கருணாநிதி, ஜெயலலிதா கிருஸ்துமஸ் வாழ்த்து

கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

அன்பு, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, மனித நேயம் ஆகியவற்றை உலகுக்கு வலியுறுத்திய மாமனிதர் இயேசு அவர்களின் பிறந்த நாள், “கிருஸ்துமஸ் திருநாளாக” உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கிருஸ்துமஸ் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடிடும் கிருத்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் என் இதயம் கனிந்த கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள் உரித்தாகுக.

கிருத்தவ சமயம் ஏழை எளிய, நலிந்த மக்களுக்குத் தொண்டுகள் செய்வதை வலியுறுத்துகிறது. திருவிவிலியம் என்ற நூல், “ஏழைகள் வயிற்றில் அடிக்காதே; கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே; பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே; வறுமையில் உழல்வோரை எரிச்சலூட்டாதே; உள்ளம் உடைந்தோர்க்குத் துயரங்களைக் கூட்டாதே; வறுமையில் உழல்வோர்க்குக் காலம் தாழ்த்தாமல் உதவி செய்; துன்புறுவோரின் வேண்டுதலைத் தள்ளிவிடாதே; ஏழையரிடமிருந்து உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே; உன்னிடம் உதவி வேண்டுவோரிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக் கொள்ளாதே; உன்னைச் சபித்திட யாருக்கும் வாய்ப்பு அளிக்காதே; பூசலைத் தவிர்த்திடு!” என அறிவுரைகளை வழங்குகிறது.

மனிதநேயம் கசியும் இந்த அறிவுரைகளை இதயத்தில் தாங்கி, சமுதாயத்தில் ஏழை, எளியோர்க்கு இயன்ற உதவிகளை நல்கிடுவோம்! இன்னல்கள் அகற்றிடுவோம்! கருத்து வேறுபாடுகளால் எழும் பூசல்களைக் களைந்திடுவோம்! எங்கும் நல்லிணக்க உணர்வுகளை வளர்த்திடுவோம் என இந்த இனிய கிருஸ்துமஸ் திருநாளில் உறுதியேற்போம் என்று கூறி கிருத்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்.

ஜெய‌ல‌லிதா வெளியிட்டுள்ள‌ வாழ்த்து செய்தி:
"தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்" என்னும் பொன்மொழியைக் கூறி உலகத்தை ஆட்கொள்ள வந்த ஏசுபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடலின் ஓயாத அலை போல மனமானது இன்னும் மகிழ்ச்சி கிடைக்குமா என்று அலைந்து கொண்டே இருக்கிறது. எவன் ஒருவன் பிறருக்கு உதவ முன்வருகிறானோ அவனே நிறைவு உள்ளவனாக கருதப்படுவான் என்கிறார் ஏசுபிரான். மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தினால் அன்பு, சந்தோஷம், சமாதானம், அமைதி ஆகியவை பெருகி உண்மையான மகிழ்ச்சி அனைவரது வாழ்விலும் ஏற்படும். ஏசுநாதரின் போதனைகளுக்கு முற்றிலும் எதிரான சுயநலவாத, வன்முறைப் போக்கிற்கு முற்றுப் புள்ளி வைக்க இந்த நன்னாளில் சபதம் ஏற்போம்!

உலகத்தைக் காக்க தன்னையே தந்த தியாகத்தின் திருவுருவமான ஏசு பிரானின் இந்த இனிய பிறந்த நாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கட்டும்! அன்பு பெருகட்டும்! ஆனந்தம் தவழட்டும்! என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, மீண்டும் ஒரு முறை எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக