திருமங்கலம் தொகுதி:அ.தி.மு.க‌. போட்டி ஜெய‌ல‌லிதா அறிவிப்பு


ஜெயலலிதா இன்று (டிசம்பர் 12) வெளியிட்ட அறிக்கை:

2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அண்மையில் திருமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான வீர. இளவரசன் அகால மரணமடைந்ததால், அத்தொகுதிக்கு ஜனவரி 9 அன்று இடைத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



கருணாநிதியின் தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. அரசு தமிழ்நாட்டில் அராஜக வன்முறை வெறியாட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற தற்போதைய அரசியல் சூழ்நிலையில், நடைபெறவுள்ள இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டால்தான் பொருத்தமாக இருக்கும் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருமங்கலம் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதற்கு சம்மதம் தெரிவித்து, அ.தி.மு.க. வேட்பாளருக்கு ம.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து, இன்று (டிசம்பர் 12) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி. பரதனுடனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத்துடனும் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் திருமங்கலம் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளருக்கு முழு ஆதரவு தருவதாக உறுதி அளித்தார்கள்.

ஜனவரி 9 அன்று திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ம.தி.மு.க. ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் அ.தி.மு.க. போட்டியிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி ஆட்சி மன்றக் குழு கூடி முடிவெடுத்த பின்னர், கழக வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக