ஜெயலலிதாவுடன் பிரகாஷ் காரத் சந்திப்பு அ.தி.மு.க. உடன் சி.பி.எம். கூட்டணி



நாடாளுமன்றத் தேர்தலுக்காக அ.தி.மு.க. இப்போதே தயாராகி கொண்டிருக்கிறது. தேர்தலுக்காக கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஜெயலலிதா இறங்கியிருக்கிறார். இன்று (டிசம்பர் 5) ஜெயலலிதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து இரண்டு கட்சிகளிடையும் கூட்டணி உருவாகியிருக்கிறது.


சந்திப்புக்குப் பிறகு நிருபர்களை சந்தித்த ஜெயலலிதா, காரத்துடன் மகிழ்ச்சிகரமான சந்திப்பு நடந்தது. நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இடதுசாரிகள் - அதிமுக கைகோர்த்திருக்கிறது என்றார். காரத் கூறும்போது நாங்களும் அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளோம் என்றார். பா.ம.க. போன்ற கட்சிகள் உங்கள் கூட்டணியில் சேருமா? எ‌ன்ற கே‌ள்‌வி‌க்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று பதில் அளித்தார் ஜெயலலிதா.


இர‌ண்டு வார‌ங்க‌ளுக்கு முன்புதான் சி.பி.ஐ. கட்சியின் தேசியச் செயலாளர் ஏ.பி.பரதன், மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி குறித்துப் பேசினார்கள். இந்த‌ நிலையில், தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்வதற்காக சி.பி.எம். கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில பிரகாஷ் காரத்தும் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து மாலையில் மாநிலக் குழுக் கூட்டமும் நடந்தது. அந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என சி.பி.எம். முடிவெடுத்தது. இதன்பிறகுதான் பிரகாஷ் காரத் ஜெயலலிதாவை சந்தித்தார்.இரண்டு க‌ம்யூனிஸ்ட் கட்சிகளும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் தலா இரண்டு ஸீட்டுகள் தரப்படலாம் என்று பேச்சு இருக்கிறது. கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில்தான் இந்த இரண்டு க‌ம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. அப்போது அவர்களுக்கு தலா இரண்டு இடங்கள் வழங்கப்பட்டன. அதன் அடிப்படையிலேயே தலா இரண்டு இடங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌லாம் என்று தெரிகிறது.


அ.தி.மு.க. கூட்டணியில் எப்படியாவது இடம் பிடித்துவிட வேண்டும் என்று பி.ஜே.பி. கணக்குப் போட்டது. ஆனால் இடதுசாரிகள் அந்த கூட்டணியில் இணைந்துவிட்டதால் பி.ஜே.பி. தனித்துவிடப்பட்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு சி.பி.ஐ. கட்சியை சேர்ந்த பரதன் ஜெயலலிதாவை சந்தித்த போதே அடுத்த இரண்டாவது நாளில் பத்திரிகையாளர் சோ அதிரடியாக போய் ஜெயலலிதாவை போய் பார்த்தார். பி.ஜே.பி.காக அவர் தூது போனார். ஆனாலும் பி.ஜே.பி.யின் எண்ணம் ஈடேறவில்லை. இடதுசாரிகள் அ.தி.மு.க. பக்கம் போய்விட்டது தி.மு.க.வுக்கு சரிவை ஏற்படுத்தலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக