"கருணாநிதி அருகதையை இழந்துவிட்டார்" ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (டிசம்பர் 20)வெளியிட்ட அறிக்கை:

மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவித்ததில் இருந்து, தோல்வி பயத்தில் அ.தி.மு.க.வையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் குறை சொல்லும் வகையில், தினம் ஒரு தலைப்பில் புலம்பல் புராணங்களை பாடிக் கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் அறிவர். கருணாநிதியின் புலம்பல் புராணங்களைக் கண்டித்து நான் விரிவான அறிக்கையை வெளியிட்டிருந்தேன்.

தற்போது “எளிதாகப் புரிந்து கொள்வாய்” என்ற தலைப்பில் மீண்டும் ஒரு முகாரி ராகத்தைப் பாடியிருக்கிறார் கருணாநிதி. அதில், தன்னுடைய தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்ட ஒரு நாடகத்தை அறப்போர் என வருணித்து, சிறுதாவூர் பிரச்சினை என்று வந்தால் நான் மவுனம் சாதிப்பதாகக் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, மக்களை திசை திருப்பும் செயலாகும். சிறுதாவூர் பிரச்சினை குறித்து 2006 ஆம் ஆண்டே நான் விரிவான அறிக்கை வெளியிட்டு, இது குறித்த உண்மை நிலையை அறிய அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை வரவேற்பதாகவும் அறிவித்தேன். சிறுதாவூரில் நான் எந்த நிலத்தையும் வாங்கவில்லை. வாடகைக்கு எடுத்த வீட்டில் அங்கே செல்லும் போது தங்குகிறேன் என்று அப்போதே விளக்கிவிட்டேன்.

தற்போது, விசாரணை ஆணையத்தின் முன் இருக்கும் இந்தப் பிரச்சினை குறித்து கருணாநிதி ஒரு சிலரைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தச் செய்வது, அது குறித்து கருத்து தெரிவிப்பது விசாரணை ஆணையத்தின் நடவடிக்கைகளை கேலிக் கூத்தாக்குவதற்குச் சமம். இவ்வளவு வாய் கிழியப் பேசும் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கில், அனைத்து சாட்சிகளையும் கலைத்து தன் மகன் மு.க. அழகிரிக்கு விடுதலை வாங்கித் தந்தது குறித்தோ, மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பில் மூன்று அப்பாவிகளின் உயிர் பறிக்கப்பட்டது குறித்தோ, தமிழக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா அப்பகுதி மக்களின் நிலங்களை அபகரித்தது குறித்தோ, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலம் அங்கம்மாள் காலனி பகுதியில் வசித்து வந்த மக்களை வெளியேற்றி 20,000 சதுர அடி நிலத்தை அபகரித்தது குறித்தோ, அமைச்சர் நேரு வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான 20,000 சதுர அடி நிலத்தை அபகரித்து திருச்சியில் உள்ள அறிவாலயம் கட்டடத்தை கட்டியது குறித்தோ, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஒரு சில வருடங்களில் 755 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்து கொண்டிருக்கின்ற மத்திய அமைச்சர் ராசாவின் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனம் குறித்தோ, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கொள்ளையடித்த மத்திய அமைச்சர் ராசா குறித்தோ, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள கருணாநிதிக்கு மிகவும் நெருங்கியவரான தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்தோ, அதிகார துஷ்பிரயோகம் செய்து தன்னுடைய சொந்த நிறுவனத்திற்கு எரிவாயுவை பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு குறித்தோ, தி.மு.க-வினரால் அன்றாடம் கடத்தப்படும் மணல் கொள்ளை மற்றும் அரிசிக் கடத்தல் குறித்தோ, தென் மாவட்ட மக்கள் கண்ணீர் விடக் காரணமாயிருக்கும் தன் மகன் அழகிரி குறித்தோ, அண்மையில் நடைபெற்ற பணப் பரிமாற்ற நாடகம் குறித்தோ, இன்னும் எத்தனையோ தி.மு.க. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது உறவினர்களும் தமிழ் நாடு முழுவதும் நிலங்களை அபகரித்து கொண்டிருப்பது குறித்தோ, தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் வருமானம் குறித்தோ கருணாநிதி வாய் திறக்கத் தயாரா? இது குறித்தெல்லாம் விசாரணை ஆணையம் அமைக்கத் தயாரா?

எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகளைப் புனையும் கருணாநிதிக்கு இதைப் பற்றியெல்லாம் கேட்க தைரியம் இருக்கிறதா? வன்முறையாளர்களையும், கொள்ளையடிப்போரையும், அடுத்தவர்களின் சொத்துக்களை அபகரிப்போரையும் அமைச்சரவையிலும், தனது அருகிலும் வைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, மற்றவர்களைப் பற்றிப் பேசும் உரிமையை, அருகதையை என்றைக்கோ இழந்துவிட்டார்.

எவ்வளவுதான் ஒப்பாரி வைத்தாலும், மூழ்கும் நிலையில் உள்ள தி.மு.க-வுடன் யாரும் சேரத் தயாராக இல்லை. இருக்கின்ற ஒரே ஒரு கட்சியும் எப்படி விடுபடலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறது என்பதைக் கருணாநிதிக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். தன்னுடைய சுய லாபத்திற்காகவும், தனது குடும்ப முன்னேற்றத்திற்காகவும் தமிழர்களின் உரிமைகளைத் தாரை வார்த்தும், ஏழை, எளிய மக்களின் நிலங்களை தனது கட்சிக்காரர்கள் மூலம் அபகரித்துக் கொண்டும், நாளும் பொழுதும் மக்கள் விரோதச் செயல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியை தமிழக மக்கள் எளிதாக புரிந்து கொண்டுவிட்டார்கள். இதை கருணாநிதிக்கு மக்கள் தெரியப்படுத்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கருணாநிதிக்கு சூப்பர் தோலுரிப்பு. நாளை இதற்க்கு ஒரு புலம்பல் அறிக்கை பழைய நிகழ்ச்சிகளை மேற்க்கோள் காட்டி வரும்.

கருத்துரையிடுக