தமிழ்நாடு அரசின் உதவியுடன் இந்தியத் திரைப்பட திறனாய்வுக் கழகத்தினால் நடத்தப்படும் 6-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவினை’ இன்று (டிசம்பர் 17) துவக்கி வைத்து அமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரை:
இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் சார்பில் 6வது சர்வதேச திரைப்பட விழாவில், நானும் பங்கேற்கும் ஒரு சிறப்பான வாய்ப்பை பெற்றமைக்காக மகிழ்ச்சியடைகின்றேன், பெருமையடைகின்றேன். இந்த வாய்ப்பினை உருவாக்கித் தந்த இந்திய திரைப்பட திறனாய்வுக் கழக நிர்வாகிகளுக்கும், மற்றவர்களுக்கும் என் நன்றியையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழக அரசின் ஒத்துழைப்போடு, இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் சார்பில் விழா 10 நாட்கள் நடைபெற இருக்கின்றது. இந்த அமைப்பு முதன்முதலாக 1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 32 ஆண்டுகாலமாக இந்த அமைப்பு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு வருகிறது. பல்வேறு நாடுகளில், பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களை நம்முடைய தமிழகத்தில் உள்ள திரைப்படக் கலைஞர்கள் பார்வையிடுவதோடு அல்லாமல், அதன்மூலம், அதில் உள்ள தொழில்நுட்பங்களை அறிந்து, நம்முடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அந்தத் தொழில்நுட்பங்களை தமிழக திரைப்படங்களிலும் புகுத்திடவும், இந்த அமைப்பு சிறப்பான முறையில் மேற்கொண்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
இந்த அமைப்பின் மூலம் 2003ம் ஆண்டு தொடங்கி, முதல் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டுள்ளது. இந்த விழாவில், 17 நாடுகளைச் சேர்ந்த 63 திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டுள்ளதாக அறிகிறேன். இதனுடைய தொடர்ச்சியாக 2004, 2005, 2006, 2007 ஆண்டுகளில் முறையே 2வது, 3வது, 4வது மற்றும் 5வது சர்வதேச திரைப்பட விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளது. அதனுடைய தொடர்ச்சியாக 6வது சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கப்பட்டிருக்கிறது.
இங்கே வரவேற்புரையிலும் குறிப்பிட்டு சொல்லப்பட்டது, சட்டப்பேரவை உறுப்பனரும், இந்த அமைப்பின் துணைத் தலைவருமான எஸ்.வி.சேகர் பேசுகிறபோது பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார்கள். ஏற்கனவே நடைபெற்ற 5 சர்வதேச திரைப்பட விழாவிற்கு எந்த அளவிற்கு நாங்களெல்லாம் சிரமப்படவேண்டிய ஒரு சூழ்நிலை இருந்தது, ஆனால், இன்றைக்கு அந்த நிலைமை இல்லை என்பதற்கு என்ன காரணம் என்பதை அவர்கள் பெருமையோடு இன்றைக்கு இங்கே சுட்டிக்காட்டினார்கள். ஏற்கனவே நடைபெற்ற 5 சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும், இன்று நடைபெறும் இந்த விழாவிற்கும் உள்ள வேறுபோடு என்னவென்றால், ஏற்கனவே நடைபெற்ற 5 சர்வதேச திரைப்பட விழாக்களும், இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தினர் தாங்களாகவே நிதி திரட்டி விழாக்களை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த விழாவினைப் பொறுத்தவரையில், தமிழக முதல்வர் கலைஞர் வழங்கியிருக்கின்ற ரூபாய் 25 லட்சம் நிதியினைப் பெற்று இன்றைக்கு இந்த விழா சிறப்போடு நடந்து கொண்டிருக்கிறது.
இந்த திரைப்பட விழாவிலே திரையிடப்படக்கூடிய திரைப்படங்கள் அனைத்தும் சிறப்பான திரைப்படங்களாக அமைந்திருக்கிறது. அதனை குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், ‘துல்பான்’ என்ற திரைப்படம். இது கஜகஸ்தான் நாட்டின் திரைப்படமாகும். மேலும், இந்த திரைப்படம் கோவா மாநிலத்தில் சமீபத்திலே நடந்து முடிந்த சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான முதல் பரிசை பெற்றதோடு மட்டுமில்லாமல், ரூபாய் 45 லட்சம் பரிசுத்தொகையினை பெற்றுள்ளதாக தெரிவிக்கும் அந்தச் செய்தியினை பத்திரிகைகள் மூலமாக அறிந்திருக்கிறேன்.
தமிழ் மொழியைப் பொறுத்தவரையில், நம்முடைய சேகர் குறிப்பிட்டுச் சொன்னார், அதாவது, இந்த திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படங்களும் வெளியிட இருப்பதாக கூறினார். அந்த தமிழ்த் திரைப்படங்களில் முதல் திரைப்படம் அஞ்சாதே, இது சேகருக்கு மிகப் பொருத்தமான ஒன்று. அதனால், இந்த அமைப்பு இதனை முதல் படமாக தேர்ந்தெடுத்துள்ளது. சேகர் தன்மானம்மிக்கவர், சுயமரியாதை கொண்டவர். இந்த அமைப்பு, தமிழ் மொழியினைப் பொருத்தவரையில், தமிழ் திரைப்படமாக, அஞ்சாதே, சுப்பிரமணியபுரம், பூ, காஞ்சிவரம் போன்ற திரைப்படங்களை இந்த நிகழ்ச்சியின் மூலமாக தொடர்ந்து திரையிடப்பட இருக்கிறது.
இந்த சர்வதேச திரைப்பட விழாவானது, இதுவரை கோவா, கல்கத்தா, மும்பை, புனே, திருவனந்தபுரம், பெங்களூரு ஆகிய இடங்களில் , கோவா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடக மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் அவர்கள் சர்வதேச திரைப்பட விழாக்களை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்கள். அந்த வரிசையிலே, தமிழகமும், இந்த ஆண்டு முதல் தமிழக அரசின் ஒத்துழைப்பு பெற்று இடம்பெற்றுள்ள பெருமையினை இந்த விழா இன்றைக்கு பெற்றுள்ளது.
திரைப்படம் என்பது மக்களுடைய பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், அந்த நாட்டினுடைய மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு நெறிகளை பலப்படுத்தும் வகையிலே ஒரு ஆற்றல் வாய்ந்த கருவியாக இன்றைக்கு திரைப்படங்கள் விளங்கிக் கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டுதான், கலைஞர் , சமுதாயத்தில் நடுத்தர குடும்பத்திலே, அடித்தட்டு மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற அந்த கிராமப்புற மக்களும் திரைப்படங்களை பார்க்கவேண்டுமென்பதற்காகத்தான் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாகவே வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கெல்லாம் மிகவும் நன்றாகத் தெரியும். தமிழகத்தில் திரைப்பட வளர்ச்சிக்காக, தலைவர் கலைஞர் அரசு பல்வேறு சாதனைகளையும், பல்வேறு சலுகைகளை தொடர்ந்து வழங்கிவருகிறது.
3 கருத்துகள்:
ஐயோ இவ்வளவு வேகமா..? நான் இப்பத்தான் வீடு வந்து சேர்ந்தேன்.. தமிழ்மணத்தை திறந்த உடனேயே உங்களுடைய பதிவுதான்..
சூப்பர் பாஸ்ட் பரக்கத்..
இந்த பகுத்தறிவு வாரிசு கொழுந்துக்கு இப்போது இவர் பார்ப்பானாக தெரியவில்லையா.
வேண்டாமென்றால் அவர்களின் ஜாதி, பூணூல் தெரியும், வேண்டுமென்றால் சுயமரியாதை மிக்கவர்..
இந்த பகுத்தறிவு தாசில்தார்களை நினைத்தால் புல்லரிக்கிறது..
//சேகர் தன்மானம்மிக்கவர், சுயமரியாதை கொண்டவர்.//
ஆனாலும் ஸ்ராலினுக்கு இவ்வளவு குசும்பு இருக்குமென நான் நினைக்கவில்லை.
மற்றும்படி இவ்விழாக் குழுவினர் பாராட்டுக்குரியோரே!!
கருத்துரையிடுக