குக் கிடைத்துவிட்டது. எனவே வேறு எதைப் பற்றியும் அவர் கவலைப்பட மாட்டார். அரசாங்கம், சட்டம் என்பதெல்லாம் மக்களுக்காக இருக்கிறதா அல்லது கருணாநிதியின் குடும்பத்திற்காக இருக்கிறதா என்று புரியாத சூழ்நிலை தற்போது தமிழகத்தில் நிலவுகிறது. கருணாநிதி தன்னுடைய குடும்பத்திற்காக ஆட்சி நடத்துகிறார், மக்களுக்காக ஆட்சி நடத்தவில்லை என்பதை இனிமேலாவது தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

குடும்பங்களின் ஆட்சி உருவானால் சுயநலத்திற்கே முன்னுரிமை தரப்படும் என்பதை மக்கள் புரிந்து கொண்டு, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, அ.தி.மு.க.ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, எனது தலைமையிலான அ.தி.மு.க.ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தவுடன், கருணாநிதியின் குடும்பத்தினரின் அராஜகச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு, கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் நிம்மதியாக தங்களது தொழிலை நடத்தவும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை கண்டு களிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக