மாறன் சகோதரர்கள் கருணாநிதி குடும்பம் இணைப்புக்கு காரணம் மாமனமாற்றமா? பணப் பரிமாற்றமா? ஜெயலலிதா கேள்வி


ஜெயலலிதா இன்று (டிசம்பர் 3) வெளியிட்ட அறிக்கை

டிசம்பர் 1ம் தேதி முதலமைச்சர் கருணாநிதி அரங்கேற்றிய கோமாளிக் கூத்து ஊடகங்கள் பயனடைவதற்காக நடத்தப்பட்டதே தவிர,அதை எவ்விதமாகவும் எடுத்துக் கொள்ளலாம். கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வெளிப்படையான விரோதத்தைப் போக்கி முறிந்த உறவை மீண்டும் புதுப்பிக்கும் விதத்திலோ, அல்லது இரண்டு போரிடும் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட தற்காலிகமான போர் நிறுத்தம் எனும் விதத்திலோ, அல்லது இரண்டு வணிக நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்ட நிதி உடன்பாடு என்றோ இந்தக் கேலிக் கூத்தை கருத்தில் கொள்ளலாம். அவர்களுக்கிடையே நிகழ்ந்த பரிமாற்றம் எந்த வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சியை ஊடக நிகழ்ச்சியாக ஆக்கியதன் மூலம், இந்த கோமாளி நாடகம் குறித்து பொதுமக்களும் தங்களுடைய கருத்தையும், கணிப்பையும் தெரிவிக்க கதவுகளை திறந்துவிட்டிருக்கிறார்.
இதற்கு முன்பு கூட,கண்ணீர் ததும்பும் கட்டுரைகளை எழுதியும், கனல் கக்கும் கவிதைகளை புனைந்தும், குடும்பத் தகராறை பொது மேடைக்கு கருணாநிதி எடுத்து வந்துவிட்டார். எனவே, தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள குடும்பப் போர் நிறுத்தம் அல்லது உடன்படிக்கை குறித்து பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் அல்லது ஆர்வம் உள்ளவர்கள் விமர்சித்தால் அது குறித்து கருணநிதியால் புகார் கூற முடியாது. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களை திருப்திபடுத்தும் வகையில் தலைவனுக்கு ஒன்று, மூத்த மகனுக்கு ஒன்று, இளைய மகனுக்கு ஒன்று, மற்றொரு வீட்டின் தலைவிக்கு ஒன்று என ஏற்கெனவே தமிழ்நாடு பல பாகங்களாக பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய புது உடன்படிக்கையின்படி, ஏற்கெனவே கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் வைத்திருந்த தமிழ் நாட்டின் ஒரு சில பகுதிகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, அந்தப் பகுதிகள் மாறன் சகோதரர்களுக்கு கொடுக்கப்பட்டதா? இல்லை, கேபிள் டி.வி. வியாபாரத்திற்கான ஏகபோக உரிமை மாறன் சகோதரர்களுக்கு கொடுக்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதா? கருணாநிதியின் குடும்பத் தகராறு குறித்து அவருடைய கவிதைகளையும், கடிதங்களையும் திரும்பத் திரும்ப மக்கள் மீது திணித்து, மக்களை சலிப்படையச் செய்ததோடு அல்லாமல், அவர் ந‌டத்திய ‘உடன்படிக்கை கண்காட்சிக்கும்’ கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்ட மக்களுக்கு, இந்தப் பேரத்தில் உள்ள அம்சங்களை தெரிந்து கொள்வதில் எல்லா விதமான உரிமைகளும் உண்டு.
கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் மீது ஒருவர் சுமத்தியதாகச் சொல்லப்படும் மனக்கிலேசங்களையும், வேதனைகளையும் தெரிந்து கொள்வதில் அவ்வளவு அக்கறை இல்லாவிட்டாலும், சண்டைக்காரர்கள் ஒருவர் மீது ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டுக்களின் கதி என்ன என்பதை அறிந்து கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
பி.எஸ்.என்.எல். ஒப்பந்தப் புள்ளியில் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதற்கு, மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன்தான் பொறுப்பு என்று அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் தற்போதைய கதி என்ன? 60 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து தினகரன் பத்திரிகையில் தினந்தோறும் வெளியிடப்பட்டு, சன் தொலைக்காட்சியிலும் மணிக்கு ஒரு முறை என்று மணிக்கணக்கில் ஒளிபரப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களின் நிலைமை என்ன?
எல்லாவற்றிற்கும் மேலாக,முதலமைச்சர் கருணாநிதியின் மகன் அழகிரிக்கு எதிராக கலாநிதி மாறனால் கொலை, சொத்துக்களை தீயிட்டு சேதப்படுத்தியது, கொள்ளையடித்தது போன்ற குற்றச்சாட்டுக்களின் நிலைமை என்ன?

குடும்ப உறுப்பினர்களின் பார்வைக்கு தங்களுடைய குடும்பம் மிக உயர்ந்த குடும்பமாக தெரிந்தாலும், மேற்படி பிரச்சினைகள் குடும்ப உடன்படிக்கையின் பேரில் நிரந்தரமாக அமைதி அடையச் செய்யக் கூடிய பிரச்சினைகள் அல்ல. அல்லது ஒவ்வொரு கொலையும், ஒவ்வொரு தீயினால் ஏற்படுத்தப்பட்ட சேதமும், ஒவ்வொரு ஊழலும் மற்றும் அனைத்து பிற குற்றங்களும், இரண்டு குடும்பங்களுக்குள் உடன்படிக்கை செய்து கொள்ளக் கூடிய அளவில் ஒரு புதிய சட்டத்தை இயற்ற தற்போதைய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறதா?

இன்னொரு புறம் எழுகின்ற கேள்வி - பேரனுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் மத்திய மந்திரிசபை மாற்றி அமைக்கப்படப் போகிறதா? அரசு கேபிள் நிறுவனம் மூடு விழா திட்ட முறை குறித்தும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். அரசு கேபிள் நிறுவனம் இனி செயல் அற்றதாக இருக்குமா? அல்லது மாறன் சகோதரர்களின் சுமங்கலி கேபிள் விஷன், கேபிள் வியாபாரத்தில் மீண்டும் தங்களது ஏகபோக உரிமையை நிலைநாட்டும் வகையில், பார்க்கத் தகுதியற்ற, பார்க்க சகிக்காத, யாரும் பார்க்காத, பயனற்ற கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதோடு தன் பணியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு கேபிள் நிறுவனத்திற்கு கட்டளை இடப்படுமா?

இவை அனைத்தையும் தமிழக மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை முதலமைச்சருக்கு உண்டு. இரு குடும்பங்களுக்கு இடையில் சண்டை நடந்து கொண்டிருந்த போது,போர் நிருபராக பணியாற்றிக் கொண்டு மனம் நெகிழக் கூடிய கதைகளை எழுதிய கருணாநிதிக்கு போர் நிறுத்தம் ஆனவுடன் அது குறித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை உண்டு. இந்தப் போரில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் மனம் மாறிவிட்டார்கள், ஏனென்றால் அவர்களுக்கு மனம் இருக்கிறது என்று கூறினார் கருணாநிதி. இது வெறும் மன மாற்றமா? இருதய மாற்று அறுவை சிகிச்சை நடந்து, இதயமே மாற்றப்பட்டது போல் அல்லவா தோன்றுகிறது? இதயம் இனித்தது என்றார் கருணாநிதி. முதலமைச்சர் சொன்னது போல் இந்த இதய மாற்றம் ஏற்படுவதற்கு புது இதயத்தைக் கொடுத்த நன்கொடையாளி யார்?

கருணாநிதி குடும்பத்தின் அரசியல் - உயிரிகள் முறை, மாற்றி பொறுத்தப்பட்ட புது இதயத்தை ஏற்றுக்கொள்ளுமா? அல்லது நீக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உடன்படிக்கையினால் எழும் இந்த வினாக்களுக்கெல்லாம் பதிலளிக்க கருணாநிதி விரும்பாவிட்டால், உடன்படிக்கையின் மூலம் ஏற்பட்டது மனமாற்றம் அல்ல, வெறும் பணப் பரிமாற்றம்தான் என்ற முடிவுக்கு மக்கள் வரவேண்டியிருக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக