எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? கருணாநிதி கடிதம்




உடன்பிறப்பேஅருந்ததி என்பது ஆதி காலத்திலிருந்து நமது நாட்டில் பழைமையாகக் குறிப்பிடப்படுகிற ஓர் நட்சத்திரம் - புராணிகர்கள் அருந்ததியைக் கற்புக்கரசி என்றும் - வசிஷ்ட முனிவரின் வாழ்க்கைத் துணைவியென்றும் குறிப்பிட்டு, அவளது உயர்வை உணர்த்தும் வண்ணம் வானத்தில் ஒரு நட்சத்திரமாக வைத்துக் கொண்டாடுகிற பழக்கம் கொண்டவராயிருந்தனர்.
இன்றைக்கும் அதே நம்பிக்கையுடன், திருமணங்களில் கூட "அம்மி மிதித்து அருந்ததி பார்த்து” என்ற பழமொழியைப் பயன்படுத்துகிற மக்களை நம்மால் பார்க்க முடிகிறது. ஒரு தெய்வீகப் பெண் என்று “அருந்ததி” புகழப்பட்டாலும்கூட அப்பெயர் கொண்ட ஒரு சமுதாயத்தினர், இந்த நாட்டில் எவ்வளவு இழிவுடன் நடத்தப்படுகிறார்கள் - எவ்வளவு கேவலமான வாழ்க்கை அவர்களின் தலையெழுத்து என ஆக்கப்பட்டுள்ளது - அந்தோ, கொடுமையினும் கொடுமை மனித மலத்தை மனிதன் சுமக்கும் கொடுமை - அந்த “அருந்ததி” சமுதாயத்தின் கட்டாயச் சேவைகளில் ஒன்றாக்கப்பட்டு விட்டதாகும். இழிவு நிறைந்த அந்தக் கொடுமை அகற்றப்பட வேண்டுமேயென்று நான் திடமாக முடிவெடுத்துத்தான்; அருந்ததி மக்களுக்கு இட ஒதுக்கிட்டில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டுமானால் சட்டப் பிரச்சினைகள் எப்படியிருக்கின்றன என்பதை அறிந்து ஆய்வு செய்திட,ஒரு சட்ட வல்லுநரை நியமிக்க முடிவெடுத்து,அதுபற்றி முதலில் விவாதித்திட தமிழக அரசின் சார்பில் ஓர் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கடந்த மார்ச் 12ம் தேதி தலைமைச் செயலகத்தில் கூட்டினேன்.
அந்தக் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அழைக்கப்பட்டு, அக்கட்சியின் சார்பில் ஜெயக் குமார்,அன்பழகனும் கலந்து கொண்டு, விவாதத்திலும் பங்கேற்றனர். மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் சுதர்சனம்,பீட்டர் அல்போன்ஸ், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோ.க.மணி,பால சுந்தரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.வரதராஜன்,பி.சம்பத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தா.பாண்டியன்,கோ.பழனிச்சாமி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வைகோ)சார்பில் இளவரசன்,கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எல்.ஜி)சார்பில் எல்.கணேசன்,செஞ்சி இராமச்சந்திரன், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் சார்பில் பண்ருட்டி இராமச்சந்திரன்,பார்த்தசாரதி,தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் கே.எம்.காதர் மொய்தீன், டாக்டர் எஸ்.ஏ.சையது சதார், விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன்,ரவிக்குமார், பாரதீய ஜனதா சார்பில் ஜி.குமாரவேலு,சுப.நாகராஜன்,திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி,கலி.பூங்குன்றன், புரட்சி பாரதம் சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி,கரு.சிவஞானம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் எஸ்.ஹைதர் அலி, எம்.தமீம் அன்சாரி,தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் திருப்பூர் அல்தாப், சம்சுதீன், எம்.ஜி.ஆர்.கழகம் சார்பில் வீரப்பன்,ராஜ்குமார், அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் கதிரவன், ராஜா, உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் கு.செல்லமுத்து,திருநாவுக்கரசு, புதிய தமிழகம் சார்பில் கிருஷ்ணசாமி, அய்யர், இந்திய சமூக நீதி இயக்கம் சார்பில் பேராயர் எஸ்றா சற்குணம், பால் அசோக், தமிழ்நாடு மாநில விவசாயிகள் தொழிலாளர் கட்சி சார்பில் பொன். குமார், சுப்பிரமணி, இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் விஜய டி.ராஜேந்தர், ஆதி தமிழர் பேரவை சார்பில் ஆர்.அதியமான் (எ) சுப்பராவ், இளவேனில், அருந்ததி மக்கள் கட்சி சார்பில் வலசை ரவிச்சந்திரன், செங்குட்டுவன், ஆதித் தமிழர் ஜனநாயக முன்னணி சார்பில் கல்யாண சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் நீண்ட நேரக் கலந்துரையாடலுக்குப் பிறகு,பின்வரும் முடிவு எடுக்கப்பட்டது.“சமூக,கல்வி,பொருளாதார நிலைகளில் அடித்தளத்திலே உள்ள ஆதி திராவிட மக்களுக்குள்ளேயே அருந்ததியர் எனப்படுவோர் மிகவும் பின்தங்கிய நிலையிலே இருப்பதால்,அவர்களைக் கைதூக்கிவிடும் முயற்சிகளில் ஒன்றாக,தற்போது ஆதி திராவிடருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் இவர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கிடவும்;
அருந்ததியர் எனப்படுவோருள் எந்தெந்தப் பிரிவினரை உள்ளடக்குவதென்றும், அந்த மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவைப் பற்றியும் விரிவான முறையில் விசாரித்தறிந்து அண்மையில் மத்திய அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி அமைந்துள்ள கமிஷனின் நிலையையும் ஆராய்ந்து,தேவைப்பட்டால் அவர்களையும் கலந்து கொண்டு,அரசுக்குப் பரிந்துரை செய்திட உயர்நீதி மன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதி அரசரைக் கொண்ட ஒரு நபர் குழு அமைப்பதென்றும்; அந்தக் குழுவின் அறிக்கையை ஆறு மாத காலத்திற்குள் பெற்று அதை நடைமுறைப்படுத்துவது பற்றி அரசு முடிவெடுப்ப தென்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது”
இந்த முடிவுக்கேற்ப - அருந்ததி சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீட்டில் மூன்று விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவதெனவும் - அதனை நடைமுறைப்படுத்த நீதியரசர் எம்.எஸ். ஜ‌னார்த்தனத்தை கொண்ட ஒரு நபர் குழுவை அமைப்பதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் ஏதாவது திருத்தம் சொல்ல வேண்டுமென்று எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா நினைத்திருந்தால்; அந்தத் திருத்தத்தை எழுதி அனுப்பி,அல்லது ஒரு நபர் குழுவிற்கு தங்கள் கட்சியின் கருத்தினை அனுப்பி - அந்தத் தீர்மானத்துக்கு வலிமை சேர்த்திருக்கலாம். ஆனால் அம்மையார் (அ.தி.மு.க.) உள்ளிட்ட அவரது கட்சித் தலைவர்களேயிருந்து நிறைவேற்றிய தீர்மானத்துக்கு எதிராக; எவ்வளவு துடுக்கான வார்த்தைகளை என் மீது தொடுத்திருக்கிறார் பார்த்தாயா?
“2006ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தி.மு.க.அங்கம் வகித்த மத்திய அரசிடம் போராடி பெற்றுக் கொடுத்திருக்கலாம் அல்லவா? எனவே இது அரசியல் மோசடி” என்று ஜெயலலிதா அறிக்கையிலே கேட்டிருக்கிறார். 1991 முதல் 1996 வரையிலும், 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையிலும் ஜெயலலிதா தானே முதலமைச்சர்,அப்போது ஏன் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீட்டினை வழங்கிட ஒரு குழுவினை ஜெயலலிதா அமைக்கவில்லை? இப்போது நான் செய்த பணியினைக் கூட தான் செய்யாமல் இருந்து விட்டு இப்போது நாம் செய்கின்ற பணிக்கு ஜெயலலிதா குந்தகம் கூறினால்,அதனை நம்புவதற்கு அருந்ததிய சமுதாயம் தயாராக இல்லை. இன்னும் சொல்லப் போனால் 23-1-2008 அன்றே தி.மு.க. அரசின் சார்பில் வைக்கப்பட்ட ஆளுநர் உரையின் பாரா 54லும், 20-3-2008 அன்று படிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையின் பாரா 128லும் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம் என்பதைப் படித்தாலே,அருந்ததிய சமுதாயத்திடம் தி.மு.க.விற்கு எந்த அளவிற்கு உண்மையான பற்று உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஓரம் ஒதுக்கப்பட்டுக் கிடக்கும் ஒரு பெரும் சமுதாயத்தைக் கை தூக்கி விடவும்; நீயும் மனிதன்தான் மண்ணன்று என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சபதம் செய்து கொண்டு பாடுபடுகிற ஓர் ஆட்சியின் தலைமைத் தொண்டனாக ஓடியாடிப் பணியாற்றும் என்னைப் பார்த்து; “நான்; அருந்ததி சமுதாயத்தை ஏமாற்றுகிறேன்” என்று அந்தப் பரிதாபத்திற்குரிய சமுதாயத்தை ஏமாற்ற நினைக்கிறாரே ஜெயலலிதா - இதுதான் எதிர்க்கட்சிக்குரிய இலக்கணமா? - ஆளுங்கட்சியை வழி நடத்தும் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு இதுதான் எடுத்துக்காட்டா?
பழைய புராணப்படி; ஆகாயத்தில் “அருந்ததி நட்சத்திரம்” இருப்பது உண்மையானால் - அது ஜெயலலிதாவைப் பார்த்து கண் சிமிட்டிக் கேட்கும்;
“அம்மாடியோவ்! அருந்ததி பேரைச் சொல்லி கருணாநிதி அந்தச் சமுதாயத்தை ஏமாற்றுகிறார் நம்பாதீர்!” என்று நேற்றுத்தான் சொன்னீர்! இன்றைக்கு என்னமோ;“நானே நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிஅந்த அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை சட்டமாக்குகிறேன்” என்கிறீர் - ஓகோ; அருந்ததிய மக்களை ஜெயலலிதாதான் ஏமாற்ற வேண்டும் என்று அறுதியிட்டு உறுதிகூறுகிறீரா?- காதில் விழுகிறதா அம்மா; அதோ அந்தப் பாடல்;கேட்கிறதா?
“எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக