சர்கரை பொங்கல் தயாரிக்க பயன்படும் பொருட்கள் இலவசமாக வழங்க வேண்டும்

கருணாநிதி தலைமையில்,இன்று (டிசம்பர் 16),அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


தீ ர் மா ன ம். 1

நீண்டகாலமாகப் பரிசீலிக்கப்படாமல் இருந்த மண்டல் கமிஷன் பரிந்துரைகளை - திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையினை ஏற்று - நடைமுறைப்படுத்திட முன்வந்து; மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியதுடன்; காவிரி நடுவர் மன்றம் அமைத்திட உறுதுணையாக இருந்து; மாநிலங்களிடை மன்றம் அமைத்து; கலைஞரின் கோரிக்கைப்படி, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள வெளிநாட்டு விமானதளத்திற்கு அண்ணா பெயரையும், உள்நாட்டு விமான தளத்திற்கு காமராஜர் பெயரையும் சூட்டி; அரசியல் நாகரிகத்திற்கும், பண்பாட்டிற்கும், உயரிய இலட்சியங்களுக்கும் அடையாளச் சின்னமாக விளங்கியவரும், சமூகநீதிக் காவலரும், தமிழகத்தின் மீதும், தமிழ் மக்கள் மீதும் குறிப்பாகவும், சிறப்பாகவும் கலைஞரிடமும், திராவிட இயக்கத்தின் மீதும், நீங்காப் பற்றும் பாசமும் கொண்டிருந்த இந்தியத் திருநாட்டின் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மறைவு நமது நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.


தீ ர் மா ன ம். 2

மும்பை மாநகரில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் மற்றும் ஓபராய் ஓட்டல்கள், நரிமன் இல்லம் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் - பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வெளிநாட்டவர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள், காவல்துறையினர், தேசிய பாதுகாப்புப் படையினர், தீவிரவாத எதிர்ப்புப் படையினர் ஆகியோருக்கு இந்த உயர்நிலை செயல்திட்டக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன்; தீவிரவாத - பயங்கரவாத நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிவதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.


தீ ர் மா ன ம். 3

முதலமைச்சர் கலைஞர் தலைமையில், தமிழக அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் 4.12.2008 அன்று டெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து - இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம், அரசியல் ரீதியான தீர்வு காணும் முன்னோடி நடவடிக்கையாக, உடனடியாகப் போர்நிறுத்தம் செய்ய வேண்டுமென்று இலங்கை அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் - என்று எடுத்துரைத்ததன் விளைவாக; இலங்கையிலே நிலைமைகள் சீர்படுவதைப் பற்றிக் கவனிக்கவும், போரை நிறுத்துவதைப் பற்றி வலியுறுத்துவதற்காகவும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு நேரில் அனுப்பி வைக்க இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஒப்புக் கொண்டார்கள். அதற்கேற்ப, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி, உரிய பேச்சுவார்த்தைகளை நடத்தி, போர் நிறுத்ததற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென இந்தியப் பிரதமரையும், மத்திய அரசையும் இந்த உயர்நிலை செயல்திட்டக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


தீ ர் மா ன ம். 4

டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் சோனியா காந்தியின் சீரிய தலைமையிலான அகில இந்திய காங்கிரஸ் கட்சி மூன்று மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதோடு; இரண்டு மாநிலங்களில், ஏற்கெனவே இருந்த எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருப்பதற்கு உயர்நிலை செயல்திட்டக் குழு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.


தீ ர் மா ன ம். 5

தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை விழா எடுத்துச் சிறப்பாகக் கொண்டாடுவதை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு, சர்க்கரைப் பொங்கல் தயார் செய்வதற்குத் தேவையான பொருள்களை அரசின் சார்பில் இலவசமாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கலைஞரையும், தமிழக அரசையும் உயர்நிலை செயல்திட்டக் குழு அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக