ஜெயலலிதா இன்று (டிசம்பர் 4) கட்சிக்காரர்கள் மூன்று பேரின் இல்லத் திருமணங்களை சென்னை வானகரம் ஏரியாவில் நடத்தி வைத்தார். திருமணத்தில் ஜெயலலிதா ஆற்றிய உரை:
அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகின்ற போது, அவருடைய மூன்று மகன்களின் திருமணங்களையும் நான் நடத்தி வைத்திருப்பதாகவும், அதுவே போதும். வேறு என்ன வேண்டும் என்று இங்கே பேசினார். என்னைப் பொறுத்தவரை இது போதாது. இன்னும் வேண்டும். அந்த மூன்று மகன்களுக்கும் பிறக்கின்ற மகன்களுக்கும், மகள்களுக்கும் நானே திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆகவே அந்த விருப்பத்தை நிறைவேற்றி வைப்பார்கள் என்று நம்புகிறேன்.
இன்று இல்லறத்தில் புகுந்துள்ள மணமக்களுக்கு இந்தத் திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு திருப்பு முனையாக அமைந்திருக்கிறது. இந்தத் திருமணம் என்பது அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கமாக அமைகிறது. அதைப் போலவே, நம்மைப் பொறுத்தவரை, இந்த நாட்டு மக்களைப் பொறுத்தவரை விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் ஒரு திருப்பு முனையாக இருக்கும். யாருக்கு? அ.தி.மு.க.வுக்கு ஒரு திருப்பு முனையாகவும், தமிழ் நாட்டுக்கு ஒரு திருப்பு முனையாகவும், ஏன், இந்தியாவிற்கே ஒரு திருப்பு முனையாகவும் அமையப் போகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி மறக்க முடியாத சில வார்த்தைகளைச் சொன்னார். நாடு உனக்காக என்ன செய்தது என்று கேட்காதே, நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என்று உன்னை நீயே கேட்டுக் கொள் என்றார். அதைப் போலவே, அ.தி.மு.க. உடன்பிறப்புகளுக்கு இன்று நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தக் கட்சி என்பது வெறும் அரசியல் கட்சி அல்ல. வெறும் அரசியல் இயக்கம் அல்ல. உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் இந்தக் கட்சி ஒரு அடையாளம் கொடுத்திருக்கிறது. மக்கள் மத்தியில் செல்வாக்கு கொடுத்திருக்கிறது. உங்களுக்கு சமுதாயத்தில் ஒரு முகவரியை கொடுத்திருக்கிறது. இன்று உடன்பிறப்புகள் பல்வேறு நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் பெற்றிருக்கின்ற சிறப்புகளுக்கும், உயர்வுக்கும், அனைத்திற்கும் காரணம் அ.தி.மு.க. என்னும் புரட்சித் தலைவர் தொடங்கிய இந்த இயக்கம்தான் என்பதை கன நேரமும் மறந்துவிடலாகாது.
இந்த நேரத்தில் அ.தி.மு.க. உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்கள் மனதைத் தொட்டு தங்களைத் தாங்களே ஒரு கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்ன அந்தக் கேள்வி? நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்காகவும், கட்சியின் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காகவும், நான் ஆற்றப் போகின்ற பங்கு என்ன? என்று ஒவ்வொரு தொண்டரும் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும். நீண்ட காலமாக உடன்பிறப்புகள் பலர் பாடுபட்டு வருகின்றார்கள். 1972 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தைத் தொடங்கிய நாள் முதல் இந்த கட்சிக்காக கோடான கோடி உறுப்பினர்கள், தொண்டர்கள் பாடுபட்டிருக்கிறார்கள்.
உங்களில் பலர் உங்கள் உழைப்பிற்கான பலனை ஏற்கெனவே பெற்றுவிட்டீர்கள். ஆகவே, பலனை பெற்றவர்கள் தங்களுடைய நன்றிக் கடனை இந்த இயக்கத்திற்குச் செலுத்த வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது. இன்னும் பெரிய அளவில் பயன் அடையாத, பலன் அடையாத இன்னும் பல உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்வது, கட்சிக்கு உங்கள் கடமையை நீங்கள் செய்து கொண்டே இருங்கள். தவறாமல் ஒரு நாள் அதற்கான பலன் உங்களுக்கு கிடைத்தே தீரும். அதற்கு நான் உத்தரவாதம் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.
ஆனால், தற்பொழுது இந்த நேரத்தில் நம்முடைய ஒன்றரை கோடி உறுப்பினர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் மனதில் ஒரே ஒரு சிந்தனைதான் இருக்க வேண்டும். மனதில் ஒரே ஒரு குறிக்கோள்தான் இருக்க வேண்டும். நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் கட்சி வேட்பாளர்களையும், கட்சிக் கூட்டணி வேட்பாளர்களையும் நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்கு என்னுடைய பங்கு என்னவாக இருக்கப் போகிறது என்பதைப் பற்றித்தான் ஒவ்வொரு செயல்வீரரும், வீராங்கனையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நினைப்பைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இந்தத் தேர்தல் முடியும் வரை உங்கள் மனதில் வரக் கூடாது.
இன்று நாட்டில் இருக்கின்ற நிலைமை அனைவரும் அறிந்ததுதான். மக்கள் பெரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். கோபத்தில் இருக்கிறார்கள். மாநில அரசு மீதும் கோபம். மத்திய அரசு மீதும் கோபம். வரலாறு காணாத விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு. கன மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்திற்கு அரசு எந்தவிதமான நிவாரணப் பணிகளும் செய்யவில்லை. என்னென்ன துன்பங்கள் உண்டோ, என்னென்ன இன்னல்கள் உண்டோ இதுவரை கற்பனை செய்து பார்த்திராத அளவிற்கு மக்கள் அத்தகைய துன்பங்களையும், துயரங்களையும், இன்னல்களையும் அனுபவித்து வருகிறார்கள். மக்கள் எப்போது தேர்தல் வரும் என்று காத்திருக்கிறார்கள். மத்தியில் எப்போது தேர்தல் வரும் என்று மட்டுமல்ல,மாநிலத்திலும் தேர்தல் எப்போது வரும் என்று காத்திருக்கிறார்கள். ஆகவே, இன்றைய தினம் ஒரு குழந்தையைக் கேட்டால் கூட சொல்லும். யாரைக் கேட்டாலும் சொல்லுவார்கள். அ.தி.மு.க. சார்பில் யார் தேர்தலில் போட்டியிட்டாலும் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்பதுதான் பொதுவான பேச்சு. பொதுவான கருத்து. ஊடகங்களும் இதைத்தான் சொல்கின்றன. மக்களும் இதைத்தான் சொல்கின்றனர்.
அதனால் இந்த நேரத்தில் நம் கட்சியை பொறுத்தவரை என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றால், வெற்றி நிச்சயம் என்று தெரிந்துவிட்டதால், சிறிய அளவில் போட்டி உணர்வும் ஏற்பட்டுவிட்டது. அவருக்கு வாய்ப்பு கிடைத்துவிடுமோ, எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு அடுத்தவருக்கு கிடைத்துவிடுமோ, அதை கிடைக்கவிடக் கூடாது. அதனால் இப்போதே அவரைப் பற்றி ஏதாவது ஒரு புகாரை ஜோடித்து கொண்டுபோய் அம்மாவிடம் கொடுத்துவிடுவோம். அவருக்கு வரக்கூடிய வாய்ப்பை கெடுத்துவிடுவோம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தேவையில்லாத பிரச்சினைகளை பல இடங்களில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் என்ன ஆகின்றது என்றால், தகுதி உள்ளவர்கள் ஏராளமானவர்கள் கட்சியில் இருந்தாலும், எப்படியும் ஒரு தொகுதிக்கு ஒருவருக்குத்தான் வாய்ப்பு கொடுக்க முடியும். இது உங்களுக்கே தெரியும். கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் சேருகின்றனவோ, அவர்களின் சக்திக்கேற்ப அவர்களுக்கும் நாம் இடங்கள் கொடுக்க வேண்டும்.
புதுச்சேரியை விட்டுவிட்டால் தமிழகத்தில் இருக்கின்ற இடங்களோ 39. ஆகவே இந்த போட்டா போட்டியில், அதில் தவறு எதுவுமில்லை. வாய்ப்பு கிடைக்க வேண்டும். தேர்தலில் நிற்க வேண்டும், வெற்றி பெற வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினராக ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அதற்காக நன்றாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் மீது வீணான புகார்களைக் கூறி தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்குவதனால் என்ன அதனுடைய விளைவு? பலவீனம் அடையும். ஆகவே, இந்த நேரத்தில் யாரும் அத்தகைய பணியில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது தேர்தல் நேரம். இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் ஒற்றுமை காக்க வேண்டும். யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அங்கே அம்மாதான் நிற்கிறார் என்ற உணர்வோடு நீங்கள் அந்த வேட்பாளரின் வெற்றிக்காகப் பாடுபட வேண்டும். நம்முடைய கட்சி உறுப்பினர்கள் அத்தனை பேரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
ஆகவே, இந்த நேரத்தில் வேறு என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்,வேறு என்ன மனமாச்சரியங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளி வைத்துவிட்டு தேர்தல் முடிந்த பிறகு நிச்சயமாக உங்கள் பிரச்சினைகளையெல்லாம் பொறுமையோடு நான் உட்கார்ந்து ஆர அமர கேட்டு அவற்றுக்கெல்லாம் தீர்வு காண்பேன் என்ற உறுதியை உங்களுக்கு அளித்து, என் மீது நம்பிக்கை வைத்து மற்ற அனைத்து சிந்தனைகளையும் புறந்தள்ளிவிட்டு வெற்றி, வெற்றி, வெற்றி என்ற ஒரே இலக்கை நோக்கி நீங்கள் பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அந்த வெற்றி கிட்டும் வரை நீங்கள் வேறு எந்த சிந்தனைக்கும் இடம்தரக் கூடாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக