"அரசு என்றால் அமைச்சர்கள் மட்டுமல்ல..." கருணாநிதி


வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக இன்று (டிசம்பர் 7) கலெக்டர்கள் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை:

வெள்ள நிவாரணப் பணிகளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்கள் இதுவரையில் செய்திருக்கும் துயர் துடைப்புப் பணிகளை நான் பாராட்டுகின்றேன். வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, மின்சார வாரியம், மக்கள் நல்வாழ்வுத் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகிய துறைகள் ஆற்றிய பணிகளையும் நான் பாராட்டுகிறேன். எனினும் இன்னும் வேகமாகவும், நல்ல முறையிலும் அவர்கள் தங்களுடைய பணிகளை மேற்கொண்டால்தான் இது போன்ற இயற்கை இடர்களிலிருந்து எதிர்காலத்திலே மக்களைக் காப்பாற்றவும், பயிர்களைக் காப்பாற்றவும் முடியும். ஊக்கமும் தொடர்ந்து நீங்கள் செய்யும் பணிகளின் மூலமாக வெளிப்பட வேண்டுமென்று விரும்புகிறேன்.

இந்த வேகமும் ஊக்கமும் தொடர்ந்து நீங்கள் செய்யும் பணிகளின் மூலமாக வெளிப்பட வேண்டும். சீரமைப்புப் பணிகள் சிறப்பாகவும், தரத்தோடும் நிறைவேற்றப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக ஆறுதலும் நம்பிக்கையும் தரத்தக்க வகையில் உங்கள் பணிகளை வகுத்துக் கொண்டு நிறைவேற்றிட வேண்டும். புயல், பெருமழை காரணமாக உயிரிழந்த ஒவ்வொரு குடும்பங்களுக்கும்; கால்நடைகளை இழந்தோர்க்கும் நிவாரண உதவியை உடனடியாக அதாவது இப்போது நாங்கள் நிர்ணயித்த 12ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும்.

வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்கும், வெள்ளம் நுழைந்த வீடுகளுக்கும், பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்த வீடுகளுக்கும், வழங்க வேண்டிய நிவாரண உதவிகளை; ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக வழங்க வேண்டும். இதைச் சொல்வதற்குக் காரணம், டிராப்ட் ஆகவோ, காசோலையாகவோ வழங்கலாமா என்ற கருத்துக்கூட பேசப்பட்டாலும், நம்முடைய மாநிலத்தைப் பொறுத்தவரை பணமாகவே நேரில் ஒவ்வொருவரிடமும் வழங்குவதில்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்தி அளிக்கும். அந்த நிதி உதவிகளை 15ஆம் தேதிக்குள் வழங்கி முடித்திட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயிர்கள் சேதம் பற்றிய கணக்கெடுப்பை நடத்தி முடித்திடவும்; அவற்றிற்கு நிவாரண நிதி உதவி வழங்கிடவும்; 31ஆம் தேதிக்குள் முடித்திட அதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிவாரண உதவிகளை, பாதிக்கப்படாதோர் தட்டிச் சென்று விடாமல் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும். பாதிக்கப்படாதோர் ஓரிருவர் நிவாரண உதவிகளைத் தட்டிச் செல்ல முயன்றாலும்; பாதிக்கப்பட்டோர் எவரும் நிவாரண உதவிகளைப் பெறுவதிலிருந்து விடுபட்டு விடாமல்; கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக வெள்ளம், வறட்சி ஏற்படும்போது நிலவிடும் சூழல்களை; அந்த நிலைமைகள் மாறியதற்குப் பிறகு அவற்றை முற்றிலும் நாம் மறந்து விடுகிறோம். அரசிலே உள்ள நாங்கள் மாத்திரமல்ல, அதிகார வர்க்கத்திலே உள்ளவர்களும் மறந்து விடுவது இயல்பாக ஆகிவிட்ட ஒன்றாக உள்ளது. இந்த முறை அப்படி இல்லாமல்; வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள அனுபவங்களின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வுகளைப் பற்றி தொடர்புடைய துறைகளோடு கலந்தாலோசனை செய்து; தேவையான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பணிகளைத் தொடங்கிச் செய்யத்தான் இப்போது அமைச்சர்களைக் கொண்ட ஒரு துணைக் குழு, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலே அமைக்கப்பட்டு, அதன் பணிகளை ஆற்றி வருகிறது. அதை இன்னும் தீவிரப்படுத்தி, ஆழ்ந்து யோசித்து நம்முடைய அரசின் சார்பில் செய்ய வேண்டியவைகளை கூடுமான வரையில் பட்ஜெட் வெளியிடுவதற்கு முன்பாகவோ அல்லது சிலவற்றை பட்ஜெட் வந்த பிறகோ நாட்டிற்கு அறிவிக்கும் வகையில் ஆவன செய்திட வேண்டுமென்று அந்தக் குழுவினரை கேட்டுக் கொள்கிறேன்.

கால்நடை இழப்புக்கு நிவாரண உதவி வழங்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியரிடமிருந்து கோட்ட வருவாய் அலுவலர்களுக்கு மாற்றிக் கொடுக்க இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆறுகள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றில் தூர் வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர்களே மேற்பார்வையிட்டு தரத்தை உறுதி செய்திட வேண்டும் என்றும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை நல்ல முறையிலே நிறைவேற்ற வேண்டும்.

உடைமைகள் முழுவதையும் இழந்துவிட்ட குடும்பங்களுக்கு அந்தக் குடும்பங்களிலே எத்தனை பேர் இருந்தாலும் அத்தனை பேருக்கும் தலா ஒரு வேட்டி, ஒரு சேலை என்ற முறையில் வழங்க வேண்டும். பொங்கல் நேரத்திலே வழங்குவது என்பது ஒரு புறம் இருந்தாலுங்கூட, நான் முதலிலே கூறியதைப் போல, இந்தப் பாதிப்பை ஈடுகட்ட அவர்களுக்கு இந்த இலவச வேட்டி சேலைகளை உடனடியாக நாளைக்கே தொடங்கி வழங்கிட வேண்டும். அம்மாதிரியான குடும்பங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியருக்கு இலவசமாகப் பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கவும் முடிவு செய்திருக்கிறோம். அவைகள் நேர்மையான முறையில் அவர்களுக்குச் சென்று கிடைத்திட வேண்டும்.

இந்த பெருமழை காரணமாக உயிரிழந்தோருக்கு தலா ஒரு இலட்ச ரூபாய் வீதம் வழங்குவதென்று அறிவித்திருக்கிறோம். அது போதுமானதல்ல என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் குரல் இன்றைக்கு ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. எனவே இந்தக் கூட்டத்தில் எடுக்கின்ற முடிவாக அந்தத் தொகையை இறந்தோர் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் உதவித் தொகை என்பதை இரண்டு இலட்ச ரூபாய் என்று உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. அந்தத் தொகையும் அவர்களுக்கு உடனடியாகப் போய்ச் சேர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இன்றைய தினம் மாலையிலே டெல்லியிலிருந்து வெள்ளப் பாதிப்புகளையும், நிவாரணப் பணிகளையும் பார்வையிட மத்திய குழு வருகிறது. அந்தக் குழு வருகிற நேரத்தில் அவர்கள் பார்ப்பதற்காக மாத்திரமல்ல, பாதிக்கப்பட்ட மக்கள் கண்டு, ஆறுதல் அடைவதற்காக நம்முடைய ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முன்னின்றும், எல்லா அதிகாரிகளையும் வயல்களில், ஆற்றுப் பகுதிகளில் வாய்க்கால் பகுதிகளில் சாலையோரங்களில் நின்று பணியாற்ற வேண்டும்.

ஒருமுறை மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அழைத்து வந்து பார்வையிடச் செய்த போது, அவர்கள் பிரமித்துப் போய் விட்டார்கள். அந்த ஏரி முழுவதும் ஏதோ பூச்சிகள் பறப்பதைப் போல பக்கத்திலே உள்ள வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் பறப்பதைப் போல அத்தனை மக்கள் அங்கே வேலை செய்து கொண்டிருந்த காட்சியைப் பார்த்து நாம் கேட்ட பணத்தை உடனடியாகக் கொடுத்தார்கள், இவ்வளவு பேர் வேலை செய்கிறார்களே என்று அந்த அளவிற்கு டெல்லியிலே உள்ளவர்களை நம்ப வைப்பதற்காக அல்ல, நம்முடைய மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக, அமைதிப்படுத்துவதற்காக, கண்ணீரைத் துடைப்பதற்கு, கவலைகளை மறப்பதற்கு - பரவாயில்லை, நம்முடைய அரசும், அதிகாரிகளும் நமக்காக இந்த அளவிற்குக் கஷ்டப்படுகிறார்கள் - என்கின்ற அந்த உணர்வை அவர்களுடைய உள்ளத்திலே பதிய வைக்க நம்முடைய அதிகாரிகள் பாடுபட வேண்டும்.

நாம் நம்முடைய கடமைகளைச் செய்கின்ற நேரத்தில் இயற்கையின் இது போன்ற தொல்லைகள் அடிக்கடி ஏற்படுகின்றன. கடந்த மாதம் வயல் வெளிகளைப் பார்த்த போது பயிர் பச்சைகள் எல்லாம் செழித்துக் குலுங்கி நாம் ஒருவரையொருவர் பார்த்து மகிழ்ச்சியடைகின்ற அளவிற்கு இருந்தது. திடீரென்று ஏற்பட்ட இயற்கை சூழலின் மாற்றத்தால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. இதை எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் எதிர்பாராதது நடந்தாலுங்கூட, அவைகளை எதிர்கொள்கின்ற திறன் நம்முடைய அரசுக்கு உண்டு. அரசு என்றால் அமைச்சர்கள் மாத்திரமல்ல, உங்களைப் போன்ற அதிகாரிகளையும் கொண்டதுதான் அரசு. எனவே அப்படிப்பட்ட இந்த அரசுக்கு மேலும் மேலும் நல்ல பெயரும், திறமையான அரசு, மக்களிடம் அன்பும் அரவணைப்பும் உள்ள அரசு, ஏழைகளுக்காக இரக்கம் காட்டுகின்ற அரசு என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகின்ற ஒரு பொறுப்பினை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக