பாராளுமன்றத்தில் வி.பி.சிங் சிலை வைப்போம்: கருணாநிதி பேச்சு

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மறைவிற்காக வீரவணக்க நிகழ்ச்சி சென்னையில் இன்று (டிசம்பர் 12)நடைபெற்றது. இந்த வீரவணக்க நிகழ்ச்சியில், வி.பி.சிங்கின் திருவுருவ படத்தைத் திறந்து வைத்து, முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை:

இப்படியொரு நாள் உருவாகும், அதில் நாம் கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று அந்த நிலையை எண்ணி எண்ணி நெஞ்சு விம்மிய மாதங்கள் கடந்து, நாட்கள் ஓடி, அது நடந்தே விட்டது என்ற முறையில், சமூகநீதிக் காவலர் இந்திய திருநாட்டினுடைய முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கை நாம் இழந்தே விட்டோம். அவரைப் படமாக இங்கே அலங்கரித்து வைத்திருக்கின்றோம். வீரமணி குறிப்பிட்டதைப் போல் அவர் படமாக மாத்திரமல்ல, ஒரு பாடமாகவும் விளங்குகிற காரணத்தால், அவரை குறித்துப் பேசுகிற நேரத்திலே நாம் கற்க வேண்டிய பாடங்கள் எவை எவை என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டிய இன்றியமையாமை நமக்கு ஏற்பட்டிருக்கின்றது. வீரமணி உரையாற்றும்போது, வி.பி.சிங்குக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள், உறவுகள், நட்பின் ஆழம் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து, இவரை அழைத்து படத்தைத் திறந்து வைப்பதுதான் பொருத்தம் என்பதற்காக, அழைத்தோம் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் முடிவாக அவர்கள் உரையை நிறைவு செய்தபோது வி.பி.சிங் ஒரு நினைவு சின்னம் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களுடைய நெஞ்சிலே நிலைக்கக்கூடிய சின்னம் அமைத்திட வேண்டும், அது எப்படி, எவ்வாறு, என்றைக்கு என்பதையெல்லாம் கலந்துதான் தீர்மானித்து அறிவிக்க வேண்டும் என்று அதை வேண்டுகோளாக அல்ல ஒரு கட்டளையாக, அவருக்கு என்பால் உள்ள உரிமையின் காரணமாக, அந்த உரிமை இன்று நேற்று ஏற்பட்டதா என்றால் இல்லை, தந்தை பெரியார் வழிநின்று உழைக்கின்ற ஒரு அருமை தொண்டர், அவருடைய மாணவர், என்னுடைய நண்பர் என்பதால் மாத்திரம் அல்ல, தந்தை பெரியாருக்குப் பிறகு அவருடைய கொள்கைகளை, எண்ணங்களை இன்றைக்கு காப்பாற்றி வருகின்ற அவருடைய உண்மையான வழித்தோன்றல் என்ற முறையில் இந்த ஆணையை எனக்குப் பிறப்பித்திருக்கின்றார்.

இதை நான் இங்கேயே அறிவிப்பது,என்னைப் பொறுத்தவரையில் ஒரு விளம்பரமாகத்தான் ஆகும் என்பதால், நான் வீரமணியுடன் கலந்துபேசி, அந்த நினைவுச் சின்னம் எப்படி அமையவேண்டும், எங்கே அமைய வேண்டும், எந்த வகையிலே அமையவேண்டும், எத்தகைய நினைவுச் சின்னமாக அது இருத்தல் வேண்டும் என்பது பற்றி விரைவில் அறிவிப்போம். சமூகநீதிக் காவலர் என்ற அந்த சொற்றொடர் இந்தியாவிலே இன்றைக்கு ஒருவருக்குப் பொருந்தும் என்றால்,அவர் வி.பி.சிங்தான். நான் இதைச் சொல்வதற்குக் காரணம் அவர் ஒரு சாதாரண மனிதராக இருந்து, பதவி பொறுப்புக்களிலே இல்லாதவராக இருந்து, தன்னுடைய தியாகத்தால், உழைப்பால், ஆற்றலால் சமூகநீதிக்குப் பாடுபட்டிருப்பாரேயானால் அது ஆச்சரியப்படத் தக்க ஒன்றல்ல; போற்றப்படத் தக்க ஒன்றாக இருக்கலாம். ஆனால், இது ஆச்சரியப்படத்தக்கதும், போற்றப்படத்தக்கதுமுமான இரண்டு காரணங்களுக்காக இந்த சமூநீதிக் காவலர் என்பது அவருக்கு மிகமிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. வீரமணி பேசும்போது சொன்னார்கள் புத்தரைப் போல் அரண்மனையிலே பிறந்திருந்தாலும், சாதாரண ஏழை எளிய மக்களுக்காக, உயர்சாதியிலே பிறக்காத மக்களுக்காக, நடுத்தர மக்களுக்காக, பின்தங்கியவர்களுக்காக, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர்களுடைய சமூகநீதி கோரி அதற்காக போரிட்டு, அந்தப் போரிலே பல இழப்புக்களை சந்தித்து, ஏன் இந்தியாவை ஆளுகின்ற சிறப்பான பெருமைமிகுந்த அந்த நிலையைத் துறந்து இந்த காரியத்தை அவர்கள் சாதித்தார்கள். மண்டல் கமிஷன் பல ஆண்டுகளாக, ஏன் இந்தியாவில், தமிழ்நாட்டில் எல்லோருடைய வாயிலும் விளையாடிய ஒரு சொல் - உச்சரிக்கப்பட்ட ஒரு சொல் மண்டல் கமிஷன். இதை பல ஆண்டுகளுக்கு முன்பே மத்தியிலே காங்கிரஸ் அரசு உருவாக்கியது என்றாலுங்கூட, அந்த மண்டல் குழு செய்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துகின்ற காரியத்திலே இறங்காமல், அதைக் கிடப்பிலே போட்டதும் காங்கிரஸ்தான்.

அந்த ஆட்சியிலேகூட மத்தியிலே சிலகாலம் ஒரு அமைச்சர் பதவியை வகித்து, மிகப்பொறுப்பான அமைச்சர் பதவிகளை எல்லாம் வகித்து, பின்னர் அந்த பொறுப்பிலே இருந்து விலகி வெளிவந்து, ஒரு கட்சியை உருவாக்கி, அந்த கட்சியின் சார்பிலும் தேர்தலில் போட்டியிட்டு, அதன்பிறகு நம்மைப் போன்றவர்களுடைய தொடர்பெல்லாம் அவருக்கு ஏற்பட்டு, அதன் காரணமாக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏறெடுத்துப் பார்த்து, அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்கின்ற உயர்ந்த உள்ளத்தோடு அவர் பணியாற்றத் தொடங்கினார். அப்படி பணியாற்றியதற்கு அவருக்குக் கிடைத்த பரிசு என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். 1990ஆம் ஆண்டில் வி.பி.சிங் பதவியில் இருந்து விலக நேரிட்டது. அதற்கான காரணத்தைத்தான் நான் இப்போது உங்களிடத்திலே சொன்னேன். மண்டல் கமிஷனை ஏன் நிறைவேற்ற வேண்டும், அந்த பரிந்துரைகளை ஏன் நிறைவேற்ற வேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம் என்றால், அதற்கு ஈடாக ஒரு குழுவினுடைய அறிக்கை, பரிந்துரைகள், சிபாரிசுகள் இவைகளை நிறைவேற்றி வருகின்ற இந்திய நாட்டினுடைய மாநிலங்களிலே ஒன்று நம்முடைய தமிழகம். இந்த தமிழகத்திலேதான் இன்றைக்கு எந்த பெயரால் இந்த மண்டபம் திகழ்கிறதோ, அந்தப் பெயருக்குரிய தியாகராயருடைய தலைமையில் நீதிக்கட்சி காலத்தில் முத்தையா போன்றவர்களால், டாக்டர் நாயர் போன்றவர்களால், நடேசனார் போன்றவர்களால் புரட்சிகரமாக அறிமுகப்படுத்தப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடிகட்டி பறந்து, ஏழை எளிய மக்களை நாலாந்தர சாதி மக்கள் என்றெல்லாம் தூற்றப்பட்டவர்களை, தொலைதூரத்திலே நிற்க வைக்கப்பட்டவர்களை, ஆதிதிராவிடர்கள், சூத்திரர்கள் என்று சொல்லப் பட்டவர்களையெல்லாம் கைதூக்கிவிட நீதிக்கட்சி என்ற பெயரால் அமைந்திருந்த இயக்கம் இந்த புரட்சியை வி.பி.சிங் நினைப்பதற்கு முன்பே, இன்னும் சொல்லப் போனால், அவர் பிறப்பதற்கு முன்பே அல்லது பிறந்து பள்ளிக்கூடத்திலே படித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே தமிழகத்தில் அந்தப் புரட்சியை ஏற்படுத்திய பெருமை இந்த மண்டபத்தினுடைய பெயருக்கு உரியவர் யாரோ அவருக்கு ஆதரவாக இருந்து அவரை மேலும்மேலும் ஊக்கப்படுத்தி, அவரைப் போன்றவர்களையெல்லாம் முன்னிறுத்தி, சூத்திரப் பட்டத்திற்கு உரியவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்களுக்கு உயர் பதவிகளையும், உயர் நிலையையும் ஏற்படுத்திய அந்தப் பெருமை, அவர்கள் சொன்னார்களே பாராளுமன்றத்தில் ஒரு பெயரை வி.பி.சிங் சொன்னார் என்று - அந்தப் பெயருக்குரிய நம்முடைய தந்தை பெரியார் அவர்களால்தான் இன்றைக்கு அந்த மகிழ்ச்சிக் கடலிலே ஆழ்ந்திருக்கின்றோம்.

நமக்குக் கிடைத்திருப்பது காந்தியடிகளால் அல்லது அவருடைய தளபதிகளால், அவருடைய தொண்டர்களால் இந்த மண்ணுக்குச் சுதந்திரம் கிடைத்தது என்றாலுங்கூட, மண்ணுக்குக் கிடைத்தச் சுதந்திரத்தைவிட மேலான சுதந்திரமாக, நம்முடைய உரிமைகளுக்கு, மரியாதைக்கு, நம்முடைய இனத்திற்கு கிடைத்த சுதந்திரம் அதுதான். சுயமரியாதையாக நாம் நடத்தப்பட்ட சுதந்திரம் இருக்கிறதே,அந்த சுதந்திரத்திற்கு காரணகர்த்தா தந்தை பெரியார். அந்த பெரியாருடைய மாணவர்களெல்லாம் நாங்கள் - அவருடைய தளபதிகள்தான் நாங்கள் என்பதை அறிந்துகொண்ட வி.பி.சிங் இவர்களுடைய துணையோடு நாம் நம்முடைய இலட்சியத்தை, குறிக்கோளை இந்த பிரதமர் பதவி காலத்திலேயே நிறைவேற்றலாம் என்ற நம்பிக்கை கொண்டார்கள். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. 1990ஆம் ஆண்டு வாக்கில் அவர்கள் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வெளியிட்டு, ஆணை பிறப்பித்து, இதை நாடு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறியபோது, எத்தகைய புரட்சிகளெல்லாம் நடைபெற்றன - எத்தனைபேர் தீக்குளித்தார்கள் - மன்னிக்க வேண்டும் - தீக்குளிக்க வைக்கப்பட்டார்கள் - எத்தனை மாணவர்களை அந்த போராட்டத்தில் ஈடுபடுத்தினார்கள். யார் அந்த மாணவர்கள்? உயர் குலத்திலே பிறந்த மாணவர்கள் - அக்ரகாரத்துப் பிள்ளைகள் - நடுத்தர மக்களால், ஏழை எளிய மக்களால், சூத்திரர்கள் என்று சொல்லப்பட்டவர்களால் இந்த மண்டல் கமிஷனுக்கு ஒரு சிறப்பு வந்துவிடக் கூடாது. மண்டல் கமிஷன் அவர்களுக்கு ஒரு ஆறுதலாக, அவர்களைத் தூக்கிவிடுகின்ற கருவியாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக வி.பி.சிங் கொண்டுவந்த அந்த ஆணையை எதிர்த்து பெரும்புரட்சியே வடபுலத்திலே நடைபெற்றது.

அந்த புரட்சி நடைபெற்றதன் காரணமாக வி.பி.சிங் தன்னுடைய பதவியை துச்சமாகக் கருதி தூக்கி எறிந்து விட்டு வெளிப்பட்டார்கள். அப்படி வெளிப்பட்டபோது இந்தியாவிலேயே முதன்முதலாக அவரை வரவேற்று - மன்னிக்க வேண்டும் - சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து அவரை வரவேற்றது திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கம் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. அதில் அவர் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே அது சாதாரணமானது அல்ல. அவர்கள் சென்னைக்கு விமானத்திலே வந்து இறங்கியபோதும் சரி, பிறகு தமிழ்நாடு முழுதும் அவரோடு நாங்கள் இணைந்து தூத்துக்குடி வரையில், கன்னியாகுமரி வரையில் அந்த வரவேற்பு நிகழ்ச்சிகள், பாராட்டு நிகழ்ச்சிகள் எதற்கு பாராட்டு - அவர் பிரதமராக ஆகிவிட்டார் என்பதற்காகவா பாராட்டு - அல்ல - பிரதமர் பதவியையே தூக்கி எறிந்து விட்டார் கொள்கைக்காக என்பதற்காக அவரைப் பாராட்டி அவரை வாழ்த்தி வழியனுப்புகிற நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் மூலைமுடுக்கெல்லாம், பட்டிதொட்டியெல்லாம், பட்டிணக் கரைகளெல்லாம் நாங்கள் நடத்திய போது மதுரை மாநகர விழாவிலே சொன்னார்கள் - இரவு மூன்று மணி நாங்கள் மதுரைக்கு போய்ச் சேரும்பொழுது - மூன்று மணிக்கு அந்த மாபெரும் பொதுக்கூட்டத்திலே வி.பி.சிங் பேசும்பொழுது சொன்னார் - மண்டல் கமிஷன் ஆணை பிறப்பிக்கப்பட்டு, அதனுடைய விளைவாக நான் பதவியை இழந்தபிறகு என்னோடு இருந்தவர்களையெல்லாம் திரும்பிப் பார்க்கிறேன் - யாரையும் காணவில்லை. ஆனால் என்னோடு இருந்தால் இப்படிப்பட்ட ஆபத்து வரும், ஆட்சிக்கே ஆபத்து வரும் என்று தெரிந்தும், என்னோடு இருப்பவர் கருணாநிதி ஒருவர் தான் என்று சொன்னார். அவர் சொன்னதுபோல ஆபத்து வந்தது. வந்து முடிந்தது அதுவும் உங்களுக்குத் தெரியும்.

அப்படி அவரை ஆதரித்தாலே ஆபத்து - ஆட்சி பறிபோகும் என்று தெரிந்தும், அந்த ஆட்சியைப் பற்றி கவலைப்படாமல் வி.பி.சிங்கை அவர் பிறப்பித்த மண்டல் கமிஷன் ஆணையை ஆதரித்ததற்கு காரணம் எங்களுக்கு கோட்டையோ கொலுமண்டபமோ அல்ல -கோலோச்சுவது அல்ல பெரிது - கொள்கைதான் பெரிது என்பதற்காகத்தான் அன்றைக்கே வி.பி.சிங்குக்கு பெரும் வரவேற்பு இங்கே அளித்தோம். சிலபேர்கூட - நான் நினைவுபடுத்த விரும்பவில்லை - வி.பி.சிங் வந்தால் அவரது முகத்திலே யாரும் விழிக்காதீர்கள் - கதவை தாளிட்டு கொண்டு வீட்டுக்குள்ளே போய்விடுங்கள் - அவரைப் பார்ப்பதே பாவம் - யாரும் வெளியிலே வந்தால் ஜாக்கிரதை - என்றெல்லாம் அறிக்கை வெளியிட்ட அன்பர்களெல்லாம்கூட உண்டு. அதையும் மீறி பல்லாயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் தமிழ்நாட்டு மக்கள் அந்த மாமனிதரை - அந்த அதிசய மனிதரை - அந்த வீரமிக்க மனிதரை - அந்த சுயமரியாதைச்சுடரை - பெரியாரைப் பார்க்காமேலேயே பெரியாருடைய கொள்கைகளை பின்பற்றிய அந்த பெருந்தகையைக் காண நாடே படையெடுத்தது. சென்னையிலே இருந்து குமரிமுனைவரை இலட்சக்கணக்கான மக்கள் வரிசை வரிசையாக நின்று அவரை வரவேற்றார்கள். அந்த நேரத்தில் நம்முடைய தமிழர் தலைவர் இங்கே நினைவுபடுத்தினார் - வி.பி.சிங்க்கும் கவிதைக்கும் உள்ள தொடர்பு - அதன் காரணமாக எனக்குள்ள ஆர்வம் இவைகளையெல்லாம் இங்கே நினைவுபடுத்தினார்கள். அப்பொழுது சென்னை-கலைவாணர் அரங்கத்தில் 15.9.1990 அன்று என் தலைமையிலே ஒரு கவியரங்கம் - அந்த கவியரங்கில் வி.பி.சிங் பற்றியும், அவருடைய கொள்கை கோட்பாடு, அதன் காரணமாக ஏற்பட்ட நிலைமைகள் இவைகளைப் பற்றியும் - மண்டல் கமிஷனுக்கு தமிழ்நாட்டிலே இருந்த வரவேற்பு - வடபுலத்திலே கிளப்பப்பட்ட எதிர்ப்பு - இவைகளையெல்லாம் ஒப்பிட்டுக் காட்டி, அந்த கவியரங்கத்திலே தலைமைக் கவிதையை நான் பாடினேன். அதை நினைவு கூர்கிற நேரமாக இந்த நேரம் பொருத்தமான நேரமாக இருப்பதால் - அவருடைய படத்தைத் திறந்து வைக்கிற நேரத்தில் அதை நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

தென் கோடி மூலையிலேபொய்ப்பித்தர் மாயவாதம்;மண்டல் கமிஷனுக்கு எதிராகஎடுபடவில்லை யென்று;தெரிவித்தோம் தேசத்துக்கேஅறிவிப்போம் அகிலத்துக்கும்!
வாழை மரம்; தன்னைவெட்டிக் கட்டியதை அறியாமல்வருவோரை வரவேற்கும் மணவீட்டில்!அதுபோல வடக்கில் உள்ள பிற்பட்டோர்அவர் நிலை அறியாது கிடக்கின்றார்.அதனாலே மண்டலுக்கு அங்குள்ள மாநிலத்தில் எதிர்ப்பதிகம் - ஆனால்இங்கு, சுண்டலுக்குக் கையேந்திச்சூழ்ந்து நிற்கும் அடிமைக் கூட்டம் மிகக்குறைவு!அஃது ஏன்? என்ற கேள்விக்குஇதோ விளக்கம்!எழுபத்து ஐந்து ஆண்டின் முன்னேஎழுந்தது பார் ஓர் இயக்கம் - சர் பிட்டிதியாகராயப் பெரியோன் கண்டதிராவிடப் பேரியக்கம்!உழுது பண்படுத்திஉரிய முறை நடவு நட்டுக் காவல் செய்தால்அறுவடையின்போதுஅழுது புலம்பத் தேவையில்லை.அந்நாள் தொட்டு இந்நாள் வரைபதப்படுத்தப்பட்ட நிலம் இது!பக்குவமடைந்த பூமி! அதுதிராவிட இயக்கம் திரட்டிய செல்வம்.நெல் விதைத்தால், தவறி இங்குப்புல் விளையாது!கல்வி வேலை வாய்ப்புகளில்சமூக அடிப்படையே தேவையென்னும்நல்லதோர் இட ஒதுக்கீடேநம் இயக்க முழக்கமாகும்!அதனாலே ஆதிக்க புரிக்கூச்சல் எல்லாம்அரவமொன்று தடி கண்டால்அடங்குதல் போல் அடங்கிப் போகும். சிறு நரிகள் வால் தூக்கிப் பொருதிடுவோம் வருக எனில்சிங்க ஏறுகள் பாய்ந்தோடிக்குகை இடுக்கில் பதுங்கிடுமோ?எலிகள் நடனம் ஆடுமிங்கே - அதற்குப்புலிகள் தாளம் போட்டிடுமோ?
சங்கத் தருதங்கத் தமிழ்வங்கக் கடல்பொங்கும் - இளம்சிங்கக் குரல்எங்கும் எழஒன்றே குலம்என்றே சொல்லிவாழ்ந்த இனம்;பண்டு தொட்டுக்கொண்டு கொடுத்த இனம்;உண்டு கொழுக்கவந்த கூட்டம்சிண்டு முடிந்துசீர்குலையவேஒரு சாதிதமிழ்ச் சாதிபல சாதியானதே! அதனால்பலவீனமானதே!!
சூழ்ச்சி வென்றதுசூது பலித்தது - இனிவீழ்ச்சியில்லையெனவீணர்கள் பாடினர்!வெறிகொண்டு ஆடினர்!அறிவார் கல்வியில்அரசுப் பணிகளில்பதுக்கிய இடமெல்லாம்தம்மதே என்றுவதக்கியே பிறரதுவாழ்வினைப் பறித்தஒரு பிரிவு மக்களிடம்போர் புரியத் தயங்கியதால்செதுக்கிய சிலைகளாய்ச்செயலற்றுக் கிடந்தோம் அன்று!நடக்கும் இருளைநகர்த்தும் பகல் போல்நாளும் வந்ததுகோளும் தொலைந்தது!ஒதுக்கியே தீர்வதுஒடுக்கப்பட்டோருக்குஇடஒதுக்கீடு என;எதிர் நீச்சல் போட்டுஎழுந்து நின்றது;பெரியார் அண்ணா திராவிட இயக்கம்!தென்னக மயக்கம்தீர்க்க முனைந்தது!
தேடக் கிடைக்காத தெள்ளமுதாய்த்தேமதுரக் கீத இசையாய்த்தேன்பாகும் தினைமாவும் இணைந்ததொருதெவிட்டாத சுவை விருந்தாய்த்திக்கற்ற மக்களுக்குத்திசை காட்டும் நிலவொளியாய்வாய்த்திட்ட நற்பேறுவாராது வந்த மாமணி வி.பி.சிங்.வகுப்புவாரி விகிதாச்சாரம் - பிற்பட்டோர்வாழ்வுக்கு ஒரு வரப் பிரசாதம்!வந்ததைத் தொலைப்போமோ? வஞ்சகவலைதனில் வீழ்வோமோ?வெந்ததைத் தின்று - வாயில்வந்ததை உளறும் மனிதர்தகுதி, திறமை என எழுதிப் பேசி;நயமாக நஞ்சைக் கலக்கின்றார்.நாட்டு மக்கள் உள்ளத்தைக் குழப்புகின்றார்.“அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவாருண்டோ?”எனப் பாவேந்தன்கேட்டதைத் தான்;நானும் கேட்கின்றேன்!“அழகாக முடிச் சவிழ்த்தால்விடுவாருண்டோ?”
ஆண்டவன் படைப்பில்அனைவரும் சமம் எனில்அவன், உயர்சாதிக்கு மட்டும்தங்கத்தால் மூளை செய்துதலைக்குள்ளே வைத்தானா?மற்றச் சாதிக் கெல்லாம்மண்டைக்குள் இருப்பதென்ன?களிமண்ணா? சுண்ணாம்பா?
கங்கையைப் போல்வடமொழியில் கவிதை தந்தவால்மீகி, வியாசனெல்லாம்பிரமதேவன் கால் பெற்றபிள்ளைகளே!வள்ளுவன் யார்? கம்பன் யார்?இளங்கோவடிகள், ஒட்டக் கூத்தன்இவரெல்லாம் யார்? யார்?பிரமன் தலையில்பிறந்ததில்லை இவர்கள்!ஆனாலும் தமிழ் மொழியின் இமயங்கள்!
நாற்பத்து மூன்று ஆண்டுகளாய்நாம் பெற்ற சுதந்திரத்தில் (அப்போது நான் சொல்லும்போது நாம் சுதந்திரம் பெற்று 43 ஆண்டுகள்தான்)தகுதிக்கும் திறமைக்கும்தரப்பட்ட வாய்ப்புகளால்கிழித்த தென்ன?தைத்த தென்ன?கிழித்துத் தைத்தது தான் என்ன? என்ன? என்ன?எதற்காகத் திறமை;அது தேவையா என்று - நாம்என்றுமே கேட்டதில்லை!ஆனால்ஏகலைவன் வித்தை கற்கஎந்தச் சாத்திரமும் அனுமதிக்கவில்லை! அவன்வில்லில் விசயனையும் வெல்வான் என்று -கட்டைவிரலைக் காணிக்கையாகப் பெற்ற தென்ன நியாயம்?தவம் செய்தான் சம்பூகச் சூத்திரன்தகுதி அவனுக்கேது எனச் சீறி - அவன்தலை வெட்டிச் சாய்த்த கதைஇராம பிரான் வரலாறன்றோ?கட்டை விரலோ, தலையோகாணிக்கையாக - இந்நாளில் எவனும் கேட்டால்பட்டை உரியும் - சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்!
“என்ன இது; என்றைக்கு மில்லாத வெப்பம்தலைவர் கவிதையிலே?”எனக் கேட்கத் தோன்றுகிறதா?பிறகென்ன?
முதலுக்கே மோசம் வந்த பின்னர்முயலாக ஆமையாகக் கிடத்தல் நன்றோ?ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்தவனைக்கைதூக்கிக் கரையேற்றும் நேரத்தில்கனமான பாறையொன்றை அவன் தலையில்உருட்டிவிட எத்தனிக்கும்உலுத்தர்களைக் கண்டால்ஓட ஓட விரட்டத்தான் வேண்டும்!
ஆறிலும் சாவுதான் நூறிலும் சாவுதான்;ஆனது ஆகட்டுமே - இந்தஆட்சிதான் போகட்டுமே!மகுடமின்றி வாழ முடியா மனிதர்களா நாம்?சிசுவாகப் பிறக்கும்போதே -சிம்மாசனத்துடனா பிறந்தோம்;சீதை வில்லுடன் பிறந்தது போல்?கொற்றக் குடையா? கொள்கையா?எது வேண்டும் எனில்; கொள்கையைவிற்றுப் பிழைக்க வேறு நபர் பார் என்போம்!ஆட்சி; வரும்! போகும்! நிலையன்று!அய்யா அண்ணா வகுத்த கொள்கை;போகாது! வாழும் நிலையாக! எனவேஆட்சியில் இருப்பினும்இல்லாதிருப்பினும்தன்மானம் உயிரென மதிப்போம்.தமிழர் இனமானம் என்றுமே காப்போம்.கொண்ட குறிக்கோளைப் பழித்துக்கண்டபடி பேசும் பிறவிகளைப் பார்த்தால்“போடா வெங்காயம்!” என்பார்பெரியார், கோபத்தில்!“வளம் பெரிய தமிழ்நாட்டில்தமிழரல்லார் வால் நீட்டினால்உதைதான் கிடைத்திடும்”என்றுரைப்பார் பாவேந்தர்!
நாராசப் பேச்சாளர், ஆபாச எழுத்தாளர் - காணின்;நம் அண்ணா; “நடுங்கா நாக்கழகர் நரகல்நடையழகர்!” என நையாண்டி புரிந்திடுவார்!ஆத்திரம் தாங்காமல்தானே அம்பேத்கர்அரசியல் சட்டத்தையே தேவைப்படின்கொளுத்த வேண்டுமெனக் கொந்தளித்தார்!எந்தத் தலைமுறையும்இந்தத் தலைவர்கள் போல்இனியொரு முறை காண்பதில்லை!அந்தத் தலைவர்களின்எண்ணங்கள் வெற்றி பெறச்சூளுரைப்போம்!சுடர் முகம் தூக்குவோம்!இடர் பல வரினும்எதிர்த்து நிற்போம்!வெற்றி காண்போம்!

- என்று இந்த கவிதைப் பாடலைத்தான் அன்றைய தினம் வி.பி.சிங் அவர்களுடைய மண்டல் பரிந்துரை ஆணைக்காக நடைபெற்ற கவியரங்கத்திலே, தலைமைக் கவிதையிலே நான் பாடினேன். அதைத்தான் இன்றைக்கு மீண்டும் நினைவூட்டுவது இந்த புகழ் அஞ்சலி செலுத்துகிற நேரத்தில் மிகமிகப் பொருத்தம் என்று கருதி நினைவூட்டினேன். வீரமணி நினைவுச் சின்னம் பற்றிச் சொன்னார்கள் - ஒரு இடத்திலே வி.பி.சிங்க்கு சிலையோ அல்லது ஒரு மண்டபமோ எழுப்புவதால் மாத்திரம் நாம் அவருக்குப் பெருமை சேர்த்தவர்களாக ஆகமாட்டோம். அவர் மண்டல் கமிஷன் மூலமாக எந்த விடியலை நாட்டில் எதிர்பார்த்தாரோ - அந்த விடியல் ஏற்பட இடஒதுக்கீட்டில் இன்னும் எல்லா இடங்களிலும் அந்த ஒதுக்கீட்டை கொண்டுவர எல்லா கல்லூரிகளிலும், எல்லா பள்ளிகளிலும், தனியார் நிறுவனங்களிலும்கூட இடஒதுக்கீட்டை கொண்டுவர நாம் பாடுபடவேண்டும். அதுதான் வி.பி.சிங்கின் விருப்பம் - அவர்களுடைய கனவு - அந்த கனவை நாம் நிறைவேற்றுவோம். அதைச் சொல்லுகிற காரணத்தால் இவர் சொன்ன நினைவுச் சின்னத்தை தட்டிக் கழிக்கிறேன் என்று அர்த்தம் அல்ல - வி.பி.சிங்கின் சிலையை பாராளுமன்றத்துக் கட்டிடத்திலே வைப்பதற்கும் நாம் முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் - அதை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக செய்யவேண்டும். இப்போது இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் மீண்டும் தேர்தலுக்கு நின்று நீங்கள் அவர்களையெல்லாம் வெற்றி பெறச் செய்து அவர்களைக் கொண்டே நாடாளுமன்ற வளாகத்திலே வி.பி.சிங்கின் சிலையை வைப்பதற்கான அந்தப் பணியை நீங்களும் சேர்ந்து செய்யவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் இரண்டும் இணைந்து இன்றைக்கு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது என்றால் சமுதாயத் துறையிலே இன்று நேற்றல்ல என்றைக்குமே இது இரட்டைக்குழல் துப்பாக்கி என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை நான் நினைவுபடுத்தி, வி.பி.சிங்கின் புகழ் வாழ்க, என்றென்றும் வாழ்க, நிலைத்து வாழ்க, நெடுங்காலம் வாழ்க.

2 கருத்துகள்:

Viswa சொன்னது…

Thank You

ஜோ/Joe சொன்னது…

தலைவர் கலைஞர் வாக்கு பலிக்கட்டும்.

கருத்துரையிடுக